Showing posts with label சாலட். Show all posts
Showing posts with label சாலட். Show all posts

Wednesday, April 21, 2010

சாலட் 22-ஏப்ரல்-2010


எலுமிச்சை:அங்காடித் தெரு படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு சில இடங்களில் மிகைப்படுத்தி காண்பித்திருப்பது போன்ற எண்ணம் தோன்றினாலும் வித்தியாசமான கதைக் களனை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம்.

இந்த படத்தின் பாதிப்பினாலோ என்னவோ ஆதியும் ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை என்று ரங்கனாதன் தெரு கூட்ட நெரிசலும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் பற்றி பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் ஒரு பரபரப்பான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரிந்த சிங்கப்பூரின் மிகப் பிரபலமும் பெரியதுமான முஸ்தபா செண்டரின் முதல் தளத்தை 40 மணிநேரத்திற்கு மூடி வைக்க சிங்கப்பூர் குடியுரிமை பாதுகாப்பு படை SCDF) உத்தரவு பிறப்பித்தது.

கூட்ட நெரிசலும் அதனால் விளையக்கூடிய ஆபத்துகளையும் காரணம் கூறி இந்த நீதிமன்ற உத்தரவு செயலாக்கப்ப்பட்டது. கிட்டத்தட்ட 75000 சதுர அடி கொண்ட முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 431 பேருக்கு மேல் இருந்தால் அது கூட்ட நெரிசலாக கருதப்படுகிறது.

இந்த அளவுக்குப் போகாவிட்டாலும் ரங்கனாதன் தெரு மற்றும் அங்குள்ள கடைகளில் போதுமான Fire Exit போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை எந்த அரசுத்துறையாவது கவனிக்கிறதா?ஆபத்துக் காலங்களில் தீயணைப்பு வண்டிகள் இந்த தெருவுக்குள் நுழையவாவது முடியுமா???

*************************************************************************************
திராட்சை:சிங்கப்பூர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வெளிவந்துள்ளது. அரசு வரிவிலக்கு இல்லாத காரண்த்தாலோ என்னவோ "Kurushetram - 24 Hours of Anger" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட இந்தப் படம் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி!!!கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சிங்கையில் பிரபலமான விஷ்ணு, மதியழகன், குணாளன் போன்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை இந்த வாரக் கடைசியில் (அது வரை ஓடிக் கொண்டிருந்தால்) திரையரங்கில் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதப் பார்க்கிறேன்.படத்தைப் பற்றிய மேல் விவரங்களும் ட்ரெயிலரும் இங்கே
(மற்ற சிங்கைப் பதிவர்கள் ஆரும் ஒரு வாரத்துக்கு இந்த படத்த பாக்க கூடாது, விமர்சனம் எழுதக் கூடாதுன்னு உத்தரவு போடறேன்.)

*************************************************************************************
அன்னாசி:சன் டிவியில் "சன் குடும்ப விருதுகள்" என்று ஒன்றை ஆரம்பித்து பாடாய் படுத்துகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவர்களுக்கு போட்டியாம்!!! இதில் சிறந்த மாமியார், சிறந்த மருமகள், சிற்ந்த மாப்பிள்ளை என்று கேட்டகரிகள் வேறு. என்ன காரணத்தினாலோ ராதிகாவை இந்த குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். (அ)நியாயமாக பார்த்தால் மனைவி, வைப்பாட்டி,மகள், அம்மா, மருமகள், மாமியார்,பாட்டி, பேத்தி,சித்தி, பெரியம்மா, அக்கா, தங்கை, ஓரகத்தியோட ஷட்டகரோட நாத்தனார் என்று எல்லா கேட்டகரியிலும் அவர் வந்திருக்க வேண்டும்.விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிக்கு ராதிகா நடுவராக வருவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? தெரியவில்லை.

(மே-9-2010 பிற்சேர்க்கை: ஆரம்ப நிகழ்ச்சிகளில் ராதிகா இல்லாததால் மேலே இருப்பது போல் எழுதினேன். பின்னர் இறுதியில் விருது நிகழ்ச்சியில் அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி என் முகத்தில் கரி பூசி விட்டார்கள்.)


