Wednesday, February 25, 2009

அந்த(சா.மி.சா.) பார்வை

கோவணத்துணியிலிருந்து கோமேதக, வைர அட்டிகை வரை எதுவாக இருந்தாலும் திருச்சியில் வாங்குவதாக இருந்தால் இங்குதான் வரவேண்டும்.மிகப்பெரிய கடைகள் எல்லாம் இருக்கும் இதற்கு "சின்ன" கடை வீதி என்று பெயர்.

நகரத்தின் மிக முக்கிய வியாபார மையம்.சமீப வருடங்களில்தான் இந்த வீதியையும் தாண்டி திருச்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பல பெரிய வணிக வளாகங்களும் கடைகளும் வந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு தெருவின் முழு நீளத்தையும் தினம் இரண்டு முறை கடக்க வேண்டிய அவசியம் எனக்கு 5 வருடங்களுக்கு இருந்தது. திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ட்ரெயினில் வந்து இறங்கி செயின்ட் ஜோசஃப் பள்ளிக்கு நடைப்பயணம் 5 கிமீ. அந்த ஐந்து வருடங்களும் விதம் விதமான அனுபவங்கள்.

நம்ப ஊர்லதான் எல்லா பய புள்ளைகளுக்கும் பொறப்புல இருந்தே கிரிக்கெட் பயித்தியமாச்சே.
இபபல்லாம் டிவி கடை வாசல்ல கூடி நின்னு பாக்கறாங்க. 30 வருஷம் முன்னாடி ஏது டிவி?
ரேடியோ கமெண்டரிதான்.சாயங்காலம் நாலு மணிக்கு மேலே ஸ்கூல் விடற நேரத்துல தான் பெரும்பாலும் மேட்ச் விறுவிறுப்பான கட்டத்துல இருக்கும்.மேல சொன்ன தெருவுல இந்த நேரத்துல ஜனக்கூட்டம் எப்படி இருக்கும் என்பது உ.கை நெல்லிக்கனி.

எப்படி தினம் 1000 ஹிட்டுகளும், நூறு பின்னூட்டங்களும் இருக்குற பதிவுகளுக்கு நடுவுல நம்மளும் பதிவு வெச்சுருக்கோம்னு பேரு பண்ணிக்கிட்டு தனியா ஈ ஓட்டறோமோ, அதே மாதிரி இவ்வளவு பிஸியான தெருவுலயும் ரெண்டு மூணு கடையில கூட்டமே இல்லாம, யாராவது உள்ள நுழைஞ்சா,"இவன் ஏன் இங்கல்லாம் வரான்னு" சந்தேகப் பார்வையுடன் ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். இவர்களில் பலரும் (என் அதிர்ஷ்டத்துக்கு) கிரிக்கெட் பிரியர்கள். மேட்ச் நாள்ள நிச்சயமா கமெண்டரி கேட்டுகிட்டு இருப்பாங்க. பாவம் அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க(நம்மளாவது இன்னோரு ஜன்னல திறந்து வெச்சு வேற நல்ல பதிவா படிச்சுக்கிட்டு இருக்கலாம்). ஒவ்வொரு ரெண்டு பர்லாங்குக்கும் இந்த மாதிரி (ஈ) ஒரு கடைய பார்த்து வெச்சிருப்பேன். ட்ரெயின பிடிக்க போற வழியில இந்த கடைகளுக்குள்ள நொழைஞ்சு ஸ்கோரை அப்டேட் செஞ்சுகிட்டே போவேன். அவங்களும் நம்ம கடைக்கு இப்படியாவது ஆள் வருதேன்னு (அனானியா இருந்தாலும் பின்னூட்டம் வந்தா சரின்னு நாம இருக்கறதில்லையா, அந்த மாதிரி) ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

ஆறாம்ப்பு படிக்கும்போது, இப்பிடித்தான் ஒரு நாளு, மேட்சுல கபில்தேவ் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பற அடுத்த வண்டில போயிக்கலாம்னு ஒரு கடையில செட்டிலாயிட்டேன். என் கெட்ட நேரம் 15 நிமிஷத்துல அவரு அவுட்டாயி கிர்மானி வந்து மட்டைய போட ஆரம்பிச்சுட்டார். எப்படியும் ரயிலுக்கு நேரம் இருக்கேன்னு அதையும் கேட்டுகிட்டு இருந்தேன். போரடிக்கும்போதெல்லாம் சுத்தி கடையில இருக்கிற பொருளையெல்லாம் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன்.

