Friday, December 11, 2009

நான் AND ஜெர்ரி

(மு.கு. இந்த பதிவு ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையை விவரிப்பதால் 18 வயசுக்கு குறைவானவர்கள் பெற்றோர் துணையுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)

"என்னங்க.. என்னங்க.." என்று தன் எட்டு கட்டை ஸ்தாயியில் விளித்துக் கொண்டே வந்தாள் என் பத்தினி.

நான் வழக்கம் போல், பக்கத்தில் வரவிட்டு காது செவிப்பறை கிழியும் அபாயத்திற்கு சற்று முந்தைய என்னங்கவிற்கு...

"கூப்டியா?, சொல்லு என்ன விஷயம்", என்றேன்.

"வடை வேணும்னா, கேக்க கூடாதா? நானே தந்துட்டு போறேன். அதுக்காக இப்படித்தான் பிச்சு பிச்சு தின்னுப்புட்டு, கிச்சன் பூரா இறைச்சு வெக்கிறதா..."

"எது?, காலைல உங்களுக்கு புடிக்குமேன்னு செஞ்சேன்னு சொல்லி ஆசையா குடுத்தியே அதுவா?" ("காலைல சூடா இருக்கும்போதே, நீ திட்டுவியேன்னுதான் தொண்டை அடச்சாலும் பரவால்லேன்னு நாலு தின்னேன். அதையா திரும்பவும் சாப்ட்டியான்னு கேக்கறே?")

"ஆமா.. சாப்டீங்களா இல்ல கடிச்சு துப்பினீங்களா? யார் இதெல்லாம் க்ளீன் பண்றது?"

"என்னப்பா சொல்ற, நான் கம்ப்யூட்டர வுட்டு ஏந்திரிக்கவே இல்லியே..."

"அப்ப அந்த பய வேலையா இருக்குமோ? அவன் காலையிலியே ஒண்ணு போதும்னுட்டானே...(ஹ்ம்ம்ம்... அவனுக்கு விவரம் ஜாஸ்தி) என்று புத்திர சிகாமணியை திட்டி கொண்டே வேலையை பார்க்க போய் விட்டாள்."

அடுத்த நாள்... நான் குளியலறையிலிருந்து, "ராஜீஈஈஈஈ......."

"என்னங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?" என்று ஆவலாய் பார்க்க ஒடி வந்தாள்.

"நேத்துதான் புது சோப்பு எடுத்து போட்டேன் அதுக்குள்ள காணுமே, எங்க?"

"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் ஒரு வேளை, புதுசா சேந்த லேடி மேனேஜர் முன்னாடி பளிச்சுனு தெரியணும்கறத்துக்காக முழு சோப்பையும் ஒரே நாள்ள தேச்சு காலி பண்ணீட்டீங்களோ என்னமோ.." என்றாள்.

என் முறைக்கும் பாவனையை (பின்ன நெசமாவா முறைக்க முடியும்) கண்டு, "சரி.. சரி.. புது சோப்பு தரேன் குளிச்சிட்டு வந்து உங்க மோப்ப சக்தியெல்லாம் வெச்சு துப்பறியுங்க" என்று சோப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

குளித்துவிட்டு வந்து அலமாரியில் பார்த்தால் தேங்காய் எண்ணெய் பாட்டில்(ப்ளாஸ்டிக்) கவிழ்ந்து அத்தனை எண்ணையும் கொட்டி கிடந்தது.பாட்டிலை எடுத்து பார்த்தால் மூடி டைட்டாகதான் இருந்தது, ஆனால் அடியில் சூடு பட்டது போல ஒட்டை.

"ஆஹா... நம்மளை மீறிய ஒரு அமானுஷ்ய சக்தி வீட்டுக்குள்ள இருக்குடா" என்று லேசாக புரியத் துவங்கியது.

சாயங்காலம் என் மனைவி "குழி பணியாரம் செய்யலாம்ணு இருக்கேன், மேல அட்டத்துல இருக்கற சட்டிய கொஞ்சம் எடுத்துக்கொடுங்க" என்றாள்.

