Thursday, April 30, 2009

மே தினம் - ஹைய்யா...லீவு

"ஏங்க.. நாளைலேருந்து 3 நாள் லீவு தானே, எங்கியாவது வெளில போயிட்டு வரலாங்க" என்றாள் முத்துவின் மனைவி.

"ம்ம்ம்... போலாமே, ஒரு நாள் தீம் பார்க் போவோம், அடுத்த நாள் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு சண்டே மத்யானம் திரும்பி வந்துரலாம்." என்றான் முத்து.

பையன் "ஐய்யா! ஜாலி.. தீம் பார்க் சூப்பரா இருக்கும்" என்று குதித்தான்.

ஐம்பது கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் ஆறு மாதங்களாக போகவில்லையாதலால் மனைவி முகத்திலும் அம்மா வீட்டுக்கு போகும் சந்தோஷம் தெரிந்தது.

பேக்டரி போகும் வழியில் பையனை சைக்கிளில் கூட்டிக் கொண்டு போய் பள்ளியில் விட்டான். வழியெல்லாம் தீம் பார்க் பிரலாபம்தான்.

"அங்க பெரிய சறுக்கு மரம் தண்ணி ஒடிக்கிட்டே இருக்கும், சூப்பரா இருக்குமாம்"

"படகு மாதிரி ஒரு பெரிய ஊஞ்சல், பெரிய்ய்ய்ய்ய்ய ராட்டினம், ரோலர் கோஸ்டர் எல்லாம் இருக்கும்" என்று அலப்பி கோண்டே வந்தான்.

பேக்டரி வாசலிலயே சக தொழிலாளர்கள் எல்லாரும் கூடியிருந்தனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பரசுராமன் சார் சிறப்பு உரை ஆற்றப் போவதாக தொழிலாளர் சங்க செயலாளர் ஒலி பெருக்கியில் அறிவித்தார். பரசுராமன், எங்களுடையதைப்போல் இன்னும் நாலு பேக்டரிக்கு சொந்தக்கார கோடீஸ்வரர்.

"தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் என் காலை வணக்கம். இந்த தொழிலகத்திற்காக ஒரு சிறிய விதையை நட்டது மட்டுமே என்னுடைய பங்கு. வியர்வை என்னும் நீருற்றி, அயராத உழைப்பு என்னும் உரமிட்டு அதை ஒரு மரமாக வளர வைத்தது நீங்கள்தான்.

உங்களைப் போன்ற தொழிலாளர்கள்தான் இந்த நாட்டின், ஏன் உலக நாடுகள் அனைத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாய் இருப்பதால்தான் மே 1 ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

உங்கள் அனைவருக்கும் தொழிலாளார் தின வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்."

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா எவ்வளவு காசு பணம் சேந்தாலும் நம்மளயெல்லாமும் மதிச்சு பேசறாரே" என்று மனதுக்ககுள் பாராட்டியவாரே முத்து வேலையை ஆரம்பிக்க உள்ளே சென்றான்.

நான்கு மணிக்கு சற்று முன் சூப்பர்வைசர் ரமேஷ் அவனுடைய செக்ஷனில் இருக்கும் அனைவரையும் அழைத்தார்.

"அஸெம்ப்ளில நடந்த தப்பால பம்ப் எல்லாம் ஃபைனல் இன்ஸ்பெக்ஷன்ல ஃபெயில் ஆயிடுச்சி. இது அடுத்த வாரத்துல அனுப்ப வேண்டிய எக்ஸ்போர்ட் ஆர்டர். அதனால் நீங்க எல்லாரும் இந்த 3 நாளும் ஹாலிடே ஒவர் டைம் வந்து அந்த ஆர்டருக்கு வேண்டிய பார்ட்ஸ் எல்லாம் முடிச்சு குடுத்துருங்க" என்றார்.மறுத்து பேசுவதில் பயனில்லை என்றது அனுபவ அறிவு.

அவுட் டைம் சைரன் அடிக்கவும் யூனிபார்ம் மாற்றிக் கொணடு, மனைவியையும் மகனையும் எப்படி சாமாதானப்படுத்துவது என்ற யோசனையுடன் சைக்கிள் ஸ்டாண்ட் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

முதலாளி பரசுராமன் அவர் டிரைவருடன் பேசிக்கொண்டே வரவும் வழிவிட்டு அவர்கள் பின்னால் நடந்தான்.

"நீ நைட்டு 8 மணிக்கெல்லாம் வந்துரு. நாளையும், சனிக்கிழமையும் ஊட்டில இருப்போம்.
சண்டே காலைல ப்ளாக் தண்டர் போயிட்டு திரும்பி வந்துரலாம்" என்று கொண்டே போனார்.

