Tuesday, May 26, 2009

தூர்தர்ஷன் - என் வாழ்க்கையின் திருப்புமுனை

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு குட்ட வாத்தியார்தான் க்ளாஸ் டீச்சர்.
அவரோட பேரு செல்வராஜ். ஆனாலும் சுமாரா ஒரு நாலுலேர்ந்து நாலரை அடிக்குள்ள இருந்ததுனால அவுர எல்லாரும் குட்ட வாத்தியாருன்னுதான் கூப்புடுவோம்.

என்னமோ தெரில நான் படிச்ச கான்வென்ட்ல (பரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லால்குடி) எல்லா வாத்தியார்களும் வேட்டி சட்டைதான் போடுவாங்க.அந்த உயரத்துக்கு வேட்டியுடன் அவர் நடந்து வருவதை தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடலாம்.

குட்ட வாத்தியார் ஆனா குட்றதுல பெரிய ஆளு. பெரும்பாலும் பக்கத்துல ஒக்காந்துருக்கற பயல உட்டு குட்ட சொல்லுவாரு. அவனும் எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற எலந்தப்பழம், காக்கா கடி மிட்டாய் போன்ற பழைய விஷயங்களையெல்லாம் கொசுவத்தி சுத்தி பாத்துட்டு, முட்டிய மடக்கி, ரெண்டு வாட்டி எச்சி துப்பி ஓங்கி குட்டுவான்.சமயத்துல நெருப்பெட்டி லேபிள் விஷயத்துல ஏதாவது ஒப்பந்தம் நடைமுறையில இருந்தா, கைய வேகமா ஓங்கிட்டு மெதுவா குட்டுவான்.

அதுதான் வெனையே. வாத்தியார் இத கவனிச்சிட்டாருன்னா, பக்கத்துல வர சொல்லி நங்குன்னு ஒண்ணு வெப்பாரு. இவுரு மட்டும் எப்புடி எச்சி துப்பாமயே இப்புடி வலுவா கொட்றாருங்கற சந்தேகம் ரொம்ப நாள் எனக்கு இருந்துது.

அப்பல்லாம் படிப்புல நான் சூரப்புலின்னு எங்க அக்கா அடிக்கடி சொல்வாங்க.அதே ஸ்கூல்ல நாலாம் க்ளாஸ்ல படிச்சுகிட்டிருந்த எங்க அக்கா அவங்க பரிட்சைய சீக்கிரமா முடிச்சுட்டு என் க்ளாஸ்ல வந்து பின்னாடி நின்னு பாப்பாங்களாம். நான் எழுதியிருக்கறதெல்லாம் பாத்துட்டு அய்யோ.. அய்யோன்னு அடிச்சுகிட்டு குசு குசுன்னு ஆன்சர் சொல்வாங்களாம். ஆனாலும் அதக் கூட புரிஞ்சுகிட்டு எழுத தெரியாத அளவுக்கு வெள்ளந்தியா இருந்ததா இப்பயும் சொல்வாங்க.

சிலேட்டுலதான் பரிட்சை எழுதணும். கையோட திருத்தி மார்க்க ஒரு பெரிய ரவுண்டுக்குள்ள பின்னமா எழுதி குடுப்பாரு. அதை பைக்குள்ள வெச்சா மார்க் அழிஞ்சு போயிரும்னுட்டு கையிலியே புடிச்சுகிட்டு 5 தெரு தாண்டி போவணும். மார்க்கு அதிகம், கம்மி மானம், அவமானம் இதெல்லாம் ஒண்ணுமே புரியாது அப்பல்லாம். பத்துக்கு மூணோ நாலோ வாங்கினாலும் கவலப்படாம ஊர்வலம் போவேன்.

எப்படியோ தங்கு தடையின்றி வில்லியம் சார், பாக்கிரிசாமி (ஹெட் மாஸ்டர்) எல்லாரிடமும் கொட்டு வாங்கி, முட்டி போட்டு ஐந்து வகுப்புகளை தாண்டி திருச்சி செயிண்ட் ஜோஸஃப் ஹை ஸ்கூலில் ஆறாவது சேர்ந்துவிட்டேன். அங்கியும் ஒம்போதாவது படிக்கிற வரைக்கும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி படிக்கல.

