Friday, December 25, 2009

கிருஸ்துமஸை முன்னிட்டு உலக தமிழ்ப் பதிவுகளில் முதன் முறையாக...

சிங்கப்பூரில் கிருஸ்துமஸ் ஒளி அலங்காரங்கள் மிக பிரபலம். இநத ஒளி அலங்காரங்களை பார்க்க செல்லும்போது சில எதிர்பாராத அருமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பும் கிட்டும்.ஸ்ட்ரீட் பர்ஃபார்மன்ஸஸ் மற்றும் வணிக வளாகங்கள் ஏற்பாடு செய்யும் பல்சுவை நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.அப்படி ஒரு வணிக வளாகத்தில் பார்த்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங்குகள் கீழே.

சாண்டா க்ளாஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பதற்காக மான்கள் பூட்டிய வண்டியில் செல்வாராம். சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் இந்த வருட கிருஸ்துமஸ் அலங்காரங்களில் இந்த மான்களுக்குத்தான் முக்கியத்துவம். விதவிதமான மான் முக பெண் பொம்மைகள்.எல்லா வருடங்களையும் போல் ஒளி அலங்காரங்கள் மிகவும் அருமை.கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு குடும்பத்துடன் வீதி வலம் சென்றோம். புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதிக்கு போன ஃபீலிங். அத்தனை கூட்டம். என்ன ஒன்று, "ஏடு கொண்டல வாடா கோவிந்தா“ தான் மிஸ்ஸிங்.இந்த வருடம் கூடுதல் சிறப்பு, மெரீனா பே பகுதிகளிலும் "Glitzy Christmas By the Bay" என்ற தீமில் ஓளி அலங்காரங்கள்.விதம் விதமான கிருஸ்துமஸ் மரங்கள்.

border=0>

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்

Friday, December 11, 2009

நான் AND ஜெர்ரி

(மு.கு. இந்த பதிவு ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையை விவரிப்பதால் 18 வயசுக்கு குறைவானவர்கள் பெற்றோர் துணையுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)

"என்னங்க.. என்னங்க.." என்று தன் எட்டு கட்டை ஸ்தாயியில் விளித்துக் கொண்டே வந்தாள் என் பத்தினி.

நான் வழக்கம் போல், பக்கத்தில் வரவிட்டு காது செவிப்பறை கிழியும் அபாயத்திற்கு சற்று முந்தைய என்னங்கவிற்கு...

"கூப்டியா?, சொல்லு என்ன விஷயம்", என்றேன்.

"வடை வேணும்னா, கேக்க கூடாதா? நானே தந்துட்டு போறேன். அதுக்காக இப்படித்தான் பிச்சு பிச்சு தின்னுப்புட்டு, கிச்சன் பூரா இறைச்சு வெக்கிறதா..."

"எது?, காலைல உங்களுக்கு புடிக்குமேன்னு செஞ்சேன்னு சொல்லி ஆசையா குடுத்தியே அதுவா?" ("காலைல சூடா இருக்கும்போதே, நீ திட்டுவியேன்னுதான் தொண்டை அடச்சாலும் பரவால்லேன்னு நாலு தின்னேன். அதையா திரும்பவும் சாப்ட்டியான்னு கேக்கறே?")

"ஆமா.. சாப்டீங்களா இல்ல கடிச்சு துப்பினீங்களா? யார் இதெல்லாம் க்ளீன் பண்றது?"

"என்னப்பா சொல்ற, நான் கம்ப்யூட்டர வுட்டு ஏந்திரிக்கவே இல்லியே..."

"அப்ப அந்த பய வேலையா இருக்குமோ? அவன் காலையிலியே ஒண்ணு போதும்னுட்டானே...(ஹ்ம்ம்ம்... அவனுக்கு விவரம் ஜாஸ்தி) என்று புத்திர சிகாமணியை திட்டி கொண்டே வேலையை பார்க்க போய் விட்டாள்."

அடுத்த நாள்... நான் குளியலறையிலிருந்து, "ராஜீஈஈஈஈ......."

"என்னங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?" என்று ஆவலாய் பார்க்க ஒடி வந்தாள்.

"நேத்துதான் புது சோப்பு எடுத்து போட்டேன் அதுக்குள்ள காணுமே, எங்க?"

"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் ஒரு வேளை, புதுசா சேந்த லேடி மேனேஜர் முன்னாடி பளிச்சுனு தெரியணும்கறத்துக்காக முழு சோப்பையும் ஒரே நாள்ள தேச்சு காலி பண்ணீட்டீங்களோ என்னமோ.." என்றாள்.

என் முறைக்கும் பாவனையை (பின்ன நெசமாவா முறைக்க முடியும்) கண்டு, "சரி.. சரி.. புது சோப்பு தரேன் குளிச்சிட்டு வந்து உங்க மோப்ப சக்தியெல்லாம் வெச்சு துப்பறியுங்க" என்று சோப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

குளித்துவிட்டு வந்து அலமாரியில் பார்த்தால் தேங்காய் எண்ணெய் பாட்டில்(ப்ளாஸ்டிக்) கவிழ்ந்து அத்தனை எண்ணையும் கொட்டி கிடந்தது.பாட்டிலை எடுத்து பார்த்தால் மூடி டைட்டாகதான் இருந்தது, ஆனால் அடியில் சூடு பட்டது போல ஒட்டை.

"ஆஹா... நம்மளை மீறிய ஒரு அமானுஷ்ய சக்தி வீட்டுக்குள்ள இருக்குடா" என்று லேசாக புரியத் துவங்கியது.

சாயங்காலம் என் மனைவி "குழி பணியாரம் செய்யலாம்ணு இருக்கேன், மேல அட்டத்துல இருக்கற சட்டிய கொஞ்சம் எடுத்துக்கொடுங்க" என்றாள்.

முந்தின தடவை பணியாரம் என்று செய்த வஸ்து ஞாபகத்தில் வந்து பயமுறுத்தினாலும் வேறு வழியில்லாமல் ஸ்டூலை போட்டு எக்கி எடுக்கும்போது......

4x2 இன்ச் சைஸில் பந்து போன்று ஏதோ ஒன்று என் தோளுக்கு மேல் பறந்தது போல் தோன்றியது.

அடுத்த வினாடி, "வீஈஈஈஈஈல்".....சூப்பர் சிங்கர் வெஸ்டெர்ன் மியூசிக் சுற்றில் ராகினி ஸ்ரீ உச்ச குரலில் கத்தினாரே அது போன்ற ஒரு சத்தம் என் மனைவியிடமிருந்து... (சம்பவம் பழசு, உவமை மட்டும்தான் புதுசு...)

நானும் திகிலடைந்து சட்டி வேறு, நான் வேறாக விழுந்தேன்.

"எலிங்க... பெரிய எலி..." என்று வீஈஈலுக்கு விளக்கமளித்தாள்.

விழுந்தவாக்கில் விட்டத்தை பார்த்து யோசித்ததில் வடை, சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த அமானுஷ்யம் என்று அனைத்திற்கும் விடை கிடைத்தது.