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியா, எனக்கு ரொம்ப இஷ்டமானது, ஓசி பொருள். எதுக்கு எது இலவசம்கறதெல்லாம்(பினாகாவுக்கு பொம்மை, போர்ன்விடாவுக்கு பம்பரம்) தரோவா தெரிஞ்சு வெச்சுகிட்டு அம்மாவ தொந்தரவு பண்ணிகிட்டு இருப்பேன்.

ரெண்டு பாராவுக்கு முந்தி சொன்ன மாதிரி,கடைய நோட்டம் வுட்டுகிட்டு இருக்கும்போது ஒரு வெள்ளை கலர் பாக்கெட்ல "Free Belt inside"ன்னு போட்டிருந்தது.

ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே, நமக்கும் ஒரு பெல்ட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனச்சுகிட்டே அது என்ன பாக்கெட்னு உத்து பார்த்தேன்.ரெண்டு மூணு பூவெல்லாம் வரைஞ்சு "Care Free" ன்னு ஸ்டைலா எழுதி இருந்துச்சு.கடைக்காரர்கிட்ட, "ஃப்ரீ பெல்ட் அப்படின்னு போட்ருக்கே, இடுப்புல கட்ற பெல்டான்னு என் இடுப்ப காமிச்சு கேட்டேன்".

அவரு சாணிய மிதிச்ச சாஸ்திரிகள் மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு என்னை மேலயும் கீழயும் ரெண்டு தடவ பார்த்துட்டு, "போ.. போ ட்ரெயினுக்கு நேரமாச்சுன்னு" வெரட்டி உட்டாரு.

அடுத்த சில நாட்களுக்கு,ஒவ்வொரு தடவையும் டவுசர தூக்கி விடும்போது, அவரோட அந்த பார்வை என் ஞாபகத்துக்கு வந்து டார்ச்சர் குடுத்துகிட்டுருந்துது.

ஒரு நாள் திடீர்னு எங்க வீட்லயே அந்த பாக்கெட் பீரோல துணிமணிகளுக்கு அடியில இருக்கறத அகஸ்மாத்தா பார்த்துட்டேன். உடனே துள்ளி குதிச்சு, "அம்மா அந்த பாக்கெட்டோட ஒரு ஃப்ரீ பெல்ட் வந்திருக்கணுமே, நான் கடையில பார்த்தேனே" அப்படின்னு கேட்டேன்.அப்போ எங்க அம்மாவும், பக்கத்துல இருந்த அக்காவும் என்னைய பார்த்த பார்வை!!!ஐயய்யோ!!! திரும்பவும்.. அதே சா.மி.சா பார்வை. வழக்கம் போல "ஒழுங்கா கழுவ கூட தெரியாத நாயி ஒனக்கெல்லாம் பெல்ட் ஒரு கேடா, புக்க எடுத்து வெச்சு படிடா"ன்னு தொரத்திட்டாங்க.

அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு விகடன், குமுதத்தில வர்ர விளம்பரத்தையெல்லாம் தீர அனலைஸ் பண்ணித்தான் அந்த(சா.மி.சா) பார்வைக்கான அர்த்தம் என்னன்னு புரிஞ்சுது. இப்ப வரைக்கும் நம்ம பசங்க இதே மாதிரி கேள்வி கேட்டா எப்படி புரிய வைக்கறதுங்கறது பெரிய கேள்விக்குறிதான்.

Friday, February 20, 2009

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

ஒரிஜினல் கேள்விகள் இங்கே....


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?

பத்துக்கே காதுல புகை வர்ர அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு.


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?

மேல் இருக்கும் பதிலே இதுக்கும்.


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?

எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?

என்னோட கேள்விகளுக்கு(முந்தைய பதிவுல) பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?

தலைய சொறிஞ்சு சொறிஞ்சுதான்


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?

அப்படியாவது பதில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?

பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?

இத முதல் கேள்வியா இல்ல கேட்ருக்கனும்


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

இல்ல. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாத்தான்.


10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?

