Saturday, October 4, 2008

அரசியல் இலவசங்கள்



இந்தியாவில் வேறு எங்காவது இந்த அளவுக்கு அரசியல் இலவசங்கள் உண்டா என்று சந்தேகமாக உள்ளது. இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து போன்ற ஏழை விவசாயிகளுக்கான (இதை பல கொழுத்த பண்ணையார்கள் முறை கேடாக பயன்படுத்தினாலும்) திட்டங்கள் போக பெரும்பான்மையானவை எல்லாம் முட்டாள்தனமான பண விரயமாகவே இருக்கின்றன.


எம்ஜியார் காலத்தில் பல்பொடி , ஜெயலலிதா காலத்தில் செருப்பு போன்றவற்றுக்கெல்லாம் சிகரமாக இப்போது கலர் டிவி. அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்ற நிலையில் கலர் டிவி எந்த வயிற்றை நிரப்பவோ தெரியவில்லை. சொந்தங்களையும் பந்தங்களையும் (கோலங்கள், அரசி.... ) பார்த்து இவர்கள் வாழ்க்கை நிலை எப்படி முன்னேறுமோ கழகங்களுக்குத்தான் வெளிச்சம்.

அப்படியாவது இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் (டிவின்னு சொல்லிட்டு போயேன்) எல்லாம் இல்லாதவர்களுக்குத்தான் போகிறதா என்று பார்த்தால், வயிறு எரிகிறது. திருச்சியில் அறுநூறு குடும்பங்கள் இருக்கும் ஒரு ராணுவ தளவாட தொழிற்சாலை குடியிருப்பில் அனைவருக்கும் இந்த கலர் டிவி விநியோகம் செய்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கும் இந்த குடும்பங்கள் அனைத்திலும் மிக நிச்சயமாக மானும் மயிலும் ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஒரு டிவிக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் கூட கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்ச ரூபாய் இந்த ஒரு இடத்தில் மட்டும் வீணடித்து இருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் இந்த தொழிற்சாலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்றதுதான் என் எரிச்சலுக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

0 comments:

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.