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா" என்று நினைத்து கொண்டே,முத்து பையனுக்கு Pokemon பொம்மையும், மனைவிக்கு மல்லிகைப் பூவும் வாங்க கடைத்தெரு வழியாக சைக்கிளை மிதித்தான்.

Tuesday, April 28, 2009

உண்ணாவிரத கார்ட்டூன்ஸ்

வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகவே தமிலிஷ்லயும், தமிழ்மணத்துலயும் ஒட்ட போட்டுட்டு போங்க.

Friday, April 24, 2009

செருப்பை தூக்கி எறியாதீங்க...

உலகம் முழுவதும் செருப்பை தூக்கி வீசுவது என்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

இப்படியே தொடர்ந்தால் எல்லா கூட்டங்களுக்கும் செருப்பை வெளியே விட்டுதான் வரவேண்டும் என்று கூறி விடக்கூடும் நாள் தொலைவிலில்லை.

எனக்கு என்னமோ எவ்வளவுதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் இப்படி செருப்புகளை வீசுவதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

பாதுகாபிஷேகம் நடத்தப்பட்ட தலைவர்களையெல்லாம் நல்லவர்கள் வல்லவர்கள் என்று கூறினால் நான் கோயில்களுக்குள்ளயே பதுங்கியிருக்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடும் (அங்கதானே எல்லார் காலும் காலியா இருக்கும்)

இதையே வேறு கோணத்தில் முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.

ராமபிரான் வனவாசம் செல்வதற்கு முன்னால் பரதனை அரியணை ஏற சொன்னார். ஆனால் பரதன் அதற்கு ஒப்பாமல் ராமனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஒரு பராமரிப்பு அரசாங்கம்தான் நடத்தினார்.இப்படியாக 14 வருடங்கள் அரசாட்சியே செய்திருக்கிறது செருப்பு.

சரி.. சரி.. இந்த புராண இதிகாச கதையெல்லாம் உடாதேங்கறீங்களா....

இந்த செருப்புகளுக்குன்னு ஒரு பெரிய சரித்திரமே இருக்கு.

மனிதர்கள் முதன் முதலில் செருப்பு உபயோகிக்க ஆரம்பிச்சது 40,000 வருடங்களுக்கு முன்புன்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சிருக்காங்க. சீனாவில் தியான்யுவான் குகையில் கிடைச்ச மனித கால் எலும்புகளை ஆரய்ச்சி செய்து இதை கண்டுபிடித்திருக்கிறர்கள். ஆனாலும் இப்ப உலகத்துல இருக்கறதுலயே ஆகப் பழைய செருப்புன்னு பாத்தா தென்மேற்கு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கீழே இருக்கும் 8300 ஆண்டுகளுக்கு முந்தைய செருப்புதான்.


11 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மஹாராஜாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கால்கள் நார்மலாக இல்லாமல் சிறியதாக இருந்ததாம். அந்த மஹாரஜா உடனே சின்ன பாதங்கள்தான் பெண்மைக்கு அழகு என்று கிளப்பிவிட எல்லா பெண்களும் அவர்களுடைய கால்களை இறுக்க கட்டி கொள்ளும் செருப்புகளை அணிந்து தங்கள் பாதங்களையும் சிறிதாக்கி கொண்டார்களாம்.


ஹை ஹீல்ஸ் ஷூக்கள் என்று பார்த்தால் கிறுஸ்துவின் பிறப்புக்கு 3500 ஆண்டுகள் முன்பே எகிப்து மக்கள் ஆண் பெண் பேதமின்றி ஸ்டேட்டஸ் சிம்பலாக அணிந்திருக்கிறார்கள். எவ்வளவு உயரமான செருப்போ அவ்வளவு அதிகமான ஸ்டேட்டஸாம்!!!

ஆனால் அந்த கால ரோம் நகரில் நேரெதிர். விபச்சாரம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அங்கு இருந்த காலகட்டத்தில் ஹை ஹீல்ஸ் செருப்பு விபச்சாரிகளுக்கான அடையாளமாக கருதப்பட்டது.

1400 களில் துருக்கி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிய ஹை ஹீல்ஸ் செருப்புதான் கீழே இருக்கும் "சாபைன்"

1519 முதல் 1589 வரை வாழ்ந்த கேத்தரின் டி மெடிசி என்ற ஃப்ரெஞ்ச் மஹாராணிதான் இப்பொதைய ஹை ஹீல்ஸ் ஃபேஷனுக்கு முன்னோடியாக கருதப்படுகிறார்.மிகவும் சிறிய உருவமாக இருந்த இவர் மன்னரின் வைப்பாட்டியாக இருந்தவரை விட உயரமாக காட்டி கொள்வதற்காக அணிந்த செருப்பு, நெருப்பு போல் பற்றி கொண்டு உலகம் முழுவதும் ஃபேஷனாக பரவியதாக கூறுகிறார்கள்.

