Friday, July 24, 2009

"சிம்லா ஸ்பெஷல்: ஆப்பிள் கிடைக்குமா?" - இந்தியா ஒளிர்கிறது (ஊ)

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"

பேருந்து கிளம்பி தில்லியை விட்டு வெளியில் வரும்போதுதான் புரிந்தது, நகரம் எவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது. புறநகர்களில் ரிஸார்ட் தொழில் கொடி கட்டி பறக்கிறது.பத்தடிக்கு ஒரு ரிசார்ட். வழிகாட்டியிடம் விசாரித்தபோது சொன்னார் இப்போதெல்லாம் திருமணங்கள், ரிசப்ஷன், அலுவலக பார்ட்டிகள் போன்ற விஷயங்களெல்லாம் இத்தகைய ரிஸார்ட்களில்தான் நடைபெறுகின்றனவாம்.

மதியம் ஒரு மணிக்கு வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். சதர்ன் ட்ராவல்ஸ் நிறுவனம் ஆந்திரர்களால் ஆந்திரர்களுக்காக நடத்தப்படுவது.இதை நான் இந்த உணவகத்தில்தான் புரிந்து கொண்டேன். உணவகம் உள்ளூர் காரர்களால் நடத்தப்படுவதாக இருந்தாலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் ஆந்திர ஸ்டைலில் செய்வதற்கு பயிற்சி கொடுத்திருப்பார்கள் போலும்.அத்தனை காரம். எங்கள் மூவருக்கும் மூக்கு, வாயிலிருந்து தண்ணீர் கொட்ட, காது உள்ளிட்ட அனைத்து துவாரங்களிலும் கிட்டத்தட்ட புகையே வந்துவிட்டது. தந்தூரி ரொட்டியும் தயிரும் இருக்கவே உயிர் பிழைத்தோம்.

புகைப்படத்த உத்து பாருங்க, டாக்டர் எதுல ஸ்பெஷலிஸ்ட்னு தெரியும்.(வழியில் கிடைத்த வித்தியாசமான புகைப்படம்)

நான்கு மணி சுமாருக்கு முதல் சுற்றுலா தலமாக பிஞ்ஜூர் கார்டனில் நிறுத்தினார்கள்.இந்த பூங்காவில் பஞ்ச பாண்டவர்கள் இளைப்பாறியதாக ஒரு நம்பிக்கையும் உண்டு.பிஞ்ஜூரில் மற்றொரு பிரபலமான விஷயம் ஹெச்.எம்.டி நிறுவனம். இப்போது இநத நிறுவனமும் சரி பூங்காவும் சரி சுஸ்தாக இல்லை. வெயிலின் கொடுமையோடு காய்ந்துபோய் ஒன்றுமே இல்லாத பூங்காவை பார்த்து எரிச்சலடைந்ததுதான் மிச்சம். நீருற்றுகள் எல்லாவற்றையும் நிறுத்தி வத்திருந்தார்கள். ஆனால் ஒரு பக்கத்தில் தேவையே இல்லாமல் தண்ணீர், பம்பு செட்டை போல் கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கு நுழைவு சீட்டு வேறு. பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நான் பார்த்தபொழுது நீருற்றுகளும், வண்ண விளக்குகளுமாக நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட தினமுமே தில்லி- சிம்லா செல்லும் நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் இடத்தை நன்றாக வைத்துக் கொள்ளலாம் அல்லது இழுத்தாவது மூடி விடலாம். ஒரு காவி உடை சாமியார் ஏக பந்தாவாக குடை பிடிக்கவும், தண்ணீர் பாட்டில் சுமக்கவும் அல்லக்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தாலும் யாரென்று சரியாக சொல்ல முடியவில்லை. உங்களுககு தெரிந்தால் சொல்லுங்கள். முன்னும் பின்னும் காவலர் ஜீப்களுடன் இவருடைய கார் சிம்லா வரை கூடவே வந்தது.

இவர் யார்? சரியாக சொன்னால் உங்கள் அடுத்த 10 இடுகைகளுக்கு தலா 10 பின்னூட்டங்கள்பம்பு செட் ????


பிஞ்ஜூர் பூங்காவிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மலைப்பாதை ஆரம்பித்து விடுகிறது. "ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே மலைகளில்தான். அடுத்த ஆறு நாட்களுக்கு தினமும் நாம் பயணம் செய்யப்போவது இத்தகைய பாதைகளில்தான்" என்றதும் "வாவ், சூப்பர்" என்றான் பையன்.
இயற்கைக் காட்சிகளையும் வித்தியாசமான கட்டிட அமைப்புகளையும் ரசித்துக் கொண்டே மாலை ஏழு மணி வரை பொழுது போனதே தெரியவில்லை. பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சாலையிலிருந்து உள்ளே நுழைந்தால் ஐந்தாவது மாடியும் மற்ற தளங்களுக்கு
கீழே இறங்கியும் செல்லவேண்டும்.

ஏழு மணிக்கு மேல் பசியும், பயணக் களைப்புமாக அனைவரும் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டோம். இரவுத் தங்கல் சிம்லாவில் என்று சொல்லியிருந்தார்கள். சிம்லாவை கடந்து ஒரு மணி நேரமாகியும் ஓட்டுநர் நிறுத்தும் அறிகுறியே தெரியவில்லை. சிம்லா நகருக்குள் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாத்தால் ஊருக்கு வெளியே குஃப்ரி செல்லும் வழியில் இருந்த ஹோட்டலுக்கு போய் சேரும்போது இரவுமணி 10.