மேலே ஏறி திரும்பவும் பார்த்ததில்.. காணாம போன சோப்பு, ஒரு பாதி வெங்காய துண்டு (அய்... நான் போன வாரம் தோச கல்லு துடைக்க வெச்சிருந்தத காணோம்னு தேடினேன்-மனைவி), தேங்காய் பத்தை, என் பழைய அண்டர்வேர் என்று ஒரு பெரிய கொள்முதல் கிடங்கே இருந்தது.கையோடு அட்டம் முழுவதையும் சுத்தம் செய்து வைத்தோம்.

சரிதான் ஒடிப்போயிடுச்சே, இனிமே வராதுன்னு நெனைச்சா நாளொரு பொருள் காணாமல் போவதும் பொழுதொரு சாமானை வீணடிப்பதுமாக எலியாரின் திருவிளையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

உச்ச கட்டமாக, ஆசையோடு நான் 5ம் பிறந்தநாளுக்கு (கல்யாணத்துக்கு பிறகு) வாங்கி கொடுத்த காட்டன் நைட்டியை அவர் குதறி வைக்கவும், என் பாரியாள் காளியாக மாறி ஒரு எலி பிரச்னையை சால்வ் பண்ணத் தெரியல நீயெல்லாம் ஒரு...ஒரு.... இஞ்சினியரா என்ற அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டாள்.

என் இஞ்சினியரிங் சிலபஸ்சில் இது இல்லாத காரணத்தாலும், முன் அனுபவம் இல்லாத குறையாலும் என் அலுவலக/வெளி நண்பர்களிடம் யாரவது எலி பி(அ)டிக்கும் நிபுணர்கள் உண்டா என்று விசாரித்தேன்.அவர்கள் யோசனைப்படி முதலாவதாக...

பொறியில் வடை வைத்து பார்த்ததில் சீந்தவேயில்லை. சரி நம்ம வீட்டு வடை டேஸ்டு அதுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுனால சாப்புடலன்னு நெனைச்சு, பக்கத்துல இருக்கற டீக்கடைலேருந்து ஒரு மசால் வடை வாங்கி பாதியை பையனுக்கு கொடுத்துவிட்டு (அப்பா.. நல்லா இருக்குப்பா...) மீதியை பொறியிலும் வைத்தேன்.அதுக்கும் அது ஏமாறவில்லை.

இரண்டவதாக, எலி பாஷாணத்தை பல விதங்களிலும் ட்ரை பண்ணியதிலும் தோல்விக்காயை(வெற்றிக்கனிக்கு எதிர்ப்பதம்)த்தான் சந்தித்தேன்.

மூன்றாவதாக சொன்ன பூனை வளர்ப்புக்கு என் மனம் ஒப்பவில்லை.

எலியாரின் அழிச்சாட்டியம் ஷூ,சாக்ஸ், பாய், போர்வை,கம்ப்யூட்டர் வயர் என்று வளர்ந்துகொண்டே போக,அவரை என் பரம வைரி லிஸ்டில் சீனியர் மோஸ்ட் பொசிஷனுக்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் பையனுக்கு பள்ளி விடுமுறை வரவும் பத்து நாள் பேச்சிலர் (அய்யா... ஜாலி...) வாழ்க்கை. ஒரு நாள் இரவு எட்டு மணி போல பரோட்டா பொட்டலமும், பீர் பாட்டிலுமாக வீட்டுக்குள் நுழைந்து விளக்கை போட்டதும், எலியார், ஹாலிலிருந்து உள் அறைக்கு ஒடியதை பார்த்தேன்.உடனடியாக மனதிற்குள் ஒரு மாஸ்டர் ப்ளான் உருவானது.

ரூமுக்குள் நுழைந்து ஜன்னல் கதவு எல்லாவற்றையும் மூடி விட்டேன்.ரூமில் இருக்கும் அத்தனை பொருளையும் ஜாக்கிரதையாக திரட்டி கதவுக்கு வெளியே வைத்தேன்.

அந்த அறையில் அலமாரிக்கு மேல் அந்த கால மர்ஃபி வால்வ் ரேடியோ ஒன்று உண்டு. என் தநதை (ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணிணா பிபிசி டைரெக்டா ரிசீவ் பண்ணும் - என் அப்பா) வழி சொத்து அது.விஜய் மல்லையா போன்றவர்கள் பிற்காலத்தில் ஏலத்தில் கேட்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி பத்திரமாக வைத்திருந்தேன்.

ஒரு ஆளாக இந்த ரேடியோவை இறக்க முடியாது என்பதால் அதுவும், கொஞ்சூண்டு தெர்மோகோலும்தான் அறைக்குள் மீதி இருந்தது. நம்ம ஹீரோ நிச்சயமா ரேடியொவுக்குள்ளதான் ஒளிந்திருக்க வாய்ப்பிருந்தது.

வெளியே வந்து கதவை இருக்க மூடி தாள் போட்டு, அடியில் இருந்த கொஞ்சம் இடைவெளியையும் அட்டை, செங்கல் என்று பலவற்றையும் கொண்டு மூடிவிட்டேன்.

மூன்று நாளுக்கு கதவை திறக்கவேயில்லை. நாலாம் நாள்
மெ....................து........................வா.......................க
கதவை திறந்தால் அறை முழுவதும் தெர்மோகோல் குப்பை. சிறிது நேரம் அமைதியாக வெய்ட் பண்ணி ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து பார்த்தால் ஒரு மூலையில் நம் எதிரி ஒருக்களித்து படுத்திருந்தார்.

கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு கொடுத்த குடையை வைத்து தூஊஊஊஊஊரத்தில் நின்று கொண்டு தரையில் நாலு தடவை டொக்கினேன்.எலியாரின் வால் மட்டும் லேசாக ஆடியது. அப்படியே ஜகா வாங்கி திரும்பவும் கதவை மூடி... அட்டை, செங்கல்,இத்யாதி சடங்குகளையும் பொறுப்பாய் செய்தேன்.

அடுத்த நாளும் குடை.. டொக்.டொக்..டொக்...

ஆனால் நம்ம ஹீரோவிடம் சலனம் துளியும் இல்லை. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பைக்குள் குடைக்கம்பியால் அவரை உள்ளே தள்ளி முடிச்சு போட்டு அரை கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் எறிந்துவிட்டு ஒரு குரூர புன்னகையுடன் வீடு திரும்பினேன்.

வெற்றிக்களிப்பை சகதர்மினிக்கு ஃபோன் போட்டு பகிர்ந்து கொண்டு அவருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றேன்.

ஆனாலும் ஒவ்வொரு முறை "மூஷிக வாஹன மோதக ஹஸ்த" என்று பிள்ளையாருக்கு ஸ்லோகம் சொல்லும்போதும் லேசாக குற்ற உணர்ச்சி எட்டி பார்ப்பது என்னவோ உண்மை.

நீதி 1: எலிகளுக்கு தெர்மோகோல் உகந்த உணவு இல்லை.

நீதி 2: எலிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாள் வரை உயிரோடு இருக்கும்.

