Showing posts with label நானும் என் பையனும். Show all posts
Showing posts with label நானும் என் பையனும். Show all posts

Thursday, November 18, 2010

கங்கிராட்ஸ்... மை டியர்...

18-நவ-2005,காலை 0600 மணி

என் மனைவி (எ.ம.) : ஹரீஷ்.. எந்திரி.. மணியாச்சு..

ஹரீஷ்: 2 மினிட்ஸ்.. ப்ளீஸ்

18-நவ-2006,காலை 0610 மணி

எ.ம: டேய்.. இன்னுமா எந்திரிக்கலை?

ஹரீஷ்: ஒன்லி 2 மினிட்ஸ்மா.. ப்ளீஸ்.....

18-நவ-2007,காலை 0620 மணி

எ.ம:  ஏண்டா? ஒன் பக்கத்துலயே நின்னு எழுப்பிண்டே இருந்தா, யூனிஃபார்ம் அயர்ன் பண்றது, காஃபி.. போர்ன்விடா கலக்கறதுன்னு வேலையெல்லாம் யார் செய்யறது? ஏந்திரிச்சு போடா???

நேத்து கூட லேட்டா.. போனதுக்கு பேரு நோட் பண்ணதா சொன்னியே?

18-நவ-2008,காலை 0630 மணி

எ.ம: ஒழுங்கா குளிச்சியா?  ஒடனே வந்துட்டியே.... ஹால்ல போர்ன்விட்டா வெச்சிருக்கேன். யூனிஃபார்ம் சேர் மேல இருக்கு... கட.. கடன்னு போடு..

ஹரீஷ்:  அம்மா.. பனியன காணுமே???

எ.ம: ரூம்ல ஒன் கப்போர்ட்லதான் இருக்கு, எடுத்து போட்டுக்கோ..

ஹரீஷ்:  நீயே எடுத்து குடுத்துறேன்.. ப்ளீஸ்... நான் போர்ன்விட்டா குடிச்சிண்டிருக்கேன்....

எ.ம: இந்தா... பனியன்.. எங்க உன் பென்சில் பாக்ஸ்ல பேனாவையே காணுமே?

ஹரீஷ்:  நேத்து பெட்ரூம்ல எழுதிண்டுருந்தேன்.. பெட் பக்கத்துல பாரேன் ப்ளீஸ்...

 அய்யோ.. மறந்தே போயிட்டேன்... போன வாரம் ரிசர்வாயருக்கு கூட்டிண்டு போனதுக்கு 5 டாலர் தரணுமாம்.. நான் மட்டுந்தான் பாக்கின்னு மிஸ் திட்டினாங்க...

எ.ம: ஏண்டா... நேத்தே சொல்லிருக்கலாமில்ல.. கையில கேஷே இல்ல... நீ ஸ்கூலுக்கு போனப்பறம்தான் ஏடிஎம் போலான்னு இருந்தேன்.

ஏம்பா?(என்னிடம்) உங்ககிட்ட இருக்கா?

நான்: என் பர்ஸ்ல 50 டாலர்தான் இருக்கு.

எ.ம: சரிடா.. ஒம்போதரைக்கு காசு எடுத்துண்டு ஸ்கூல் வாசலுக்கு வரேன்.. நீ ப்ரேக் டைம்ல வெளில வந்து வாங்கிக்கோ...

18-நவ-2009,காலை 0640 மணி

ஹரீஷ்:  அம்மா... சாக்ஸ் பாரேன்.. ஒண்ணு ஆங்கிள் சாக்ஸ்.. இன்னொன்னு ஃபுல் சைஸா இருக்கு...


எ.ம: கண்ண தெறந்து ஒழுங்கா பாரு.. ஒன் பக்கத்துலியேதான் இன்னொரு சாக்ஸும் இருக்கு..

18-நவ-2010,காலை 0645 மணி

ஹரீஷ்: ஓ.. நோ.. அம்மா டாய்லெட் வரா மாதிரி இருக்கு..

