Friday, July 16, 2010

"டீலா நோ டீலாவில் கலந்து கொள்ள"

மு.கு. :

ரியாலிட்டி ஷோ என்று சொல்லிவிட்டு "டீலா நோ டீலா" நிகழ்ச்சியில் நடக்கும் செண்டிமென்ட் காட்சிகளால்
க(ல)வரப்பட்டு தோன்றிய கற்பனையே இந்த பதிவு.
*************************************************************************************
போன் மணி அடிக்கிறது..

"ஹலோ, ராமசாமி ஹியர்"

"சன் டிவிலேர்ந்து பேசறோம்,டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க ஆள் செலக்ட் பண்றோம்"

"அடடே, ரொம்ப சந்தோஷங்க"

"இப்ப கேக்கற கேள்விக்கெல்லாம் நீங்க சொல்ற பதில்லேர்ந்துதான் நாங்க செலக்ட் பண்ணுவோம்."

"கேளுங்க சார்"

"வீட்ல எத்தன பேருங்க இருக்காங்க?"

"இப்போதைக்கு நான் மட்டுந்தாங்க இருக்கேன், மத்தவங்கள்ளாம் வெளியில போயிருக்காங்க."

"அது இல்லைங்க. உங்க குடும்பத்துல மொத்தம் எத்தன பேரு?"

"அஞ்சு பேருங்க, நானு, என் மனைவி, பையன் அப்பறம் எங்க அப்பா, அம்மா."

"அய்யய்யோ, எல்லாருமே இருக்காங்களா...,எல்லாருமே ஒரிஜினல்தானே?"

"என்னங்க கேக்கறீங்க!!!! இதுல கூட டூப்ளிகேட்லாம் இருக்கா என்ன?"

"அதில்லீங்க சொந்த அப்பா, அம்மாவா இல்ல தத்து எடுத்தாங்களா? "

"சேச்சே... அக்மார்க் ஒரிஜினல் அப்பா அம்மாதாங்க."

"உங்க மனைவி? கல்யாணம் ஆயிருச்சா?"

"என்னங்க இது இவ்வளவு அபத்தமா கேக்கறீங்க?"

"இல்லைங்க, லிவிங் டுகெதர் மாதிரி ஏதாவது?"

"அதெல்லாம் இல்லீங்க.முறையா கட்டிகிட்டதுதான்"

"லவ் மேரேஜா? ஓடி கீடி போய் கல்யாணம் பண்ணீங்களா?"

"அதுவும் இல்லீங்க, வீட்ல பாத்து பண்ணி வெச்சதுதாங்க"

"ஹ்ம்ம்... ஒண்ணும் ஒத்து வரலியே.சரி... பையன், உங்க பையன்தானே?"

"யோவ்?"

"அடடே, தப்பா புரிஞ்சுகிட்டீங்களா? ஏழை குழந்தை எதுவும் தத்து எடுத்திருக்கீங்களோன்னு கேட்டேன்."

"சொந்தமா, கல்யாணமாயி எண்ணி ஒம்போது மாசத்துல பெத்த புள்ளதான்."

"ப்ச்... அப்படியா?"

"சம்பாத்தியமெல்லாம் எப்படிங்க? சாப்பாட்டுக்கெல்லாம் எதுவும் கஷ்டமா?"

"கடவுள் புண்ணியத்துல, நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய், போதுமான அளவுக்கு சம்பாதிக்கறோங்க."

"போச்சு, இதுலயும் ஒரு பிரச்னையும் இல்லியா?"

"வீட்ல யாருக்கும், எதுவும் உடம்புல பிரச்னை இருக்கா?"

"நாலு நாளா பையனுக்கு அரை மணிக்கு ஒருவாட்டி கொஞ்சம் தண்ணியா போவுது.
அப்பா கூட நீர் பிரியும்போது கொஞ்சம் எரிச்சலா இருக்குன்னு போன வாரம் சொன்னாரு."

"இதெல்லாம் இல்லீங்க, பெரிசா ஏதாவது? ஹார்ட், கிட்னி , கேன்சர்... இப்படி ஏதாவது?"

"அதெல்லாம் ஒண்ணும் கெடையாதுங்க"

"சரிங்க.. அப்ப நான் வேற ஆளத்தான் பாக்கணும்."

"ஏங்க நான் கலந்துக்க முடியாதா, டிவியில வரலாமேன்னு பாத்தேன்."

