Sunday, August 30, 2009

பாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்

பள்ளி நாட்களில் சுவற்றில் 3 கோடு போட்டு எதிர் பக்க ஸ்டம்ப்புக்கு ஒரு செங்கல்லோ குச்சியோ நட்டு ரப்பர் பந்தை வைத்து விளையாடும் கிரிக்கெட் மட்டும்தான் நிரந்தர விளையாட்டு. பம்பரம், கோலி குண்டு (முட்டி தேய), கில்லிதாண்டு (கிட்டி புள்) போன்றவையெல்லாம் சீசனல் கேம்ஸ். அதே போல்தான் இந்த பட்டமும். எப்படித்தான் ஆரம்பிக்கும் என்றே தெரியாது. முதல் நாள் ஓரிரண்டு தான் தென்படும். அடுத்தடுத்த நாட்களில் வானமே நிறைந்து விடும்.அருகிலிருக்கும் சிறு கடைகளில் பட்டங்களும் நூல் கண்டுகளும் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என் குழுவில் எதையுமே சீரியஸ்ஸாக செய்யும் சிலர் உண்டு. கிரிக்கெட் என்றால் கரியோ செங்கல்லோ கொண்டு கோடு போடுவதுடன்,மரக்கட்டையையோ தென்னை மட்டையையோ பேட்டாக மாற்றுவார்கள். கில்லி என்றால் நல்ல கொம்பை தேர்ந்தெடுத்து மழு மழுவென்று கிட்டிப் புள் தயாரிப்பார்கள்.கோலி குண்டுக்கு இடம் தேர்ந்தெடுத்து குழிகள் தோண்டுவார்கள். இவர்களுடைய பம்பரங்களில் ஆணி மிகவும் கூர்மையாக இருக்கும்.இவர்களுடைய இத்தகைய தனித் திறன்களாலும் ஆடும் திறனாலும் குழுவுக்கு தலையாக இவர்களே இருப்பார்கள்.

காற்றாடிக்கு மட்டும் ஆயத்த வேலைகள் அதிகம்.முதல் வேலை, நூல் கண்டு வாங்கி மாஞ்சா போடுவது. தெருத்தெருவாக சுற்றி கண்ணாடி பாட்டில்கள் பொறுக்கி அதை நொறுக்க இடிததுக் கொள்ளவேண்டும்.பசை போன்று கஞ்சி காய்ச்சி அதில் நுணுக்கிய கண்ணாடித் துகள்களையும் இன்ன பிற சமாச்சரங்களையும் (குரங்கு மார்க் மஞ்சள் தூள் கூட கலந்ததாக ஞாபகம்)கலந்து அதை சர்வ ஜாக்கிரதையுடன் நூலில் தடவ வேண்டும். ஆபத்தான வேலைகளையெல்லாம் தலைகள் செய்ய, என் போன்ற அல்லக்கைகள் எல்லாம் பாட்டில் பொறுக்குவது, நூல் கண்டு உருளையை பிடித்துக் கொள்வது என்று அத்தியாவசிய உதவிகளை செய்வோம். இந்த ப்ரொஃபெஷனல்ஸ் எல்லாம் கடையில் விற்கும் பட்டங்களை வாங்க மாட்டார்கள். அவர்களே கலர் பேப்பர் வாங்கி, வெட்டி ஒட்டி சூத்திரம் (குறுக்கு நெடுக்காக குச்சிகளை வைத்து சரியான இடத்தில் நூலை கட்டுவது) போட்டு தயாரிப்பார்கள். விதம் விதமாக வாலும் உண்டு. பேப்பரிலேயே சங்கிலி போல் செய்யபபடும் வால்தான் மிகவும் பிரசித்தம்.

சாயந்திரம் ஐந்து மணி வாக்கில் பட்டங்கள் பறக்க ஆரம்பிக்கும். யாருடையது உயரம் என்பதில் போட்டி இருக்கும். ஆனால் வெறும் உயரப்போட்டிக்கு மாஞ்சா நூல் தேவையில்லையே! முக்கியமான விஷயமே "டீல்" போடுவதுதான். அடுத்தவர்களின் காற்றாடிக்கு அருகில் கொண்டு போய், நம் காற்றாடியின் நூலை சாமார்த்தியமாக ஒரு சுண்டு சுண்டினால் அது அவர்களுடைய நூலை சுற்றி வளைத்து அறுத்துவிடும். இதில் வெற்றியடைய மாஞ்சா நூலின் உறுதியும், சுண்டுபவரின் சாமார்த்தியமும் மிகவும் முக்கியம்.எதிரணி வலுவாக இருநதால் நம் பட்டம் அறுந்து விடவும் வாய்ப்பு உண்டு. யாருடையது அறுந்து விட்டாலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு பெரிய கூட்டம் அதன் பின் தெருத்தெருவாக ஓடும்.சமயத்தில் மரத்திலோ அல்லது கரண்ட் கம்பியிலோ சிக்கிக் கொண்டு இருக்கும் காற்றாடிகளை மீட்டெடுப்பது ஒரு தனி ப்ராஜெக்ட்.