முந்தின தடவை பணியாரம் என்று செய்த வஸ்து ஞாபகத்தில் வந்து பயமுறுத்தினாலும் வேறு வழியில்லாமல் ஸ்டூலை போட்டு எக்கி எடுக்கும்போது......

4x2 இன்ச் சைஸில் பந்து போன்று ஏதோ ஒன்று என் தோளுக்கு மேல் பறந்தது போல் தோன்றியது.

அடுத்த வினாடி, "வீஈஈஈஈஈல்".....சூப்பர் சிங்கர் வெஸ்டெர்ன் மியூசிக் சுற்றில் ராகினி ஸ்ரீ உச்ச குரலில் கத்தினாரே அது போன்ற ஒரு சத்தம் என் மனைவியிடமிருந்து... (சம்பவம் பழசு, உவமை மட்டும்தான் புதுசு...)

நானும் திகிலடைந்து சட்டி வேறு, நான் வேறாக விழுந்தேன்.

"எலிங்க... பெரிய எலி..." என்று வீஈஈலுக்கு விளக்கமளித்தாள்.

விழுந்தவாக்கில் விட்டத்தை பார்த்து யோசித்ததில் வடை, சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த அமானுஷ்யம் என்று அனைத்திற்கும் விடை கிடைத்தது.

மேலே ஏறி திரும்பவும் பார்த்ததில்.. காணாம போன சோப்பு, ஒரு பாதி வெங்காய துண்டு (அய்... நான் போன வாரம் தோச கல்லு துடைக்க வெச்சிருந்தத காணோம்னு தேடினேன்-மனைவி), தேங்காய் பத்தை, என் பழைய அண்டர்வேர் என்று ஒரு பெரிய கொள்முதல் கிடங்கே இருந்தது.கையோடு அட்டம் முழுவதையும் சுத்தம் செய்து வைத்தோம்.

சரிதான் ஒடிப்போயிடுச்சே, இனிமே வராதுன்னு நெனைச்சா நாளொரு பொருள் காணாமல் போவதும் பொழுதொரு சாமானை வீணடிப்பதுமாக எலியாரின் திருவிளையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

உச்ச கட்டமாக, ஆசையோடு நான் 5ம் பிறந்தநாளுக்கு (கல்யாணத்துக்கு பிறகு) வாங்கி கொடுத்த காட்டன் நைட்டியை அவர் குதறி வைக்கவும், என் பாரியாள் காளியாக மாறி ஒரு எலி பிரச்னையை சால்வ் பண்ணத் தெரியல நீயெல்லாம் ஒரு...ஒரு.... இஞ்சினியரா என்ற அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டாள்.

என் இஞ்சினியரிங் சிலபஸ்சில் இது இல்லாத காரணத்தாலும், முன் அனுபவம் இல்லாத குறையாலும் என் அலுவலக/வெளி நண்பர்களிடம் யாரவது எலி பி(அ)டிக்கும் நிபுணர்கள் உண்டா என்று விசாரித்தேன்.அவர்கள் யோசனைப்படி முதலாவதாக...

பொறியில் வடை வைத்து பார்த்ததில் சீந்தவேயில்லை. சரி நம்ம வீட்டு வடை டேஸ்டு அதுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுனால சாப்புடலன்னு நெனைச்சு, பக்கத்துல இருக்கற டீக்கடைலேருந்து ஒரு மசால் வடை வாங்கி பாதியை பையனுக்கு கொடுத்துவிட்டு (அப்பா.. நல்லா இருக்குப்பா...) மீதியை பொறியிலும் வைத்தேன்.அதுக்கும் அது ஏமாறவில்லை.

இரண்டவதாக, எலி பாஷாணத்தை பல விதங்களிலும் ட்ரை பண்ணியதிலும் தோல்விக்காயை(வெற்றிக்கனிக்கு எதிர்ப்பதம்)த்தான் சந்தித்தேன்.