(எவ்வளவு அழகான செருப்புகள்?)

1324 ஆம் ஆண்டு எட்வர்ட் மன்னர் கிட்ட செருப்பு தயாரிக்கிறவர்கள் எல்லோரும் போய் செருப்பு அளவுகளுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் உருவாக்க சொல்லி கேட்டாங்களாம். அவரும் 39 பார்லிகார்ன் விதை நீளம் ஒரு சாதாரண மனிதனின் கால் அளவுக்கு சமம் என்று அளவிட்டு அதற்கு 13 (3 பார்லிகார்ன் விதைகளின் நீளம் ஒரு இன்ச் என்பதால்) என்று நிர்ணயம் செய்தாராம். ஒவ்வொரு பார்லிகார்ன் விதைக்கும் ஒரு சைஸ் கூடவோ குறையவோ செய்யும். என் காலுக்கு 34 பார்லிகார்ன் விதைகள் (சைஸ் 8) போதும்.பார்லிகார்ன்(Barleycorn)

செருப்புகளுக்கு எவ்வளவு பெரிய சரித்திரமும் முக்கியத்துவமும் இருக்கு பாருங்க.

ஆகவே மஹாஜனங்களே, யார் மேலயாவது வெறுப்பை காட்டணும்னா தயவு செஞ்சு செருப்பை தூக்கி எறிஞ்சு அதுக்கு அவமரியாதையை உண்டாக்காதீங்க.

Saturday, April 18, 2009

சிங்கை பதிவர் மாநாடு 18-04-2009

டொன் லீ யின் இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அதைப் பற்றிய எண்ணங்கள் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

இதுவரை படைப்பாளர்கள் என்ற வகையில் யாரையும் நேரில் சந்தித்தில்லாத காரணத்தால் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.

முதல் சந்திப்பு மற்றும் இதுவரை சிங்கப்பூரில் போகாத இடம் என்ற காரணங்களால் சீக்கிரமே கிளம்பி, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சரியாக (மதியம் மூணரை) டொன் லீ யின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளின் உதவியுடன் போய் சேர்ந்துவிட்டேன்.

என்றைக்கும் இல்லாத திருநாளாக மண்டையை பிளக்கும் வெய்யில்.இந்திய உணவகமான கோமளாஸுக்கு வெளியே யாரையும் காணவில்லை.உள்ளே சென்று ஒரு காபியை வாங்கி கொண்டு வெளியில் வந்து நின்றேன்.பாராசூட் மூலம் நடுவானில் இருந்து குதிக்க வாய்ப்பிருப்பதாக அறிவிப்பில் கூறியிருந்ததால் 3 பக்கமும் சுற்றி பார்த்து கொண்டே இருந்தேன்.


(இவர் சிங்கை பதிவர் அல்ல)

3:45 அளவில் தலைவர் ஸ்ரீலஸ்ரீ அவர்களுக்கு காத்திருக்கும் இடத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்துவிட்டு திரும்பவும் 3 பக்கமும்...

நடுவில் ஒரிரு இந்தியர்கள் எதையாவது தேடிக் கொண்டே போனால் "பதிவரா இருப்பாரோ, நம்மளதான் தேடுறாரோ" என்று தோன்றினாலும் எழுத்தாளருக்கான அடையாளங்கள் (???) முகத்தில் தெரியாததால் கேட்கவில்லை.

நான்கு மணிக்கு சற்றே பின்னர் ஸ்ரீலஸ்ரீ வந்துவிட்டார்.வேறொரு இடத்திற்கு முன்னரே வந்திருந்த கோவியாரையும் அவரின் மலேசிய நண்பர் ஜவஹர் அவர்களையும் அறிமுகம் செய்தார்.

என்னையும் ஜவஹரையும் தனியே விட்டு பால்ராஜ் அவர்களும் கோவியாரும் ரெஸ்ட்ரூமுக்கு சென்ற பதினைந்து நிமிடங்களில் (இவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ பெரிய bladder ஆ - ஜவஹர்) மேலும் பல பதிவர்கள் (டொன் லீ, கிஷோர், அப்பாவி முரு...) வந்து சேர்ந்தனர்.

உட்கார தோதான இடம் தேடி கடையை விரித்தோம். மேலும் சிலர் வந்து சேர கூட்டம் களை கட்டியது.