இப்படிப்பட்ட பல சுவாரஸியமான விளையாட்டுகளை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.சென்ற வார இறுதியில் சிங்கபபூரில் "காற்றாடித் திருவிழா" நடப்பதாக செய்தி வரவும் பையனுக்கு பட்டங்களையாவது காட்டலாமே என்று கூட்டிச் சென்றேன்.

அவனுக்கு மட்டுமல்லாமல் எனக்குமே அற்புதமான அனுபவமாக இருந்தது. விதம் விதமான நூறறுக் கணக்கான காற்றாடிகள். பார்வையாளர்களுக்கும் முயற்சி செய்து பார்க்க இலவசக் காற்றாடிகள் வழங்கியதோடு, சிறுவர்களுக்கு பட்டங்கள் செய்யும் வழிமுறைகளை சொல்லித்தரும் பட்டறைகளும் நடத்தினார்கள்.

விழா கடற்கரையில் நடந்ததால் மணல் சிற்பங்கள் செய்து வைத்திருந்ததோடு, குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்க ஆவண செய்திருந்தார்கள். குழந்தைகளாக வாய்க்கால் மணலில் கோபுரங்கள் செய்து அதில் நான்கு பக்கங்களலிருந்து சுரங்கப்பாதை தோண்டியதும், சோழியை ஒளித்து வைத்து "கீச்சு கீச்சு தாம்பாளம்" என்று விளையாடியதும் நினைவுக்கு வந்தது.உங்களுக்காக சில படங்கள் கீழே.மணல் சிற்பங்களும் குழந்தைகளும்
பட்டம் விட்ட சில சிங்கைப் பதிவர்கள்
மேலே பட்டம் விடும் பிரபல பதிவரை கண்டு பிடிப்பவர்களுக்கு தலா நாலு தமிழ்மணம் ஓட்டு

பட்டம் விட ஆயத்தமாகும் விஜய் ஆனந்தும் (பின்னூட்டப் புயல்) விஜய்யும் (பித்தன்)

விட்டா பறக்குமா பித்தன்?

Friday, August 14, 2009

அவங்களோட திங்க்ஸ அவங்களே தொட்டுக்கணும், நம்மளோட திங்க்ஸ நம்மளே தொட்டுக்கணும்

நேற்றைய சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் (இங்க ஒரு வாரம் லேட்) ஒரு சுட்டிப் பயலின் பாடலும் பேச்சும் மிகவும் ரசிக்க வைத்தது. எப்பொழுதும் பின்னூட்டவாதிகளின் ஸ்மைலியைப் போல கொஞ்சூண்டு நகைக்கும் உன்னி மேனனுக்கு கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் பார்த்தவர்கள் திரும்பவும் ரசிப்பதற்கும்...குழலினிது, யாழினிது என்பர் இதனைக் கேளாதோர்.

விஜய் டிவியில் வந்த சூப்பர் சிங்கர்-2008 ஆரம்பித்த வருடத்தில் நன்றாக இருந்தாலும் ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இழுத்து எப்படா முடியும் என்று அலுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். நான் அவ்வளவாக ரசிக்காத அஜீஷ் வேறு வெற்றி பெற்று என்னை வெறுப்பேத்தினார்.

இப்போது நடக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கிறது.அதுவும் குழந்தைகளின் பாடல்களைவிட அவர்களின் வெகுளித்தனமான சந்தோஷங்கள், ஆச்சரியங்கள்,கோபங்கள், சோகங்கள் இவற்றையெல்லாமும் ரசிக்க முடிகிறது.

ஜூனியர்களெல்லாம் சீனியர்களாக மாறுவதற்குள்ளாக நிகழ்ச்சியை முடித்துவிடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

டிஸ்கி 1: விடியோவை முழுதும் பார்த்தால்தான் இடுகையின் தலைப்பு காரணம் புரியும்.