Wednesday, December 2, 2009

சாலட். - ௦02/டிச/2009


பலா: சமீபத்தில் Orphan என்ற ஆங்கில படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அநியாயத்துக்கு ஹாரர் Cum த்ரில்லர் படம்.வாரக்கடைசியில் ராத்திரியில் பார்த்துவிட்டு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.சுமார் 9 வயதிருக்கும் ஒரு பெண் குழந்தை கன்னா பின்னவென்று கொலை செய்கிறது (ஒரு கன்னியாஸ்த்ரீயை சுத்தியால் அடித்தே). ஏன் எதற்கு என்பதெல்லாம் கடைசி 10 நிமிடத்தில்தான் புரிகிறது. கேமிரா கோணங்கள், இசை, நடிப்பு எல்லாமே அபாரம்.அதுவும் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அந்த குட்டிப்பெண் கொள்ளை அழகு. விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போடலாமெனதான் நினைத்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று கேபிளாரின் பதிவை செக் பண்ணினால் மனுஷன் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். படம் பார்த்துவிட்டு விமர்சனம் படித்தால் அவருடைய quality தெரிகிறது. சான்ஸே இல்லை. விரிவான விமர்சனம் இங்கே

ஆப்பிள்: சூப்பர் சிங்கரில் காம்பியரிங் செய்த டிடியின் உடைகளைப் பற்றி இங்கு எழுதினாலும் எழுதினேன், விஜய் டிவிக்காரர்கள் அவரை தூக்கிவிட்டு, திவ்யாவை கொண்டு வந்து விட்டார்கள்(நான் கூட சொல்லிக்கலைன்னா எப்பிடிங்க?).நடுவர்களை விடுங்கள், திறமைக்கு முன் மொழியெல்லாம் பார்க்க வேண்டாம்.காம்பியரிங்குக்கு கூடவா ஆள் பஞ்சம்? பாதி நேரம் இவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், கொழகொழவென்று இவர் பேசும் தமிழை கேட்பது அதைவிட கொடுமை.டிடியே பரவாயில்லை. Chinmayi was much better.

“All good things were at one time bad things; every original sin has developed into an original virtue.” -Friedrich Nietzsche

ஆரஞ்சு: மற்ற சேனல்களில் வரும் தொடர்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியின் தொடர்கள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.வழக்கமான லேடிஸ் செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் ஓரளவுக்கு யதார்த்தமாகவே இருக்கின்றன. முக்கியமாக வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. "அன்பே வா" தொடரின் வசனகர்த்தாவுக்கு முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கலாம்.முக்கியமாக கீழிருக்கும் பாத்திரங்கள் வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்தரவாதம்.


டைட்டிலில் யார் வசனகர்த்தா என்று போடுவதேயில்லை, என்ன காரணமோ? இத்தொடரில் கதாநாயகனை இரு நாயகிகளில் யாருடன் சேர்த்து வைப்பது என்று எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பு நடத்தியதாக கேள்வி. Audience Participation !!!!

திராட்சை: ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு சாலட் தொடரும்.


வழமையாகவே ஃபெவிகாலின் விளம்பரங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும்.அந்த சீரிஸில் இது அருமையான ஒன்று.

அன்னாசி: சன் டிவியின் டீலா நோ டீலா நிகழ்ச்சியை பற்றி பலவிதமான கருத்துகள்.கான்செப்ட் ஒன்றும் புதிதில்லை, பல ஆங்கில தொலைக்காட்சிகளில் வந்ததுதான். சிங்கப்பூரில் கூட Courts ஸ்பான்ஸர்ஷிப்பில் "Deal or No Deal" என்று ஒரு நிகழ்ச்சி வந்ததுண்டு.ரிஷி ஸ்டைலாக நடத்துவதாக சிலரும் "குப்பை, ரொம்ப அலட்டறான்" என்று ஒரு சாராரும் கட்சி கட்டி கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஒ.கே. ரகம். போகப் போக கருத்து மாறலாம்.போட்டியில் அறிவுக்கு வேலையில்லை என்றாலும் ஒரளவுக்கு சமயோசித புத்தி தேவைதான்."நீ இந்த போட்டியில் கலந்துண்டு பெரிய அமௌண்டா ஜெயிச்சா என்ன பண்ணுவ?" என்று மனைவியிடம் கேட்டேன்.


"அந்த பொட்டிய தூக்கிகிட்டு பின்னாடி நிக்கறவளுகளுக்கெல்லாம் கொஞ்சம் நல்லதா நாலு துணிமணி வாங்கித்தருவேன்" என்றார்.

Tuesday, November 10, 2009

மெகா தொடர்

இந்த தொடர்பதிவை போட வேண்டாமென்றுதான் நினைத்தேன். நர்சிம் மாதிரி பெரியவர்களே போடுவதாலும், வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லாததாலும், முக்கியமாக மணிகண்டன் அவர்களின் அழைப்பை ஏற்பதற்காகவும்....

1. A – Available/Single? : Not Single but... (நெனப்புதான் பொழப்ப கெடுக்குது)

2. B – Best friend? : என் அனைத்து நண்பர்களும்

3. C – Cake or Pie?: நல்லா இருந்தா எல்லா கண்றாவியையும் சாப்புட வேண்டியதுதானே.

4. D – Drink of choice? : உசிலை மணி "பேஷ்.. பேஷ்.."னு சொல்லிண்டே குடிப்பாரே அது

5. E – Essential item you use every day? : அண்டர்வேர்

6. F – Favorite color? : நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு (சே...சே.. நீங்க நெனைக்கற மாதிரி இல்லீங்க..)

7. G – Gummy Bears Or Worms?: ? யாரு இத முதல்ல ஆரம்பிச்சாங்களோ தெரியல.. Gummi Bears என்று இருக்க வேண்டும்.
இது என்னமோ மிட்டாயாமே???? (நன்றி - கூகிளாண்டவர்)
இது வரைக்கும் சாப்டதில்ல.

8. H – Hometown? - வயலின் மேதை ஜெயராமன் ஊர்.

9. I – Indulgence? - பெரும்பாலான பதிவர்களுக்கும் இருப்பதே

10. J – January or February? February - அதே கூலிக்கு கம்மி நாளு வேல செஞ்சா போதும்.

11. K – Kids & their names? :ஹரீஷ்

12. L – Life is incomplete without? - Enjoyment

13. M – Marriage date? நான்: "ஏம்பா? நம்ம கல்யாண நாள் எது?"
என் மனைவி :"ம்க்க்கும்ம்... நான் நல்லது நடந்த நாள மட்டுந்தான் நெனப்புல வெச்சுக்கறது"


14. N – Number of siblings? 2

15. O – Oranges or Apples? லோங்கன் (Longan)

16. P – Phobias/Fears? : ஏனைய பொழுதுபோக்குகளை விழுங்கி கொண்டிருக்கும் பதிவுலகம்

17. Q – Quote for today? : 64.85 US $ (எங்க கம்பெனியோட இன்னிக்கு Stock market Quote)

18. R – Reason to smile? : எதிரில் வருபவர்களின் ஸ்மைல்

19. S – Season? இந்த ஊர்ல அப்படி ஒண்ணுமே கெடையாது. ஆனா வின்டர் புடிக்கும்.

20. T – Tag 4 People? ஒபாமா, ராஜபக்ஷே, ராகுல் காந்தி, ஜே.கே.ரித்தீஷ்.
தனித் தனியாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

21. U – Unknown fact about me? நான் கிண்டர் கார்டனில் படித்ததே இல்லை. நேரடியாக ஒண்ணாம்புதான். (என்னா ஒரு சாதனை ????)

22. V – Vegetable you don't like? வாழைத் தண்டு (அது போல கால் இருந்தா பார்த்து ரசிப்பேன்)

23. W – Worst habit? வீட்ல இருந்தா டிவி சத்தம் இருக்கணும்

24. X – X-rays you've had? : இருபத்தாறுல இதுதான் ரொம்ப மோசம்.

25. Y – Your favorite food? :) என் மனைவியின் கையால் கிடைக்கும் எல்லா உணவுகளும்
(என்னாது.. சோப்பு வாசனை அடிக்குதா???)

26. Z – Zodiac sign? சிங்கிளா வருமே, அதுதான்

ஆசைக்குரியவர்: என் சீமந்த புத்திரன்

இலவசமாய் கிடைப்பது: காத்து (ஹ்ம்ம் எத்தன நாளைக்கோ?)