மறு நாள் காலை நாங்கள் சென்றது குஃப்ரி என்ற இடத்துக்கு. சாலையில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து குதிரை சவாரியில் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். சுற்றிவிட்டு திரும்பி வர 3 மணி நேரம் கொடுததார்கள்."குதிரையெல்லாம் ஏற முடியாது, நடந்தே போயிரலாம்" என்று மனைவி கூறினார். சரியென்று பாதையைப் பார்த்தால் கால் வைக்கவே லாயக்கற்று இருந்தது.சேறும் சகதியும், குதிரைச் சாணமுமாக ஒன்றரை அடி உயரத்துக்கு.வேறு வழியில்லாமல் குதிரை ஏறினோம். கிட்டத்தடட 20 நிமிட குதிரை சவாரி, குறுகிய பாதையில் பக்கங்களிலும் எதிரிலும் ஏனைய குதிரைகளோடு, பக்கவாட்டில் சரேல் பள்ளங்களுமாக அடிக்கடி "வீல்" அலறல்களுடன் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது.


"என்னாது? இந்த போட்டோவுக்கு ஏன் கமெண்ட் போடலியா? வேளா வேளைக்கு சோறு தண்ணி கிடைக்கறது புடிக்கலியா?""சிரிடா.. சிரி.. அடுத்த போட்டோல உனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு"
"வகிறு சரியில்லை மன்னா""பண்டிட் குயின் - பூலான் தேவிகிட்ட ட்ரெயினிங்லாம் எடுக்கலைங்க""


அங்கு இருந்தவை

தூரத்தில் இருக்கும் பனி படர்ந்த இமய மலையை அருகில் காட்டும் தொலை நோக்கி (அடப் பாவிகளா... அதை நேரில் பாக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தோம்)

ஒரு கோவில்

சில காட்டெருமைகள். அதன் மேல் சவாரியோ அல்லது கௌபாய் ஸ்டைலில் தொப்பியும் துப்பாக்கியுமாக புகைப்படமோ எடுத்துக்கொள்ளலாம்.

"கோ கார்ட்டிங்" உள்ளிட்ட சில விளாயாட்டுகளுடன் கூடிய ஒரு மினி தீம் பார்க்.

சுட.. சுட டீயும் மேகி நூடுல்ஸும் செய்து கொடுக்கும் சில கடைகளும்.

மறுபடியும் குதிரை, 20 நிமிடம், வீல்...

அடுத்து மதியத்துக்கு மேல் புறப்பட்டது சிம்லாவில் இருக்கும் மால் ரோட். பையனுக்கு "வகிறு சரியில்லை மன்னா" என்ற வசனத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக இரு வழி போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. சரி,என்று மால் ரோடு போய் ஒரு வைத்தியரை பார்த்தோம். இந்த மாதிரி வயிற்றுப் போக்கு வாந்திக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்பது சொந்த அனுபவம். சிம்லா முழுவதும் பல இடங்களில் தேடியும் ஆப்பிளை காணவில்லை. இரண்டு மணி நேர தேடலுக்கும், ஊடே இரண்டாயிரம் ரூபாய் ஷாப்பிங்குக்கும் பிறகு ஒரு பழக் கடையில் ஆப்பிள் கிடைத்தது. ஒரு ஆப்பிளின் விலை அறுபது ரூபாய்.

இரவு உணவு (ஸ்..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) மற்றும் தூக்கத்திற்கு பிறகு மறுநாள் காலையில் மனாலிக்கு புறப்பட்டோம்.

தொடரும்... வரும் இடுகைகளில் மனாலி, சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...

Thursday, July 23, 2009

"அப்பா, இதுவும் டெல்லி தானா?" -இந்தியா ஒளிர்கிறது (உ)

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"
இடுகையில்தான் இத்தனை இடைவெளியே தவிர, தில்லியில் இறங்கியதிலிருந்தே பரபரப்புதான்.

விமான நிலையத்திலிருந்து கரோல்பாகில் இருந்த ஹோட்டலுக்கு ப்ரீ பெய்ட் டாக்ஸியில் செல்லலாம் என்று கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு வெளியில் வந்தால் ஆதவன் (பதிவர் இல்லீங்க) ஃபுல் பார்மில் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஆர்.வி. உதயகுமார் போன்ற இயக்குனர்கள் வந்தால் வெட்டவெளியில் நடிகைகளின் தொப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அது அப்படியே ஆஃப் பாயிலாக மாறுவதை காட்டியிருப்பார்கள், அத்தனை சூடு.

டாக்ஸி ட்ரைவர் முகம் முழுவதையும் மறைத்து பெரிய பெட்ஷீட் சைஸுக்கு துணியை சுற்றிக்கொண்டு இருந்தார்.வெளிநாட்டு பயணிகளிடமிருந்து தொற்றக்கூடிய பன்றி காய்ச்சலிடமிருந்து தப்பிக்கத்தான் இப்படி இருக்கிறாரோ என்று பார்த்தால் தெருவில் ஸ்கூட்டர், மோடடார் சைக்கிள் ஒட்டுபவர்களெல்லாம் கூட இதேபோல்தான் இருந்தார்கள்.தெருக்களில் முகமூடிகளுடன்

எங்கள் கம்பெனியில் ஆயிரம் டிகிரிக்கு இரும்புக் குழம்பை காய்ச்சும் ஃபர்னஸுக்கு பக்கத்தில் நிற்கும் போது எப்படி இருக்குமோ அப்படி ஒரு உஷ்ணக் காற்று, ஓடிக் கொண்டிருக்கும் டாக்ஸியின் ஜன்னல் வழியாக அடிக்கவும்தான் இந்த முகமூடிகளுக்கான விளக்கம் கிடைத்தது.