என்னை பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிக்க வைக்க வேண்டும் என்பது என் தந்தையின் வாழ்க்கை லட்சியம்.ஒன்பதாம் வகுப்பு முழுப்பரிட்சை (இப்பயும் கால் பரிட்சை, அரை பரிட்சை, முழு பரிட்சை இப்படியெல்லாம் சொல்றாங்களா?) முடிஞ்சு லீவுல எங்கப்பா என்னய மெட்ராஸுக்கு சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.



அங்க டிவியில வர்ர வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியும், ஞாயித்துக்கிழமை சினிமாவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. வெறும் தூர்தர்ஷன் மட்டும்தான் அப்போதெல்லாம்.ரேடியோவில் பாட்டு,நாடகம்(ஞாயிறு மதியம் 3 மணி), நியூஸ் (சரோஜ் நாராயணசாமி), மணிமலர்,ஒலிச்சித்திரம் போன்றவற்றை மட்டுமே கேட்டுக்கொண்டு, வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ சினிமாக்கள் மட்டுமே பார்த்து வந்த எனக்கு தொலைக்காட்சி மேல் காதலே வந்துவிட்டது. சென்னை ஒரு சொர்க்கலோகமாகவே தெரிந்தது. இத்தனைக்கும் அப்போது என் சித்தப்பா வீட்டில் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில் போய்த்தான் பார்ப்போம்.

ஆவடியில் என் சித்தப்பா வீட்டுக்கு பக்கத்திலேயே முருகப்பா பாலிடெக்னிக் இருந்தது. அந்த வழியே போகும்போது என் அப்பா "நல்லா படிச்சு நானூறு மார்க்குக்கு மேல வாங்கினா இங்க சீட்டு கிடைக்கும், எலெக்ட்ரானிக்ஸும் இருக்கு,சித்தப்பா வீட்லயே இருந்து படிச்சுக்கலாம் என்றார்."



இந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட வார்த்தைகள். ஆஹா, சொர்க்கத்துக்கு ஷிஃப்ட் ஆவறதுக்கு இங்க ஒரு வழி இருக்கேன்னு என் மனசுல பொறி தட்டிருச்சு. ஒலியும் ஒளியும், வருடத்துக்கு 52 சினிமா இதெல்லாம் என் கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துது.

அன்னைலேருந்து அன்பே சிவம் 910 மாதிரி 400 என் வாழ்க்கையோட லட்சிய நம்பரா மாறிருச்சு. எப்படியோ திட்டம் போட்டு என் தெறமைக்கு என்னென்ன சப்ஜெக்ட்ல என்னென்ன மார்க்கு வரும்னு திட்டம் போட்டு அதுக்கேத்த மாதிரி நானூறை குறி வெச்சு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அனாவசியமா ஓவரா கஷ்டப்பட்டு ரொம்ப அதிகமாவும் வாங்கிடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப ஜாக்கிரதையாவே இருந்தேன்.

அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு திட்டம் போட்டு படிச்சு SSLC பரிட்சை எழுதியும், யாரோ புண்ணியவானுங்க தப்பா திருத்தி 12 மார்க் அதிகமா வந்துருச்சு. எங்கப்பாவுக்கு ஓரே சந்தோஷம், 412 க்கு நிச்சயம் சீட்டு கெடைச்சிரும் என்று அப்போது எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் இருந்த அறந்தாங்கி, கிருஷ்ணகிரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பினார். அப்போது இந்த மூன்றில் மட்டும்தான் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ உண்டு.

முதலில் கிருஷ்ணகிரியிலிருந்து மட்டும்தான் அட்மிஷன் கிடைத்து சேர்ந்தாலும், ஒரு வாரத்துக்குள் ஆவடி முருகப்பாவிலிருந்து முதல் வெயிட்டிங் லிஸ்ட்டில் க்ளியராகி சீட் கிடைத்துவிட்டது.

பின்னர் படிப்பை முடித்து சென்னை, தில்லி, திருச்சி என்று வேலை பார்த்தாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்து பகுதி நேரமாக டிகிரியும் முடித்து சிங்கப்பூர் வரை வந்தாகி விட்டது.

இன்று அண்ணன் மகன் (கைலாஷ்) திருச்சியில் SSLC-CBSE யில் 448/500 வாங்கியிருப்பதாக போன் வரவும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து, எழுதலாமே என்று தோன்றியது.