ஈதலில் சிறந்தது: அறிவு

உலகத்தில் பயப்படுவது: அதென்ன இங்கிலிபீசுல ஒரு வாட்டி தமிழுல ஒரு வாட்டி

ஊமை கண்ட கனவு: குரலுடன் இருக்கும்

எப்போதும் உடனிருப்பது: SEE 5 ABOVE

ஏன் இந்த பதிவு: மணிகண்டனின் அன்பான மிரட்டல்.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நட்பு

ஒரு ரகசியம்: என் உண்மையான பெயர் அறிவிலி அல்ல. என் பெற்றோருக்கு நான்
இப்படி இருப்பேன் என்று தெரியாததால் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு

ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது: கணிணி

Wednesday, November 4, 2009

சும்மா இருக்க முடியுமா? சவால்


வடிவேலு ஒரு படத்துல "சும்மா இருக்கறதுன்னா அவ்வளவு ஈசியா?" அப்படின்னு சவால் விடுவாரு.

அது மாதிரி சும்மா கைய வெச்சுகிட்டு நின்னா 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரு குடுக்கறாங்க.

எங்க.. எங்க.. எங்க... அப்படின்னு அலை பாயறீங்களா?

சிங்கப்பூர்ல வருஷத்துக்கு ஒரு தடவ இந்த மாதிரி ஒரு போட்டி நடக்குது. சிட்டி செண்டர்ல ஒரு இடத்துல நாலு அஞ்சு கார நிறுத்தி வெச்சிருப்பாங்க. போட்டியில கலந்துக்கறவங்க எல்லாரும் தங்களோட ஒரு கைய கார் மேல வெச்சுகிட்டு நிப்பாங்க.மழை பெஞ்சாலும் சரி வெய்யில் அடிச்சாலும் சரி கைய எடுக்க கூடாது. கைய எடுத்தா போச்.. போட்டியிலேர்ந்து அவுட்.இப்படியே ஒவ்வொருத்தரா அவுட் ஆயி யாரு கடைசி வரைக்கும் கைய எடுக்காம நிக்கறாங்களோ அவருக்கு அந்த கார்ல ஒண்ணு பரிசு.


ஹையா... ரொம்ப சிம்பிளா இருக்கே அப்படிங்கறீங்களா??? இந்த வருடத்துக்கான போட்டி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தது.சீனா, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தொனேஷியா முதலான நாடுகளிலிருந்து வந்த எழுபது பேருடன் உள்ளூர் போட்டியாளர்களையும் சேர்த்து மொத்தம் 398 பேர் கலந்து கொண்டனர். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிட ஒய்வு இடைவேளை (சும்மா நிக்கறதுல என்ன ஓய்வு இடைவேளை?) மட்டும் உண்டு. மற்றபடி உள்ளங்கை முழுவதும் காரில் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

ஏகப்பட்ட ஏனைய விதிமுறைகளும் உண்டு. போட்டி முடியும் வரை சொந்தம் பந்தம் கொடுக்கும் அன்ன ஆகாரம் எதுவும் சாப்புட கூடாது, பக்கத்துல இருக்கற மத்த போட்டியாளர்களை கிண்டலோ, வெறுப்பூட்டும் விதமாக பேசவோ, சைகைகளோ செய்யக்கூடாது, போட்டி முடியற வரைக்கும் குளிக்க கூடாது, பவுடர் போடக் கூடாது (??? - நெசமாவே இப்பிடி ஒரு கண்டிஷன் இருக்குங்க) இப்படின்னு எக்கச்சக்கம். மேலும் சட்ட திட்டங்கள் அறிந்து கொள்ள. போட்டியை கை கோர்த்து நடத்துவது சிங்கப்பூர் மீடியாகார்ப் வானொலியும் சுபாரு கார் நிறுவனமும்.


இப்படியாக கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போட்டியில் ஒவ்வொருவராக "நம்மளால இனி சும்மா இருக்க முடியாதுடா சாமீ" அப்படின்னு கழண்டு கொள்ள, கடைசியில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக செவ்வாய் அன்று மாலை வெற்றி பெற்றவர் முகம்மது அன்வர் என்னும் 40 வயது சிங்கப்பூரர்.பாவம் கடைசியில் இவருடன் போராடி தோற்றவர் சந்தோஷ் குமார் பூஞ்சோலை என்னும் 23 வயது இளைஞர்.மொத்தம் போட்டி நடை பெற்ற நேரம் 77 மணி 43 நிமிடங்கள்.பரிசு வாங்குன கார ஓட்டுவாரா, இல்ல சும்மாவே வெச்சிருப்பாரா????

Friday, October 23, 2009

எத்தனையோ பாத்துட்டோம்........ஹ்ம்ம்ம்ம்ம்....

டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு முந்தைய நாள் சென்னைக்கு போக வேண்டி வந்தது.என் சித்தப்பா பையனின் திருமணம். அவர்கள் வீட்டிலேயே நான்கு வருடம் தங்கி படித்திருக்கிறேன். போகாவிட்டால் நன்றாக இருக்காது. திருமணத்தன்று இரவு ரிசப்ஷன் முடிந்த கையோடு கிளம்பி விட்டால் பிரசவத்தன்று கரெக்டாக வந்து விடலாம். மேலும் பார்த்துக் கொள்ள அவள் அப்பா, அம்மா மேலும் கூப்பிடு தூரத்தில் மாமாக்கள் என்று எல்லோரும் உண்டு. இப்படியெல்லாம் மனதை தேற்றிக் கொண்டு மனைவியின் எதிர்ப்பையும் மீறி சென்றாலும் சென்னையில் இருப்பே கொள்ளவில்லை. எப்போதும் மனைவி, பிரசவம், குழந்தை என்று மனது முழுவதும் திருச்சியிலேயே இருந்தது.

ஒரு வழியாக திருமணம் ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ஏறிவிட்டேன். ட்ரெயின் ஏறுவதற்கு முன் போன் செய்தபோது இன்னும் வலி வரவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தாள். காலையில் திருச்சி போய் மாமனார் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் யாரும் இல்லை. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டதாக மச்சினன் கூறினான்.