டிஸ்கி 2: இந்த நிகழ்ச்சியை நடத்தும் டிடி அணியும் உடைகளால் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது நினைப்பு வந்துவிடக்கூடாதே என்ற பயம் எனக்கு நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே உண்டு. யாராவது அவரிடம் சொன்னால் பரவாயில்லை.

Sunday, August 2, 2009

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனி மழை பொழிகிறது-"இந்தியா ஒளிர்கிறது-எ"

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"

சிம்லாவை விட்டு வெளியில் வந்து மனாலி செல்லும் சாலையை தொட்டதிலிருந்து நம் கூடவே பயணிக்கிறது ப்யாஸ் நதியும். மிகவும் அற்புதமான சலிப்பே தட்டாத இயற்கை காட்சிகள் முழுநீளத்திற்கும் மனாலி வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட 13 மணி நேர பயணமாக இருந்தாலும் அலுப்பு தட்டுவதில்லை.

கூடவே பயணிக்கும் ப்யாஸ் நதி

மனாலியில் விடியற்காலையில் எழுந்து வெளியில் வந்த உடனேயே பளீரென்ற பனி போர்த்திய மலை உச்சிகள் கண்ணில் பட்டு அன்று நமக்கு கிடைக்கப்போகும் புதிய அனுபவத்திற்கு கட்டியம் கூறின. இதமான மெல்லிய குளிர்தான் இருந்ததே தவிர பெரிதாக ஒன்றும் விரைக்கும் குளிர் நடுக்கவில்லை.

காலையில் ஹோட்டலுக்கு வெளியில் வந்ததும் வரவேற்ற பனி மூடிய மலைகள்

மஹாபாரதத்தில் பீமனை காதலித்து திருமணம் செய்து கடோத்கஜன் என்ற பெரும் வீரனை பெற்றெடுத்த ஹிடும்பா தேவிக்கு ஒரு கோவில் மனாலியில் இருக்கிறது. பீமன் ஹிடும்பா தேவியுடன் ஒரு வருடம் குடும்பம் நடத்தி பின் தன் சகோதரர்களுடன் இணைந்ததாக கதை. இந்த பிரதேசத்தை கடோத்கஜன் வளரும் வரை ஹிடும்பா தேவி ஆட்சி புரிந்திருக்கிறார்.

ஹிடும்பாதேவி கோவில்

அடுத்து நாங்கள் சென்றது வஷிஷ்ட் சுடு நீர் ஊற்றுகள். இயற்கையிலேயே 110-123 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் வரும் இந்த வெந்நீர் ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டதாய் கருதப்படுகிறது. இயற்கை வெந்நீர் ஊற்று என்றவுடன் தரையிலிருந்து கொதிக்க கொதிக்க நீர் பீறிட்டு கொண்டு வரும் அதில் நாமெல்லாம் குளிக்கலாம் என்று ஆவலுடன் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே. இரண்டு பெரிய தொட்டிகள் கட்டி அதில் நம்ம ஊரில் குட்டைகளில் எருமைகள் ஊறுமே அது போல் ஏகப்பட்ட பேர் ஊறிக் கொண்டிருந்தார்கள்.

வெந்நீர்க் குட்டையில் ஊறிக் கொண்டு

தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதே தெரியவில்லை. இதைத்தவிர இரண்டு குழாய்களில் சுடு தண்ணீர் கொட்டி கொண்டிருந்தது. ரெண்டு சொட்டு கையில் பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு கிளாம்பி விட்டோம்.

குழாயில் வரும் வெந்நீர் ஊற்று

அங்கிருந்து இந்த பேருலாவின் உச்ச்கட்டமான ரோஹ்தங் பாஸ் நோக்கி பயணித்தோம். மனாலியிலிருந்து ரோஹ்தங் பாஸ் செல்ல தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. ஆறு ஆறு பேராக சுமோ போன்ற ஒரு ஜீப்பில் புறப்பட்டோம். மனாலியிலிருந்து 3 மணி நேர பயணம். வழியெங்கும் பனிப்பிரதேசங்களில் அணியும் உடைகளை வாடகைக்கு விடும் கடைகள் எக்கச்சக்கம். இந்த ஜீப் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக கடையும் உண்டு போலும். எங்கள் டிரைவர் அவருடைய கடையில் கொண்டு போய் நிறுத்தினார். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு சுமாராக பொருந்தும் பனி ஆயத்த உடைகளையும் ரப்பர் பூட்களையும் அணிந்து கொண்டு(வாடகை ஒருவருக்கு 200ரூ) மீண்டும் ஜீப்பில் பயணத்தை தொடர்ந்தோம்.

