Tuesday, April 7, 2009

பல்லடுக்கு வியாபாரமும் பல்லிடுக்கு மாமிசமும்

அலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, "என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு" என்று சொன்னாலோ...

அல்லது...

அதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. "ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா" என்று சொன்னாலோ...

அந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.

எல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.

பெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து உங்களை சங்கிலித்தொடருக்குள் வரவைக்க முயற்சிப்பார்கள்.

இந்த வியாபாரத்தில் லாபம் அடைய வழி, மேன் மேலும் ஆட்களை சேர்ப்பதன் மூலம்தான். பொருள்களை விற்று வரும் கமிஷன் தொகை மிக சொற்பமே.இதற்கு முக்கிய காரணம் இந்த பொருள்கள் எல்லாம் வெளி சந்தையில் கிடைக்க கூடியவற்றை விட பல மடங்கு அதிகம்.ஒரு நல்ல ப்ராண்ட் பற்பசையை 40 ரூபாய்க்கு கடையில் வாங்க முடிந்தால் அதை போன்ற ஒரு பற்பசை இங்கே 100 ரூபாயாக இருக்கும்.இதற்கு அவர்கள் கூறும் காரணம் "தரம்".

இந்த 100 ரூபாய் பற்பசையை ஒர் பட்டாணி அளவே உபயோகித்தால் போதும் என்பார்கள். (ஆனால் உண்மையில் கடையில் வாங்கும் 40 ரூபாய் பற்பசையும் பட்டாணி அளவே போதும்.)

அப்படியே தரம் அதிகம் என்று வைத்து கொண்டாலும், 40-50 வருடங்களாக சந்தையில் இருக்கக்கூடிய (எ.கா.-கோல்கேட்)பொருளை விட சிறந்தது என்று பலரையும் கன்வின்ஸ் செய்து வாங்க வைப்பது மிக கடினம்.இது போலவே சோப்பு, ஷாம்பூ என்று பலவும் உண்டு.

நீங்கள் உறுப்பினராகிவிட்டால் வீட்டுக்காக வாங்கும் பொருள்கள் மாதம் 500 ரூபாய் என்றால் 75 ரூபாய் திரும்ப கிடைத்துவிடும் என்பது இன்னொரு துருப்பு சீட்டு. ஆனால் வெளி சந்தையில் வாங்கினால் இந்த செலவு ரூபாய் 300 மட்டுமே ஆகும்.

ஒரு விஷயம் நிச்சயம் உறுதி. கடினமாக உழைத்து உங்களுக்கு கீழே பலரும் சங்கிலியில் இணைந்து விட்டால் லாபம் கிடைக்க வழி உண்டு. ஆனால் இத்தகைய கடின உழைப்பும், வியாபார திறமையும் இருப்பவர்கள் மற்ற துறைகளிலும்(விற்பனை பிரதிநிதி,ஆயுள் காப்பீட்டு முகவர் போன்ற) பிரகாசிக்க வாய்ப்பு மிக அதிகம்.

சில வருடங்களுக்கு முன் இத்தகைய பல்லடுக்கு வியாபாரங்கள் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தன. மேலே குறிப்பிட்ட மாதந்திர சாமான்கள் தவிர மலேஷியாவில் இருந்து மருந்து, தங்கம்,நிலம்,வீடு,காய்கறி,மளிகை என்று பல வகைகள் உண்டு.பொருள்களே இல்லாமல் ஆள் சேர.. சேர.. வெறும் காசு மட்டுமே திரும்ப கிடைக்கும் என்று கூறும் ஏமாற்றும் இருந்தது.

கொஞ்சம் கூட பேச்சு திறமையே இல்லாத பல நடுத்தர வர்க்க நண்பர்கள், நாலு பேர எப்படியாவது சேர்த்துவிட்டால் அவர்களில் ஒருவரோ அல்லது அவர்களுக்கு கீழே இருக்கும் ஒருவரோ தீவிரமாக உழைத்தால் காசு கிடைக்கும் என்று நம்பி சேர்ந்துவிடுகிறார்கள்.

இதற்காக இவர்கள் நம்புவது அவர்களுடைய மார்க்கெட்டிங் திறமையை அல்ல. நட்பு வட்டத்தை !!!

இதற்கு இரண்டு விதமான பின்விளைவுகள் உண்டு.