பரபரப்பாக கிளம்பி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனால், ஆஸ்பத்திரி உடையில் வார்டுக்கு வெளியில் வந்து பலகீனமாக ஒரு புன்னகை பூத்தாள். ஊசி போட்டும் வலியெடுக்கவில்லை. அடுத்த இரு மணி நேரங்களில் பனிக்குடம் உடைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாலும் வலியெடுக்கும் அறிகுறிகள் தெரியாததாலும் சிசேரியனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். மாமியாரின் முகத்தில் கவலை ரேகைகளும், மாமாவின் கண்கள் தளும்பவும் அதுவரை தைரியமாக இருந்த நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பூத்துவாலையில் சுற்றி "தோ பாருங்க ரோஸ் பேபி", என்றவாறே நர்ஸ் உள்ளங்கையை விட சற்றே பெரிய அளவிலான ஒரு பூவை கொண்டு வந்து காண்பித்தார். தொட்டுப் பார்க்க கூட பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமானார்தான் இடுப்புக்கு கீழ் மறைத்துக் கொண்டிருந்த துவாலையை படக்கென்று விலக்கி "ஹை.. பேரப்பய" என்றார். "இன்னிக்கு பொறந்த பன்னெண்டு குழந்தைகளில் இது மட்டுந்தான் ஆம்பள புள்ள" என்ற உபரி தகவலை அளித்துவிட்டு நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே போய் விட்டார்.

"இன்பெக்ஷன் அவாய்ட் பண்றதுக்காக சிசேரியன் குழந்தைகளை 24 ஹவர்ஸ் ஸ்பெஷல் கேர் யூனிட்ல வெச்சிருப்போம், அப்பப்போ மதர் ஃபீட் பண்ண மட்டும் கூட்டிட்டு வருவாங்க, நத்திங் டு வொர்ரி" என்று பிரசவம் பார்த்த லதா டாக்டர் சொல்லி விட்டு கிளம்பும்போதுதான் "ஹவ் ஈஸ் தி மதர்?" என்று கேட்டேன். "நோ ப்ராப்ளம்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்பறமாபோய் பாருங்க" என்றார்.

மதியத்துக்கு மேல் ஸ்பெஷல் கேர் யூனிட்டிற்கு போய் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பிறந்த மேலும் ஐந்து பெண் குழந்தைகள் சூழ ஜாலியாக ஏசி ரூமில் தூங்கிக் கொண்டிருந்தான்.


அக். 24, 2009 : " அப்பா, இன்னிக்கு எனக்கு லெவென்த் பர்த் டே. புது சைக்கிள் வாங்கித் தர்றியா?"

எட்டு மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டே மாடிப் படியில் சறுக்கி விழுந்து தாடை பிளந்து தையல் போட்டது,

காது குத்தி தோடு போட்ட அன்று இரவே தோடு தலைகாணி நூலில் சிக்கிக்கொண்டு ரத்தம் வந்து கதறி அழுதது,

ப்ளே ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷர்மிலியால் கன்னத்தில் ரத்தம் வருமளவுக்கு கடிபட்டது,

எல்.கே.ஜியில் பெஞ்ச் முனையில் இடித்துக்கொண்டு கண்ணை சுற்றி கருவளையமாக ரத்தம் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் படத்து வில்லன் போல நின்றது,

யூ.கே.ஜியில் இரும்பு கேட்டில் ஏறி விளையாடி கால் இடையில் சிக்கி கொண்டு, கால் முழுவதும் வீங்கி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்.ரே எடுத்தது,

ஒன்றாம் வகுப்பில் புருஷோத்தமனுடன் புல்லு சண்டை போட்டு கை உடைந்து ஐம்பது நாள் தொட்டில் கட்டிய கையுடன் அலைந்தது,


சிங்கப்பூர் வந்த பிறகும் கூட மூன்றாவது படிக்கும்போது ஒரு நாள் சீன நண்பனிடம் பேச்சு சண்டை முற்றி, நசுக்கிய பெப்ஸி கேனால் முதுகில் ரத்தக்கோடுடன் வந்தது

இப்படியெல்லாம் எத்தனையோ பாத்துட்டோம்....ஹ்ம்ம்ம்ம்ம்....

"ஹேப்பி பர்த் டே டா செல்லம், சாயங்காலமா போயி சைக்கிள் வாங்கிறலாம்.... "

Thursday, October 8, 2009

சாலட் - 08/அக்/2009


ஆப்பிள்:இந்த வருடம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வருடமாக அமைந்து விட்டது. ரஹ்மானின் ஆஸ்காரை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் சிதம்பரத்தில் பிறந்து பரோடாவில் இயற்பியல் பட்டப் படிப்பு படித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்ட திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணண் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

அவர் இயற்பியல் பட்டதாரியாக இருந்தாலும் பின்னர் உயிரியலுக்கு மாறிவிட்டாராம்.இந்த வருடத்துக்கான வேதியியல்!!! பிரிவு நோபல் பரிசை மேலும் இரு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பெற்றிருக்கிறார்.உயிர் வேதியியல் துறையில் ரிபோசோம்கள் எப்படி இருக்கும் என்று காட்டியதற்காகவும் அவை அணு அளவில் எவ்வாறு செயல்படுகின்றன என்று விளக்கியதற்காகவும் அவருக்கு இந்தப் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.

இவருடைய கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கிறதாம்.

நம்ம வெங்கி(அப்படித்தான் அவர் நண்பர்கள் கூப்பிடுவாங்களாம்) என்னமோ ரிபோசோம் பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரே அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு விக்கிபீடியாவுல போய் பாத்தா....
ரிபொசோம் - என் பதிவோட லோகோ மாதிரியே இல்ல?
molecule consisting of two subunits that fit together and work as one to build proteins according to the genetic sequence held within the messenger RNA (mRNA). Using the mRNA as a template, the ribosome traverses each codon, pairing it with the appropriate amino acid. This is done through interacting with transfer RNA (tRNA) containing a complementary anticodon on one end and the appropriate amino acid on the other.

ம்ஹூம்ம்ம் ஒண்ணும் புரியல.. பின்நவீனத்துவமே பரவாயில்ல போலருக்கு.

விடுங்க.. நம்மளுக்கு எல்லாம் இருக்கவே இருக்கு சட்டைக்குள்ள, பேருல, பேசறதுலன்னு எல்லாத்துலயும் என்னென்ன அடையாளம் இருக்குன்னு தேடற ஆராய்ச்சிகள்.
----------------------------------------------------------------------------------

அன்னாசி: சன் டிவியில் பல்லாண்டு காலமாக ப்ரைம் ஸ்லாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் ராதிகா. சித்தி, அண்ணாமலை,செல்வி,அரசி என்று இப்போது செல்லமே ஆரம்பித்திருக்கிறது.