*************************************************************************************
ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் சாலட் தொடரும்.




மிகவும் ரசித்த வானொலிக்கான விளாம்பரம்
*************************************************************************************
மாம்பழம்:சிங்கப்பூருக்கு வந்த புதிதில் சில இளைஞ, இளைஞிகள் வழிய வழிய போட்டுக் கொண்டிருக்கும் கால் சட்டைகளை பார்த்து பரிதாப்பட்டதுண்டு. "அய்யோ பாவம். என்ன கஷ்டமோ? புள்ளைங்க பேண்ட் வாங்கக் கூட காசில்லாம அப்பா, தாத்தாவோட பேண்டையெல்லாம் போட்டுட்டு திரியுதுங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு பேஷனாம்.

"Sagging Pants" என்ற இந்த கண்றாவி பேஷனை தடை செய்ததுதான் இப்போது அமெரிக்காவில் பரபரப்பான செய்தி.இந்த தடையைப் பற்றிய விவாதங்களும் விதண்டாவாதங்களும் வழக்கம் போல் இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது.

இருந்தாலும் இந்த தடையை அறிவிக்கும் முன் அதில் இருக்கும் சில அனுகூலங்களையும்
கன்ஸிடர் பண்ணியிருக்கலாம்.

ரொம்ப அவசரமா சௌச்சால்யம் போகணும்னா... பெல்ட், ஜிப்புன்னு அவுத்து டயத்த வேஸ்ட் பண்ணாம "அப்படியே" போகலாம்.

ஜாக்கி, ஹில் ஃபிகர்னு காஸ்ட்லியா அண்டர்வேர் வாங்கிட்டு அத பேண்டால மூடி வெச்சு என்ன பிரயோசனம்?
*************************************************************************************
வாழை:அலுவலக ஆணிகளுக்கு இடையே அவ்வப்போது வீட்டுக்கு வரும்போது பையனுடன் சேர்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய கடமைதான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வரமுடியாததற்கு ஒரு காரண்மாக சொல்லிக் கொள்ளலாம்."கற்றுக் கொள்ள" என்ற பிரயோகத்திற்கு காரணம் கீழிருப்பது போன்ற சில உரையாடல்கள்தான்.

ஹரீஷ்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்.

நான்: என்னடா?

ஹரீஷ்: "Ramu bought a Pair of Pants for $10" அப்படின்னா ஒரு பேண்ட் வாங்கினானா, இல்ல ரெண்டு பேண்ட் வாங்கினானா?

நான்: சாதரணமாவே பேண்ட் பற்றி சொல்லும்போது இங்கிலீஷ்ல "Pair of pants" னு Pluralல தாண்டா சொல்ற வழக்கம்.

ஹரீஷ்: ஏன் அப்படி சொல்லணும்?

நான்: தெரியலியே, ஒரு வேளை ரெண்டு கால் இருக்கறதுனாலயோ?

ஹரீஷ்: அப்போ, ரெண்டு கை இருக்கற சட்டைக்கு ஏன் "Pair of Shirts" னு சொல்றதில்ல?

நான்: தெரியலியே... கொஞ்சம் பொறுமையா இரு, கத்துண்டு சொல்றேன். என் ப்ளாக் படிக்கறவங்க, ஃபாலோயர்ஸ் எல்லாம் பயங்கர ஜீனியஸ். நிச்சயமா பதில் சொல்லிருவாங்க பாரேன்.

Wednesday, December 2, 2009

சாலட். - ௦02/டிச/2009


பலா: சமீபத்தில் Orphan என்ற ஆங்கில படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அநியாயத்துக்கு ஹாரர் Cum த்ரில்லர் படம்.வாரக்கடைசியில் ராத்திரியில் பார்த்துவிட்டு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.சுமார் 9 வயதிருக்கும் ஒரு பெண் குழந்தை கன்னா பின்னவென்று கொலை செய்கிறது (ஒரு கன்னியாஸ்த்ரீயை சுத்தியால் அடித்தே). ஏன் எதற்கு என்பதெல்லாம் கடைசி 10 நிமிடத்தில்தான் புரிகிறது. கேமிரா கோணங்கள், இசை, நடிப்பு எல்லாமே அபாரம்.அதுவும் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அந்த குட்டிப்பெண் கொள்ளை அழகு. விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போடலாமெனதான் நினைத்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று கேபிளாரின் பதிவை செக் பண்ணினால் மனுஷன் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். படம் பார்த்துவிட்டு விமர்சனம் படித்தால் அவருடைய quality தெரிகிறது. சான்ஸே இல்லை. விரிவான விமர்சனம் இங்கே

