Thursday, April 30, 2009

மே தினம் - ஹைய்யா...லீவு

"ஏங்க.. நாளைலேருந்து 3 நாள் லீவு தானே, எங்கியாவது வெளில போயிட்டு வரலாங்க" என்றாள் முத்துவின் மனைவி.

"ம்ம்ம்... போலாமே, ஒரு நாள் தீம் பார்க் போவோம், அடுத்த நாள் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு சண்டே மத்யானம் திரும்பி வந்துரலாம்." என்றான் முத்து.

பையன் "ஐய்யா! ஜாலி.. தீம் பார்க் சூப்பரா இருக்கும்" என்று குதித்தான்.

ஐம்பது கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் ஆறு மாதங்களாக போகவில்லையாதலால் மனைவி முகத்திலும் அம்மா வீட்டுக்கு போகும் சந்தோஷம் தெரிந்தது.

பேக்டரி போகும் வழியில் பையனை சைக்கிளில் கூட்டிக் கொண்டு போய் பள்ளியில் விட்டான். வழியெல்லாம் தீம் பார்க் பிரலாபம்தான்.

"அங்க பெரிய சறுக்கு மரம் தண்ணி ஒடிக்கிட்டே இருக்கும், சூப்பரா இருக்குமாம்"

"படகு மாதிரி ஒரு பெரிய ஊஞ்சல், பெரிய்ய்ய்ய்ய்ய ராட்டினம், ரோலர் கோஸ்டர் எல்லாம் இருக்கும்" என்று அலப்பி கோண்டே வந்தான்.

பேக்டரி வாசலிலயே சக தொழிலாளர்கள் எல்லாரும் கூடியிருந்தனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பரசுராமன் சார் சிறப்பு உரை ஆற்றப் போவதாக தொழிலாளர் சங்க செயலாளர் ஒலி பெருக்கியில் அறிவித்தார். பரசுராமன், எங்களுடையதைப்போல் இன்னும் நாலு பேக்டரிக்கு சொந்தக்கார கோடீஸ்வரர்.

"தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் என் காலை வணக்கம். இந்த தொழிலகத்திற்காக ஒரு சிறிய விதையை நட்டது மட்டுமே என்னுடைய பங்கு. வியர்வை என்னும் நீருற்றி, அயராத உழைப்பு என்னும் உரமிட்டு அதை ஒரு மரமாக வளர வைத்தது நீங்கள்தான்.

உங்களைப் போன்ற தொழிலாளர்கள்தான் இந்த நாட்டின், ஏன் உலக நாடுகள் அனைத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாய் இருப்பதால்தான் மே 1 ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

உங்கள் அனைவருக்கும் தொழிலாளார் தின வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்."

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா எவ்வளவு காசு பணம் சேந்தாலும் நம்மளயெல்லாமும் மதிச்சு பேசறாரே" என்று மனதுக்ககுள் பாராட்டியவாரே முத்து வேலையை ஆரம்பிக்க உள்ளே சென்றான்.

நான்கு மணிக்கு சற்று முன் சூப்பர்வைசர் ரமேஷ் அவனுடைய செக்ஷனில் இருக்கும் அனைவரையும் அழைத்தார்.

"அஸெம்ப்ளில நடந்த தப்பால பம்ப் எல்லாம் ஃபைனல் இன்ஸ்பெக்ஷன்ல ஃபெயில் ஆயிடுச்சி. இது அடுத்த வாரத்துல அனுப்ப வேண்டிய எக்ஸ்போர்ட் ஆர்டர். அதனால் நீங்க எல்லாரும் இந்த 3 நாளும் ஹாலிடே ஒவர் டைம் வந்து அந்த ஆர்டருக்கு வேண்டிய பார்ட்ஸ் எல்லாம் முடிச்சு குடுத்துருங்க" என்றார்.மறுத்து பேசுவதில் பயனில்லை என்றது அனுபவ அறிவு.

அவுட் டைம் சைரன் அடிக்கவும் யூனிபார்ம் மாற்றிக் கொணடு, மனைவியையும் மகனையும் எப்படி சாமாதானப்படுத்துவது என்ற யோசனையுடன் சைக்கிள் ஸ்டாண்ட் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

முதலாளி பரசுராமன் அவர் டிரைவருடன் பேசிக்கொண்டே வரவும் வழிவிட்டு அவர்கள் பின்னால் நடந்தான்.

"நீ நைட்டு 8 மணிக்கெல்லாம் வந்துரு. நாளையும், சனிக்கிழமையும் ஊட்டில இருப்போம்.
சண்டே காலைல ப்ளாக் தண்டர் போயிட்டு திரும்பி வந்துரலாம்" என்று கொண்டே போனார்.

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா" என்று நினைத்து கொண்டே,முத்து பையனுக்கு Pokemon பொம்மையும், மனைவிக்கு மல்லிகைப் பூவும் வாங்க கடைத்தெரு வழியாக சைக்கிளை மிதித்தான்.

6 comments:

செந்தில்குமார் said...

நல்ல கற்பனை ... உழைப்பாளிகளின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் இருக்கும்...

படித்தேன்... ரசித்தேன் !

அறிவிலி said...

//செந்தில்குமார் said...
நல்ல கற்பனை ... உழைப்பாளிகளின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் இருக்கும்...

படித்தேன்... ரசித்தேன் !//

நன்றி.. திரு.செந்தில்குமார்

pappu said...

பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்யா- உங்களத்தான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

முடிவு அவ்வளவு அழுத்தமாக இல்லையோ.?

அறிவிலி said...

நன்றி பாப்பு..

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
முடிவு அவ்வளவு அழுத்தமாக இல்லையோ.?//

சிறுகதைகளில் என் முதல் முயற்சி ஆதி.சொதப்பிட்டனோ.... முடிவுக்கு வேற ஏதாவது சஜெஷன்.. சும்மா கத்துக்கலாம்னுதான்...

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.