நீங்களும் இதே மாதிரி ஒரு பத்து பதில் எழுதிருங்க.

பின்னூட்டத்துலதான் மொதல்ல பதில் சொன்னேன்.
கஷ்டப்பட்டு பதில் எழுதிட்டு அத நம்ம பதிவுல போடலேன்னா எப்படி?

Thursday, February 19, 2009

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

(தாமிராவுக்கும்,ரமேஷ் வைத்யாவுக்கும் அப்றமா...)

என் பையன் கிட்ட ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டேன், கொட்டி தீத்துட்டான். ஹ்ம்ம்... பிஞ்சு மனசுல இவ்வளவு வேதனையா?

1.நான் கார்ட்டூன் பார்த்தா மட்டும் கண்ணு கெட்ரும்னு சொல்றீங்க. நீங்க மட்டும் கிரிக்கெட் மேட்ச் 10 மணி நேரம் தொடர்ந்து பாக்கறீங்க?

2. எப்பவுமே பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா உங்க பாஸ் கால் பண்ணா, "அப்பா செல் போன மறந்துட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார்னு" சொல்ல சொல்றீங்க?

3. அன்றைய வேலையை அன்றைக்கே செய்யணும்னு சொல்றீங்க. ஆனா அம்மா பாத்ரூம் லைட் எரியலேன்னு சொன்னா, சண்டே பார்த்துக்கலாம்னு சொல்றிங்களே?

4. நான் ரப்பர், பென்சில் தேடினா எதையும் ஒழுங்கா இடத்துல வைக்கறதில்லன்னு திட்டற நீங்க, அப்பப்போ சாவி, பர்ஸ் எல்லாம் தேடறீங்களே?

5. நான்லாம் உன் வயசில எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு சொல்றீங்களே, உங்கப்பா அதே வயசுல இன்னும் எவ்ளோ அதிகமா கஷ்டப்பட்டார்னு சொல்வீங்களா?

6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?

7. என் க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கற பையன, அவன் எவ்ளோ நல்லா படிக்கறான்னு சொல்றீங்க. ஆனா, உங்க ஆபிஸ்ல மேனேஜர் ப்ரமோஷன் வாங்கின ராமு அங்கிள, காக்கா புடிச்சே வாங்கிட்டான்னு சொல்றது கரெக்ட்டா?

8. கரெண்ட் வேஸ்டாவுது லைட்ட அணை, ஃபேனை அணைன்னு சொல்ற நீங்க மட்டும் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் உக்காந்து மொக்க பதிவெல்லாம் படிக்கறீங்களே?

9. நான் தப்பா கணக்கு போட்டா அவ்வளவு திட்டற நீங்க, அம்மா பண்ற சாம்பார் நல்லா இல்லன்னா சத்தம் போடாம சாப்டுட்டு போறது ஏன்?

10. எக்ஸர்சைஸ் பண்ணனும், ஒடியாடி வெளையாடணும்னு சொல்ற உங்களுக்கு மட்டும் தொப்பை பெரிசாயிட்டே போவுதே?

இன்னும் நெறைய சொன்னான், ஆனா அதெல்லாம் போட்டா என் இமேஜ் ஸ்பாயிலாயிடும்னு
எடிட் பண்ணிட்டேன்.

பரிசல், தாமிரா மற்றும் ரமேஷ் வைத்யா பதிவுகளின் தொடர்ச்சி.

Tuesday, February 17, 2009

குற்றமும் பிண்ணணியும்

நான்தான் முன் ஜென்மத்தில் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்கிறார் ஆதித்தனார் குடும்ப பெண்ணான அருணா.

அவரை அழைத்துக்கொண்டு பதேபூர் சிக்ரி, ஆக்ரா என்று ஊர் ஊராக போய் என்ன செய்கிறார் என்று வீடியோ எடுத்து காண்பித்தார்கள்.

கோபிநாத்தின் வர்ணணைகளுடன், உணர்ச்சிபூர்வமான இசையமப்புடன் அரண்மனைகளின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்பட்டார்கள்.

ஏதோ அசத்தலாக காட்டப்போகிறார்கள் என்று பார்த்தால்...

அங்கங்கே போய் நின்றார்...

என்னென்னமோ ஃபீலிங்க்ஸா இருக்கு என்றார்..