இந்த தொடரில் ராதிகாவின் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால் அவர்கள் ஒரு விளக்குக்கு பக்கத்தில் போய் நிற்க வேண்டுமாம். அதுதான் அவர்களுக்கு தண்டனை.இப்போது நான் போய் எங்கள் வீட்டு விளக்குக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த நாடகத்தை கொஞ்ச நேரம் பார்த்ததற்கு தண்டனையாக :((((
----------------------------------------------------------------------------------

ஆரஞ்சு: இந்த FEEDJIT ரொம்ப அருமையான விட்ஜெட். எங்கெங்கேர்ந்தெல்லாம் நம்ம பதிவ பாக்க (படிக்கலன்னாலும்) வராங்கன்னு பெருமையா பாத்துகிட்டு இருக்கலாம்.அதுவும் என்னோடது மாதிரி ஏழரை பேர் (கவனிக்கவும் - ஒரு வார்த்தை மிஸ்ஸிங்)வாசகர்கள் படிக்கும் பதிவுகளில் FEEDJIT ஐ வைத்து ஆராய்ச்சியே நடத்தலாம். தமிழ்மணத்திற்கும் FEEDJIT ற்கும் பூர்வ ஜென்ம அல்லது இந்த ஜென்ம பகை போலும். அங்கிருந்து வரும் எல்லோரையும் FEEDJIT உதாசீனப்படுத்தி விடுகிறது.

மேலும் சில நாட்கள் கவனித்ததில் துபாயிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் கிட்டத்தட்ட தினமும் என் பதிவுக்கு வருகிறார். புது இடுகைகளே போடாத அன்னிக்கு கூட இவருடைய விசிட் உண்டு. இதுல என்ன பெரிய விஷயம், அறிவிலியோட பதிவுககு ஒரு தீவிர விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. ஸ்க்ரீன் ஷாட்ட பாருங்க.


சைட் பார்ல இருக்கற நான் படிக்கும் பதிவுகள் லிஸ்ட்ல இருக்கற பதிவுகள் எல்லாத்துக்கும் இங்கேர்ந்துதான் அவுரு போவாரு. முக்காவாசி நாளைக்கு ஒரே ஒரு "Dubai arrived" ம் பத்து பதினைந்து "Dubai left via" வும் இருக்கும். ஆகவே பிரபல பதிவர்களே உங்களுக்கு இருக்கும் ஏழரையில் என் அணில் பங்கும் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------

திராட்சை: 50 ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. உலக நாயகன் கூட சினிமாவுக்கு வந்த ஐம்பதாவது வருடத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.50 ஆவது ஆண்டு திருமண நாள், 50 ஆவது பிறந்த நாள் போன்றவற்றை தங்கமாக கொண்டாடுகிறார்கள்.அப்படி இப்படி தட்டுத் தடுமாறி "எங்கப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்ற வகையில் நான் கிறுக்கித் தள்ளியவற்றின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுவிட்டது. பெருவாரியான அளவில் திரண்டு வந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் "கண்கள் பனித்து இதயம் இனித்த" நன்றிகள். முக்கியமாக மேலே சொன்ன துபாய் அன்பருக்கு இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.

Sunday, September 27, 2009

என்ன எழவு கடிகாரமோ?

சமீபத்தில் "AA DHEKEN ZARA" என்ற ஹிந்தி படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபருக்கு விஞ்ஞானியான தன்னுடைய தாத்தாவிடமிருந்து ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் இன்றைய தேதியை செட் பண்ணவே முடிவதில்லை. இனிமேல் வரப்போகும் தேதியும் நேரமும் மட்டுமே செட் பண்ண முடிகிறது.

முதலில் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் ஒரு புறாவை போட்டோ எடுக்கிறான். மறுநாள் அந்த புறா ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இரண்டு புறாக்களாக வந்து உட்காருகின்றன. டார்க் ரூமில் நெகட்டிவை டெவலப் செய்யும்போது போட்டோவிலும் இரண்டு புறாக்கள் தெரிகின்றன.

சந்தேகம் வந்து உடனே அடுத்த நாளுக்கான தேதியை செட் செய்து எதிர் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் பெண், பக்கத்து வீட்டு பால்கனியில் நிற்கும் குழந்தை உட்பட பலரையும் போட்டோ எடுக்கிறான். அந்த குழந்தை குடை ராட்டினத்தில் இருந்து விழுவது போலவும், எதிர் வீட்டு பெண்ணை யாரோ துப்பாக்கியில் சுட குறி வைப்பது போலவும் ப்ரிண்டில் வரவும் மறுநாள் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறான்.

நம் நாயகனுக்கு பணக் கஷ்டமும் கூட. பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெட்டி கடை வாசலில் நின்று கொண்டு யோசிக்கும் போது, பக்கத்து லாட்டரி கடையில் பரிசுப் பணம் வாங்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து ஐடியா கிடைக்கிறது. லாட்டரி கடை வாசலில் ரிசல்ட் எழுதிப் போடும் தகவல் பலகையை போட்டோ எடுத்து ப்ரிண்ட் போட்டு அதில் வரும் எண்களுக்கு பணம் கட்டுகிறான். அந்த எண்களுக்கு பரிசு கிடைக்கவும் தொடர்ந்து இதேபோல் லாட்டரி, குதிரை ரேஸ் என்று எல்லாவற்றிலும் சம்பாதிக்கிறான். பணம் கொழிக்கிறது. கூடவே அதே எதிர் வீட்டுப் பெண்ணுடன் (பிபாஷா பாசு :-(.... ) காதல் மற்றும் கேமராவை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன்கள் கூட்டம் என்றும் மசாலாக்கள்.சிறிது நாட்களுக்கு பிறகு தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ஃபோட்டோ முற்றிலும் கருப்பாக வருகிறது. வெறும் தேதி நேரத்தை தவிர மீதியெல்லாம் இருட்டு(கருப்பு).அதே போல் கருப்பாக போட்டோ வந்த அன்றுதான் தாத்தா இறந்திருப்பதாக அறிகிறான். போட்டோவில் வந்திருக்கும் தேதியில் தானும் இறக்கப் போவதாக நம்புகிறான். அவனும் அவன் காதலியும் சேர்ந்து சாவை தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதி நேரத்தில் ஒரு இருண்ட குழிக்குள் (கிணறு போன்ற) விழுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் உயிர் பிழைத்து வெளியில் வந்து விடுகிறான். அப்புறம்தான் புரிகிறது (அவர்களுக்கும்) போட்டோ கருப்பாக வந்ததற்கு காரணம் குழியில் இருந்த இருட்டுதான் என்பது.

வித்தியாசமான கதையாகவும், இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமலும் இருந்தது. ஒரு மனிதனுக்கு தான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது WWW.DEATHCLOCK.COM என்ற இணயதளத்தில் தடுக்கி விழுந்தேன். அதில் நீங்கள் இறக்கப்போகும் தேதியை முன்னரே கணித்துச் சொல்வதாக கூறுகிறார்கள். மேலே சொன்ன சினிமாவை பார்த்த பாதிப்போ என்னவோ நம்மளுக்கும் என்ன தேதி சொல்லுதுன்னு பார்க்கலாம்னு அதில் கேட்கும் விவரத்தையெல்லாம் கொடுத்தேன். நம் பிறந்த தேதி, புகை பிடிப்பவரா இல்லையா, உடல் எடை குறியீட்டு எண் (BODY MASS INDEX - BMI) ஆகிய விவரங்கள் கேட்கிறது.BMI கணக்கிடுவதற்கும் அதே பக்கத்தில் கீழே ஒரு TOOL இருக்கிறது. எனக்கு இன்னமும் 45 வருடங்கள் இருக்கிறதாம்.