"வீட்ல, எதுவும் பெரிசா பிரச்னை வந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க, வேண்ணா
அப்ப கன்சிடர் பண்ணலாம்."

*********************************************************************************

கடை வீதியில் இரு பெண்கள்

"என்னது, டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க போறியா?"

"ஆமா,ஏன்?"

"சொல்லவே இல்ல, ஒன் புருஷன் ஒன்னய விட்டு ஓடிப்போனது எனக்கு தெரியாதே"


ஆஸ்பத்திரியில் நோயாளியும் டாக்டரும்

"டாக்டர், இன்னிக்கு மட்டும் என் மாமாவ ஒரு ரெண்டு அவர் வெளியில போயிட்டு வர அனுமதி குடுங்க"

"என்னங்க இது,அவருக்கு கிட்னில பராப்ளம்.இப்பவோ அப்பவோன்னு ஐ.சி.யு ல இருக்காரு.வெளில எதுக்கு போவணும்?

டீலா, நோ டீலா நிகழ்ச்சில கலந்துக்க சன் டிவிலேர்ந்து கூப்டுருக்காங்க டாக்டர்.

வீட்டில் கணவனும் மனைவியும்

"என்னம்மா, போன்ல யாரு? ஏன் பேசாமயே கட் பண்ணிட்ட?

"பின்ன, சன் டிவிலேர்ந்து டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க கூப்புடறாங்க.நம்ம வீட்ல எல்லாரும் நல்லா இருக்கறது புடிக்கல போல."

Saturday, July 3, 2010

ஆக்டோபஸ் ஜோசியம் பலிக்குமா?

உலகக் கோப்பை ஆரம்பித்து உலகெங்கிலும் மக்கள் கால்பந்து ஜுரத்தால் பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற உலககோப்பை சேம்பியன் இத்தாலி, மற்றொரு ஃபைனலிஸ்ட் ஃப்ரான்ஸ் உட்பட பல ஜாம்பவான் அணிகள் எல்லாம் காலிறுதிக்கு முன்பே வெளியாகிவிட்டன.வழக்கம் போலவே பரபரப்பாக பேசப்பட்டு அதே வழக்கபபடி சொதப்பியது இங்கிலாந்து.

நேற்று நடந்த நெதர்லாந்து - ப்ரேசில் மோதலில் எதிபாராத விதமாக நெதர்லாந்து வெற்றி பெற்று சூதாட்டத்தில் பணம் கட்டிய பலர் வயிற்றில் உதைத்தது.

இன்று, இன்னும் சில நிமிடங்களில் மிக முக்கியமான அடுத்த காலிறுதி ஆட்டம். கட்டுக்கோப்பான ஜெர்மன் அணிக்கும் கட்டவிழ்த்த காளைகளாய் விளையாடும் அர்ஜென்டினாவுக்குமான ஆட்டம்.விட்டால் களமிறங்கி ஆடிவிடுவார் போல பரபரப்பாக இருக்கும் மரடோனா மற்றும் அவர் வாரிசாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரால் அர்ஜென்டினா ஜெயிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் ஜெர்மனிதான் ஜெயிக்கும் என்று மனசாட்சி சொல்கிறது.


இந்த லட்சணத்தில் ஆக்டோபஸ் ஜோசியம் வேறு. ஜெர்மனியில் இருக்கும் ஒரு அக்வேரியத்தில் பால் என்ற ஆக்டோபஸ் இருக்கிறது. இதுவரை நடந்த அனைத்து ஜெர்மனி மேட்சுகளின் முடிவுகளையும் துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறதாம் இந்த ஆக்டோபஸ்.


இரண்டு பிளாஸ்டிக் கிண்ணங்களில் இரு நாட்டு கொடிகளையும் ஆக்டோபஸுக்கான உணவையும் போட்டு பால் இருக்கும் தொட்டிக்குள் இறக்கி விடுவாரகள். அது எந்த கிண்ணத்திலிருக்கும் உணவை முதலில் சாப்பிடுகிறதோ அந்த நாடுதான் போட்டியில் ஜெயிக்குமாம்.செர்பியா ஜெர்மனி போட்டியில் கூட ஜெர்மனி தோற்கும் என்று கணித்ததாக கூறி சிலாகிக்கிறார்கள்.

பால், இன்றைய போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் எண்று சொல்லியிருக்கிறது.

போட்டிக்கு இன்னும் 5 நிமிஷந்தான் இருக்கு. டிவி பாக்க போறேன். வர்ட்டா.....