ஹோட்டலுக்கு போய்ச் சேர்ந்து சிறிது இளைப்பாறலுக்குப் பின் "தில்லி பை நைட்" டூருக்கு கிளம்பி விட்டோம்.முதலில் சென்றது ஒரு வெட்டவெளி சிவன் கோயிலுக்கு. பிரமிக்கவைக்கும் பெரிய பெரிய சிலைகள். பெரிய்ய்ய சிவன் சிலையை தவிர பிள்ளையார் மற்றும் ராதா கிருஷ்ணண் சிலைகளும் உண்டு. அழகான பூங்காவும் சிலைகளுமாக ரம்மியமாக இருந்தது.அங்கிருந்து எல்லா நாட்டு தூதரகங்களும் இருக்கும் சாணக்யபுரி வழியாக ராஷ்டிரபதிபவனுக்கு வெளியே கொண்டு போய் இறக்கி விட்டார்கள்.என் மனைவியும் மகனும் தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் (மௌன ராகம்) மட்டுமே பார்த்திருந்த ராஷ்டிரபதிபவன், சௌத் ப்ளாக், நார்த் பிளாக் மற்றும் ராஜ் பத் சாலை, தூரத்தில் இந்தியா கேட் போன்றவற்றை நேரில் கண்டதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் மின்னியதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.


குடியரசுதின அணிவகுப்பு நடககும் ராஜ் பத் சாலையில் பீடு நடைபோட்டு நடந்து கொண்டே இந்தியா கேட்டை அடைநது விடடோம்.

இதன் பிறகு நாங்கள் சென்றது, செங்கோட்டையில் நடக்கும் ஒலி ஓளி காட்சிக்கு. ஒலி ஒளி காட்சியில் முகலாய சாமராஜ்ய வரலாற்றையும் செங்கோட்டையில் ராணிகள் எங்கே குளித்தார்கள், எங்கே தூங்கினார்கள், எத்தனை பிள்ளை பெற்றார்கள் என்பதையெல்லாம் கர.. கர.. குரலில் தட.. தட.. சத்தங்களுக்கு நடுவில் சொன்னார்கள். செங்கோட்டை போய் வரும் வழியில் பழைய தில்லி பகுதியை பார்த்துவிட்டு என் பையன் கேட்ட கேள்விதான் இந்த இடுகையின் தலைப்பு.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் மனாலியை நோக்கி பேருந்தில் கிளம்பி விட்டோம்.


உள்ளே ஒளிந்திருக்கும் "பிரபலம்" இல்லாத பதிவரை கண்டுபிடியுங்கள்

வரும் இடுககைகளில் சிம்லா, மனாலி,சண்டிகர், ஆக்ரா, மதுரா மற்றும் திரும்பவும் தில்லி.- தொடரும்.

Tuesday, July 21, 2009

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

இடுகையை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

.

Sunday, July 19, 2009

சிங்கை பதிவர் சந்திப்பு - 18 ஜூலை 2009

கோவியார் இந்த அறிவிப்பின் வாயிலாக சிங்கப்பூர் பதிவர்கள் கூட்டம் சிங்கப்பூர் ஜூராங் செண்ட்ரல் பூங்காவில் 18 ஜூலை 2009 அன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்.

சுமார் 04:40 மணி அளவில் நான் அங்கு போய் சேர்ந்தபோது அந்தி வெயிலில் சுகமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. தேடுவதற்கு அவசியமின்றி தென்றலில் மிதந்து வந்த தமிழ் மணத்தை (திரட்டி இல்லீங்க) தொடர்ந்து சென்றதால் பதிவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.


பூங்கா வாயிலில் அலைகடலென திரண்டு வந்த கூட்டத்தை வரவேற்க அல்ல

ஏற்கெனவே அங்கு 13 பதிவர்கள் கூடியிருந்தனர்.சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை தொடங்கியிருந்தது.

சிங்கப்பூர் கோவில்களின் தல புராணம் குறித்த கோவியாரின் ஆன்மிக சொற்பொழிவு அல்ல

போட்டி பற்றிய செய்திகளை இணையத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் பற்றி குழலி அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்று கொண்டிருந்தது. அதன் பிறகு வெவ்வேறு கட்ட தேர்வுகளுக்கான நடுவர்கள் நியமனம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து வெவ்வேறு பதிவர்களின் ஆலோசனைகள் குழலி, கோவியார், ஜோசஃப் பால்ராஜ் போன்ற் மூத்த பதிவர்களால் பரிசீலிக்கப்பட்டன.

சிங்கை பதிவர்களின் சிறந்த இடுகைகளை தேர்ந்தெடுத்து அதை ஒரு நூலாக அச்சிடலாம், மற்றும் போட்டியில் வெற்றி பெற்று சிங்கை வரும் எழுத்தாளர்களுக்கு இந்த நூலை அளிக்கலாம் என்று முகவை மைந்தன் யோசனை தெரிவித்தார். (தன் போன்றவர்கள் எழுதும் இடுகைகள் புத்தகத்தில் இருப்பது தெரிந்தால் பலரும் போட்டியில் கலந்து கொள்வதை இதற்காகவே தவிர்த்துவிடக்கூடும் என்று அறிவிலி போன்ற சிலர் அச்சம் தெரிவித்தனர்). இதனூடே நாமாகவே ஏன் ஒரு காலாண்டிதழ் நடத்த கூடாது என்ற யோசனையை ஜெகதீசன் முன் வைத்தார்.இவ்விரு யோசனைகளும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் கிரி மற்றும் ராம் ஆகியோரும் வந்து கூட்டத்தில் சேர்ந்துவிட்டிருந்தனர்.

பதிவுன்னா நம்ம இஷ்டம் போல எழுதலாம், காலாண்டிதழ்னா நேரத்துக்கு சரியா செய்யணுமே

பின்னர் பாஸ்கர் அவர்கள் வீட்டில் செய்து கொண்டு வந்திருந்த கடலை, பக்கோடா மற்றும் என் வீட்டிலிருந்து கொண்டு வந்த கேசரி மற்றும் மசால் வடை ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.இதற்குள் பாஸ்கர் அவர்கள் அருகிலிருக்கும் கோப்பி கடைக்கு சென்று பாலீத்தீன் பைகளில் கோப்பியும், தேத்தண்ணியும் வாங்கி வந்து அனைவருக்கும் வினியோகம் செய்தார்.

கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பதிவர்கள்

தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள் பற்றிய சிறிது நேர உரையாடலுக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவடைநது பலர் அவரவர் வீடுகளை நோக்கியும், சிலர் குடைக்கடைகளை நோக்கியும் நடையை கட்டினர்.

மேலும் சில புகைப்படங்கள்


புகைப்படம் எடுப்பதில் மட்டுமல்ல, போஸ் கொடுப்பதிலும் நான் எக்ஸ்பர்ட்தான் - ராம் (அகரம் அமுதாவுடன்)


வெற்றியாளர்கள் வரும்போது இப்படித்தான் வரவேற்கணும்


பித்தன்,"ப்ளாஸ்டிக் பை கோப்பிய இப்படித்தான் குடிக்கணும்" - அப்பாவி முரு


கிரி, வந்ததே லேட்டு, சீக்கிரமா போகணும்னா விடமாட்டேன்"- ஜோஸஃப் பால்ராஜ்


மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி

Friday, July 17, 2009

சுவாரஸ்யமான அதிர்ச்சி

ஹேக்கிங், ஆப்பு, ஆப்பரசன், சக்திவேலின் சதி என்று தமிழ் பதிவுலகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது தனது பெயரிலேயே நெருப்பை வைத்துக்கொண்டிருக்கும் செந்தழல் ரவி, பதிவர்களின் கவனத்தை திருப்பும் முயற்சியில் இந்த "சுவாரஸ்ய வலைப்பதிவு விருதுகளை...!!! " ஆரம்பித்து வைத்தார். தமிழ்மணம் புகழ் (இப்போ கூகிள்?)சக்திவேல் பதிவில் பிஸியாக இருக்கையிலும் இவர் இதைப்பற்றி யோசித்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

மிகவும் அதிர்ச்சி தரும் வகையில், விருது ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் ஆதிமூலகிருஷ்ணன் வாயிலாக என்னை வந்தடைந்து விட்டது.(இதற்கான உங்கள் கண்டணங்களை நீங்கள் அவருடைய இடுகையிலேயே தெரிவிக்கலாம்.)


ஒரு வாசகனாக நான் ரசிக்கும் மேலும் ஆறு பதிவர்களுக்கு இந்த விருதை நான் பாஸ் செய்யவேண்டும். அந்த பதிவர்களும் அவர்களின் பதிவுகளில் நான் மிகவும் ரசித்த இடுகைகளின் சுட்டிகளும் கீழே...

முதலாவதாக துக்ளக் - மகேஷ்

பயணக்கட்டுரை,கவிதை,கதை,சினிமா விமர்சனம் என்று வெரைட்டியாக கலக்கும் இவரின் பதிவுகளில் மிகவும் பிடித்தது பணியிட பாதுகாப்பு பற்றிய இவரின் இடுகைகளான

பணியிடத்தில் பாதுகாப்பு
உலக பணியிட பாதுகாப்பு நாள் - ஏப்ரல் 28

இரண்டாவதாக ச்சின்னப் பையன் பார்வையில் - சத்யா

பதிவுலகின் க்ரேஸி மோகன்.இயலபான நகைச்சுவை நடையில் அசத்துபவர். உங்களுக்கு ப்ளட் ப்ரெஷர், டென்ஷன், அடிக்கடி கோபம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் இவர் எழுத்துகளை படித்து சிரித்து நிவாரணம் பெறலாம்.

முக்கியமாக "கடையோட மாப்பிள்ளை" என்ற இந்த நாடகத்தொடர்.

மூன்றாவதாக சும்மா -வலசு வேலணை

சரளமான எழுத்து நடையில் அசத்துகிறார். இவருடைய வேரென நீயிருந்தாய் தொடரின் அனைத்து பகுதிகளும் அவசியம் படிக்க வேண்டியவை.

நான்காவதாக நந்தாவிளக்கு

சமீபத்தில்தான் இவருடைய பதிவுக்கு சென்றேன். இவருடைய ""மூன்றாம் கை"" படிப்பவர்கள் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும்.

ஐந்தாவதாக "அப்பாவி" - அப்பாவி முரு

உலக நடப்புகளை பற்றிய தன் கருத்துகளை மண்டையில் ஆணி அடிப்பது போல் சொல்பவர். பெரும்பாலான பதிவுகளில் பின்னூட்டமிட்டு கருத்துகளை தெரிவிப்பவர்.

இவருடைய "புளி காய்ச்சலை" நீங்களும் ரசிப்பீர்கள்.

ஆறாவதாக "இட்லி வடை" - யாருன்னே தெரியாது

கிட்டத்தட்ட ஒரு நியூஸ் பேப்பரே நடத்திக்கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்திய நாட்டு நடப்பை இவர் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறேன். இவர் (அல்லது இவர்கள்) என் இடுகையை படிக்கவோ அல்லது அவர்கள் பதிவில் விருதை போட்டுக்கொள்ளவோ வாய்ப்பில்லை. என்றாலும் நான் தினமும் படிக்கும் ஒரு பதிவை குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன்.

பி.கு. 1 :- மகேஷ்-ஆதியின் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை நான் படிக்கவில்லை.
பி.கு. 2 :- "இந்த விருது உங்களுக்கு கிடைக்கும்னு நினைச்சீங்களா?", "பதிவுலகத்துக்கு வரலைன்னா என்ன பண்ணிகிட்ருப்பீங்க?" போன்ற கேள்விகளுடன் வரும் நிருபர்கள் தயவு செய்து நாளை வரவும். இன்று சிங்கை பதிவர்கள் மாநாடு இருப்பதால் நான் ரொம்ப பிஸி.