விவாதிக்கப்பட்ட விஷயங்கள்

1. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நம் நிலைப்பாடு என்ன?

திமுக, அதிமுக கூட்டணிகளின் மீது நம்பிக்கையின்மையை பெரும்பாலோனோர் எடுத்து கூறினர்.அப்பாவி முரு "ஏன் விஜயகாந்த் அவர்கள் பக்கம் நாம் சாயக்கூடாது?" என்று எழுப்பிய வினாவுக்கு போதுமான வரவேற்பில்லை.

இதை ஒட்டியே பின்னர் நடந்த "வாய்ப்பிருந்தால் யாருக்கு உங்கள் ஒட்டு?" என்ற விவாதத்திலும் பெரும்பாலானோர் "49 O" க்குத்தான் தங்கள் ஒட்டு என்று கூறிவிட்டனர்.
(இச்சமயம் கிட்டத்தட்ட 20 பதிவர்கள் கூடிவிட்டனர்.)

2. யார் அந்த ஜே.கே.ரித்தீசு? என்று சிங்கை ப்ளாகர்ஸ் க்ரூப்பிலும், மாநாட்டிலும் கேள்வி கேட்ட டொன் லீ க்கு எதிராக மீனாட்சி சுந்தரமும், ஜோஸப் பால்ராஜும் கண்டன தீர்மானம் கொண்டுவந்தனர்.

3. யார் தமிழன்? என்ற விவாதம் அகரம்.அமுதா அவர்களின் கருத்துகளும் எதிர்கருத்துகளுமாக சிறிது நேரம் சுவாரசியமாக நடந்தது.

இடையிடையே விவாதங்கள் வேறு வேறு இடங்களுக்கு சென்று வந்தன.

நடுவே கோவியாரின் தயவில் அவித்த கடலை மற்றும் கேசரி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


இப்படியாக இனிதே நடந்த கூட்டம் 07:15 மணியளவில் நிறைவு பெற்றது.

மேலும் சில புகைப்படங்கள்


மேல் விவரங்களுக்கு மற்ற சிங்கை பதிவர்களின் பதிவுகளுக்கு செல்லவும்.

Friday, April 10, 2009

அசாருத்தீனின் விளையாட்டுகள்

கிரிக்கெட் உலகில் ஒரு இளம் புயலாக நுழைந்தவர்.1984 ஆம் ஆண்டு, தன்னுடைய 21 ஆம் வயதில்,முதல் 3 டெஸ்ட் மேட்ச்களிலும் சதமடித்து,திரையை கிழித்துக் கொண்டு வந்து பஞ்ச் டயலாகுடன் என்ட்ரி கொடுக்கும் தமிழ் கதாநாயகன் போலத்தான் இவருடைய பிரவேசமும்.

ஃபீல்டிங் என்றாலே பந்தின் பின்னால் துரத்திக் கொண்டு ஒடுவது, கேட்ச் என்பது அதிர்ஷ்டம் இருந்தால் பிடிக்கக் கூடிய ஒன்று என்று இந்திய கிரிக்கெட் அணி இருந்த காலம் அது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே போன்ற அணிகளோடு ஒப்பிட்டால் கேவலம் என்று சொல்லக்கூடிய அளவில்தான் இந்திய ஃபீல்டிங்கின் தரம் இருந்த காலகட்டத்தில், இவர் என்னால் அவர்களையும் மிஞ்ச முடியும் என்று நிரூபித்தார்.அவர் இருக்கும் பக்கத்தில் சுற்று பட்ட 30 அடியில் பந்து இவரை தாண்டி போகவே முடியாது.ஒவ்வொரு ஒரு நாள் பந்தயத்திலும் குறைந்தது 30-35 ரன்கள் இவரால் எதிரணிக்கு குறைந்து விடும். "அவருடைய கைகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அளவுக்கு பாதுகாப்பானது" என்பது இவருக்கு சூட்டப்பட்ட தகுதியான புகழாரம்.

அவர்தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருத்தீன்.

உலக அரங்கில் நுழைந்த ஐந்து வருடங்களில் தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. கேப்டனாகவும் மிக நன்றாக பரிணமித்தார். இவருடைய தலைமையில் இந்திய அணி பெற்றது 103 ஒரு நாள் மற்றும் 14 டெஸ்ட் வெற்றிகள்.புள்ளி விவரங்களின் அடிப்படையில் இவருக்கு முந்தைய கேப்டன்களை விட சிறந்தவராக எல்லோரும் கூறினர்.