ஆப்பிள்: சூப்பர் சிங்கரில் காம்பியரிங் செய்த டிடியின் உடைகளைப் பற்றி இங்கு எழுதினாலும் எழுதினேன், விஜய் டிவிக்காரர்கள் அவரை தூக்கிவிட்டு, திவ்யாவை கொண்டு வந்து விட்டார்கள்(நான் கூட சொல்லிக்கலைன்னா எப்பிடிங்க?).நடுவர்களை விடுங்கள், திறமைக்கு முன் மொழியெல்லாம் பார்க்க வேண்டாம்.காம்பியரிங்குக்கு கூடவா ஆள் பஞ்சம்? பாதி நேரம் இவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், கொழகொழவென்று இவர் பேசும் தமிழை கேட்பது அதைவிட கொடுமை.டிடியே பரவாயில்லை. Chinmayi was much better.

“All good things were at one time bad things; every original sin has developed into an original virtue.” -Friedrich Nietzsche

ஆரஞ்சு: மற்ற சேனல்களில் வரும் தொடர்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியின் தொடர்கள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.வழக்கமான லேடிஸ் செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் ஓரளவுக்கு யதார்த்தமாகவே இருக்கின்றன. முக்கியமாக வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. "அன்பே வா" தொடரின் வசனகர்த்தாவுக்கு முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கலாம்.முக்கியமாக கீழிருக்கும் பாத்திரங்கள் வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்தரவாதம்.


டைட்டிலில் யார் வசனகர்த்தா என்று போடுவதேயில்லை, என்ன காரணமோ? இத்தொடரில் கதாநாயகனை இரு நாயகிகளில் யாருடன் சேர்த்து வைப்பது என்று எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பு நடத்தியதாக கேள்வி. Audience Participation !!!!

திராட்சை: ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு சாலட் தொடரும்.


வழமையாகவே ஃபெவிகாலின் விளம்பரங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும்.அந்த சீரிஸில் இது அருமையான ஒன்று.

அன்னாசி: சன் டிவியின் டீலா நோ டீலா நிகழ்ச்சியை பற்றி பலவிதமான கருத்துகள்.கான்செப்ட் ஒன்றும் புதிதில்லை, பல ஆங்கில தொலைக்காட்சிகளில் வந்ததுதான். சிங்கப்பூரில் கூட Courts ஸ்பான்ஸர்ஷிப்பில் "Deal or No Deal" என்று ஒரு நிகழ்ச்சி வந்ததுண்டு.ரிஷி ஸ்டைலாக நடத்துவதாக சிலரும் "குப்பை, ரொம்ப அலட்டறான்" என்று ஒரு சாராரும் கட்சி கட்டி கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஒ.கே. ரகம். போகப் போக கருத்து மாறலாம்.போட்டியில் அறிவுக்கு வேலையில்லை என்றாலும் ஒரளவுக்கு சமயோசித புத்தி தேவைதான்."நீ இந்த போட்டியில் கலந்துண்டு பெரிய அமௌண்டா ஜெயிச்சா என்ன பண்ணுவ?" என்று மனைவியிடம் கேட்டேன்.


"அந்த பொட்டிய தூக்கிகிட்டு பின்னாடி நிக்கறவளுகளுக்கெல்லாம் கொஞ்சம் நல்லதா நாலு துணிமணி வாங்கித்தருவேன்" என்றார்.