எ.ம: அய்யோ.... கடவுளே.. படுத்தறானே....சரி.. சீக்கிரமா போயிட்டு  டிரஸ்ஸெல்லாம் போட்டுண்டு  வா..

18-நவ-2010,காலை 0655 மணி

ஹரீஷ்:  அம்மா சிக்ஸ் ஃபிஃப்டி ஃபைவ் ஆயிடுத்தும்மா, இனிமே நடந்து போனா லேட்டா ஆயிடும்.. ப்ளீஸ் என்ன சைக்கிள்ள கொண்டு போய் விட்றேன்...

எ.ம: ஒன் சைக்கிளையும் பஞ்சராக்கிண்டு வந்துட்டே... காத்தால சீக்கிரமும் எந்திரிக்காத.. இப்ப என்னை படுத்து...

கொஞ்சம் இரு.. டிரஸ்ஸ மாத்திண்டு வரேன்.. ஏம்பா(என்னிடம்)... நீங்க வீட்ட பூட்டிண்டு போங்க...


18-நவ-2010,மாலை 0630 மணி

நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததும்..

ஹரீஷ்:  அப்பா... இன்னிக்குத்தான் எனக்கு இந்த ஸ்கூல்ல லாஸ்ட் டே..ஜாலி... இனிமே நெக்ஸ்ட் இயர் செகண்டரிதான் போகணும்....

நான்: (என் மனைவியிடம்..): 
ராஜி.. கங்கிராட்ஸ்... க்ரேட்...

Friday, October 23, 2009

எத்தனையோ பாத்துட்டோம்........ஹ்ம்ம்ம்ம்ம்....

டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு முந்தைய நாள் சென்னைக்கு போக வேண்டி வந்தது.என் சித்தப்பா பையனின் திருமணம். அவர்கள் வீட்டிலேயே நான்கு வருடம் தங்கி படித்திருக்கிறேன். போகாவிட்டால் நன்றாக இருக்காது. திருமணத்தன்று இரவு ரிசப்ஷன் முடிந்த கையோடு கிளம்பி விட்டால் பிரசவத்தன்று கரெக்டாக வந்து விடலாம். மேலும் பார்த்துக் கொள்ள அவள் அப்பா, அம்மா மேலும் கூப்பிடு தூரத்தில் மாமாக்கள் என்று எல்லோரும் உண்டு. இப்படியெல்லாம் மனதை தேற்றிக் கொண்டு மனைவியின் எதிர்ப்பையும் மீறி சென்றாலும் சென்னையில் இருப்பே கொள்ளவில்லை. எப்போதும் மனைவி, பிரசவம், குழந்தை என்று மனது முழுவதும் திருச்சியிலேயே இருந்தது.

ஒரு வழியாக திருமணம் ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ஏறிவிட்டேன். ட்ரெயின் ஏறுவதற்கு முன் போன் செய்தபோது இன்னும் வலி வரவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தாள். காலையில் திருச்சி போய் மாமனார் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் யாரும் இல்லை. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டதாக மச்சினன் கூறினான்.

பரபரப்பாக கிளம்பி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனால், ஆஸ்பத்திரி உடையில் வார்டுக்கு வெளியில் வந்து பலகீனமாக ஒரு புன்னகை பூத்தாள். ஊசி போட்டும் வலியெடுக்கவில்லை. அடுத்த இரு மணி நேரங்களில் பனிக்குடம் உடைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாலும் வலியெடுக்கும் அறிகுறிகள் தெரியாததாலும் சிசேரியனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். மாமியாரின் முகத்தில் கவலை ரேகைகளும், மாமாவின் கண்கள் தளும்பவும் அதுவரை தைரியமாக இருந்த நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பூத்துவாலையில் சுற்றி "தோ பாருங்க ரோஸ் பேபி", என்றவாறே நர்ஸ் உள்ளங்கையை விட சற்றே பெரிய அளவிலான ஒரு பூவை கொண்டு வந்து காண்பித்தார். தொட்டுப் பார்க்க கூட பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமானார்தான் இடுப்புக்கு கீழ் மறைத்துக் கொண்டிருந்த துவாலையை படக்கென்று விலக்கி "ஹை.. பேரப்பய" என்றார். "இன்னிக்கு பொறந்த பன்னெண்டு குழந்தைகளில் இது மட்டுந்தான் ஆம்பள புள்ள" என்ற உபரி தகவலை அளித்துவிட்டு நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே போய் விட்டார்.