Saturday, July 11, 2009

"பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" -இந்தியா ஒளிர்கிறது (ஈ)

தொடர்புடையய முந்தைய பதிவுகள்
முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

அடுத்து நாங்கள் புறப்பட்டது திருப்பதி, சென்னை வழியாக தில்லி நோக்கி. திருச்சியிலிருந்து ஆந்திரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (APSRTC) பேருந்தில் திருப்பதி கூட்டி செல்கிறார்கள். இரவு 7 மணிக்கு கிளம்பும் பேருந்து மறுநாள் காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்து விடுகிறது. பெருமாள் தரிசனத்திற்கு போவதாலோ என்னவோ பேருந்தில் தசாவதாரம் படம் போட்டார்கள்.அதற்கு முன் காண்பித்த ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் விளம்பர படம் நன்றாகவே இருந்தது.முக்கியமாக அடுத்த முறை வரும்போது விசாகப்பட்டினத்துக்கு நிச்சயம் போய் வரவேண்டும் என்ற முடிவை எடுக்குமளவுக்கு இருந்தது.

காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்ததும் ஒரு அறை கொடுத்து காலை கடன்களை முடிக்க 1 மணி நேரம் கொடுக்கிறார்கள்.காலை உணவுக்கு பிறகு "சாப்பிங்க்காம்லக்ஸ்"க்கு கூட்டி செல்கிறார் வழிகாட்டி.


தினம் வரும் லட்சகணக்கான தமிழர்களில் ஒருவரிடம் கேட்டு எழுதியிருக்கலாம்

அங்கு ஒரு கடையில் நம்மிடம் இருக்கும் செல்ஃபோன், கேமரா எல்லாவற்றையும் டெபாசிட் செய்ய சொல்லிவிடுகிறார். தேவஸ்தான பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கலாம். ஆனால் அங்கு க்யூ இருக்கும் என்பதால் இங்கேயே வைக்க சொல்கிறாராம்.ஒவ்வொரு பொருளுக்கும் 10 ரூபாயாம் ஒரு பஸ்ஸுக்கு 500 ரூபாய் வரை எளிதான சம்பாத்தியம். இதில் கைடுக்கான பங்கு எவ்வளவோ?

பிறகு கூட்டிக்கொண்டு போய் "Cellar Entry" வழியாக க்யூவில் சேர்த்துவிடுகிறார்கள்.ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை "பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி மைக்கில் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். கோவில் பிரகாரத்துக்குள் நுழைவதற்கு சற்றுமுன் தடுப்பு வேலி இல்லாத இடத்தில் கூட்டம் திடீரென்று முண்டியடிக்கிறது. இந்த இடத்தில் மட்டும் வேலியும் இல்லை, மற்ற இடங்களில் "ஜரிகண்டி" சொல்லி முரட்டுத்தனமாக தள்ளிவிடும் காவலர்(லி)களும் இல்லை. தடாரென்று ஒருவன் தேவையில்லாமல் தள்ளிவிட்டு டென்ஷனை உருவாக்க, மொட்டையடித்து நெத்தி நிறைய நாமத்துடன் ஒருவன் என் மனைவியின் கையில் இருக்கும் வளையலை உருவப் பார்த்தான். "பங்காரு நகலு" அறிவிப்புக்கான காரணாம் இப்போதுதான் புரிந்தது.

முன்பெல்லாம் ஏழுமலையானை ஓரளவுக்காவது பக்கத்தில் நின்று திவ்யமாக தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் மிகவும் தொலைவிலேயே நிறுத்திவிடுகிறார்கள். தூரதரிசனமாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது. இரண்டே மணிநேரத்தில் தரிசனம் முடிந்து வெளிவந்து விட்டோம்.வெளியில் வரும்போது தொன்னையில் சுடச்சுட கொடுத்த புளியோதரையும், பொங்கலும் தேவாம்ருதம்.நினைவு தெரிந்த நாளிலிருந்து சுவையும் மணமும் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் திருப்பதி லட்டு.

பேருந்து மற்ற பயணிகளுடன் காளஹஸ்தி புறப்பட நாங்கள் மட்டும் திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்னை வண்டியைப் பிடிக்க சென்றோம்.


இவுங்களுக்கு மட்டும் கேமரா அனுமதி உண்டாம்
நல்ல வேளையா இந்த ஃபோட்டோவுக்கெல்லாம் தடை கிடையாது
கோபுர தரிசனம்

திருப்பதி ரெயில் நிலையத்தில் இருக்கும் உயர் வகுப்பு பயணிகள் அறை ஏ.சி. வசதியுடன் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக செல்ஃபோன் மற்றும் மடிக்கணிணிகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஓய்வறைகளிலும் ரெயில் பெட்டிகளுக்குள்ளும் அளித்திருக்கும் ரெயில்வே நிர்வாகத்தை நிச்சயமாக பாராட்டவேண்டும். ஆனால் இந்த சப்தகிரி எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி, பின்னர் பயணம் செய்ய நேர்ந்த வைகை எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது இருந்த ரெயில்பெட்டிகளையே இன்னமும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். மேலே சொன்ன சார்ஜர் வசதியை தவிர மற்றவையெல்லாம் அரதப்பழசாக அழுக்கடைந்து இருக்கின்றன. முன்னால இருக்கும் சாப்பாட்டு ட்ரே 5 நிமிடத்துக்கு ஒரு முறை விழுந்து நம் முட்டியை பதம் பார்க்கிறது.


ரெயில் பெட்டியில் சார்ஜர் வசதி

சென்னையில் இரவு தங்கல் மட்டுமே. மறுநாள் காலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தில்லிக்கு பறந்துவிட்டோம். பட்ஜெட் ஏர்லைன்ஸாக இருந்தாலும் டைகர் ஏர்வேஸுடன் ஒப்பிடுமபோது ஸ்பைஸ் ஜெட் எவ்வளவோ மேல். விமானமும் சர்வீசும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக குடிக்க தண்ணீரும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்க ஒரு ட்ராயிங் கிட்டும் கொடுக்கிறார்கள்.