முதலாவது, நட்பு முறிவு.(டேய், சங்கிலி சாமினாதன் வர்ரான்... ஒட்றா..). பல வருடங்களுக்கு பிறகும் கூட, "நம்ம கேட்டு இவன் சேர மாட்டேன்னுட்டான் இல்ல"...என்று இவரும், "இவன் இன்னும் அந்த பிஸினஸ் செய்யறானோ" என்று அவர் நண்பரும் நினைத்துக்கொண்டு ஒன்று சேர்வதேயில்லை. சாதரணமாக இவர்கள் ஃபோன் செய்தால் கூட "வீட்ல அவர் இல்லீங்க" என்ற வசனம் அடிக்கடி பேசப்படும்.செல்லாக இருந்தால் சிக்னல் வீக்காகவோ, மீட்டிங்கிலோ இருப்பதாக சொல்லி கட் செய்து விடுவார்கள்.

இரண்டாவது, காசு போனால் போய் தொலையட்டும் "இவன் மூஞ்சிய தெனம் பாத்து தொலையணுமே" என்பதற்காக சேர்ந்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவது.

உச்சகட்ட கொடுமையாக நீ என்னோட ஸ்கீம்ல சேரு... நான் ஒன்னோடதுல சேந்துக்கறேன் என்று இரண்டிலும் தொலைக்கும் அசம்பாவிதமும் நடந்ததுண்டு.

எனக்கு தெரிந்தவர்களில் சுமார் 50 பேர் இந்த மல்டி லெவல் வியாபாரத்தை முயற்சி செய்து பல வேறு லெவல்களில் நிறுத்தி விட்டார்கள். இதன் பலனாக இவர்கள் இழந்தது சிலரின் நட்பு, அடைந்தது பலரின் கிண்டலும் கேலியும்.

இந்த மல்டிலெவெல் மார்க்கெட்டிங் செய்யும் / செய்யப்போகும் அன்பர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான்.

தயவு செய்து நண்பர்களையும், உறவினர்களையும் நம்பி இதில் இறங்கி.உறவுகளை முறித்து கொள்ளாதீர்கள்.

உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம், அதற்கு பல்லடுக்கை விட சிறந்த வழிகள் பல உண்டு.

20 comments:

dondu(#11168674346665545885) said...

எனது இந்தப்பதிவிலிருந்து சில வரிகளை பொருத்தமாக இருப்பதாலும் இங்கே பின்னூட்டமாக அளிக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/05/blog-post_07.html

சமீபத்தில் 1956ல் என் அன்னையின் தோழி ஒருவர் இம்மாதிரி ஒரு திட்டத்தில் தான் சேர்ந்து கொண்டு அவரையும் சேருமாறு படுத்தினார். என் தந்தை அதெல்லாம் நடக்காத காரியம் என்று விரட்டி விட்டார். பிறகு ஒரு நாள் என்னுடன் இது பற்றிப் பேசுகையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விளக்கினார்.

ஆனால் நீங்கள் சொல்வது போல கணக்கெல்லாம் போட்டு அல்ல. அவர் சிந்தனை தெளிவாக இருந்தது. இம்மாதிரி திட்டங்கள் பலவற்றை அவர் தன் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அதில் வெகு சிலரே லாபம் அடைந்தனர் பலர் நஷ்டப்பட்டனர். அவருக்கு இரண்டில் எந்தக் குழுவிலும் இருக்க விருப்பமில்லை அவ்வளவே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?

ஒரு பெரிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு அமெரிக்கர் ஒருவர் ப்ரசெண்டேஷனுக்கு வந்த போது நான் குறிப்பிட்ட நபர் தேவைப்பட்டார். அவர்தான் மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Indian said...

Good post.

அறிவிலி said...

//dondu(#11168674346665545885) said... //

முதலில் உங்கள் வருககைககும், பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்.

சமீபத்தில் (1956)கூட இதெல்லாம், அதுவும் பெண்கள் செய்தார்கள் என்பது எனக்கு புதிய செய்திதான்.

அறிவிலி said...

//Indian said...
Good post.//

நன்றி இந்தியன்.

Anonymous said...

good post

அறிவிலி said...

//Anonymous said...
good post//

நன்றி அனானி...

Anonymous said...

தகவ லு க்கு நன்றி. என்னையும் ஒரு நண்பர் மிகவும் பாடாய்ப் படுத்துகிறார். அஆனாலும் நான் சேராமல் சமாளித்துவருகிறேன்.

தரன்

கும்மாச்சி said...

