Saturday, October 4, 2008

அரசியல் இலவசங்கள்



இந்தியாவில் வேறு எங்காவது இந்த அளவுக்கு அரசியல் இலவசங்கள் உண்டா என்று சந்தேகமாக உள்ளது. இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து போன்ற ஏழை விவசாயிகளுக்கான (இதை பல கொழுத்த பண்ணையார்கள் முறை கேடாக பயன்படுத்தினாலும்) திட்டங்கள் போக பெரும்பான்மையானவை எல்லாம் முட்டாள்தனமான பண விரயமாகவே இருக்கின்றன.


எம்ஜியார் காலத்தில் பல்பொடி , ஜெயலலிதா காலத்தில் செருப்பு போன்றவற்றுக்கெல்லாம் சிகரமாக இப்போது கலர் டிவி. அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்ற நிலையில் கலர் டிவி எந்த வயிற்றை நிரப்பவோ தெரியவில்லை. சொந்தங்களையும் பந்தங்களையும் (கோலங்கள், அரசி.... ) பார்த்து இவர்கள் வாழ்க்கை நிலை எப்படி முன்னேறுமோ கழகங்களுக்குத்தான் வெளிச்சம்.

அப்படியாவது இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் (டிவின்னு சொல்லிட்டு போயேன்) எல்லாம் இல்லாதவர்களுக்குத்தான் போகிறதா என்று பார்த்தால், வயிறு எரிகிறது. திருச்சியில் அறுநூறு குடும்பங்கள் இருக்கும் ஒரு ராணுவ தளவாட தொழிற்சாலை குடியிருப்பில் அனைவருக்கும் இந்த கலர் டிவி விநியோகம் செய்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கும் இந்த குடும்பங்கள் அனைத்திலும் மிக நிச்சயமாக மானும் மயிலும் ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஒரு டிவிக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் கூட கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்ச ரூபாய் இந்த ஒரு இடத்தில் மட்டும் வீணடித்து இருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் இந்த தொழிற்சாலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்றதுதான் என் எரிச்சலுக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

Thursday, September 18, 2008

சேதிகளும் சன் செய்திகளும்



செய்தி - தமிழகத்தில் மின் பற்றாக்குறை. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மின் வெட்டு.

சன் செய்திகள் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் உள்ளாடை உற்பத்தி பாதிப்பு. தீபாவளி நெருங்கும் நேரத்தில் பொதுமக்கள் அவதி.

கிறுக்கன் செய்தி -பாவம் தமிழர்கள் எல்லோரும் தீபாவளிக்கு உள்ளாடை இல்லாமல் திரிய போகிறார்கள்.

*********************

செய்தி - சென்னை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெரு கடைகளில் அவசர கால வாயில்கள் இல்லை.

சன் செய்தி - இனிமேலாவது அரசு இத்தகைய கடைகள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதே பொது மக்களின் கேள்வி
சன் நேயர் - " இனிமேலாச்சும் அரசு வந்து இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத கடைகள் மேல நடவடிக்கை எடுக்கணும் "

கிறுக்கன் செய்தி - பொதுமக்கள் (குறைந்த பட்சம் அந்த நேயர் மட்டுமாவது ) எல்லோரும் ஏன் இந்த மாதிரி கடைகளுக்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க கூடாது.
*********************

Monday, August 18, 2008

இன்னைக்குதான் ஆரம்பிச்சேன்



என்னமோ எல்லாரும் ப்ளாக் ப்ளாகுங்கறாங்களே, நம்மளும்தான் ஒன்ன ஆரம்பிச்சு வெப்போமேன்னு, இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணேன். எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியலே. என்ன எழுத போறேனோ தெரியலே. பார்க்கலாம், இனிமேதான் யோசிக்கணும். அடுத்தது என்னிக்கு திரும்பி வரேன்னு பார்ப்போம். யாராவது படிப்பீங்களா என்ன? படிச்சா சொல்லுங்க.

இப்போதைக்கு byeeeeeee..........