இதையெல்லாம் இழந்துட்டமேன்னு இருக்கு என்று புலம்பினார்..

இது பிரசவ அறையா?, இதுதான் குளிக்கிற அறையா? இங்கதான் கக்கூஸா என்று பக்கத்தில் வந்த கைட் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லி விட்டு இங்க "இருந்தா" மாதிரி இருக்கு, இங்க "போனா" மாதிரி இருக்கு என்று கூறிக்கொண்டே வந்தார்.

அவ்வப்போது அரண்மணை சுவற்றில் சாய்ந்து கொண்டு கண்ல ஜலம் வெச்சுண்டு அழுகவும் செய்தார்.

இந்த இடத்தில் இப்படி இருக்கும் என்றோ...இந்த அறைக்கு இப்படி போக வேண்டும் என்று குறைந்த பட்ச அடையாளங்களை கூட கூறவில்லை.

இதற்கு 30 நாள் ட்ரெய்லர் போட்டு 3 நாள் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

ஆனால் ஒரு நல்ல விஷயம், அரண்மணைகளை நன்றாக சுற்றி காட்டினார்கள். இந்தியாவில் புராதான சின்னங்களை நன்றாக பராமரிப்பது புரிந்தது.அப்படியே ஜோதாபாய் பிறந்து, வளர்ந்த ஊர்களையும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் (அருணாவுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லியோ?).

இதில் ஹைலைட்டே நிகழ்ச்சியின் பெயர்தான்.."நடந்தது என்ன? குற்றமும் பிண்ணணியும்" (விஜய்)...

எதை குற்றம் என்கிறார்கள்?

Thursday, February 12, 2009

கள்ள தொடர்பு இருக்குமோ


இன்னொரு கேப்டனையும் அவுட்டாக்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டார் தோனி. இங்கிலாந்து அணி இங்கே வந்து மண்ணை கவ்வியதும், பீட்டர்சனும், கோச் பீட்டர் மூர்ஸும் “கா” விட்டுக்கொண்டதும், பின்னர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததும் பழசு. இப்போது இலங்கையை அவர்கள் குகைக்குள்ளேயே நுழைந்து ஒளிய இடமில்லாமல் ஒட ஒட விரட்டியதால் ஜெயவர்தனேவும் கால் கடுதாசி கொடுக்க போகிறாராம்.

ஓரு மேட்ச் கூட பார்க்க முடியலியே, சண்டேல வேற வருதேன்னு கடைசி மேட்ச் பார்க்கலாம்னு மெனக்கெட்டு உக்காந்தா நல்லா ஏமாத்திட்டாங்க. சீட்டு கட்டு கார்டெல்லாம் வரிசையா நிக்க வெச்சு தட்டி வுட்டா மாதிரி கட.. கடன்னு விக்கெட் உழவும் வெறுத்து போச்சு. தோனிக்கு முந்தைய இந்திய அணியை ஞாபகமூட்டினார்கள்.

நம்ம அதிர்ஷ்டத்த நொந்துகிட்டாலும், பாராட்டாம இருக்க முடியல. இனிமே எந்த நாட்டு கிரிக்கெட் செலெக்க்ஷன் கமிட்டியாவது கேப்டன தூக்கணும்னா இந்தியாவோட ஒரு சீரிஸ் ஆடிட்டு வான்னு நம்பிக்கையா அனுப்பலாம்.

இதுக்கு நடுவுல அமெரிக்க பொருளாதாரத்துக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் ஏதோ கள்ள தொடர்பு இருக்குமோன்னு நெனைக்கிற அளவுக்கு அதல பாதாளத்துக்கு போயிட்ருக்காங்க.

இளமையான அணி... பழைய வாடை அடிக்காம தோனியும் எல்லாம் வல்ல இறைவனும் கடாட்சம் காட்ட வேண்டும்.

முதல்ல “க்ளீன் போல்ட்” ன்னுதான் டைட்டில் வெச்சேன் கடைசில பேர பார்த்தவுடனே விரசா வந்து பார்ப்பீங்கன்னுதான் மாத்திட்டேன். ஏமாந்தீங்களா...

சும்மா எதேச்சையாதான் தீபிகா படுகோனே படத்த போட்டேன். உள்குத்தெல்லாம் இல்ல.