Tuesday, January 12, 2010

"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"


ஃபோன் அடிக்கிறது,.. "ம்... சொல்லுப்பா, என்ன விஷயம்."

"ஓண்ணும் விஷயம் இல்ல, சும்மாதான் ஃபோன் பண்ணிணேன், சாப்டாச்சா???"

"ம்.. ஆச்சு.."

"என்ன சாப்பாடு"

"என்னத்த பெரிய சாப்பாடு, வழக்கம் போல கேண்டீன்ல மலாய்க்காரி என்னத்த வடிச்சு கொட்றாளோ திங்க வேண்டியதுதான்."

"சாயங்காலம் எத்தன மணிக்கு வருவீங்க?"

"அத சாயங்காலம் கெளம்பறதுக்கு முன்னாடிதான் சொல்ல முடியும். நாலு மணி ஆனாத்தான் நெறய பேருக்க்கு என் ஞாபகமே வருது"

"சரி, நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?"

"உன்னால என்ன முடியுமோ அத செய்."

"பாவம்பா நீங்க, ஒரு வேளைதான் வீட்ல சாப்புடறீங்க. சாம்பார், ரசம் வெச்சு, பீன்ஸ் பொரியல் பண்ணிறட்டுமா?"

"ம்.. ஓகே."

"வெச்சிறட்டுமா, வேற ஒண்ணும் இல்ல."

"ம்.. சரி."
**************************

"சொல்லுப்பா?"

"ஓண்ணும் இல்ல, பீன்ஸ் ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து பாத்தேன், ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, வேற ஏதாவது பண்ணட்டுமா?"

"ம், பண்ணேன்".

"வெண்டைக்காய் மட்டுந்தான் இருக்கு, ஆனா அது உங்களுக்கு புடிக்காது".

"ம்."

"வெண்டைக்காய் கறி பண்ணி அப்பளம் பொரிச்சிரட்டுமா?"

"ம். சரி."

"வெச்சிர்றேன், வேற ஒண்ணும் இல்ல."

**************************

"ம்... சொல்லு, என்ன விஷயம்?"

"அரைச்சு விட்ட சாம்பாருக்கு, தேங்காய் இல்ல. வெறும் சாம்பார், முருங்கைக்காய் போட்டு பண்ணிரட்டுமா?"

"வத்தக் குழம்பு வேண்ணா வெச்சிறேன்".

"ஆமா, எப்ப பாத்தாலும் வத்தக் குழம்புதான் உங்களுக்கு. உடம்புக்கு கெடுதல். நான் வெறும் சாம்பாரே வைக்கறேன்."

"ம். சரி செய்."

"வெச்சிர்றேன், அப்பறமா பேசலாம்."

**************************

பாஸுக்கு பாஸ் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, அடி வயித்துல சும்மா கிர்ருங்க...
வைப்ரேஷன் மோடில் இருந்த போனை எடுத்து கிசுகிசுப்பாக...

"என்ன?"

"ஹலோ... ஹலோ... ஹலோ..."

சத்தமாக, " என்ன வேணும் சீக்கிரமா சொல்லு?"

"இல்ல, பேசாம இட்லி வெச்சு சாம்பார் பண்ணிரட்டுமா?, எனக்கும் டிஃபன் சாப்புடணும் போல இருக்கு."

"பேசிட்டோ, பேசாமயோ என்னத்தயாவது பண்ணு. என்ன ஆள விடு. எதுத்தாப்புல இருக்கற கடங்காரன் பாஷை புரியலன்னாலும் உத்து கேட்டுகிட்டு இருக்கான்."

**************************

வீட்டுக்குள் நுழைந்ததும், "போய் ஒரு குளியல போட்டுட்டு வாங்க, சூப்பரா தோசை சாப்டலாம்."

"தோசையா???? ஏன்?

"மாவு சரியா பொங்கல, இட்லி நல்லா வராது. அதான்"

"தொட்டுக்க என்ன?"

"சாம்பார் பண்ணலாம்னுதான் பாத்தேன். ஆனா ஃப்ரிட்ஜ்ல நேத்து வெங்காய சட்னி கொஞ்சம் இருக்கு, அதுவும் மொளகா பொடியுமா தொட்டு சாப்ட்றலாம்னு விட்டுட்டேன்.“

"ம்... சரி."