"இன்பெக்ஷன் அவாய்ட் பண்றதுக்காக சிசேரியன் குழந்தைகளை 24 ஹவர்ஸ் ஸ்பெஷல் கேர் யூனிட்ல வெச்சிருப்போம், அப்பப்போ மதர் ஃபீட் பண்ண மட்டும் கூட்டிட்டு வருவாங்க, நத்திங் டு வொர்ரி" என்று பிரசவம் பார்த்த லதா டாக்டர் சொல்லி விட்டு கிளம்பும்போதுதான் "ஹவ் ஈஸ் தி மதர்?" என்று கேட்டேன். "நோ ப்ராப்ளம்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்பறமாபோய் பாருங்க" என்றார்.

மதியத்துக்கு மேல் ஸ்பெஷல் கேர் யூனிட்டிற்கு போய் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பிறந்த மேலும் ஐந்து பெண் குழந்தைகள் சூழ ஜாலியாக ஏசி ரூமில் தூங்கிக் கொண்டிருந்தான்.


அக். 24, 2009 : " அப்பா, இன்னிக்கு எனக்கு லெவென்த் பர்த் டே. புது சைக்கிள் வாங்கித் தர்றியா?"

எட்டு மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டே மாடிப் படியில் சறுக்கி விழுந்து தாடை பிளந்து தையல் போட்டது,

காது குத்தி தோடு போட்ட அன்று இரவே தோடு தலைகாணி நூலில் சிக்கிக்கொண்டு ரத்தம் வந்து கதறி அழுதது,

ப்ளே ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷர்மிலியால் கன்னத்தில் ரத்தம் வருமளவுக்கு கடிபட்டது,

எல்.கே.ஜியில் பெஞ்ச் முனையில் இடித்துக்கொண்டு கண்ணை சுற்றி கருவளையமாக ரத்தம் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் படத்து வில்லன் போல நின்றது,

யூ.கே.ஜியில் இரும்பு கேட்டில் ஏறி விளையாடி கால் இடையில் சிக்கி கொண்டு, கால் முழுவதும் வீங்கி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்.ரே எடுத்தது,

ஒன்றாம் வகுப்பில் புருஷோத்தமனுடன் புல்லு சண்டை போட்டு கை உடைந்து ஐம்பது நாள் தொட்டில் கட்டிய கையுடன் அலைந்தது,


சிங்கப்பூர் வந்த பிறகும் கூட மூன்றாவது படிக்கும்போது ஒரு நாள் சீன நண்பனிடம் பேச்சு சண்டை முற்றி, நசுக்கிய பெப்ஸி கேனால் முதுகில் ரத்தக்கோடுடன் வந்தது

இப்படியெல்லாம் எத்தனையோ பாத்துட்டோம்....ஹ்ம்ம்ம்ம்ம்....

"ஹேப்பி பர்த் டே டா செல்லம், சாயங்காலமா போயி சைக்கிள் வாங்கிறலாம்.... "

Tuesday, March 17, 2009

நீங்க 5 ஆம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

"Are you smarter than a 5th grader?"

இது மிக சுவாரசியமான ஒர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி.ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ப்ராட்காஸ்டிங்க் கம்பெனியால் தயாரிக்கப்பட்டு பல நாடுகளிலும் சக்கை போடு போடும் ஒரு நிகழ்ச்சி.

