Wednesday, February 25, 2009

அந்த(சா.மி.சா.) பார்வை

கோவணத்துணியிலிருந்து கோமேதக, வைர அட்டிகை வரை எதுவாக இருந்தாலும் திருச்சியில் வாங்குவதாக இருந்தால் இங்குதான் வரவேண்டும்.மிகப்பெரிய கடைகள் எல்லாம் இருக்கும் இதற்கு "சின்ன" கடை வீதி என்று பெயர்.

நகரத்தின் மிக முக்கிய வியாபார மையம்.சமீப வருடங்களில்தான் இந்த வீதியையும் தாண்டி திருச்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பல பெரிய வணிக வளாகங்களும் கடைகளும் வந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு தெருவின் முழு நீளத்தையும் தினம் இரண்டு முறை கடக்க வேண்டிய அவசியம் எனக்கு 5 வருடங்களுக்கு இருந்தது. திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ட்ரெயினில் வந்து இறங்கி செயின்ட் ஜோசஃப் பள்ளிக்கு நடைப்பயணம் 5 கிமீ. அந்த ஐந்து வருடங்களும் விதம் விதமான அனுபவங்கள்.

நம்ப ஊர்லதான் எல்லா பய புள்ளைகளுக்கும் பொறப்புல இருந்தே கிரிக்கெட் பயித்தியமாச்சே.
இபபல்லாம் டிவி கடை வாசல்ல கூடி நின்னு பாக்கறாங்க. 30 வருஷம் முன்னாடி ஏது டிவி?
ரேடியோ கமெண்டரிதான்.சாயங்காலம் நாலு மணிக்கு மேலே ஸ்கூல் விடற நேரத்துல தான் பெரும்பாலும் மேட்ச் விறுவிறுப்பான கட்டத்துல இருக்கும்.மேல சொன்ன தெருவுல இந்த நேரத்துல ஜனக்கூட்டம் எப்படி இருக்கும் என்பது உ.கை நெல்லிக்கனி.

எப்படி தினம் 1000 ஹிட்டுகளும், நூறு பின்னூட்டங்களும் இருக்குற பதிவுகளுக்கு நடுவுல நம்மளும் பதிவு வெச்சுருக்கோம்னு பேரு பண்ணிக்கிட்டு தனியா ஈ ஓட்டறோமோ, அதே மாதிரி இவ்வளவு பிஸியான தெருவுலயும் ரெண்டு மூணு கடையில கூட்டமே இல்லாம, யாராவது உள்ள நுழைஞ்சா,"இவன் ஏன் இங்கல்லாம் வரான்னு" சந்தேகப் பார்வையுடன் ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். இவர்களில் பலரும் (என் அதிர்ஷ்டத்துக்கு) கிரிக்கெட் பிரியர்கள். மேட்ச் நாள்ள நிச்சயமா கமெண்டரி கேட்டுகிட்டு இருப்பாங்க. பாவம் அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க(நம்மளாவது இன்னோரு ஜன்னல திறந்து வெச்சு வேற நல்ல பதிவா படிச்சுக்கிட்டு இருக்கலாம்). ஒவ்வொரு ரெண்டு பர்லாங்குக்கும் இந்த மாதிரி (ஈ) ஒரு கடைய பார்த்து வெச்சிருப்பேன். ட்ரெயின பிடிக்க போற வழியில இந்த கடைகளுக்குள்ள நொழைஞ்சு ஸ்கோரை அப்டேட் செஞ்சுகிட்டே போவேன். அவங்களும் நம்ம கடைக்கு இப்படியாவது ஆள் வருதேன்னு (அனானியா இருந்தாலும் பின்னூட்டம் வந்தா சரின்னு நாம இருக்கறதில்லையா, அந்த மாதிரி) ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

ஆறாம்ப்பு படிக்கும்போது, இப்பிடித்தான் ஒரு நாளு, மேட்சுல கபில்தேவ் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பற அடுத்த வண்டில போயிக்கலாம்னு ஒரு கடையில செட்டிலாயிட்டேன். என் கெட்ட நேரம் 15 நிமிஷத்துல அவரு அவுட்டாயி கிர்மானி வந்து மட்டைய போட ஆரம்பிச்சுட்டார். எப்படியும் ரயிலுக்கு நேரம் இருக்கேன்னு அதையும் கேட்டுகிட்டு இருந்தேன். போரடிக்கும்போதெல்லாம் சுத்தி கடையில இருக்கிற பொருளையெல்லாம் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன்.

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியா, எனக்கு ரொம்ப இஷ்டமானது, ஓசி பொருள். எதுக்கு எது இலவசம்கறதெல்லாம்(பினாகாவுக்கு பொம்மை, போர்ன்விடாவுக்கு பம்பரம்) தரோவா தெரிஞ்சு வெச்சுகிட்டு அம்மாவ தொந்தரவு பண்ணிகிட்டு இருப்பேன்.

