Friday, October 23, 2009

எத்தனையோ பாத்துட்டோம்........ஹ்ம்ம்ம்ம்ம்....

டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு முந்தைய நாள் சென்னைக்கு போக வேண்டி வந்தது.என் சித்தப்பா பையனின் திருமணம். அவர்கள் வீட்டிலேயே நான்கு வருடம் தங்கி படித்திருக்கிறேன். போகாவிட்டால் நன்றாக இருக்காது. திருமணத்தன்று இரவு ரிசப்ஷன் முடிந்த கையோடு கிளம்பி விட்டால் பிரசவத்தன்று கரெக்டாக வந்து விடலாம். மேலும் பார்த்துக் கொள்ள அவள் அப்பா, அம்மா மேலும் கூப்பிடு தூரத்தில் மாமாக்கள் என்று எல்லோரும் உண்டு. இப்படியெல்லாம் மனதை தேற்றிக் கொண்டு மனைவியின் எதிர்ப்பையும் மீறி சென்றாலும் சென்னையில் இருப்பே கொள்ளவில்லை. எப்போதும் மனைவி, பிரசவம், குழந்தை என்று மனது முழுவதும் திருச்சியிலேயே இருந்தது.

ஒரு வழியாக திருமணம் ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ஏறிவிட்டேன். ட்ரெயின் ஏறுவதற்கு முன் போன் செய்தபோது இன்னும் வலி வரவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தாள். காலையில் திருச்சி போய் மாமனார் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் யாரும் இல்லை. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டதாக மச்சினன் கூறினான்.

பரபரப்பாக கிளம்பி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனால், ஆஸ்பத்திரி உடையில் வார்டுக்கு வெளியில் வந்து பலகீனமாக ஒரு புன்னகை பூத்தாள். ஊசி போட்டும் வலியெடுக்கவில்லை. அடுத்த இரு மணி நேரங்களில் பனிக்குடம் உடைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாலும் வலியெடுக்கும் அறிகுறிகள் தெரியாததாலும் சிசேரியனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். மாமியாரின் முகத்தில் கவலை ரேகைகளும், மாமாவின் கண்கள் தளும்பவும் அதுவரை தைரியமாக இருந்த நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பூத்துவாலையில் சுற்றி "தோ பாருங்க ரோஸ் பேபி", என்றவாறே நர்ஸ் உள்ளங்கையை விட சற்றே பெரிய அளவிலான ஒரு பூவை கொண்டு வந்து காண்பித்தார். தொட்டுப் பார்க்க கூட பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமானார்தான் இடுப்புக்கு கீழ் மறைத்துக் கொண்டிருந்த துவாலையை படக்கென்று விலக்கி "ஹை.. பேரப்பய" என்றார். "இன்னிக்கு பொறந்த பன்னெண்டு குழந்தைகளில் இது மட்டுந்தான் ஆம்பள புள்ள" என்ற உபரி தகவலை அளித்துவிட்டு நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே போய் விட்டார்.

"இன்பெக்ஷன் அவாய்ட் பண்றதுக்காக சிசேரியன் குழந்தைகளை 24 ஹவர்ஸ் ஸ்பெஷல் கேர் யூனிட்ல வெச்சிருப்போம், அப்பப்போ மதர் ஃபீட் பண்ண மட்டும் கூட்டிட்டு வருவாங்க, நத்திங் டு வொர்ரி" என்று பிரசவம் பார்த்த லதா டாக்டர் சொல்லி விட்டு கிளம்பும்போதுதான் "ஹவ் ஈஸ் தி மதர்?" என்று கேட்டேன். "நோ ப்ராப்ளம்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்பறமாபோய் பாருங்க" என்றார்.

மதியத்துக்கு மேல் ஸ்பெஷல் கேர் யூனிட்டிற்கு போய் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பிறந்த மேலும் ஐந்து பெண் குழந்தைகள் சூழ ஜாலியாக ஏசி ரூமில் தூங்கிக் கொண்டிருந்தான்.


அக். 24, 2009 : " அப்பா, இன்னிக்கு எனக்கு லெவென்த் பர்த் டே. புது சைக்கிள் வாங்கித் தர்றியா?"