இதுவும் ஒரு வசதி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

ஒரு வழியாக பதிவு தில்லியை அடைந்துவிட்டது.... மேலும் தொடரும்

Friday, July 10, 2009

எனக்கு ஏன் வாசகர் கடிதமே வருவதில்லை????????

டிஸ்கி: நான் டைட்டிலை போட்டுவிட்டு "SAVE NOW" பட்டனுக்கு பதிலாக "PUBLISH POST" பட்டனை அமுத்தி விட்டேன். திரும்பி வந்து சரி செய்வதற்குள் இரண்டு பின்னூட்டங்கள் வந்துவிட்டன. எனவே இந்த இடுகையில் டிஸ்கி மட்டும்தான். மீதியை பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tuesday, July 7, 2009

நான் நல்லாத்தான் ஆடினேன், மேடைதான் கோணல்


இனிமேல் யாரும் கேஸ் அடுப்பில் சமைக்க கூடாது. இது கொடுமைப்படுத்தும் மாமியார்களுக்கு மருமகள்களை ஒழித்துக்கட்ட எளிதான வழியாக தொலைக்காட்சி தொடர்களில் சொல்லிக்கொடுத்து விட்டார்கள். அதற்காக நீங்கள் கிருஷணாயில் அடுப்பு பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். அதிலும் பலவிதமான அபாயங்கள் இருக்கிறது.பம்பு ஸ்டவ் வெடிக்க கூட சான்ஸ் இருக்கிறது. எலெக்ட்ரிக் அடுப்பு - ஆற்காட்டார் ஞாபகம் வந்தா அதப்பத்தி யோசிக்ககூட மாட்டீங்க.காடெல்லாம் சுத்தி அலைஞ்சு சுள்ளி பொறுக்கி,வெறகு வெட்டி பத்த வெச்சு சமைக்கறதுதான் நல்லது. அதுவும் வெறகு பத்த வைக்க ரெண்டு கல்லு வெச்சு தேச்சு தேச்சுத்தான் நெருப்பு மூட்டணும். நெருப்பெட்டி, லைட்டரெல்லாம் கூடவே கூடாது.யாருக்காவது ஏதாவது தகவல் அனுப்பனும்னா இ-மெயில்லாம் யூஸ் பண்ண கூடாது. உங்களோட தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் பில்கேட்சோ,சோனியாவோ இல்லை ஒபாமாவோ அல்லது உங்கள் எதிரிகளோ படித்துவிடக்கூடும். லெட்டர் போடலாமான்னு கேக்க கூடாது. அதுவும் அரசாங்க துறைதான். போஸ்ட்மேனே கூட உங்க லெட்டரை படிச்சுட்டு பக்கத்து வீட்டு அலமேலுவிடம் போட்டு கொடுத்து விடலாம். லெட்டர், இ-மெயிலுக்கே இந்த கதின்னாக்கா ஃபோன், செல்ஃபோன் பத்தியெல்லாம் கேக்கவே கேக்காதீங்க.டேப்பிங் பண்ணி ஒட்டு கேட்டுருவாங்க. ஆகவே ஆளுக்கு ஒரு புறா வளக்கலாம். அதோட கால்ல எழுத்தாணில எழுதின ஓலைச்சுவடிய கட்டி அனுப்பலாம்.

ஜீன்ஸ் பேண்ட், பெர்முடாஸ், டீ ஷர்ட், ஜாக்கி அண்டர்வேர், ஆனந்த் பனியன், ஷார்ட் சுடி, பாட்டியாலா பாட்டம் என்று அலைபவர்களா நீங்கள். எல்லாத்தையும் கழட்டி தூக்கி எறிஞ்சுட்டு இலை தழை எல்லாம் கட்டிக்கோங்க. அதுவும் கஷ்டமா இருந்தா ஆதாம் ஏவாள் மாதிரி நங்காவா வேண்ணாலும் அலையலாம். பூச்சி கீச்சி கடிக்காமயாவது இருக்கும்.

இப்படியெல்லாம் யாராவது சொன்னா எவ்வளவு டென்ஷன் ஆவீங்க? எந்த துறையாக இருந்தாலும் புதிய டெக்னாலஜிகள் வரும்போது சில குறைகள் இருக்கக்கூடும். அந்த குறைகளை களைந்தோ அல்லது தகுந்த முன்னேற்பாடுகளுடனோ பயன்படுத்தி அதை நாள்பட மெருகேற்றி பயன்படுத்த வேண்டும். அதை விடுதது எங்கோ ஒரு கேஸ் ஸ்டவ் வெடித்தால் இனிமேல் விறகில் சமைப்பதுதான் சிறநதது என்பதோ, எங்கோ ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டால் விமானப்பயணமே கூடாது,தோணி ஏறிதான் சிங்கப்பூர் போவேன் என்பதோ முட்டாள்தனம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு அளவுகளில் பயனபடுத்தப்பட்டு கடந்த இருமுறைகளாக பாராளமன்ற தேர்தல்களில் முழுஅளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால் மிகப்பெரிய அளவில் பொருள் மற்றும் காலவிரயம் தவிர்க்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வன்முறைகளோ முறைகேடுகளோ நடக்காமல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நடந்தேறி வருகிறது.வாககு எண்ணிக்கை மட்டுமே 3 நாட்களுக்கு நடப்பதும் ப்ராணாய் ராய், ரபி பெர்னார்ட், வீரபாண்டியன், மாலன் போன்றவர்களெல்லாம் மூன்று ஷிஃப்ட் ஒவர்டைம் பார்த்து பரிதாபமாக தோற்றுக் கொண்டிருக்கும் கட்சி தலைவர்களை தொலைக்காட்சியில் ரேக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.