Thursday, October 8, 2009

சாலட் - 08/அக்/2009


ஆப்பிள்:இந்த வருடம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வருடமாக அமைந்து விட்டது. ரஹ்மானின் ஆஸ்காரை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் சிதம்பரத்தில் பிறந்து பரோடாவில் இயற்பியல் பட்டப் படிப்பு படித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்ட திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணண் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

அவர் இயற்பியல் பட்டதாரியாக இருந்தாலும் பின்னர் உயிரியலுக்கு மாறிவிட்டாராம்.இந்த வருடத்துக்கான வேதியியல்!!! பிரிவு நோபல் பரிசை மேலும் இரு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பெற்றிருக்கிறார்.உயிர் வேதியியல் துறையில் ரிபோசோம்கள் எப்படி இருக்கும் என்று காட்டியதற்காகவும் அவை அணு அளவில் எவ்வாறு செயல்படுகின்றன என்று விளக்கியதற்காகவும் அவருக்கு இந்தப் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.

இவருடைய கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கிறதாம்.

நம்ம வெங்கி(அப்படித்தான் அவர் நண்பர்கள் கூப்பிடுவாங்களாம்) என்னமோ ரிபோசோம் பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரே அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு விக்கிபீடியாவுல போய் பாத்தா....
ரிபொசோம் - என் பதிவோட லோகோ மாதிரியே இல்ல?
molecule consisting of two subunits that fit together and work as one to build proteins according to the genetic sequence held within the messenger RNA (mRNA). Using the mRNA as a template, the ribosome traverses each codon, pairing it with the appropriate amino acid. This is done through interacting with transfer RNA (tRNA) containing a complementary anticodon on one end and the appropriate amino acid on the other.

ம்ஹூம்ம்ம் ஒண்ணும் புரியல.. பின்நவீனத்துவமே பரவாயில்ல போலருக்கு.

விடுங்க.. நம்மளுக்கு எல்லாம் இருக்கவே இருக்கு சட்டைக்குள்ள, பேருல, பேசறதுலன்னு எல்லாத்துலயும் என்னென்ன அடையாளம் இருக்குன்னு தேடற ஆராய்ச்சிகள்.
----------------------------------------------------------------------------------

அன்னாசி: சன் டிவியில் பல்லாண்டு காலமாக ப்ரைம் ஸ்லாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் ராதிகா. சித்தி, அண்ணாமலை,செல்வி,அரசி என்று இப்போது செல்லமே ஆரம்பித்திருக்கிறது.


இந்த தொடரில் ராதிகாவின் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால் அவர்கள் ஒரு விளக்குக்கு பக்கத்தில் போய் நிற்க வேண்டுமாம். அதுதான் அவர்களுக்கு தண்டனை.இப்போது நான் போய் எங்கள் வீட்டு விளக்குக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த நாடகத்தை கொஞ்ச நேரம் பார்த்ததற்கு தண்டனையாக :((((
----------------------------------------------------------------------------------

ஆரஞ்சு: இந்த FEEDJIT ரொம்ப அருமையான விட்ஜெட். எங்கெங்கேர்ந்தெல்லாம் நம்ம பதிவ பாக்க (படிக்கலன்னாலும்) வராங்கன்னு பெருமையா பாத்துகிட்டு இருக்கலாம்.அதுவும் என்னோடது மாதிரி ஏழரை பேர் (கவனிக்கவும் - ஒரு வார்த்தை மிஸ்ஸிங்)வாசகர்கள் படிக்கும் பதிவுகளில் FEEDJIT ஐ வைத்து ஆராய்ச்சியே நடத்தலாம். தமிழ்மணத்திற்கும் FEEDJIT ற்கும் பூர்வ ஜென்ம அல்லது இந்த ஜென்ம பகை போலும். அங்கிருந்து வரும் எல்லோரையும் FEEDJIT உதாசீனப்படுத்தி விடுகிறது.

மேலும் சில நாட்கள் கவனித்ததில் துபாயிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் கிட்டத்தட்ட தினமும் என் பதிவுக்கு வருகிறார். புது இடுகைகளே போடாத அன்னிக்கு கூட இவருடைய விசிட் உண்டு. இதுல என்ன பெரிய விஷயம், அறிவிலியோட பதிவுககு ஒரு தீவிர விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. ஸ்க்ரீன் ஷாட்ட பாருங்க.