எனக்குத் தெரிந்து இதில் மாட்டாதவர்கள் இல்லை. குறைந்த பட்சம் அவர்கள் மூஞ்சியை திரும்ப பார்க்கவேண்டாம் என்று போட்டு மறந்தவர்களில் நானும் ஒருவன்.

sakthi said...

பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்.

ayyo

nalla pathivunga

sakthi said...

எதையுமே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத மிகப்பெரிய லட்சியவாதி

nalla latciyam nga anna

ippadiye erukka valthukkal

இலால்குடி பினாத்தல்கள் said...

பட்டாணி அளவு பற்பசையை துலக்கியில் போட்டுத் தேய்த்தால் போதும் என்று நம்ம பையனிடம் சொல்லிப்பாருங்கள். வேலையப் பார்னு சொல்லுவானுங்க. ஏன்னா இவனுங்களுக்கு காத்தால டிபனே பேஸ்ட்தான். அந்த காலத்துல நம்ம பய புள்ளங்க காத்தால டிபனுக்கு ஒரு பொட்டலம் கோபால் பல்பொடிதான் எடுப்பானுங்க. ஊரில பாதிப் பயலுங்க ஆள்காட்டி விரல் ரோஸ் கலர்ல தான் காத்தால இருக்கும். ஆனா 1431 [?] பயோரியா பல்பொடி கொஞ்சம் காட்டமாயிருக்கும். கோபால் கோபால்தான். ஹிஹி.

அறிவிலி said...

//Anonymous said...
தகவ லு க்கு நன்றி. என்னையும் ஒரு நண்பர் மிகவும் பாடாய்ப் படுத்துகிறார். அஆனாலும் நான் சேராமல் சமாளித்துவருகிறேன்.

தரன்//

தரன் - உங்களின் விருப்பமின்மையை தெளிவாக கூறிவிடுவது நல்லது.முடிந்தால் அவரை இந்த இடுகையையும், மேலே டோண்டு சார் கூறியிருப்பதையும் படிக்க சொல்லுங்கள்

அறிவிலி said...

//sakthi said...
எதையுமே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத மிகப்பெரிய லட்சியவாதி

nalla latciyam nga anna

ippadiye erukka valthukkal//

என் லட்சியப்பாதைல வேற யாரும் ஃபாலோ பண்ணிறாதீங்க.

அறிவிலி said...

//இலால்குடி பினாத்தல்கள் said... //

கோபால் பல்பொடி. அப்புடியே சாப்பிடலாம்...

அறிவிலி said...

//கும்மாச்சி said...
எனக்குத் தெரிந்து இதில் மாட்டாதவர்கள் இல்லை. குறைந்த பட்சம் அவர்கள் மூஞ்சியை திரும்ப பார்க்கவேண்டாம் என்று போட்டு மறந்தவர்களில் நானும் ஒருவன்.//

ஹ்ம்ம் போச்சா....

Senthil said...

u r very much true

கோவி.கண்ணன் said...

சிறப்பான கட்டுரை, என்னியும் ஒரு நண்பர் அங்கே கொண்டு உட்கார வைத்தார். லீ மெரிடியன் என்று நினைக்கிறேன். கோட்டு சூட்டு போட்ட ஆட்கள், முகமெல்லாம் ப்ரகாஷம், வாயெல்லாம் பல்லு, சொந்தக்காரர்களைப் போல் ரொம்ப உபசரிச்சாங்க......ஐயோ சாமின்னு ஓடியாந்துட்டேன்

அறிவிலி said...

//Senthil said...
u r very much true//

நன்றி.. திரு.செந்தில்

அறிவிலி said...

//கோவி.கண்ணன் said...
சிறப்பான கட்டுரை, என்னியும் ஒரு நண்பர் அங்கே கொண்டு உட்கார வைத்தார். லீ மெரிடியன் என்று நினைக்கிறேன். கோட்டு சூட்டு போட்ட ஆட்கள், முகமெல்லாம் ப்ரகாஷம், வாயெல்லாம் பல்லு, சொந்தக்காரர்களைப் போல் ரொம்ப உபசரிச்சாங்க......ஐயோ சாமின்னு ஓடியாந்துட்டேன்//

நன்றி.. கோவி.கண்ணன்.

திருப்பியும் ஃபோன் பண்ணுவாங்களே...ஈசியா உட்றமாட்டாங்களே...

Anonymous said...

நன்றி நண்பரே.. நேராக விஷயத்தை தொட்டு மற்றவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். அழைப்புக்கு நன்றி.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.