மூன்றாவதாக சொன்ன பூனை வளர்ப்புக்கு என் மனம் ஒப்பவில்லை.

எலியாரின் அழிச்சாட்டியம் ஷூ,சாக்ஸ், பாய், போர்வை,கம்ப்யூட்டர் வயர் என்று வளர்ந்துகொண்டே போக,அவரை என் பரம வைரி லிஸ்டில் சீனியர் மோஸ்ட் பொசிஷனுக்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் பையனுக்கு பள்ளி விடுமுறை வரவும் பத்து நாள் பேச்சிலர் (அய்யா... ஜாலி...) வாழ்க்கை. ஒரு நாள் இரவு எட்டு மணி போல பரோட்டா பொட்டலமும், பீர் பாட்டிலுமாக வீட்டுக்குள் நுழைந்து விளக்கை போட்டதும், எலியார், ஹாலிலிருந்து உள் அறைக்கு ஒடியதை பார்த்தேன்.உடனடியாக மனதிற்குள் ஒரு மாஸ்டர் ப்ளான் உருவானது.

ரூமுக்குள் நுழைந்து ஜன்னல் கதவு எல்லாவற்றையும் மூடி விட்டேன்.ரூமில் இருக்கும் அத்தனை பொருளையும் ஜாக்கிரதையாக திரட்டி கதவுக்கு வெளியே வைத்தேன்.

அந்த அறையில் அலமாரிக்கு மேல் அந்த கால மர்ஃபி வால்வ் ரேடியோ ஒன்று உண்டு. என் தநதை (ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணிணா பிபிசி டைரெக்டா ரிசீவ் பண்ணும் - என் அப்பா) வழி சொத்து அது.விஜய் மல்லையா போன்றவர்கள் பிற்காலத்தில் ஏலத்தில் கேட்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி பத்திரமாக வைத்திருந்தேன்.

ஒரு ஆளாக இந்த ரேடியோவை இறக்க முடியாது என்பதால் அதுவும், கொஞ்சூண்டு தெர்மோகோலும்தான் அறைக்குள் மீதி இருந்தது. நம்ம ஹீரோ நிச்சயமா ரேடியொவுக்குள்ளதான் ஒளிந்திருக்க வாய்ப்பிருந்தது.

வெளியே வந்து கதவை இருக்க மூடி தாள் போட்டு, அடியில் இருந்த கொஞ்சம் இடைவெளியையும் அட்டை, செங்கல் என்று பலவற்றையும் கொண்டு மூடிவிட்டேன்.

மூன்று நாளுக்கு கதவை திறக்கவேயில்லை. நாலாம் நாள்
மெ....................து........................வா.......................க
கதவை திறந்தால் அறை முழுவதும் தெர்மோகோல் குப்பை. சிறிது நேரம் அமைதியாக வெய்ட் பண்ணி ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து பார்த்தால் ஒரு மூலையில் நம் எதிரி ஒருக்களித்து படுத்திருந்தார்.

கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு கொடுத்த குடையை வைத்து தூஊஊஊஊஊரத்தில் நின்று கொண்டு தரையில் நாலு தடவை டொக்கினேன்.எலியாரின் வால் மட்டும் லேசாக ஆடியது. அப்படியே ஜகா வாங்கி திரும்பவும் கதவை மூடி... அட்டை, செங்கல்,இத்யாதி சடங்குகளையும் பொறுப்பாய் செய்தேன்.

அடுத்த நாளும் குடை.. டொக்.டொக்..டொக்...

ஆனால் நம்ம ஹீரோவிடம் சலனம் துளியும் இல்லை. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பைக்குள் குடைக்கம்பியால் அவரை உள்ளே தள்ளி முடிச்சு போட்டு அரை கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் எறிந்துவிட்டு ஒரு குரூர புன்னகையுடன் வீடு திரும்பினேன்.

வெற்றிக்களிப்பை சகதர்மினிக்கு ஃபோன் போட்டு பகிர்ந்து கொண்டு அவருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றேன்.