வாழ்க்கையில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலெடுத்து வைக்கும் கைலாஷை போன்ற மாணவர்களுக்கு நான் சொல்ல வருவது இதுதான்.படிப்பு மட்டுமில்லாமல் உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை மதிப்பெண்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். படிப்பில் தானாகவே உங்களுக்கு வெறி வந்து விடும். அது தினம் ஒரு விமான பயணமாகவோ, நியூயார்க்கில் 112 ஆவது மாடியில் சுதந்திரதேவி சிலை கண்ணில் படும்படி ஒரு ஃப்ளாட்டில் குடியிருப்பதாகவோ, சிவப்பு விளக்கு சுழலும் காரில் டவாலி சகிதமாக வந்து இறங்கும் கலெக்டருக்கு கிடைக்கும் மரியாதையாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற கனவுகள் நனவாக மற்ற எல்லா வழிகளையும் விட திட்டமிட்ட படிப்பும் மதிபெண்களும் நிச்சயம் உதவும்.

உங்களுடைய மதிப்பெண் இலக்கை முடிவு செய்து கொள்ளுங்கள்.பள்ளியில் முதல் மதிப்பெண், மாநிலத்தில் முதலாவதாக வருவது போன்ற இலக்குகள் வேண்டாம். அது உங்கள் கையில் மட்டும் இல்லை.மதிப்பெண் இலக்கை அடைய நிறை குறைகளை ஆராய்ந்து துல்லியமாக திட்டமிடுங்கள்.

திட்டங்களை செயலாக்கி மேன்மேலும் வெற்றிகளை குவியுங்கள். வாழ்த்துகள்.

Monday, May 18, 2009

அரசியலுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை


காவிரி நீர் பங்கீடு

முல்லை பெரியார் அணை

ஹொகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

மின் வெட்டு

சேது சமுத்திர திட்டம்

பிரச்சினைகளா இல்லை இதேபோல் "தீர்த்து" வைக்க?

தொடங்குங்கள் போராட்டங்களை, வீர தீர பேட்டிகளை, உண்ணவிரதங்களை, ஊர்வலங்களை, தந்திகள் மற்றும் கடிதங்களை...



Tuesday, May 12, 2009

தமிலிஷ் மற்றும் தமிழ்மணத்துல ஓட்டு வேணுமா?












எல்லார் மூஞ்சியும் ஒருக்கா பாத்துக்கிட்டீங்களா? யாருக்கு ஓட்டுன்னு முடிவு பண்ணியாச்சா?
சீக்கிரமா போயி பட்டன அமுக்கிட்டு வந்து விரல காட்டணும்.

யாரெல்லாம் வந்து மை அடையாளத்தோட வெரல போட்டோ புடிச்சு எனக்கு இ-மெயில் அனுப்பறீங்களோ, அவுங்களுக்கெல்லாம் அடுத்த 10 இடுகைகளுக்கு தலா 10 பின்னூட்டங்களும், தமிழ்மணம் மற்றும் தமிலிஷ் முதலான எல்லா பட்டைகளிலும் ஒட்டுகளும் போடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

Monday, May 11, 2009

நாற்பதிலும் வெற்றி

"நான் ரிசிக்னேஷன் நோட்டீஸ் குடுத்துட்டேங்க" என்றார் நண்பர் ஃபோனில்.

"ஐயய்யோ! என்னங்க ஆச்சு" இது நான்.

"அந்த பிகாரி சூபர்வைசர்ட்ட மனுசனெல்லாம் வேலை செய்ய முடியாதுங்க"

"ஏங்க, என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்."

"சாயந்திரம் ஃப்ரீயா இருந்தா வாங்களேன், நம்ம வீடு பக்கத்துல இருக்கற பார்க்குல உக்காந்து பேசுவோம்."

ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டிருக்கும் அவருடைய மூத்த பெண்ணும், சிங்கப்பூரில்
உயர்நிலை பள்ளியில் படிக்கும் அடுத்த இரண்டு குழந்தைகளும் என் நினைவில் பளிச்... பளிச்.. என்று வந்து கொண்டே இருந்தார்கள்.

நான் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு பல உதவிகளும், உபயோகமான டிப்ஸ்களும் கொடுத்து உதவியவர். நான் மேனஜ்மென்ட் ஸ்டாஃபாக ஒரு டிபார்ட்மெண்ட்டிலும், அவர் வேறு ஒரு செக்ஷனில் சீனியர் தொழிலாளியாக இருந்தாலும், பெரும்பாலும் லஞ்ச் நேரத்தில் ஒன்றாகவே சாப்பிடுவோம்.