ரெண்டு பாராவுக்கு முந்தி சொன்ன மாதிரி,கடைய நோட்டம் வுட்டுகிட்டு இருக்கும்போது ஒரு வெள்ளை கலர் பாக்கெட்ல "Free Belt inside"ன்னு போட்டிருந்தது.

ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே, நமக்கும் ஒரு பெல்ட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனச்சுகிட்டே அது என்ன பாக்கெட்னு உத்து பார்த்தேன்.ரெண்டு மூணு பூவெல்லாம் வரைஞ்சு "Care Free" ன்னு ஸ்டைலா எழுதி இருந்துச்சு.கடைக்காரர்கிட்ட, "ஃப்ரீ பெல்ட் அப்படின்னு போட்ருக்கே, இடுப்புல கட்ற பெல்டான்னு என் இடுப்ப காமிச்சு கேட்டேன்".

அவரு சாணிய மிதிச்ச சாஸ்திரிகள் மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு என்னை மேலயும் கீழயும் ரெண்டு தடவ பார்த்துட்டு, "போ.. போ ட்ரெயினுக்கு நேரமாச்சுன்னு" வெரட்டி உட்டாரு.

அடுத்த சில நாட்களுக்கு,ஒவ்வொரு தடவையும் டவுசர தூக்கி விடும்போது, அவரோட அந்த பார்வை என் ஞாபகத்துக்கு வந்து டார்ச்சர் குடுத்துகிட்டுருந்துது.

ஒரு நாள் திடீர்னு எங்க வீட்லயே அந்த பாக்கெட் பீரோல துணிமணிகளுக்கு அடியில இருக்கறத அகஸ்மாத்தா பார்த்துட்டேன். உடனே துள்ளி குதிச்சு, "அம்மா அந்த பாக்கெட்டோட ஒரு ஃப்ரீ பெல்ட் வந்திருக்கணுமே, நான் கடையில பார்த்தேனே" அப்படின்னு கேட்டேன்.அப்போ எங்க அம்மாவும், பக்கத்துல இருந்த அக்காவும் என்னைய பார்த்த பார்வை!!!ஐயய்யோ!!! திரும்பவும்.. அதே சா.மி.சா பார்வை. வழக்கம் போல "ஒழுங்கா கழுவ கூட தெரியாத நாயி ஒனக்கெல்லாம் பெல்ட் ஒரு கேடா, புக்க எடுத்து வெச்சு படிடா"ன்னு தொரத்திட்டாங்க.

அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு விகடன், குமுதத்தில வர்ர விளம்பரத்தையெல்லாம் தீர அனலைஸ் பண்ணித்தான் அந்த(சா.மி.சா) பார்வைக்கான அர்த்தம் என்னன்னு புரிஞ்சுது. இப்ப வரைக்கும் நம்ம பசங்க இதே மாதிரி கேள்வி கேட்டா எப்படி புரிய வைக்கறதுங்கறது பெரிய கேள்விக்குறிதான்.

7 comments:

Anonymous said...

சும்மா பிரமாதமா இருந்துச்சு.போறபோக்குல சின்ன கடை வீதியில ரெண்டு பக்கமும் கடைங்க முன்னாடி வந்துக்கிட்டுருக்கறதப் பார்த்தா அது கொஞ்ச நாள்ல ஒத்தயடிப் பாதயாயிடும்னு நினைக்கிறேன்.சாஸ்திரிகள் சாணிய மிதிச்சா அவர் மூஞ்சு எப்படிப் போகும்னு கண்டிப்பா படிக்கறவங்க கற்பனைபண்ணாம இருக்க முடியாது.சா.மி.சா.டைப் கற்பனைகள் சுஜாதாவை நினைவுபடுத்துகிறது

அறிவிலி said...

நன்றி...இலால்குடி....

பதிவுல எழுதினா மாதிரியே ஈ ஓட்டிகிட்டு இருந்தேன். அப்பா!! நீங்க வந்துட்டீங்க.

Suresh said...

Nandri unga comments ku it helped me for starters like me, thanks a lot for encouraging :-).

Anonymous said...

good From: malayalam chennai

அறிவிலி said...

/Anonymous said...
good From: malayalam chennai//

நன்றி திரு.மலயாளம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே//

இந்தக் கொடுமை உங்களுக்கும் இருந்ததா?. என்ன??தமிழ் அம்மாக்கள் ஒரே மாதிரி யோசிப்பாங்களா? சா.மி.சா....அருமை!

அறிவிலி said...

///யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே//

இந்தக் கொடுமை உங்களுக்கும் இருந்ததா?. என்ன??தமிழ் அம்மாக்கள் ஒரே மாதிரி யோசிப்பாங்களா? சா.மி.சா....அருமை!///


இதுல மொழி பாகுபாடும் கிடையாது, Universal Facts.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.