மிகவும் குறுகலான கச்சா சாலைகளும் ஒரு பக்கத்தில் அதல பாதாள சரிவுகளுமாக பாதையே பயங்கரமாக இருக்கிறது. இதில் எக்கச்சக்கமான ட்ராபிக் வேறு. நம்ம ஓட்டுநர் சந்து சந்தாக ஆட்டோ ஓட்டி பயிற்சி எடுத்திருப்பார் போலும். வளைத்து வளைத்து கிடைக்கிற கேப்பிலெல்லாம் புகுந்து சாலை ஓர பாதாளங்களை எல்லாம் அடிக்கடி க்ளோசப்பில் காண்பித்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

"ஹாங் ஜி, ஆகயா ரோஹ்தங் பாஸ்" என்று நிறுத்தி எங்களை இறக்கி விட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் போல தெரிந்தது. என்ன, பச்சை நிற புல் வெளிக்கு பதிலாக வெண் பனி மைதானம். சிறிது தூரத்தில் ஒரு பனி போர்த்திய குன்று, அதற்கு பின்னால் இன்னொரு குன்று, குன்று, குன்று........

காலையில் சாப்பிட்டிருந்த இரண்டு உளுந்து வடையும், பொங்கலும் பயணக் குலுக்கலில் ஜீரணமாகி விட்டிருந்ததால் முதலில் ஒரு கடையில் சுட சுட மேகி நூடுல்ஸ் சாப்பிட்டோம். இந்த இடத்தில் பனி வெள்ளையாக இல்லாமல் கொஞ்சம் ப்ரவுன் கலரில் அழுக்காக இருந்தது. ஜீப் ட்ரைவரும் சுற்றி நிற்கும் குதிரைக்காரர்களும் ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்திற்கு போனால் பனி வெள்ளை வெளேரென்று சுத்தமாக இருக்கும் என்று சத்தியம் செய்தார்கள். அங்கே நடந்து போவது கடினம் என்றும் குதிரையில் கூட்டி செல்வதாகவும் கூறினார்கள். தலைக்கு 200 ரூபாய் பேசி குதிரையில் ஏறி, சரி ஒரு மணி நேரத்துக்கு ஜாலியா குதிரைல கூட்டிட்டு போவாங்கன்னு பாத்தா, ஒரே ஒரு வளைவு தாண்டி அஞ்சே நிமிஷத்துல இறக்கி விட்டுட்டாங்க. அதற்கு மேல் குதிரை போகாதாம். இருக்கையுடன் கூடிய ஒரு மரக்கட்டை வண்டியில் உட்கார வைத்து வேகமாக தள்ளிக் கொண்டு போவார்களாம். அதுக்கு தனியா 200 ரூபாயாம். இல்லாவிட்டால் பனியில் சீறிக் கொண்டு செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் போகலாம். அதற்ககு ஒரு ரவுண்டுக்கு 400 ரூபாய். இதற்குள்
ஜீப்--> குதிரைக்காரர்--> தள்ளு வண்டி காரர் --> எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று நெட்வொர்க் தொடர்வது புரிந்துவிட்டதால், மேலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. உண்மையில் அங்கிருந்து ஒரு நாற்பதடி சரிவில் மேலே ஏறி விட்டால் அதுதான் ஜீரோ பாய்ண்ட். பனிச்சரிவில் மேலே ஏறும் போது மூச்சிரைத்து சிரமமாகவே இருக்கிறது. இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவும் கம்மியாக இருப்பதால் இரைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஒன்றாக போன நாங்கள் ஆறு பேரும் ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொண்டு மெதுவாக ஏறிவிட்டோம்.

ஜீரோ பாய்ண்டை நோக்கி, குதிரையில்..

பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூக்கியெறிந்து விளையாடிக் கொண்டே டூயட் பாடும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கும் எங்களுக்கு இது நல்ல அனுபவமாக இருந்தது. பனிக்கட்டியை துருவி (நம்ம ஊர்ல ஸ்கூல் வாசல்ல துருவி கலர் கலரா இனிப்பு சாயம் ஊத்தி தருவாங்களே) பரத்தி வைத்தது போல் எங்கும் பூ பூவாய் பனி. பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டு, பனியில் விளையாடி என்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. நடு நடுவே பனி மழையும் பெய்து சூழ்நிலையே அற்புதமாக கிளம்புவதற்கு மனதே வரவில்லை.

பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டுபின்னனியில் பனிச் சிகரங்கள்.. முன்னனியில்..."என் விரல்லாம் பிஞ்சு பிஞ்சு வரப்போவுது"

அதீதமாக விளையாடி உருண்டு கொண்டிருந்ததில் கொஞ்சம் பனித்துகள்கள் என் பையனின் ரப்பர் ஷூவுக்குள் புகுந்து விட்டதோ என்னவோ, அவன் கால் விரல்கள் மரத்துப் போய்விட்டது போலும். திடீரென்று அழுக ஆரம்பித்து விட்டான். என்னடாவென்று கேட்டால் எவெரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களெல்லாம் தக்க ஏற்பாடுகளுடன் செல்லாவிட்டால் குளிரில் விரைத்து விரலெல்லாம் பிய்ந்து போய்விடும் என்று அவனுடைய ஆசிரியை (ஜெயே புவா) கூறியிருக்கிறார்களாம். அவனுக்கும் அந்த ஞாபகம் வந்து "கீழ போய் ஷூவ அவுத்தா என் வெரல்லாம் பிஞ்சு வரப் போவுது" என்று சொல்லி ஓவென்று அழுக ஆரம்பித்து விட்டான்.என்ன சொல்லியும் சமாதானமாகாததால் கீழே இறங்க முடிவு செய்தோம். இப்போது அந்த நாற்பதடி சரிவை உருண்டே கடந்து விட்டோம். மீண்டும் 5 நிமிட குதிரை சவாரி செய்து ஜீப்புக்கு திரும்பிவிட்டோம். ஜீப்பில் உட்கார்ந்து ஷூவை அவிழ்த்து கால் விரல்களை முழு உருவத்தில் பார்த்ததும்தான் சமாதானம் அடைந்தான்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு 3 மணி நேரம் ஜீப் பயணத்திற்கு பிறகு ஹோட்டல் வந்தடையும் போது மாலை மணி ஐந்து.

மறுநாள் மனாலியில் "ஃப்ரீ அண்ட் ஈஸி டே" என்று சொல்லி விட்டார்கள். சுற்றுலாவில் கூட வந்த எல்லோரும் காலையில் சிற்றுண்டி முடித்த கையோடு கடைத்தெருவை வாங்க மால் ரோடுக்கு கிளம்பிவிட்டார்கள். நாங்கள் மூவரும் கையில் கொஞ்சம் ஸ்நாக்ஸுடன் ப்யாஸ் நதிக்கரையில் எங்காவது ஒரு அமைதியான இடத்தை தேடி உட்காரலாம் என்று புறப்பட்டோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தவுடன் நாங்கள் எதிர்பார்த்தது போலவே மனதுக்கு இதமான ஒரு இடம் கிடைத்து விட்டது. பெரிய பெரிய கூழாங்கல் பாறைகளுக்கு நடுவில் ஓடைகளாக ஆறு ஒடிக் கொண்டிருக்க, சுற்றிலும் பச்சை பசேல் மரங்களும் தொலைவில் பனி மலைச் சிகரங்களும் என பூலோக சொர்க்கமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர மணி நேரத்திற்கு பிறகு வயிற்றிலிருந்து குரல் எழும்ப ஆரம்பிக்கவும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு திரும்பிவிட்டோம்.


"அடடா.. லேப்டாப்பும் வை ஃபையும் இருந்தா அப்படியே ப்ளாக்ல ஒரு கவிதை ட்ரை பணணிருக்கலாமே - ப்யாஸ் நதிக்கரையில்..

மாலை நான்கு மணிக்கு மேல் எல்லோரும் போகிறார்களே என்று மால் ரோடுக்கு போனோம். அங்கு ஒரு புத்தர் கோவில் இருக்கிறது. சிங்கப்பூரில் பெரிய்ய்ய.. புத்தர் கோவில்களை எல்லாம் பார்த்ததனாலோ என்னவோ கவரவில்லை. மால் ரோடும் வழக்கமான துணிமணி, அலங்கார பொருட்கள் என்று எல்லா ஊரிலும் இருப்பது போலத்தான். மால் ரோட்டில் எங்களை மிகவும் கவர்ந்தது கழைக்கூத்து நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம். இதையெல்லாம் பார்க்க இதுவரை சந்தர்ப்பம் கிடைத்திராத என் பையனுக்கு தெருவில் ஒரு சிறுமி செய்த ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. "ஏம்ப்பா.. இவங்கள்ளாம் ஒலிம்பிக்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ண மாட்டாங்களா" என்று கேட்டான்.


இவங்கல்லாம் ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்க மாட்டாங்களா?

தொடரும்... வரும் இடுகைகளில் சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...