எல்லாமே நல்லாத்தானே போயிக்கிட்ருக்கு... இப்ப என்ன ஆச்சு.... என்ற வடிவேலுவின் வசனம் இனிமேல்தான்.

புள்ளிவிவரங்கள் அடிப்படையில் என்று மேலே கூறியதற்கு காரணம் உண்டு.புள்ளி விவரங்களால் மட்டும் சிறந்த வீரர் அல்லது கேப்டன் என்று முடிவு செய்வது தவறு என்பதையும் நிரூபித்தவர் இவர்தான்.

இவருடைய தலைமையில் அந்நிய மண்ணில் நடை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் நம் அணி பெற்றது ஒரே ஒரு வெற்றிதான் (1993 - கொழும்பு - இலங்கைக்கு எதிராக)

மூன்று முறை உலகக் கோப்பை அணி கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட செமி ஃபைனல் தாண்டவில்லை.

மிக அதிகமான அளவில் விளையாட்டரசியல் செய்து சித்து, டெண்டுல்கர், கபில்தேவ் போன்றவர்களின் திறமையையும் கரியரையும் வீணடிக்க மும்முரமாக முயற்சித்தவர்.

மிக மோசமான ஃபார்மோ அல்லது வேறு காரணங்களாலோ(விவாகரத்து, சங்கீதா பிஜ்லானி இதர பல) பல போட்டிகளில் கேவலமாக விளையாடி, டீமை விட்டு தூக்க வேண்டும் என்ற பேச்சு வரும்போதெல்லாம் ஒரு செஞ்சுரி அடித்து தன்னுடைய இடத்தையும் பதவியையும் காப்பாற்றி கொண்டவர்.இடையில் சிறிது காலம் (1997-98) கேப்டன் பதவியை இழந்தார். ஆனால் அவருடைய பலவித சாதுர்யங்கள் மற்றும் கேப்டன் பதவியில் இருக்கும் போது மோசமாக விளையாடிய டெண்டுல்கரின் காரணமாகவும் தலைமைப்பதவியை திரும்ப பெற்றார்.

இந்த கால கட்டங்களில் எல்லாம் இவரும், அணியில் இருக்கும் சில வீரர்களும் விசித்திரமான முறையில் அவுட்டாவதும், அடித்து ஆட வேண்டிய இடத்தில் தடுத்து ஆடியும்,
வள்ளல்களாக மாறி ரன்களை வாரி வழங்குவதும் எல்லாம் ஏன் என்பது புரியாமல் தலையை சொறிந்து சொறிந்து சொட்டையான ரசிகர்களில் நானும் ஒருவன்.

2000 மாவது ஆண்டு தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹன்ஸி க்ரோஞ்சே கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிபட்ட பொழுதுதான் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தது. சூதாட்ட தரகர்களுடன் தன்னை அறிமுகப்படுத்தியதே அசாருத்தீன்தான் என்று க்ரோஞ்சே கூறினார். பின்னர் நடந்த விசாரணையில் அசாருத்தீனுடன் சேர்ந்து அஜய் ஜடேஜா, அஜய் ஷர்மா மற்றும் பலருக்கும் தொடர்பிருப்பதும் வெளிவர என் போன்ற ரசிகர்களின் சொட்டை வளர்ச்சி முடிவுக்கு வந்தது.

பைத்தியக்கார கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் நகத்தை கடித்துக் கொண்டு பார்த்த பல போட்டிகள், ஏற்கெனவே சூதாட்டக்காரர்களாலும் இது பொன்ற கறுப்பு ஆடுகளாலும் இப்படித்தான் ஆட வேண்டும் முடிவு செய்யப்பட்டு விளையாடப்பட்டவை.

இப்படியெல்லாம் விளையாட்டில் அரசியல் செய்து கொண்டிருந்த அசாருத்தீன் இப்போது அரசியல் விளையாட்டில் இறங்கியிருக்கிறார்.தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசியல்வாதிகளைப் போலவே சிறுபான்மை சாயம் பூசி தப்ப நினைத்த போதே அவர் அரசியலுக்கு தயாராகி விட்டது பலருக்கும் புரிந்திருக்கும்.

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் இவர் இந்த விளையாட்டையாவது நேர்மையான முறையில் விளையாடி வெற்றி பெறுவாரா?
அப்படி வெற்றி பெற்றால், நம்பிய தொகுதி மக்களை ஏமாற்றாமல் தன் கடமைகளை செய்வாரா?

Wednesday, April 8, 2009

வார்த்தைகளே இல்லாத கதைகள் - ஏன் இந்த கொலை வெறி?