கடமை கண்ணயிரம்


எங்கள் கம்பெனியில் 22 வருடம் பழம் தின்று கொட்டை போட்டவர்.ஒரு சின்ன கட்டிடத்தில் 10 தொழிலாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி எப்படி இப்போது 650 தொழிலாளர்களுடன் கூடிய பெரிய தொழிலகமாக மாறியது என்பதெல்லாம் எனக்கு அவர் சொல்லித்தான் தெரியும்.பல மேனேஜர்கள் எப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலை செய்து இந்த நிலைக்கு வந்தார்கள் என்ற சுவாரசியமான டாபிக்குக்காகவே அவரை தேடிப் போய் பக்கத்தில் சாப்பிட உட்காருவேன்

உணவு இடைவேளை


தேனியை போல சுறுசுறுப்பு என்று சொல்வார்கள். ஆனால் அதை நான் நேரில் பார்த்தது இவர் மூலமாகத்தான். தன்னால்தான் செக்ஷனில் எல்லாம் நடக்கிறது அல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு கர்வம் உண்டு. அதற்காக மிக கடுமையாக உழைப்பவர்.

என்னாலதான் எல்லாமே நடக்குது


ரிசெஷனில் ரி... என்று ஆரம்பிப்பதற்கு முன்பெல்லாம் சுபிட்சமாக கம்பெனிக்கு ஆர்டர் இருந்த காலத்தில் தினம் 12 மணி நேரம் வேலை செய்வார். ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் ஒவர் டைம். அந்த காசும் அவருடைய குடும்ப சூழ்நிலைக்கு மிகவும் அவசியம் என்பது எனக்கு தெரியும்.

சிறிது நாட்களுக்கு முன் அவருடைய செக்ஷனுக்கு புதிதாக ஒரு சூப்பர்வைசரை போட்டார்கள். வந்தவர் லீன், 6 சிக்மா, 5S, கெய்சன் என்று இவருக்கு புரியாத மொழிகளில் பேச இவர் தன்னுடைய அனுபவ அறிவினை அவரிடம் வெளிப்படுத்த இரண்டு கியர்களும் சேர்ந்து ஓடாமல் மிஸ் மேட்ச் ஆகி உராய்வு அதிகமாகிவிட்டது.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள், விட்டுக் கொடுத்து போங்கள் என்று பல முறை எடுத்து சொன்னாலும் முழு மனதுடன் ஒப்பு கொள்ளமாட்டார். "ஹூஸ்டன்ல ப்ராடக்ட் சென்டர் மேனேஜரா இருக்காரு பாருங்க சீனிவாசன், அவரெல்லாம் இங்க இருக்கும்போது நாளைக்கு 3 தடவ மைக்.. மைக்னு எங்கிட்டதான் ஓடி வருவாரு. போம்போது கூட வீட்டுக்கு ஃபேமிலியொட கூப்டு டின்னர் குடுத்தாரு. இப்ப படிச்சுட்டு வர சூப்பர்வைசருக்கெல்லாம் என்னங்க தெரியும்" என்று சொல்லுவார்.

(நம் நண்பர் பெயர் மகேந்திரன். சீனர்கள் வாயில் நுழையாததால் மகி ஆகி பிறகு நாள்பட மைக் ஆக மருவி விட்டது)

விஷயம் இவ்வளவு சீரியஸாகும் என்று எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை.

சாயந்திரம் பார்க்கில் சந்திக்கையில் அவரிடம் ஒன்றும் பெரிதாக கவலை அறிகுறிகள் தெரியவில்லை.

"என்னங்க மைக் இப்பிடி பண்ணிட்டீங்களே?"

"அவரு என்னங்க எனக்கு அப்ரைசல்ல 'டி' க்ரேட் போட்ருக்காரு, இத்தன வருஷத்துல ஒரு தடவ கூட வாங்கினதில்ல. எல்லாரும் 'சி' போட்றதுன்னா கூட எங்கிட்ட கேட்டுத்தான் போடுவாங்க" என்று ஆரம்பித்தார்.

"என்ன க்ரேடு வாங்கி இனிமே என்ன பண்ண போறீங்க?,கம்பெனி பாலிசி படி இனிமே ப்ரமோஷன் வாங்க உங்களுக்கு க்வாலிஃபிகஷன் இல்ல.இது உங்களுக்கே நல்லா தெரியும்.சம்பளமும் ஸ்டேக்னேஷன் ஆயிப் போச்சி.வெறும் இன்சென்டிவ் பெர்சென்டேஜ் தான் மாறும்."

"ஒரு பைசா வேணாங்க, நம்ம செய்யற வேலைக்கு ஒரு மரியாதை வேணாம்? காசு என்னங்க காசு, உழைச்சா எங்க போனாலும் காசு" என்றார்.