இதெல்லாம் இப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையை பெறமுடியாத தலைவர்களும் கட்சிகளும் இப்போது இந்த மின்னனு வாக்கு இயந்திரத்தினால் முறைகேடுகள் நடப்பதாகவும் திரும்பவும் வாக்கு சீட்டு முறைக்கு போகவேண்டும் என்றும் கூறி வருவது கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

தன் மேல் உள்ள குற்றச்சாட்டு நீங்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சமீபத்திய தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்கட்சி தலைவர் பதவியை துறப்பதாக கூறியது போன்ற விஷயங்களால் நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த எல்.கே.அத்வானி போன்ற தலைவரிடமிடருந்து இத்தகைய கருத்து வந்திருப்பது என்னை பெரிதும் அதிர்சசிக்கு உள்ளாக்கியிருக்கிறது.இவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், ராம் விலாஸ் பாஸ்வான், லல்லு போன்ற தலைவர்களும் கூறிவரும் இதே போன்ற கருத்துகளை தேர்தல் கமிஷன் செவிமடுக்காமல் இருத்தல் சாலச்சிறந்தது.

ஹ்ம்ம்ம்... பார்ப்போம்.

Monday, July 6, 2009

முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)

தொடர்புடைய முந்தைய இடுகைகள்
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

"சார், ஆட்டோ வேணுமா சார்?"

"ஆமாப்பா, ஆனா ஒரு ஆட்டோ போதாது, லக்கேஜ் நெறய இருக்கே. இன்னோரு ஆட்டோவும் கூப்புடுங்க"

"வேணாம் சார்,அட்ஜஸ்ட் பண்ணி போயிரலாம். லக்கேஜ்லாம் நான் உள்ற வைக்கிறேன்"

திருச்சி கே.கே. நகர் போவதற்கு டி.வி.எஸ் டோல்ககேட்டில் இறங்குவதற்கு பதிலாக, பால்பண்ணையிலேயே தவறாக இறங்கியபின், எங்களை வரவேற்ற ஆட்டோகாரருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷனைதான் மேலே.

லக்கேஜையெல்லம் நன்றாக வைத்துவிட்டு, எங்களையெல்லாம் நடுவில் திணித்து ஒரு வழியாக கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிட்டார்.

மறுநாள், சேலத்தில் உறவினர் திருமணத்திற்கு போக வேண்டியிருந்தது. நாலில் மூணு பெட்டி முழுக்க மனைவியின் துணிமணிகள் இருந்தாலும், கீழ் வரும் வசனத்தால் முதல் நாளே ஷாப்பிங் கிளம்பி விட்டோம்.

"ஏங்க கல்யாணத்துக்கு போட நல்ல ட்ரெஸ்ஸே இல்லீங்க, முதல்ல போய் ரெண்டு செட் வாங்கணும்"

திருச்சியில் துணி வாங்கும் சீசன் இல்லை போலும். சென்னை சில்க்ஸ், ஆனந்தா போன்ற பெரிய கடைகளில் கூட ஈ ஓட்டிக்கொண்டு ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு விற்பனை பிரதிநிதிகள் வீதம் துரத்தி கொண்டிருந்தார்கள்.

வெரைட்டிகளும் அதிகம் இல்லை. ஆனால் விலை மட்டும் அசுர விலையாக இருந்தது. அஞ்சு லிட்டர் தண்ணீரும், 2 லிட்டர் ஜூஸும் குடித்து பத்து கடைகள் ஏறி இறங்கிய பின் நகோடா மற்றும் சிவத்தில் பர்சேஸை முடித்து வீடு திரும்பினோம்.

அண்ணன் மற்றும் அக்கா குடும்பத்தினருடன் மறுநாள் சேலம் பயணம். நீண்ட நாட்களாக விட்டுப்போன குடும்ப விஷயங்களயெல்லாம் கேட்ச் அப் செய்வதற்கு இந்த 4 மணிநேர பயணம் உதவியது.

சென்னை திருச்சியை போலவே திருச்சி சேலம் சாலைகளும் மிக நன்றாகவே போட்டு விட்டார்கள். இங்கும் பால வேலைகள் மட்டுமே பெண்டிங்.

முன்பெல்லாம் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் எக்கச்சக்கமாக கோழிப்பண்ணைகள்தான் வரும். இப்போது கோழிப்பண்ணைகளுடன் கூடவே ஏராளமாக பள்ளிகளும் தென்படுகின்றன.இந்த மாவட்டததின் முக்கிய தொழிலாக முட்டைகளுடன் கல்வியும் சேர்ந்துவிட்டது. என்ன ஒரு வித்தியாசம் பண்ணைகளில் முட்டைக்காக உழைக்கிறார்கள்.
பள்ளிகளில் முட்டை வாங்காமல் இருக்க உழைக்கிறார்கள். இந்த பள்ளிகளில் இருந்து பல மாணவர்களும் மாநில அளவில் ரேங்க் வாங்குவதால் அட்மிஷனுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

திருமணத்தில் பலப்பல வருடங்களாக பார்க்காத சொந்தங்களையெல்லாம் காணும் பாக்கியம் கிடைத்தது. பழுத்த பழங்களாக இருக்கும் முந்தைய தலைமுறையினரையும், தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அடுத்த தலைமுறையினரையும் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

திருச்சியில் தென்னூர் மற்றும் பாலக்கரை மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்க உதவியிருக்கிறது. மத்திய பேருந்து நிலையத்தையும் நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.

அடுத்த 3 நாட்களும் 4 வேளை சாப்பாடும் தூக்கமுமாக சுகமாக கழிந்தது. வரப்போகும் நீண்ட சுற்றுலாவுக்கு இந்த ஒய்வு எவ்வளவு உதவியது என்பது பின்னர்தான் புரிந்தது.