இப்போது தமிழ் வலைப்பதிவுகளில் எந்த பக்கம் திரும்பினாலும் ரெண்டு வார்த்தைக் கதைகள், ஒரு வரிக் கதைகள். சீசன் போல இருக்கு.

பெரிய விஷயங்களுக்கெல்லாம் அது ஒரு பெரிய ராமாயணம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட ராமாயணத்துக்கே ஒரே ஒரு வார்த்தைதான் தலைப்பு.

ஆனால் ஒரு சிறுகதை சைசுக்கு தலைப்பு வைத்து விட்டு,தலைப்பாக வைக்க வேண்டிய இரண்டு வார்த்தைகளையோ அல்லது ஒரு வரியையோ கதை என்று எழுதி விடுகிறார்கள். இப்படியே போனால் அடுத்த கட்டம் என்ன என்று யோசித்ததின் விளைவுதான் கீழே இருக்கும் கதைக் கொடுமைகள்.

தலைப்பு 1 : ஆசிரியர் மாணவர்களிடம் கணக்குப் பாடத்தில் கேள்விகள் கேட்டார். நாற்பதில் பத்து போனால் எவ்வளவு?, ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு? ...என்று பல கேள்விகள் கேட்க எல்லாவற்றுக்கும் தப்பான பதில் சொன்ன சங்கரனின் தலையில் இருப்பது...

கதை :______________________________

தலைப்பு 2: மஹாபாரதப் போரில் கவச குண்டலங்களை கொடுத்து, தனக்கு கிடைத்த புண்ணியங்களையும் தாரை வார்த்து, பின்னர் நண்பனுக்காக உயிரையும் கொடுத்த பிறகு கொடை வள்ளல் கர்ணணிடம் இருந்தது..

கதை :______________________________

தலைப்பு 3: ஒண்ணாம் தேதி. குப்புசாமிக்கு மாத சம்பளம் இருபதாயிரம். வீட்டுக்கடன் 7500 பிடித்து விட்டர்கள். க்ரெடிட் கார்ட் பாக்கி 6000, வீம்புக்கு வாங்கிய கார் கடன் மாத தவணை4500, துரோகியிடம் கை மாத்து பாக்கி 2000. இந்த மாசம் சோத்துக்கு...

கதை :______________________________

தலைப்பு 4. ரோட்டோர ஆயா கடையில பிரியாணி, ஆப் பாயில் துன்னுட்டு பாயா குட்ச அர மணில வகிறு ரெயிலு கணக்கா சத்தம். நாப்பத்தேளு வாட்டி பேதி புடுங்கனுதுக்கு அப்றம் முன்சாமி வவுத்த்ல இருக்கறது...

கதை : ______________________________

விரைவில் எதிர்பாருங்கள் "லோக்கூ" கவுஜைகள்....(ஹைக்கூ மாதிரி எழுதப்படும் சில வார்த்தைகளின் கலவை)

டிஸ்கி: நெஜம்மாவே நல்ல கதைகள் எழுதியவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.வாழ்த்தி பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும். தாங்கள் எழுதிய கதைகள் மொக்கை என நெனைக்கறவங்க நாலு திட்டு திட்டிட்டு போங்க.

Tuesday, April 7, 2009

பல்லடுக்கு வியாபாரமும் பல்லிடுக்கு மாமிசமும்

அலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, "என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு" என்று சொன்னாலோ...

அல்லது...

அதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. "ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா" என்று சொன்னாலோ...

அந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.

எல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.

பெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து உங்களை சங்கிலித்தொடருக்குள் வரவைக்க முயற்சிப்பார்கள்.

இந்த வியாபாரத்தில் லாபம் அடைய வழி, மேன் மேலும் ஆட்களை சேர்ப்பதன் மூலம்தான். பொருள்களை விற்று வரும் கமிஷன் தொகை மிக சொற்பமே.இதற்கு முக்கிய காரணம் இந்த பொருள்கள் எல்லாம் வெளி சந்தையில் கிடைக்க கூடியவற்றை விட பல மடங்கு அதிகம்.ஒரு நல்ல ப்ராண்ட் பற்பசையை 40 ரூபாய்க்கு கடையில் வாங்க முடிந்தால் அதை போன்ற ஒரு பற்பசை இங்கே 100 ரூபாயாக இருக்கும்.இதற்கு அவர்கள் கூறும் காரணம் "தரம்".

இந்த 100 ரூபாய் பற்பசையை ஒர் பட்டாணி அளவே உபயோகித்தால் போதும் என்பார்கள். (ஆனால் உண்மையில் கடையில் வாங்கும் 40 ரூபாய் பற்பசையும் பட்டாணி அளவே போதும்.)