ஆசிரியர்கள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கூப்பிட்டு வைத்து ஐந்தாம் வகுப்பும் அதற்கு கீழேயும் இருக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். கூடவே துறு துறுவென்று அறிவுக்களை சொட்டும் சில பொடிசுகளையும் நிற்க வைத்திருப்பார்கள். பெரியவர்கள் பதில் தெரியாமல் ஞே..வென்று முழித்துக்கொண்டோ, அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தலையை சொறிந்து கொண்டோ இருக்கும்போது இந்த சிறிசுகள் பஸ்ஸரை அமுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு நிற்கும்.விடை தெரியாவிட்டால் அவர்கள் தெரிவு செய்திருக்கும் சுள்ளானிடம் உதவி கேட்கலாம்.

கடைசியில் தோற்று வெளியேற வேண்டியிருந்தால், " நான் ஐந்தாம் வகுப்பு மாணவனைவிட புத்திசாலி இல்லை" என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும்.

இப்பத்தான் விஷயத்துக்கே வரேன்.

என் பையனுக்கு சென்ற வருடம் (4ம் வகுப்பு) வீட்டு பாடமாக கொடுக்கப்பட்ட ஒரு கணக்கும், ஒரு ஆங்கில கேள்வியும் கீழே.

கணக்கு - ஒரு பண்ணையில் சில ஆடுகளும், கோழிகளும் ஒரிடத்தில் நின்று கொண்டிருந்தன.மொத்தம் 40 தலைகளும் 100 கால்களும் இருந்தன. எத்தனை ஆடு, எத்தனை கோழி இருந்தது?

ஆங்கிலம் - She is very lucky to have such obedient sons and daughter-in-laws
இந்த வாக்கியத்தில் உள்ள தவறு என்ன?

இந்த கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் சொன்னால் யுனிவர்சிட்டி ஆஃப் டுபாக்கூரின் அஞ்சாம்ப்பு சான்றிதழ் வி.பி.பி யில் அனுப்பி வைக்கப்படும்.

Sunday, March 8, 2009

ஆம்பளைங்க தினம் - ஒரு அவசியத் தேவை

மகளிர் தின நிகழ்ச்சிகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு என் பையனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

(அ- அப்பா, பை - பையன்)

பை:- அப்பா " இன்னிக்கு என்னப்பா மகளிர் தினம், மகளிர் தினம்கறாங்களே, அப்படின்னா என்னப்பா?"

அ:- அது வந்துப்பா பொம்பளைங்க எல்லாரும் ஆம்பளைங்களுக்கு ஈக்வலா எல்லாத்துலயும் ரைட்ஸ் வேணும்னு கேக்கறதுக்காக இப்படி ஒரு நாள கொண்டாடுறாங்கப்பா.

பை:-எங்க இருக்கற பொம்பளைங்க,யாருகிட்ட, எதுல ரைட்ஸ் வேணும்னு கேக்கறாங்க?

அ:-வீட்ல, நாட்ல, படிப்புல எல்லாத்துலயும்தாம்ப்பா.

பை:-என்னப்பா சொல்ற?,நம்ப வீட்ல அம்மாதான் தினமும் என்ன சாப்பாடுன்னு முடிவு செஞ்சு செய்யறாங்க.அதத்தான் நாம சாப்புடறோம்.பேங்க் ATM கார்ட் அம்மாட்டதான் இருக்கு. உனக்கு காசு வேணும்னா அம்மாட்ட வாங்கிட்டு போற.எனக்கு ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிட அம்மாதான் காசு கொடுக்கறாங்க.

அ:-டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா. அது மட்டும் இல்லாம வெளி உலகத்தையும் பார்க்கணும்டா.