என் மனைவிக்கு போட்டு பார்த்ததில் "திங்கட்கிழமை, மார்ச் 31, 2070" என்று வந்தது. "அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே" என்றாள் என் மனைவி.

அந்த தேதில நீங்க என்ன பண்ணுவீங்கன்னு என் மனைவி கேட்டதற்கு நான் சொன்ன பதில்

"இன்றே கடைசி" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.

"அடப்பாவி, அன்னிக்கும் அதேதானா???"

Tuesday, September 22, 2009

AAA வுக்கு LLL விரித்த வலை - ஈயமில்லாத கதை

அனானிமாபுரம்னு ஒரு ஊர்ல ஏ.பி.சி அப்படின்னு ஒரு கம்பெனி இருந்துச்சாம். அந்த கம்பெனில மிஸ்டர்.AAA தான் மேனேஜர்.மேனேஜரா இல்லாத பல பதிவர்கள் சொல்றா மாதிரி அவுர டேமேஜர்னு கூட சொல்லலாம்.

வேலைல பெரிய கில்லியா இருந்தாலும் அவுரு ஒரே ஒரு மேட்டர்ல பயங்கர வீக். ஆபீஸ்ல வேல பாக்கற பொண்ணுங்க கிட்ட எல்லாம் பயங்கரமா ஜொள்ளு வுடுவாராம்.BBB, DDD, KKK அப்படின்னு 3 பொண்ணுங்க அந்த ஆபீஸ்ல வேல பாத்துக்கிட்டிருந்தாங்க. பாவம் குடும்ப சூழ்நிலை காரணமா இந்த ஆளோட கொடுமையெல்லாம் சகிச்சுகிட்டு எப்படியோ சமாளிச்சு காலத்த ஓட்டிகிட்டு இருந்தாங்களாம்.

அப்போ அதே ஏ.பி.சி கம்பெனிக்கு புதுசா ஒரு ஸ்டெனோ வேகன்ஸி வரவும் இண்டர்வியூ நடத்தி புதுசா அப்பத்தான் காலஜு முடிச்ச மிஸ்.LLL அப்படின்னு ஒரு பொண்ண செலக்ட் பண்ணிணாரு நம்ம AAA. LLL ஒரு தைரியமான பொண்ணு.

வேலைல சேந்த மொத நாளே BBB,DDD,KKK மூணு பேரும் LLL கிட்ட AAA வோட கேரக்டரை பத்தி சொல்லவும்,இந்த டேமேஜர எப்படியும் மாட்டிவுடனும்னு LLL மனசுக்குள்ள முடிவு செஞ்சா.

நம்ம ஹீரோ AAA(வில்லன்???) வழக்கம்போல LLL கிட்டயும் தன்னோட வேலைய காமிச்சாரு.அப்போதான் LLL ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டா. தனக்கும் AAA கிட்ட விருப்பம் இருக்கறா மாதிரி நடிச்சா. ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற பேரில்லாவூருக்கு வீக் எண்ட்ல பிக்னிக் போலாம்னு முடிவு செஞ்சாங்க. ஆனா LLL ஒரு கண்டிஷன் போட்டா. தன் கூடவே TTT ங்கற இன்னொரு பெண்ணும் வரதுக்கு சம்மதிக்கணும்னு சொன்னா. எதையோ திங்க அதையே கூலியா குடுத்தா மாதிரி இருக்கேன்னு AAA வும் சந்தோஷமா ஒத்துகிட்டான்.

அந்த TTT யாரு? LLL எப்படி AAA வை சிக்க வெச்சா அப்படின்ன்னு ----- இனிமேதான் யோசிக்கணும்
மேலும் தொடரக்கூடும்....

டிஸ்கி: ககக, திதிதி போன்ற நடிகர்களும், டுடுடு, பிபிபி போன்ற டைரக்டர்களும் என்னை சினிமாவுக்கு கதை எழுத கூப்பிடுவதால் ஈயமில்லாத கதை எழுத பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இதிலும் ஈயங்களும் இசங்களும் இருப்பதாக கண்டுபிடித்து கூறினால் வருங்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

Thursday, September 3, 2009

சாலட் - 03/செப்/2009ஆப்பிள்: கொஞ்ச நாளாவே எனக்கும் அந்த ஆசை வந்திருச்சு. அவியல், கிச்சடி, குவியல்,கலவை, காக்டெயில்,பஞ்சாமிர்தம், கொத்து பரோட்டா, ஊறுகாய் அப்படின்னு ஆளுக்கொன்னா குட்டி குட்டி விஷயமா கலந்து கட்டி அடிக்கறாங்களே, நம்மளும் ஒண்ணும் இப்படி போட்டா நல்லா இருக்குமேன்னு (அட, எனக்குதாங்க) தோணிக்கிட்டே இருந்துது. ஆனா என்ன பேரு வைக்கறதுன்னு யோசிச்சு தலைய சொறிஞ்சு சொறிஞ்சே ஆறு மாசம் ஓடிப் போச்சு.

கொஞ்ச நாள் முன்னாடி கதம்பம்னு வைக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.எதுக்கும் இருக்கட்டும்னு கூகிள்ல போயி "கதம்பம்"னு தேடிப் பாத்ததுலதான் தெரிஞ்சுது, அண்ணாச்சி வடகரை வேலன் ஏற்கெனவே அத காப்பிரைட் வாங்கிட்டாருன்னு.

குப்பை, கசக்கிய காகிதங்கள் அவ்வளவு ஏன்? சாக்கடை, வாந்தி அப்படின்லாம் கூட தோணிச்சு. யாராவது ஒருத்தரை பத்தி எழுதிப்புட்டு, "உங்களை பத்தி இந்த வாரம் குப்பைல எழுதிருக்கேன்" அப்படின்னா சொல்ல முடியும்?

ரெண்டு நாள் முன்னாடி டிவில சமையல் நிகழ்ச்சியில் சாலட் செய்வதை பார்த்ததும் கப்புன்னு புடிச்சிகிட்டேன். நான் இதுவரைக்கும் தேடுனதுல வேற யாரும் இந்த பேர்ல கலப்படம் பண்றதா தெரியல. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க மாத்திருவோம்.
-------------------------------------------------------------------------------------

அன்னாசி: பதிவுலக நண்பர் ஒருவரிடம் முதலில் பின்னூட்டங்கள் மூலமாக, அப்புறம் மின்னஞ்சல் பின்னர் ஃபோன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்ந்து சென்ற வாரக் கடைசியில் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த பதிவர் யாருன்னு கேக்கறீங்களா?

இவருடைய பதிவின் பெயரிலேயே தமிழில் ஒரு பத்திரிக்கையும் உண்டு. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தலைக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. அவருடைய பதிவின் லோகோ "ஆந்தை". அவ்வப்போது "கிச்சடி" கிண்டுவார்.