**************************

டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த பின், " எங்க சட்னிய காணோம்?"

"உங்க புள்ள, நல்லா இருக்குன்னு அத்தனையும் காலி பண்ணிட்டான், கோச்சுக்காம மொளகாப்பொடிய தொட்டுண்டு சாப்புடுங்க. கடைசில சூப்பரா மோர் கரைச்சு தரேன்,குடிங்க......உடம்புக்கு நல்லது.






**************************



டிவியில் ஏதோ ஒரு சேனலில் பாட்டு பார்த்துவிட்டு, அதே எஃபெக்டோடு கிச்சனுக்கு போய்,
"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"

"ம்ம்ம்... குப்பைதொட்டி..."

"கரெக்டுதான், நீ சமைக்கறதையெல்லாம் உள்ள போடற எடத்த அப்பிடித்தான் சொல்லனும்."



டிஸ்கி : இது ஒரு கலப்படம் மிகுந்த கற்பனையான உரையாடல் மட்டுமே.

27 comments:

நட்புடன் ஜமால் said...

கற்பனை --- நம்பனும் ஹூம் ...

vinu said...

ha haa haaa haaa haaaa .. real story

சுடுதண்ணி said...

அருமை.. மிகவும் ரசித்தேன் :)

அறிவிலி said...

வாங்க ஜமால்... ந்ம்ப மாட்டீங்களே...

அறிவிலி said...

//vinu said...
ha haa haaa haaa haaaa .. real story//

சிரிச்சதுக்கு நன்றி... ஆனா சொல்றத நம்பனும்.

அறிவிலி said...

@சுடுதண்ணி - நன்றி

Mahesh said...

ம்ம்ம்... உங்களுக்காவது தோசை வார்த்து மிளகாப்பொடியோட... லக்சுரி..... மோர் வேற.... இதுவும் சொல்வீங்க... இன்னமும் சொல்வீங்க... வீங்கும்போது தெரியும் :))

அறிவிலி said...

@Mahesh

போச்சுரா... அதுலயும் கண்ணு போட்டீங்களா? இனி அதுவும் கிடைக்காது. :))))

Anonymous said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
என் கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் எழுதப்பட்டது 1980-ல்.
அவ்வப்போது உங்கள் வலைக்கு விஜயம் செய்யப் போகிறேன்.
- கடுகு

அறிவிலி said...

//Anonymous said...
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
என் கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் எழுதப்பட்டது 1980-ல்.
அவ்வப்போது உங்கள் வலைக்கு விஜயம் செய்யப் போகிறேன்.
- கடுகு//

தன்யனானேன்...தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, கடுகு அவர்களே.ஹ்ம்ம்ம்... அந்த காலத்துல இருந்தே இந்த பிரச்னைகள் தொடர்ந்துகிட்டுருக்கு :-))).

பி.கு. அடுத்த முறை வரும்போது உங்க Blogger id யில வந்தீங்கன்னா எனக்கும் "நானும் கடுகும்" அப்படின்னு ஒரு போஸ்ட் போட உதவியா இருக்கும். :-))))

வலசு - வேலணை said...

அனுபவிச்சு எழுதினது போல இருக்கே. :-)

R. Jagannathan said...

It is a boon to be a specialist in humour. I did enjoy the article after Srimaan Kadugu referred it again in his response to me. I note the Sri Kadugu himself has evinced interest in visiting your site in the future. I will follow as well. - R. Jagannathan

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா..
உங்க வீட்ல பரவாயில்லை..
சாப்பிட ஏதாவது கிடைக்குதே..

நாங்க கடைசியா , கடைக்குப் போயி சாப்பிடுவோம்..

மாதேவி said...

:))))))))))

அறிவிலி said...

@ஜகந்நாதன்- ஸ்பெஷலிஸ்ட்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

Unknown said...

சில உண்மைகள் சிரிக்க வைக்கின்றன...

அறிவிலி said...

வாங்க பட்டா பட்டி... அங்கியுமா????

@மாதேவி - வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி.

@பேநா மூடி - டிஸ்கியை மட்டும் யாருமே நம்பலை. :))))

goma said...