Thursday, July 2, 2009

மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)

தொடர்புடைய முந்தைய இடுகை "இந்தியா ஒளிர்கிறது (அ)"

சிங்கை --> சென்னை

பாதிக்கு பாதி விலைக்கு டிக்கட் தருகிறார்கள் புலி மார்க் விமானத்தில் என்று 3 மாதம் முன்பே வாங்கியாகிவிட்டது. ஆனால் தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டார்கள், லக்கேஜும் ஒருவருக்கு பதினைந்து கிலோதான்.

எத்தனையோ முறை வீட்டிலேயே எடை போட்டு பார்த்து சென்றாலும் செக் இன் சமயத்தில் சப்பை மூக்கு காரிகள் பார்க்கும்போது அரை கிலோ ஒரு கிலோ அதிமாகவே காட்டுகிறது.

பெண்களுக்கு ஒரு கைப்பை இலவசமாக எடுத்து செல்லலாம்.அதிகப்படி லக்கேஜையெல்லாம் ஒரு மத்தள சைஸ் பையில் போட்டு தன் தோளில் மாட்டிக் கொண்டு "ம்ம்... இப்ப எடை போடுங்க.. பார்க்கலாம்" என்றாள் என் மனைவி. சப்பை மூக்கி மேலும் கீழுமாக "பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு ஏத்த ஆளுதான்" என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு போர்டிங் பாஸை போட்டு கொடுத்து விட்டாள்.

இரவு 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 8:15 ஆகியும் கிளம்பும் அறிகுறியே காணவில்லை. புதிதாக யாரும் ஏறுகிற மாதிரியும் தெரியவில்லை. 08:30 க்கு பைலட்டிடமிருந்து ஒரு அறிவிப்பு. "செக் இன் செய்த பயணிகள் சிலர் இன்னமும் விமானத்திற்கு வந்து சேரவில்லை,எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்" என்று.

9 மணி சுமாருக்கு 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் கை நிறைய மெக்-டொனால்ட்ஸ் பைகளுடன் வந்து சேர்ந்தனர். "ஒம்பது மணிக்கி ப்ளைட்டின்னு நெனச்சி சாப்பாட்டு கடையில ஒக்காந்திட்டம்" என்று பல் குத்திக்கொண்டே விளக்கம் வேறு.

09.30 மணிக்கு போய் சேர்ந்துவிட்டால், ஓண்ணரை மணி நேர இடை வெளியில் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸை தாம்பரத்தில் பிடித்துவிடலாம் என்று முன்பதிவு செய்து வைத்திருந்த என் திட்டம் பனால்!!! என்று சிம்பாலிக்காக சிக்கன் ஏப்பம் விட்டு காண்பித்தார் மெக்-டொனால்ட் குடும்ப பெரிசு ஒருத்தர்.

சென்னையில் இறங்கி வெளியே வந்தால் முகமூடி அணிந்து கொண்டு ஏகப்பட்ட பேர் நிற்கவும், "போச்சுறா, இப்பல்லாம் விமான நிலையத்தையே ஹைஜாக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க போல" எனறு பயத்துடன் சொன்னேன். பையன்தான் " இல்லப்பா, ஸ்வைன் ஃப்ளூவுக்காக செக் பண்றாங்க" என்று தைரியமூட்டினான். இந்த பார்மாலிட்டியெல்லாம் முடித்து வெளியில் வர பதினோரு மணியே ஆகிவிட்டது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த டாக்ஸி ட்ரைவர் காத்து கொண்டிருந்ததார்.

"தாம்பரத்துல ஆம்னி பஸ்லாம் நி்க்கற எடத்துக்கு போங்க, ஏதாவது பஸ்ஸ புடிச்சு போயிர்றோம்" என்றேன்.

போகிற வழியில் RR travels - A/C Volvo வை ஒவர் டேக்கி நிறுத்தி, ட்ரைவர் போய் இடம் இருக்கிறதா என்று கேட்டு ஓடி வந்து "சீட்டு இருக்கு சார், வாங்க" என்றார்.

"சின்ன லக்கேஜையெல்லாமும் பின்னாடியே போட்ருங்க சார், பஸ்ல ஒக்காற மட்டும்தான் எடம் இருக்கு" என்று பஸ் ட்ரைவர் சொல்லவும் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான் தெரிந்தது ட்ரைவர் கேபினில்தான் உட்கார்ந்து வர வேண்டும் என்பது. (அதுக்கும் ஆளுக்கு 400 ரூபாயாம் - எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்கப்பா..)

திரும்பவும் அத்தனை லக்கேஜையும் கீழிறக்கி,வேறு பஸ்ஸை பிடித்து வந்தது ஒரு பெரிய கதை.

சென்ற முறை திண்டிவனம் வரை மட்டுமே இருந்த 4 வழி சாலை இப்போது திருச்சி வரையிலும் போட்டாகிவிட்டது. நல்ல தரத்துடன் அற்புதமாகவே இருக்கிறது. இடை இடையே பாலங்களுக்கான வேலை நடைபெறுவதால் தடங்கல்கள் இருந்தாலும், பயணம் சுகமாகவே இருக்கிறது. பாலங்களும் முடிந்து விட்டால் உலகத்தரமான சாலைகளாக இருக்கும் என்பது திண்ணம்.
அந்த ஐந்து பேரால் எனக்கு 2000 ரூபாய், 5 மணி நேரம் மற்றும் ஒரு நாள் தூக்கமும் வீண். மற்ற 150 பயணிகளும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார்களோ பாவம்.

பி.கு:- பயணத்தின்போதே எழுத வண்டும் என்று நினத்தேன். மடிக்கணிணி மக்கர் செய்துவிட முடியாமல் போய்விட்டது. சிங்கப்பூர் திரும்பி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. தில்லி, ஆக்ரா, சிம்லா, மனாலி பயண அனுபவங்களும், புகைப்படங்களும் வரும் இடுகைகளில் தொடரக்கூடும்.