அப்படியே தரம் அதிகம் என்று வைத்து கொண்டாலும், 40-50 வருடங்களாக சந்தையில் இருக்கக்கூடிய (எ.கா.-கோல்கேட்)பொருளை விட சிறந்தது என்று பலரையும் கன்வின்ஸ் செய்து வாங்க வைப்பது மிக கடினம்.இது போலவே சோப்பு, ஷாம்பூ என்று பலவும் உண்டு.

நீங்கள் உறுப்பினராகிவிட்டால் வீட்டுக்காக வாங்கும் பொருள்கள் மாதம் 500 ரூபாய் என்றால் 75 ரூபாய் திரும்ப கிடைத்துவிடும் என்பது இன்னொரு துருப்பு சீட்டு. ஆனால் வெளி சந்தையில் வாங்கினால் இந்த செலவு ரூபாய் 300 மட்டுமே ஆகும்.

ஒரு விஷயம் நிச்சயம் உறுதி. கடினமாக உழைத்து உங்களுக்கு கீழே பலரும் சங்கிலியில் இணைந்து விட்டால் லாபம் கிடைக்க வழி உண்டு. ஆனால் இத்தகைய கடின உழைப்பும், வியாபார திறமையும் இருப்பவர்கள் மற்ற துறைகளிலும்(விற்பனை பிரதிநிதி,ஆயுள் காப்பீட்டு முகவர் போன்ற) பிரகாசிக்க வாய்ப்பு மிக அதிகம்.

சில வருடங்களுக்கு முன் இத்தகைய பல்லடுக்கு வியாபாரங்கள் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தன. மேலே குறிப்பிட்ட மாதந்திர சாமான்கள் தவிர மலேஷியாவில் இருந்து மருந்து, தங்கம்,நிலம்,வீடு,காய்கறி,மளிகை என்று பல வகைகள் உண்டு.பொருள்களே இல்லாமல் ஆள் சேர.. சேர.. வெறும் காசு மட்டுமே திரும்ப கிடைக்கும் என்று கூறும் ஏமாற்றும் இருந்தது.

கொஞ்சம் கூட பேச்சு திறமையே இல்லாத பல நடுத்தர வர்க்க நண்பர்கள், நாலு பேர எப்படியாவது சேர்த்துவிட்டால் அவர்களில் ஒருவரோ அல்லது அவர்களுக்கு கீழே இருக்கும் ஒருவரோ தீவிரமாக உழைத்தால் காசு கிடைக்கும் என்று நம்பி சேர்ந்துவிடுகிறார்கள்.

இதற்காக இவர்கள் நம்புவது அவர்களுடைய மார்க்கெட்டிங் திறமையை அல்ல. நட்பு வட்டத்தை !!!

இதற்கு இரண்டு விதமான பின்விளைவுகள் உண்டு.

முதலாவது, நட்பு முறிவு.(டேய், சங்கிலி சாமினாதன் வர்ரான்... ஒட்றா..). பல வருடங்களுக்கு பிறகும் கூட, "நம்ம கேட்டு இவன் சேர மாட்டேன்னுட்டான் இல்ல"...என்று இவரும், "இவன் இன்னும் அந்த பிஸினஸ் செய்யறானோ" என்று அவர் நண்பரும் நினைத்துக்கொண்டு ஒன்று சேர்வதேயில்லை. சாதரணமாக இவர்கள் ஃபோன் செய்தால் கூட "வீட்ல அவர் இல்லீங்க" என்ற வசனம் அடிக்கடி பேசப்படும்.செல்லாக இருந்தால் சிக்னல் வீக்காகவோ, மீட்டிங்கிலோ இருப்பதாக சொல்லி கட் செய்து விடுவார்கள்.

இரண்டாவது, காசு போனால் போய் தொலையட்டும் "இவன் மூஞ்சிய தெனம் பாத்து தொலையணுமே" என்பதற்காக சேர்ந்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவது.

உச்சகட்ட கொடுமையாக நீ என்னோட ஸ்கீம்ல சேரு... நான் ஒன்னோடதுல சேந்துக்கறேன் என்று இரண்டிலும் தொலைக்கும் அசம்பாவிதமும் நடந்ததுண்டு.

எனக்கு தெரிந்தவர்களில் சுமார் 50 பேர் இந்த மல்டி லெவல் வியாபாரத்தை முயற்சி செய்து பல வேறு லெவல்களில் நிறுத்தி விட்டார்கள். இதன் பலனாக இவர்கள் இழந்தது சிலரின் நட்பு, அடைந்தது பலரின் கிண்டலும் கேலியும்.