"உங்க குடும்பத்துக்கு இந்த சம்பளமும், ஒவர் டைம் காசும் வேணுமே. படிப்பு செலவுக்கு மட்டுமே மாசம் 1500 டாலர் ஆவும். இந்த வயசுல வேற வேலை கிடைக்கும். ஆனா இந்த சம்பளமும், ஒவர் டைமும் கிடைக்காதே? உங்களுக்குன்னு ஸ்பெஷலைசேஷன் ஒன்னும் கிடையாது. என்ன பண்ணப் போறீங்க?"

"விடுங்க, சேவிங்க்ஸ வெச்சு கொஞ்ச நாள் ஓட்டலாம், அதுக்குள்ள் ஒரு வழி கிடைக்கும்."

"இருந்தாலும் நோட்டீஸ் குடுக்கறதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.பர்ஸனல் மேனேஜர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி செக்ஷன் ட்ரான்ஸ்ஃபர் கேட்ருக்கலாம் இல்ல."

"அடடா, இது எனக்கு தோணாம போயிருச்சே, அப்ப இருந்த கோவத்துல விட்டு எறிஞ்சுட்டு போவணும்னு தோணிச்சு. கையோட லெட்டர எழுதி குடுத்துட்டேன். "

"சரி, பர்ஸனல்ல என்ன சொன்னாங்க?"

"க்ரேடிங்கல திருப்தியில்லன்னு எழுதியிருக்கறதால அடுத்த வாரம் என்கொயரி நடக்குமாம். ஒரு மாசம் நோட்டீஸ் பீரியட். ஒரு மாசத்துல வேணும்னா மீதி இருக்ககற லீவெல்லாம் எடுத்துக்க சொலலிட்டாங்க."

எதுக்கும் பர்ஸனல்ல கூப்டு கேட்டா, வேற டிப்பார்ட்மென்ட்ல வேலை செய்ய தயார்னு சொல்லுங்க" என்றேன்.

எனக்கு ஆனால் மனதிற்குள் நம்பிக்கையில்லை. எப்படா இந்த மாதிரி சீனியாரிட்டியில் அதிக சம்பளம் வாங்கும் ஆட்களை வெளியில் அனுப்பி காஸ்ட் சேவிங்க் கணக்கு காட்டலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பவர்களிடம் வலுவில் போய் மாட்டிக் கொண்டிருக்கிறார். அது போலவே கண்துடைப்பு விசாரணை நடத்தி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு வெளியில் அனுப்பி விட்டார்கள்.

எங்களுக்குள்ளும் பெரிதாக தொடர்பில்லாமல் போனது. ஓரு முறை விசாரித்தபோது, நண்பருடைய சாப்பாட்டு கடையை பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். எல்லாம் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.

சென்ற வார கடைசியில் திடீரென்று நினைவு வந்து போனில் பேசினேன். மிகவும் உற்சாகமாகவே பேசினார். கடை முகவரி கொடுத்து வர சொன்னார்.

நேரில் போனதும்தான் தெரிந்தது. அந்த கடையை அவரே வாங்கி நடத்துகிறார்.நண்பருக்கு உடல் நலம் சரியில்லாததால் கடையை இவரிடம் விற்று விட்டார். கடை மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் பள்ளியிலும் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். 10 பேர் அவரிடம் வேலை செய்கிறார்களாம். இதை தவிர விசேஷங்களுக்கு கேட்டரிங்க் செய்வதாக கார்டும் கொடுத்தார்.

"ஆனா, என்னங்க? ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு.அங்க ஓவர் டைமோட சேத்து 3000 வெள்ளி கிடைக்கும். இங்க எல்லம் போக மாசம் 4000 வெள்ளி கிடைக்குது. கணக்கு சரியா போச்சு இல்லீங்களா?நிம்மதியா இருக்குங்க. எனக்கு நானே ராஜா."

"அப்பறம் அந்த சூப்பர்வைசர் வீடு இங்கதான் பக்கத்துல. தினமும் டின்னர் நம்ம கடைலதான்" என்றார்.

பி.கு: தலைப்புக்கு காரணம் நண்பருக்கு சென்ற வாரம்தான் பிறந்த நாள். 40 வயது முடிந்திருக்கிறது.வேறு ஏதாவ்து அரசியல் காரணங்களுக்காக இந்த பக்கம் வந்தவர்களிடம் நான் வேண்டுவது "கேப்டனுக்கு பிடிக்காத வார்த்தை".