இல்லத்தரசிகளின் தர்மசங்கடமான சூழ்நிலையை அப்படியே புட்டு புட்டு வறுத்தெடுத்து தாளிச்சுகோட்டி பரிமாறி விட்டீகள்......சூப்பர் டின்னர்.
ஏ....வ்வ்வ்வ்வ்வ்...

ஒரு பீடா இல்லையா?

அப்பாவி தங்கமணி said...

இது ஞாயமே இல்ல கேட்டேளா, தினமும் உங்க ஆத்துக்காரி சமைக்காம தான் இப்படி தெம்பா ப்ளாக் எழுதறேளா? தினமும் என்ன சமைக்கறதுன்னு மண்டைய ஒடைச்சு பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு. நீங்களே ஐடியா குடுத்து பாருங்க உங்க ஆத்துக்காரி எப்படி கலக்கறானு (என்ன மாமி நான் சொல்றது?)

அறிவிலி said...

@goma

என்னா...து சூப்பர் டின்னரா???? நீங்களே சொல்லிக்கறதா??? எங்கூட்லயும் அப்படித்தான் தெனம் சொல்லிக்கிறாங்க்....

அறிவிலி said...

@ அப்பாவி தங்கமணி..


நான் ப்ளாக் எழுதி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு பாருங்க.... :-))

நீங்களே கேளுங்க மாமிகிட்ட நியாயத்த...

இலால்குடி பினாத்தல்கள said...

பீஷ்மர் கடுகே வந்துட்டாரா.பேஷ்!பேஷ்!இனிமே தாளிப்பு சத்தம் பலமா இருககும்.

பத்மா said...

ஹ்ம்ம் இப்போ கடுகு கத்தரிக்காய் படிக்கும் போது உங்களை தான் நெனச்சேன் . hats off to junior kadugu

அறிவிலி said...

@padma

வாங்க பத்மா.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. பொழுது போகாத நேரத்துல கிறுக்கிகிட்டு இருக்கேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

ரொம்ப தைரியம் தான் சாமி உங்களுக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குப்பைத் தொட்டின்னு பொதுவா சொல்லிட்டுப் போனா எப்படி?
மக்கின குப்பையை எங்க போடறது?
மக்காத குப்பயை எங்க போடறது ??


சாரி...கொஞ்சம் ஓவர் இல்ல ?

Senthil said...

அவசர கால நிகழ்வுகளில் ஒன்றை அருமையாக வரைந்திருக்கிறார் நண்பர். அருமையான வரிகளுடனான பாடல். சர்க்கரை இருந்தாலும் இல்லாவிடிலும் ஒருவரால் சாப்பிட முடியும். ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிடுவது முடியாத ஒரு காரியம், (சர்க்கரை/உப்பு வியாதிக்காரர்களை விட்டுவிடுங்கள்). தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை நாசூக்காக கேட்கின்ற வரிகள்!. கணவனை கடவுளாக நினைத்திருந்த காலம் போய், சமயலறையில் கிள்ளுக்கீரையாய் நினைக்கின்ற காலத்தில் இப்படி ஒரு பாடலையாவது கேட்கமுடிகிறதே என்பதில் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல்.

எவ்வளவோ கேள்விகள் கேட்டாலும் அவங்களுக்கு பிடித்ததை-தான் சமைகிறார்கள். இந்த கேள்விகள் எல்லாம் தங்களை சுற்றி அவர்கள் வரைந்துகுள்ளும் தற்காப்பு அரண்கள். கடைசியில் ஒன்று மட்டும் சொல்லிவிடுவார்கள், உங்களை கேட்டுத்தானே செய்தேன் என்று....நாமளும் தேவை இல்லாத பிரச்சினை எதற்கு என்று ஒரு பக்கமும், மலாய்கார அக்கா வெக்கிற பச்சபுளி, கத்தரிக்காய்க்கு, அம்மா அரைச்சி குடுத்துவிட்ட மிளகாய் பொடி எவ்வளவோ மேல் என்று இன்னொரு பக்கமும் நினைத்துகொள்ள வேண்டியது...ஒரு சிலர் அதிலும் கொஞ்சம் மேலே போய், உன் கையால பரிமாறின மிளகாய் பொடி கூட இனிப்பா இருக்கே எப்படி-ன்னு கேட்டு வைக்க வேண்டியது.....அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அச்சு வைகிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும்தான தெரியும் :-)

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.