இந்த மல்டிலெவெல் மார்க்கெட்டிங் செய்யும் / செய்யப்போகும் அன்பர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான்.

தயவு செய்து நண்பர்களையும், உறவினர்களையும் நம்பி இதில் இறங்கி.உறவுகளை முறித்து கொள்ளாதீர்கள்.

உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம், அதற்கு பல்லடுக்கை விட சிறந்த வழிகள் பல உண்டு.

Wednesday, April 1, 2009

கோள வெதும்பலும் - கார்க்கியின் ஏழுமலையும்

மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரவு 08.30 மணி முதலான ஒரு மணிநேரத்தை Earth Hour ஆக கொண்டாடினார்கள். உலகம் முழுவதும் பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டன. பூமி வெப்பமடைவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக இது நடத்தப்பட்டது.

ஐரோப்பா கண்டத்தின் பல முக்கிய தலங்களில் நடந்ததை காட்டும் வீடியோ கீழே.
3 வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்த விஷயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதுமாக பரவிக்கொண்டிருக்கிறது.

சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை என்றாலும் கூட இதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தவுடன் எனக்கு கார்க்கியின் ஹீரோ ஏழுமலை நினைவுக்கு வந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.காரணம் இதுதான்...

//அவர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் ஏழு.

ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா ஏழு ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும் அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான்.

அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு.........
இருவரும் இப்போது மயங்கி விழுந்தார்கள்./
/

(கார்க்கியின் முழுஇடுகை இங்கே )

ஏழுமலையையும் நண்பர்களையும் பாத்து உலகமே லைட்டு போட்டா மாதிரி செய்யாமல்.......

கோள வெதும்பலை தடுக்க நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள்
----------------------------------------------------------------------------------------
(Global warming --> கோள வெதும்பல். நன்றி:http://www.tamildict.com)

1. மின் விசிறிகளுக்கான சாதாரண ரெகுலேட்டர்கள்(டொக்.. டொக் என்று திருகுவீர்களே..அது) பயன்படுத்தினால் எல்லா வேகத்திற்கும் ஒரே அளவு மின்சாரம் தான் செலவாகும். இதை எலெக்ட்ரானிக் ரெகுலேட்டருக்கு (ஸ்மூத்தாக திருகுமே... அது) மாற்றி விட்டால் உபயோகிக்கும் வேகத்திற்கு ஏற்ற அளவுதான் செலவாகும்.

2. குண்டு பல்புகளை தூக்கி கடாசிவிட்டு எனெர்ஜி சேவிங் (ஃப்ளோரஸன்ட்)பல்புகளுக்கு மாறுங்கள்.

3. ஏர் கண்டிஷனர் உபயோகித்தால் 25 டிகிரிக்கு கீழே வைக்காதீர்கள்.

4. செல் ஃபோன், லேப்டாப் சார்ஜர் உள்ளிட்ட அனைத்து சார்ஜர்களையும் உபயோகிக்காத தருணங்களில் ப்ளக் ஸ்விட்சை அணைத்தோ அல்லது ப்ளக்கிலிருந்து பிடுங்கியோ விடவும்.

5. டிவி மற்றும் ஏசி முதலான அனைத்து உபகரணங்களையும் ரிமோட்டில் அணைக்காமல் ப்ளக்கிலேயே அணைக்கவும்.

6. புதிய உபகரணங்கள் வாங்கும்போது எனர்ஜி ஸ்டார் முத்திரை இருந்தால் மட்டுமே வாங்குங்கள்

7. முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

8. நடப்பதும், சைக்கிள் ஒட்டுவதும் உடலுக்கும், உலகுக்கும் நன்மை.

9. வாகனங்களின் ஸ்பீடோமீட்டர் பச்சைக்குள் ஒட்டுவதன் அவசியம் அனைவருக்கும் தெரிந்ததே.

பத்தாவதாக 2 கேள்விகள் :-சமீப காலங்களில் தமிழகத்திலிருந்து கோள வெதும்பலுக்கு எதிராக மிக அதிகமாக பங்களித்தவர் யார்?

Earth hour க்கு தமிழில் என்ன?

(டிஸ்கி 1-மேலே உள்ளது போன்ற ஒர் கதையைத்தான் சங்கமத்தில் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார் கார்க்கி. அப்படியே எல்லாரும் அங்க போயி ஒரு வோட்டு போட்றுங்க.

டிஸ்கி 2 - "உன்னோட மொக்க பதிவெல்லாம் படிக்காம கரெண்ட் மிச்சம் பண்ணலாம்" அப்படிங்கற பின்னூட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.)