ஆனாலும் ஒவ்வொரு முறை "மூஷிக வாஹன மோதக ஹஸ்த" என்று பிள்ளையாருக்கு ஸ்லோகம் சொல்லும்போதும் லேசாக குற்ற உணர்ச்சி எட்டி பார்ப்பது என்னவோ உண்மை.

நீதி 1: எலிகளுக்கு தெர்மோகோல் உகந்த உணவு இல்லை.

நீதி 2: எலிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாள் வரை உயிரோடு இருக்கும்.

13 comments:

Prabhu said...

எதுவும் ரிப்பீட்டா?

அறிவிலி said...

ஆமாங்க பப்பு, மீள் பதிவ கண்டுபிடிக்கற அளவுக்கு யாரும் படிக்கறாங்களான்னு கண்டுபிடிக்கத்தான் போட்டேன்,பரவாயில்ல மனசுக்கு தெம்பா இருக்கு.

Thamira said...

என்னதான் சுவாரசியம், காமெடியாக போய்க்கொண்டிருந்தாலும் இறுதியில் கொஞ்சம் சோகம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. :-(

இராகவன் நைஜிரியா said...

எனக்கு இந்த கதையை முன்பு படித்த ஞாபகம் இல்லீங்க.

ரொம்ப நல்லாயிருக்கு.

மந்திரன் said...

இது ஆனந்த விகடனில் வந்த உங்கள் கதையா ?

அறிவிலி said...

ஆதி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராகவன் - நன்றி ராகவன்

மந்திரன் - விகடன்லயா... என்னய வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே... யூத் விகடன்ல வந்துதுங்க.

Mahesh said...

ஹய்யோ... நீங்க இவ்வளவு பெரிய மர்டரரா? நினைக்கவே குலை நடுங்குது... எம்முதுகுத்தண்டுல சில்லுங்குது....

R. Jagannathan said...

I wanted to read your older postings and read the above just now. As I had written earlier, you have a gift for writing humourously. Best wishes, - R. Jagannathan

அறிவிலி said...

//Mahesh said...
ஹய்யோ... நீங்க இவ்வளவு பெரிய மர்டரரா? நினைக்கவே குலை நடுங்குது... எம்முதுகுத்தண்டுல சில்லுங்குது....//

அந்த பயம்.

அறிவிலி said...

//Jagannathan said...
I wanted to read your older postings and read the above just now. As I had written earlier, you have a gift for writing humourously. Best wishes, - R. Jagannathan//

Your comments are really encouraging... thank you so much.

கடுகு போன்றவர்களை பாராட்டிய அதே கீ போர்டால என்னையும் பாராட்டாதீங்க, ரொம்ப கூச்சமா இருக்கு.

கொங்கு நாடோடி said...

முன்பு இதே கதை வேறு ஒரு நடையில் ஒரு சிறுகதை தொகுப்பில் படித்து இருக்கிறேன், அதனை ஸ்கேன் சித்து அனுப்பவா?

இது சுட்ட கதையா? இல்லை நிங்கள் அதே எழுத்தாளரா?

அறிவிலி said...

@Jay,

முதலில் ஒரு விஷயம். இது கதை அல்ல. சொந்த அனுபவம்.அதில் வரும் பெயர்கள் கூட நிஜப் பெயர்கள்.

இந்த கட்டுரை ஒரு மீள் பதிவு. நானே சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் இதே தளத்தில் பதிவிட்டது. அப்போது இதனை யூத் விகடன் இணைய தளத்திலும் வெள்யிட்டார்கள்.

நீங்கள் சொல்வது போல் சிறுகதை தொகுப்பில் வந்திருந்தால் நிச்சயம் ஸ்கேன் செய்து அனுப்பவும்.
காப்பி ரைட், டீ ரைட்னு ஏதாவ்து
கேஸ் போட முடிய்மான்னு பாக்கலாம்。 :-))))

என் மின்னஞ்சல் முகவரி - lalgudirajesh@gmail.com

Thangaraj said...

நல்லா இருக்கு சார்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.