நேரில் பழகுவதற்கும் இனிமையானவர்.ஆனால் சந்தித்த போதுதான் அவர் செய்யும் சேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இந்த சேவை மனப்பான்மையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுமாறு அவர் துணைவியாரும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.அவர் செய்த சேவைகள் குறித்த வீடியோஇங்கே
------------------------------------------------------------------------------------
திராட்சை:

Sunday, August 30, 2009

பாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்

பள்ளி நாட்களில் சுவற்றில் 3 கோடு போட்டு எதிர் பக்க ஸ்டம்ப்புக்கு ஒரு செங்கல்லோ குச்சியோ நட்டு ரப்பர் பந்தை வைத்து விளையாடும் கிரிக்கெட் மட்டும்தான் நிரந்தர விளையாட்டு. பம்பரம், கோலி குண்டு (முட்டி தேய), கில்லிதாண்டு (கிட்டி புள்) போன்றவையெல்லாம் சீசனல் கேம்ஸ். அதே போல்தான் இந்த பட்டமும். எப்படித்தான் ஆரம்பிக்கும் என்றே தெரியாது. முதல் நாள் ஓரிரண்டு தான் தென்படும். அடுத்தடுத்த நாட்களில் வானமே நிறைந்து விடும்.அருகிலிருக்கும் சிறு கடைகளில் பட்டங்களும் நூல் கண்டுகளும் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என் குழுவில் எதையுமே சீரியஸ்ஸாக செய்யும் சிலர் உண்டு. கிரிக்கெட் என்றால் கரியோ செங்கல்லோ கொண்டு கோடு போடுவதுடன்,மரக்கட்டையையோ தென்னை மட்டையையோ பேட்டாக மாற்றுவார்கள். கில்லி என்றால் நல்ல கொம்பை தேர்ந்தெடுத்து மழு மழுவென்று கிட்டிப் புள் தயாரிப்பார்கள்.கோலி குண்டுக்கு இடம் தேர்ந்தெடுத்து குழிகள் தோண்டுவார்கள். இவர்களுடைய பம்பரங்களில் ஆணி மிகவும் கூர்மையாக இருக்கும்.இவர்களுடைய இத்தகைய தனித் திறன்களாலும் ஆடும் திறனாலும் குழுவுக்கு தலையாக இவர்களே இருப்பார்கள்.

காற்றாடிக்கு மட்டும் ஆயத்த வேலைகள் அதிகம்.முதல் வேலை, நூல் கண்டு வாங்கி மாஞ்சா போடுவது. தெருத்தெருவாக சுற்றி கண்ணாடி பாட்டில்கள் பொறுக்கி அதை நொறுக்க இடிததுக் கொள்ளவேண்டும்.பசை போன்று கஞ்சி காய்ச்சி அதில் நுணுக்கிய கண்ணாடித் துகள்களையும் இன்ன பிற சமாச்சரங்களையும் (குரங்கு மார்க் மஞ்சள் தூள் கூட கலந்ததாக ஞாபகம்)கலந்து அதை சர்வ ஜாக்கிரதையுடன் நூலில் தடவ வேண்டும். ஆபத்தான வேலைகளையெல்லாம் தலைகள் செய்ய, என் போன்ற அல்லக்கைகள் எல்லாம் பாட்டில் பொறுக்குவது, நூல் கண்டு உருளையை பிடித்துக் கொள்வது என்று அத்தியாவசிய உதவிகளை செய்வோம். இந்த ப்ரொஃபெஷனல்ஸ் எல்லாம் கடையில் விற்கும் பட்டங்களை வாங்க மாட்டார்கள். அவர்களே கலர் பேப்பர் வாங்கி, வெட்டி ஒட்டி சூத்திரம் (குறுக்கு நெடுக்காக குச்சிகளை வைத்து சரியான இடத்தில் நூலை கட்டுவது) போட்டு தயாரிப்பார்கள். விதம் விதமாக வாலும் உண்டு. பேப்பரிலேயே சங்கிலி போல் செய்யபபடும் வால்தான் மிகவும் பிரசித்தம்.

சாயந்திரம் ஐந்து மணி வாக்கில் பட்டங்கள் பறக்க ஆரம்பிக்கும். யாருடையது உயரம் என்பதில் போட்டி இருக்கும். ஆனால் வெறும் உயரப்போட்டிக்கு மாஞ்சா நூல் தேவையில்லையே! முக்கியமான விஷயமே "டீல்" போடுவதுதான். அடுத்தவர்களின் காற்றாடிக்கு அருகில் கொண்டு போய், நம் காற்றாடியின் நூலை சாமார்த்தியமாக ஒரு சுண்டு சுண்டினால் அது அவர்களுடைய நூலை சுற்றி வளைத்து அறுத்துவிடும். இதில் வெற்றியடைய மாஞ்சா நூலின் உறுதியும், சுண்டுபவரின் சாமார்த்தியமும் மிகவும் முக்கியம்.எதிரணி வலுவாக இருநதால் நம் பட்டம் அறுந்து விடவும் வாய்ப்பு உண்டு. யாருடையது அறுந்து விட்டாலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு பெரிய கூட்டம் அதன் பின் தெருத்தெருவாக ஓடும்.சமயத்தில் மரத்திலோ அல்லது கரண்ட் கம்பியிலோ சிக்கிக் கொண்டு இருக்கும் காற்றாடிகளை மீட்டெடுப்பது ஒரு தனி ப்ராஜெக்ட்.

இப்படிப்பட்ட பல சுவாரஸியமான விளையாட்டுகளை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.சென்ற வார இறுதியில் சிங்கபபூரில் "காற்றாடித் திருவிழா" நடப்பதாக செய்தி வரவும் பையனுக்கு பட்டங்களையாவது காட்டலாமே என்று கூட்டிச் சென்றேன்.

அவனுக்கு மட்டுமல்லாமல் எனக்குமே அற்புதமான அனுபவமாக இருந்தது. விதம் விதமான நூறறுக் கணக்கான காற்றாடிகள். பார்வையாளர்களுக்கும் முயற்சி செய்து பார்க்க இலவசக் காற்றாடிகள் வழங்கியதோடு, சிறுவர்களுக்கு பட்டங்கள் செய்யும் வழிமுறைகளை சொல்லித்தரும் பட்டறைகளும் நடத்தினார்கள்.

விழா கடற்கரையில் நடந்ததால் மணல் சிற்பங்கள் செய்து வைத்திருந்ததோடு, குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்க ஆவண செய்திருந்தார்கள். குழந்தைகளாக வாய்க்கால் மணலில் கோபுரங்கள் செய்து அதில் நான்கு பக்கங்களலிருந்து சுரங்கப்பாதை தோண்டியதும், சோழியை ஒளித்து வைத்து "கீச்சு கீச்சு தாம்பாளம்" என்று விளையாடியதும் நினைவுக்கு வந்தது.உங்களுக்காக சில படங்கள் கீழே.மணல் சிற்பங்களும் குழந்தைகளும்
பட்டம் விட்ட சில சிங்கைப் பதிவர்கள்
மேலே பட்டம் விடும் பிரபல பதிவரை கண்டு பிடிப்பவர்களுக்கு தலா நாலு தமிழ்மணம் ஓட்டு

பட்டம் விட ஆயத்தமாகும் விஜய் ஆனந்தும் (பின்னூட்டப் புயல்) விஜய்யும் (பித்தன்)

விட்டா பறக்குமா பித்தன்?