எட்டு மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டே மாடிப் படியில் சறுக்கி விழுந்து தாடை பிளந்து தையல் போட்டது,

காது குத்தி தோடு போட்ட அன்று இரவே தோடு தலைகாணி நூலில் சிக்கிக்கொண்டு ரத்தம் வந்து கதறி அழுதது,

ப்ளே ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷர்மிலியால் கன்னத்தில் ரத்தம் வருமளவுக்கு கடிபட்டது,

எல்.கே.ஜியில் பெஞ்ச் முனையில் இடித்துக்கொண்டு கண்ணை சுற்றி கருவளையமாக ரத்தம் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் படத்து வில்லன் போல நின்றது,

யூ.கே.ஜியில் இரும்பு கேட்டில் ஏறி விளையாடி கால் இடையில் சிக்கி கொண்டு, கால் முழுவதும் வீங்கி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்.ரே எடுத்தது,

ஒன்றாம் வகுப்பில் புருஷோத்தமனுடன் புல்லு சண்டை போட்டு கை உடைந்து ஐம்பது நாள் தொட்டில் கட்டிய கையுடன் அலைந்தது,


சிங்கப்பூர் வந்த பிறகும் கூட மூன்றாவது படிக்கும்போது ஒரு நாள் சீன நண்பனிடம் பேச்சு சண்டை முற்றி, நசுக்கிய பெப்ஸி கேனால் முதுகில் ரத்தக்கோடுடன் வந்தது

இப்படியெல்லாம் எத்தனையோ பாத்துட்டோம்....ஹ்ம்ம்ம்ம்ம்....

"ஹேப்பி பர்த் டே டா செல்லம், சாயங்காலமா போயி சைக்கிள் வாங்கிறலாம்.... "

12 comments:

Prabhu said...

பையன் ஸ்மார்ட்டா இருக்கானே! ஆங்கில பட கிளைமாக்ஸ்ல வர ஹீரோ மாதிரி தொட்டில்ல கைய வச்சிருக்க்கான்!

Anonymous said...

நல்ல நினைவுகூறல். ரசித்தேன். செல்வனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

Mahesh said...

வாவ்.... ஹேப்பி பர்த்டே !!! சொல்லவேயில்ல....

நாங்கள்லாம் பழைய சட்டைக்கு பட்டன் தெச்சாலே பார்ட்டி கேப்போம்....

அன்புடன் அருணா said...

எவ்வ்ளோ சுட்டி!வாழ்த்துக்கள்!

அறிவிலி said...

@pappu - நன்றி

வடகரை வேலன் - நிச்சயமா சொல்லிர்றேன், நன்றி

மகேஷ் - பய பார்ட்டியெல்லாம் வேணாணுட்டான். அடுத்த தடவ பட்டன் தைக்கும்போது நிச்சயம் சொல்றேன்.

அருணா - மிகவும் நன்றி, ஹ்ம்ம்.. சுட்டிதான்.

கார்க்கிபவா said...

என் வாழ்த்துகளும் சகா

அறிவிலி said...

@கார்க்கி

நிச்சயம் சொல்லிர்றேன், நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதை விட சொல்லிமாளா அட்டகாசமெல்லாம் செய்த நானே ஏதோ ஓரளவு வாழ்ந்து விட்டேன். இளமையில் கட்டுப்போடா நாளே இல்லை என்பார்கள். அப்படி ஒரு கூத்து.

இவர் மிக அருமையாக வருவார்..;கவலைப்படாமல் நல்ல சைக்கிளாக வாங்கிக் கொடுங்கள்.என் அன்பான வாழ்த்துக்கள்.

வலசு - வேலணை said...

நன்றாக அனுபவித்து எழுதியிருப்பது புரிகிறது.
உங்கள் பையனுக்கு காலம் தாழ்த்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அறிவிலி said...

நன்றி - வலசு வேலணை

நன்றி யோகன் பாரிஸ் - உங்க அளவுக்கு வந்தா நிச்சயமா சந்தோஷப்படுவேன்.

பித்தனின் வாக்கு said...

நானும் பின்னூட்டம் போட்டுட்டேன். ஆமா நாம சந்தித்துள்ளேமா. எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லை. மன்னிக்கவும் நன்றி.

அறிவிலி said...

@பித்தனின் வாக்கு

நாம் இதுவரை சந்திக்கவில்லை. விரைவில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். நன்றி.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.