பை:-இல்லப்பா, நான் பாத்து எல்லா ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ் மேட்ஸ் எல்லாருமே இப்பிடித்தான்.ஏன் நம்ம ஊர்ல கூட பாட்டி தான் எல்லாம் வாங்கித்தருவாங்க.

அ:-நெறைய பேர் வீட்ல கேர்ள்ஸ்லாம் படிக்க வைக்கவே மாட்டாங்கப்பா.வளர்ந்தவுடன கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டு வேலயெல்லாம் செஞ்சுகிட்டே இருந்துருவாங்க.

பை:-இல்லப்பா, என் க்ளாஸ்ல 30 ஸ்டூடண்ட்ஸ்ல 18 கேர்ள்ஸ்.என் க்ளாஸ் டீச்சர் ஒரு லேடி. என் ஸ்கூல் ப்ரின்சிப்பால் ஒரு லேடிதான். அவங்க சொல்றததான் எங்க பிஸிகல் எஜுகேஷன் டீச்சர் மாதிரி ஆம்பள டீச்சர்ஸ்லாம் கூட கேப்பாங்க.

அ:-சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடுப்பா. இங்கல்லாம் எல்லாருக்கும் ஈக்வலா சான்ஸ் கெடைக்கும்.ஆனா இந்தியா மாதிரி ஒரு வளர்ற நாட்ல இதெல்லாம் தேவைப்படும்ப்பா.

பை:-நானும் இந்தியாவுல ஒண்ணாவது படிக்கும்போது என் கூட நெறைய கேர்ள்ஸ் படிச்சாங்களே?

அ:-நீ படிச்சது சிட்டில. வில்லேஜஸ்ல எல்லாம் வேற மாதிரி இருக்கும்.

பை:-அவுங்க ஊர்லயெல்லாம் கேர்ள்ஸ டிவி பார்க்க உடுவாங்களா?

அ:-ஏன் கேக்கற?

பை:-இல்லாட்டி அவுங்களுக்கெல்லாம் மகளிர் தினம்னு எப்படி தெரியும்?

அ:-இல்லடா இந்த நிகழ்ச்சியெல்லாம் பாக்கற எல்லார்க்கும் ஒரு அவேர்னஸ் வந்து மாறணும்ணுதான்.

பை:-எல்லாரும் மாறிட்டா என்ன ஆகும்?

அ:-லேடிஸ்லாம் நல்லா படிச்சு பெரிய பதவிக்கெல்லாம் வருவாங்கப்பா.

பை:-ப்ரெசிடென்ட்டுதானே இந்தியாவுல மிகப்பெரிய பதவி?

அ:-ஆமா..

பை:-இந்தியாவோட ப்ரெசிடென்டே லேடிதானே...அடுத்த ப்ரைம்மினிஸ்டர் சோனியாவா, அத்வானியான்னு தானே போட்டின்னு அன்னிக்கு சொன்னிங்களே?
ஆஆங்க்... அப்பற்ம் நெறைய பேரு ஜெயலலிதா கால்ல உழுந்து கும்புடறத டிவில காட்றாங்களே?


என் மனைவி:- என்னா இங்க அப்பாவும் புள்ளையும் வெட்டி அரட்டை, சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. வேலய முடிக்கணும்.

அ:-டேய், வா சாப்பிட போலாம், இல்லாட்டி அம்மா டென்ஷன் ஆயிருவாங்க. (மனதுக்குள் - அப்பாடி.. இப்போதைக்கு தப்பிச்சேன்..)

பை:- போப்பா... ஆக்சுவலா ஆம்பளைங்க தினம்தான் கொண்டாடி நம்ம ரைட்ஸ்லாம் கேக்கணும் (முனகிக்கொண்டே போகிறான்)

பி.கு - படிப்பவர்கள் எல்லாரும் தயவு செய்து, நல்ல பாய்ண்ட்ஸ் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. திருப்பி டாபிக் ஆரம்பிச்சா யூஸ் ஆவும்.