Thursday, May 7, 2009

சிங்கக் காய்ச்சல் சிங்கிள் ஆளுக்குகூட வராது. பன்றிக் காய்ச்சல் உலகத்துக்கே வரும்




ஐயய்யோ... குழந்தைய தூக்குங்கப்பா..


இப்பொழுது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பன்றிக் காய்ச்சல்தான்.பொருளாதார மந்தநிலையை எல்லாம் அமெரிக்கர்கள் கொஞ்சம் மறந்திருக்க இது உதவியிருக்கிறது. ஒபாமாவுக்கும் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கும்.

இந்தியாவில் தேர்தல் ஜுரம் மிக அதிகமாக இருப்பதால் இந்த விஷயமெல்லாம் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

ஆனால் சிங்கப்பூரே அல்லோகலப்பட்டு கொண்டிருக்கிறது.

பள்ளிகளில் எல்லா குழந்தைகளும் தினமும் தங்கள் தெர்மொமீட்டர் கொண்டு டெம்ப்பரேச்சர் செக் பண்ணி ஒரு அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.அதை வேறு ஒரு மாணவர் உறுதி செய்ய வேண்டும். கொஞ்சம் சளி அல்லது லேசான இருமல் இருந்தால் கூட வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.நம்ம பையன் வேணும்னே தொண்டைய கனைச்சு காமிச்சுருக்கான்.ஆனா வாத்தியாரம்மா முதுகுல ரெண்டு போட்டு க்ளாஸ்ல ஒக்கார வெச்சிட்டாங்களாம்.நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல...

ஆபீஸ்லயும் இதே கூத்துதான். இருக்கற 650 தொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் தெர்மோமீட்டர் குடுத்துருக்காங்க.தெனமும் நாங்க எல்லாரும் எங்க டெம்பெரேச்சர 3 தடவ ரெக்கார்ட் பண்ணி வெக்கணுமாம். பேக்டரிக்கு வர அத்தன சப்ளையர்ஸையும் செக்யுரிட்டியே செக் பண்ணிட்டுதான் உள்ளார விடுவாங்க.

வெளியில் நடமாடும் பலரும், ட்ரெயின் மற்றும் பஸ்களில் செல்பவர்களும் முகமூடியுடனேயே (Respiratory Mask) அலைகிறார்கள். இதுவரை சிங்கப்பூரில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. ஆனாலும் 6 வருட்ங்கள் முன்பு சார்ஸ் நேரத்தில் வாங்கிய அடியோ என்னமோ, அரசாங்கம் பல தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த ரிசெஷனிலும் நன்றாக காசு பண்ணியவர்கள் மாஸ்க் விற்பவர்கள்தான். இப்பொழுது பயங்கர டிமாண்ட், கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்.கை கழுவும் லிக்விட் சோப்பும் கிடைப்பதில்லையாம்.

இதான் இப்ப லேட்டஸ்ட் பேஷனாம்


இவ்வளவெல்லாம் செய்யறாங்களே, இந்த் ஸ்வைன் ஃப்ளூன்னா என்னன்னு கூகிளாண்டவரிடம் விளம்பினேன். விக்கி பீடியாவில் ஒரு சுவாரசியமான தகவல்.



பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் (மனிதர்களுக்கு)




பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் (பன்றிகளுக்கு)


மேலே பார்த்தால் படங்கள் மட்டும்தான் வேறு, அறிகுறிகள் எல்லாம் ஓன்றேதான்.

வாந்தி, பேதியாவது பரவாயில்லை, உன்னிப்பாக கவனித்தால் தெரிந்து விடலாம். பன்றிகள் இருமினாலோ அல்லது தொண்டை கட்டினாலோ எப்படி கண்டுபிடிப்பார்கள்? பன்றிகளுக்கு இருக்கும் குரல் வளத்துக்கு, தொண்டையும் கட்டி விட்டால் விசேஷம்தான்.

ஒரு வேளை டாக்டர்கிட்ட போனா இப்படித்தான் கேக்குமோ?



கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுதான்


எல்லாரும் சுத்த பத்தமா இருந்து அவங்கவங்க உடம்ப பத்திரமா பாத்துக்கங்கப்பா.


இந்த மாதிரி சூதானமா இருங்க

இதையும் நீங்கள் ரசிக்க கூடும் : நான் AND ஜெர்ரி, அந்த சா.மி.சா. பார்வை