சைட் பார்ல இருக்கற நான் படிக்கும் பதிவுகள் லிஸ்ட்ல இருக்கற பதிவுகள் எல்லாத்துக்கும் இங்கேர்ந்துதான் அவுரு போவாரு. முக்காவாசி நாளைக்கு ஒரே ஒரு "Dubai arrived" ம் பத்து பதினைந்து "Dubai left via" வும் இருக்கும். ஆகவே பிரபல பதிவர்களே உங்களுக்கு இருக்கும் ஏழரையில் என் அணில் பங்கும் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------

திராட்சை: 50 ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. உலக நாயகன் கூட சினிமாவுக்கு வந்த ஐம்பதாவது வருடத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.50 ஆவது ஆண்டு திருமண நாள், 50 ஆவது பிறந்த நாள் போன்றவற்றை தங்கமாக கொண்டாடுகிறார்கள்.அப்படி இப்படி தட்டுத் தடுமாறி "எங்கப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்ற வகையில் நான் கிறுக்கித் தள்ளியவற்றின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுவிட்டது. பெருவாரியான அளவில் திரண்டு வந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் "கண்கள் பனித்து இதயம் இனித்த" நன்றிகள். முக்கியமாக மேலே சொன்ன துபாய் அன்பருக்கு இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.

Thursday, September 3, 2009

சாலட் - 03/செப்/2009



ஆப்பிள்: கொஞ்ச நாளாவே எனக்கும் அந்த ஆசை வந்திருச்சு. அவியல், கிச்சடி, குவியல்,கலவை, காக்டெயில்,பஞ்சாமிர்தம், கொத்து பரோட்டா, ஊறுகாய் அப்படின்னு ஆளுக்கொன்னா குட்டி குட்டி விஷயமா கலந்து கட்டி அடிக்கறாங்களே, நம்மளும் ஒண்ணும் இப்படி போட்டா நல்லா இருக்குமேன்னு (அட, எனக்குதாங்க) தோணிக்கிட்டே இருந்துது. ஆனா என்ன பேரு வைக்கறதுன்னு யோசிச்சு தலைய சொறிஞ்சு சொறிஞ்சே ஆறு மாசம் ஓடிப் போச்சு.

கொஞ்ச நாள் முன்னாடி கதம்பம்னு வைக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.எதுக்கும் இருக்கட்டும்னு கூகிள்ல போயி "கதம்பம்"னு தேடிப் பாத்ததுலதான் தெரிஞ்சுது, அண்ணாச்சி வடகரை வேலன் ஏற்கெனவே அத காப்பிரைட் வாங்கிட்டாருன்னு.

குப்பை, கசக்கிய காகிதங்கள் அவ்வளவு ஏன்? சாக்கடை, வாந்தி அப்படின்லாம் கூட தோணிச்சு. யாராவது ஒருத்தரை பத்தி எழுதிப்புட்டு, "உங்களை பத்தி இந்த வாரம் குப்பைல எழுதிருக்கேன்" அப்படின்னா சொல்ல முடியும்?

ரெண்டு நாள் முன்னாடி டிவில சமையல் நிகழ்ச்சியில் சாலட் செய்வதை பார்த்ததும் கப்புன்னு புடிச்சிகிட்டேன். நான் இதுவரைக்கும் தேடுனதுல வேற யாரும் இந்த பேர்ல கலப்படம் பண்றதா தெரியல. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க மாத்திருவோம்.
-------------------------------------------------------------------------------------

அன்னாசி: பதிவுலக நண்பர் ஒருவரிடம் முதலில் பின்னூட்டங்கள் மூலமாக, அப்புறம் மின்னஞ்சல் பின்னர் ஃபோன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்ந்து சென்ற வாரக் கடைசியில் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த பதிவர் யாருன்னு கேக்கறீங்களா?

இவருடைய பதிவின் பெயரிலேயே தமிழில் ஒரு பத்திரிக்கையும் உண்டு. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தலைக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. அவருடைய பதிவின் லோகோ "ஆந்தை". அவ்வப்போது "கிச்சடி" கிண்டுவார்.

நேரில் பழகுவதற்கும் இனிமையானவர்.ஆனால் சந்தித்த போதுதான் அவர் செய்யும் சேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இந்த சேவை மனப்பான்மையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுமாறு அவர் துணைவியாரும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.அவர் செய்த சேவைகள் குறித்த வீடியோஇங்கே
------------------------------------------------------------------------------------
திராட்சை: