Friday, October 23, 2009

எத்தனையோ பாத்துட்டோம்........ஹ்ம்ம்ம்ம்ம்....

டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு முந்தைய நாள் சென்னைக்கு போக வேண்டி வந்தது.என் சித்தப்பா பையனின் திருமணம். அவர்கள் வீட்டிலேயே நான்கு வருடம் தங்கி படித்திருக்கிறேன். போகாவிட்டால் நன்றாக இருக்காது. திருமணத்தன்று இரவு ரிசப்ஷன் முடிந்த கையோடு கிளம்பி விட்டால் பிரசவத்தன்று கரெக்டாக வந்து விடலாம். மேலும் பார்த்துக் கொள்ள அவள் அப்பா, அம்மா மேலும் கூப்பிடு தூரத்தில் மாமாக்கள் என்று எல்லோரும் உண்டு. இப்படியெல்லாம் மனதை தேற்றிக் கொண்டு மனைவியின் எதிர்ப்பையும் மீறி சென்றாலும் சென்னையில் இருப்பே கொள்ளவில்லை. எப்போதும் மனைவி, பிரசவம், குழந்தை என்று மனது முழுவதும் திருச்சியிலேயே இருந்தது.

ஒரு வழியாக திருமணம் ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ஏறிவிட்டேன். ட்ரெயின் ஏறுவதற்கு முன் போன் செய்தபோது இன்னும் வலி வரவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தாள். காலையில் திருச்சி போய் மாமனார் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் யாரும் இல்லை. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டதாக மச்சினன் கூறினான்.

பரபரப்பாக கிளம்பி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனால், ஆஸ்பத்திரி உடையில் வார்டுக்கு வெளியில் வந்து பலகீனமாக ஒரு புன்னகை பூத்தாள். ஊசி போட்டும் வலியெடுக்கவில்லை. அடுத்த இரு மணி நேரங்களில் பனிக்குடம் உடைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாலும் வலியெடுக்கும் அறிகுறிகள் தெரியாததாலும் சிசேரியனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். மாமியாரின் முகத்தில் கவலை ரேகைகளும், மாமாவின் கண்கள் தளும்பவும் அதுவரை தைரியமாக இருந்த நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பூத்துவாலையில் சுற்றி "தோ பாருங்க ரோஸ் பேபி", என்றவாறே நர்ஸ் உள்ளங்கையை விட சற்றே பெரிய அளவிலான ஒரு பூவை கொண்டு வந்து காண்பித்தார். தொட்டுப் பார்க்க கூட பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமானார்தான் இடுப்புக்கு கீழ் மறைத்துக் கொண்டிருந்த துவாலையை படக்கென்று விலக்கி "ஹை.. பேரப்பய" என்றார். "இன்னிக்கு பொறந்த பன்னெண்டு குழந்தைகளில் இது மட்டுந்தான் ஆம்பள புள்ள" என்ற உபரி தகவலை அளித்துவிட்டு நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே போய் விட்டார்.

"இன்பெக்ஷன் அவாய்ட் பண்றதுக்காக சிசேரியன் குழந்தைகளை 24 ஹவர்ஸ் ஸ்பெஷல் கேர் யூனிட்ல வெச்சிருப்போம், அப்பப்போ மதர் ஃபீட் பண்ண மட்டும் கூட்டிட்டு வருவாங்க, நத்திங் டு வொர்ரி" என்று பிரசவம் பார்த்த லதா டாக்டர் சொல்லி விட்டு கிளம்பும்போதுதான் "ஹவ் ஈஸ் தி மதர்?" என்று கேட்டேன். "நோ ப்ராப்ளம்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்பறமாபோய் பாருங்க" என்றார்.

மதியத்துக்கு மேல் ஸ்பெஷல் கேர் யூனிட்டிற்கு போய் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பிறந்த மேலும் ஐந்து பெண் குழந்தைகள் சூழ ஜாலியாக ஏசி ரூமில் தூங்கிக் கொண்டிருந்தான்.


அக். 24, 2009 : " அப்பா, இன்னிக்கு எனக்கு லெவென்த் பர்த் டே. புது சைக்கிள் வாங்கித் தர்றியா?"

எட்டு மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டே மாடிப் படியில் சறுக்கி விழுந்து தாடை பிளந்து தையல் போட்டது,

காது குத்தி தோடு போட்ட அன்று இரவே தோடு தலைகாணி நூலில் சிக்கிக்கொண்டு ரத்தம் வந்து கதறி அழுதது,

ப்ளே ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷர்மிலியால் கன்னத்தில் ரத்தம் வருமளவுக்கு கடிபட்டது,

எல்.கே.ஜியில் பெஞ்ச் முனையில் இடித்துக்கொண்டு கண்ணை சுற்றி கருவளையமாக ரத்தம் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் படத்து வில்லன் போல நின்றது,

யூ.கே.ஜியில் இரும்பு கேட்டில் ஏறி விளையாடி கால் இடையில் சிக்கி கொண்டு, கால் முழுவதும் வீங்கி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்.ரே எடுத்தது,

ஒன்றாம் வகுப்பில் புருஷோத்தமனுடன் புல்லு சண்டை போட்டு கை உடைந்து ஐம்பது நாள் தொட்டில் கட்டிய கையுடன் அலைந்தது,


சிங்கப்பூர் வந்த பிறகும் கூட மூன்றாவது படிக்கும்போது ஒரு நாள் சீன நண்பனிடம் பேச்சு சண்டை முற்றி, நசுக்கிய பெப்ஸி கேனால் முதுகில் ரத்தக்கோடுடன் வந்தது

இப்படியெல்லாம் எத்தனையோ பாத்துட்டோம்....ஹ்ம்ம்ம்ம்ம்....

"ஹேப்பி பர்த் டே டா செல்லம், சாயங்காலமா போயி சைக்கிள் வாங்கிறலாம்.... "

Thursday, October 8, 2009

சாலட் - 08/அக்/2009


ஆப்பிள்:இந்த வருடம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வருடமாக அமைந்து விட்டது. ரஹ்மானின் ஆஸ்காரை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் சிதம்பரத்தில் பிறந்து பரோடாவில் இயற்பியல் பட்டப் படிப்பு படித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்ட திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணண் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

அவர் இயற்பியல் பட்டதாரியாக இருந்தாலும் பின்னர் உயிரியலுக்கு மாறிவிட்டாராம்.இந்த வருடத்துக்கான வேதியியல்!!! பிரிவு நோபல் பரிசை மேலும் இரு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பெற்றிருக்கிறார்.உயிர் வேதியியல் துறையில் ரிபோசோம்கள் எப்படி இருக்கும் என்று காட்டியதற்காகவும் அவை அணு அளவில் எவ்வாறு செயல்படுகின்றன என்று விளக்கியதற்காகவும் அவருக்கு இந்தப் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.

இவருடைய கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கிறதாம்.

நம்ம வெங்கி(அப்படித்தான் அவர் நண்பர்கள் கூப்பிடுவாங்களாம்) என்னமோ ரிபோசோம் பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரே அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு விக்கிபீடியாவுல போய் பாத்தா....
ரிபொசோம் - என் பதிவோட லோகோ மாதிரியே இல்ல?
molecule consisting of two subunits that fit together and work as one to build proteins according to the genetic sequence held within the messenger RNA (mRNA). Using the mRNA as a template, the ribosome traverses each codon, pairing it with the appropriate amino acid. This is done through interacting with transfer RNA (tRNA) containing a complementary anticodon on one end and the appropriate amino acid on the other.

ம்ஹூம்ம்ம் ஒண்ணும் புரியல.. பின்நவீனத்துவமே பரவாயில்ல போலருக்கு.

விடுங்க.. நம்மளுக்கு எல்லாம் இருக்கவே இருக்கு சட்டைக்குள்ள, பேருல, பேசறதுலன்னு எல்லாத்துலயும் என்னென்ன அடையாளம் இருக்குன்னு தேடற ஆராய்ச்சிகள்.
----------------------------------------------------------------------------------

அன்னாசி: சன் டிவியில் பல்லாண்டு காலமாக ப்ரைம் ஸ்லாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் ராதிகா. சித்தி, அண்ணாமலை,செல்வி,அரசி என்று இப்போது செல்லமே ஆரம்பித்திருக்கிறது.


இந்த தொடரில் ராதிகாவின் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால் அவர்கள் ஒரு விளக்குக்கு பக்கத்தில் போய் நிற்க வேண்டுமாம். அதுதான் அவர்களுக்கு தண்டனை.இப்போது நான் போய் எங்கள் வீட்டு விளக்குக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த நாடகத்தை கொஞ்ச நேரம் பார்த்ததற்கு தண்டனையாக :((((
----------------------------------------------------------------------------------

ஆரஞ்சு: இந்த FEEDJIT ரொம்ப அருமையான விட்ஜெட். எங்கெங்கேர்ந்தெல்லாம் நம்ம பதிவ பாக்க (படிக்கலன்னாலும்) வராங்கன்னு பெருமையா பாத்துகிட்டு இருக்கலாம்.அதுவும் என்னோடது மாதிரி ஏழரை பேர் (கவனிக்கவும் - ஒரு வார்த்தை மிஸ்ஸிங்)வாசகர்கள் படிக்கும் பதிவுகளில் FEEDJIT ஐ வைத்து ஆராய்ச்சியே நடத்தலாம். தமிழ்மணத்திற்கும் FEEDJIT ற்கும் பூர்வ ஜென்ம அல்லது இந்த ஜென்ம பகை போலும். அங்கிருந்து வரும் எல்லோரையும் FEEDJIT உதாசீனப்படுத்தி விடுகிறது.

மேலும் சில நாட்கள் கவனித்ததில் துபாயிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் கிட்டத்தட்ட தினமும் என் பதிவுக்கு வருகிறார். புது இடுகைகளே போடாத அன்னிக்கு கூட இவருடைய விசிட் உண்டு. இதுல என்ன பெரிய விஷயம், அறிவிலியோட பதிவுககு ஒரு தீவிர விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. ஸ்க்ரீன் ஷாட்ட பாருங்க.


சைட் பார்ல இருக்கற நான் படிக்கும் பதிவுகள் லிஸ்ட்ல இருக்கற பதிவுகள் எல்லாத்துக்கும் இங்கேர்ந்துதான் அவுரு போவாரு. முக்காவாசி நாளைக்கு ஒரே ஒரு "Dubai arrived" ம் பத்து பதினைந்து "Dubai left via" வும் இருக்கும். ஆகவே பிரபல பதிவர்களே உங்களுக்கு இருக்கும் ஏழரையில் என் அணில் பங்கும் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------

திராட்சை: 50 ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. உலக நாயகன் கூட சினிமாவுக்கு வந்த ஐம்பதாவது வருடத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.50 ஆவது ஆண்டு திருமண நாள், 50 ஆவது பிறந்த நாள் போன்றவற்றை தங்கமாக கொண்டாடுகிறார்கள்.அப்படி இப்படி தட்டுத் தடுமாறி "எங்கப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்ற வகையில் நான் கிறுக்கித் தள்ளியவற்றின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுவிட்டது. பெருவாரியான அளவில் திரண்டு வந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் "கண்கள் பனித்து இதயம் இனித்த" நன்றிகள். முக்கியமாக மேலே சொன்ன துபாய் அன்பருக்கு இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.