Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, February 7, 2014

கூழாங்கல்லுடன் சில மாதங்கள்

தான் புதிதாக டிசைன் செய்த கைக்கடிகாரத்துக்கு போதுமான முதலீடு கிடைக்காததால் எரிக் மிக்கோவ்ஸ்கி ஏப்ரல் 2012ல் கிக்ஸ்டார்ட்டர் என்ற Crowd Funding இணையதளத்தில் பொதுமக்களிடம் முதலீடு கோரினார்.
 
அந்த கைக்கடிகாரத்தால் என்ன செய்ய இயலும், அதில் என்ன புதுமை போன்றவற்றையெல்லாம் விளக்கி, முதலீடு செய்பவர்களுக்கெல்லாம், தயாரானவுடன் சகாய விலையில் (US$150க்கு பதில் US$99)  மட்டுமே  கைக்கடிகாரத்தை தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

அவர் நிர்ணயித்திருந்த இலக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால் இந்தத் தொகை இரண்டே மணிநேரத்தில் கிடைத்தது மட்டுமல்லாமல், சில நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலானது.

சில வருடங்களுக்கு முன்பு வரை செல்போன்களின் அளவு சிறியதாகிக் கொண்டே வர,எவ்வளவு சிறியதோ அவ்வளவு விலை அதிகமாகவும் இருந்தது. ஸ்மார்ட் போன்களின் வரவு, நிலைமையை தலைகீழாக்கியது. கிட்டத்தட்ட கம்ப்யூட்டரில் செய்யும் அத்தனை தினப்படி வேலைகளையும் போனிலேயே செய்ய இயலுவதால் திரையின் அளவும், அதன் தொடர்ச்சியாக போனின் அளவும் பெரிதாகிக் கொண்டே போக ஆரம்பித்துவிட்டது.

இந்தப் பெரிய போன்களால் பல அனுகூலங்கள் கிடைத்தாலும் சில அசெளகரியங்களும் சேர்ந்தே வந்தன.உதாரணமாக, காதுக்கும் தோளுக்கும் இடையில் கிடத்தி பேசிக்கொண்டே எதிரில் வரும் லாரிக்கும், கூடவே வரும் பஸ்ஸுக்கும் இடையிலான 6 அங்குல சந்தில் புகுந்து செல்லும் வித்தை தெரியாதவர்கள்,போன் அடித்தால் பைக்கை ஓரங்கட்டிவிட்டுத்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.ஹெட்செட் மாட்டியிருந்தாலும், யார் என்றே தெரியாமல் அட்டெண்ட் செய்து போன வாரம் பணத்தை திருப்பித் தருவதாய் சொல்லியிருந்த கடன் கொடுத்த பாவியிடம் மாட்டிக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

அலுவலகக் கூட்டங்களில் உட்கார்ந்திருக்கும் போது காலோ, மெஸ்ஸேஜோ வந்தால், முக்கியமானதா? இல்லை சகதர்மினியின் "ஒண்ணுமில்ல, சும்மாத் தான், என்ன பண்றீங்க?"அழைப்பா என்று தெரிந்து கொள்ளவே போனை கையிலெடுத்துப் பார்க்க வேண்டும்.

இதுவே உஙகள் கைக்கடிகாரத்தில் அழைப்பவர் பெயர் தெரிந்தால், நீஙகள் எதிர்பார்த்திருக்கும் முக்கியமான அழைப்பாக இருக்கும் பட்சத்தில் எழுந்து வெளியில் போய் பேசிவிட்டு வரலாம். ஒவ்வொரு முறையும் போனை எடுத்துப் பார்த்தால் உங்களையும் பக்கத்தில் வாட்ஸாப்பில் கடலை போட்டுக்கொண்டிருப்பவரைப்   போல நினைக்க வாய்ப்புகளுண்டு. அதே போல் மெஸ்ஸேஜ் வந்தாலும் கடிகாரத் திரையில் பார்த்துவிட்டு, அவசரச் செய்திகளுக்கு மட்டும் பதிலளித்து உங்களை சாகத் தூண்டும் இன்ஷூரன்ஸ் விளம்பரங்களை புறக்கணிக்கலாம்.

இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து சந்தைப்படுத்த  பல நிறுவனங்கள் முயற்சி செய்தாலும் பெரிய அளவில்  வெற்றி கிட்டவில்லை.  சோனி  ஓரிரண்டு மாடல்களை வெளியிட்டது.ஆனால்  பெரிய  அளவு மற்றும் எடை,  அடிக்கடி   போனுடன் தொடர்பு துண்டித்துக் கொள்ளும் பிரச்சினை, 5-6 மணிக்கொரு தடவை வாட்சை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற இன்னல்களால் மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் போயிற்று. அது மட்டுமின்றி மணி பார்ப்பதற்கே திரையைத் தொடவோ அல்லது பட்டனை அழுத்தவோ வேண்டியிருக்கும். சில போன்களைப் போலவே சூரிய ஒளியில் ஒன்றும் கண்ணுக்கு தெரியாது.

எரிக், தான் டிசைன் செய்த கைக்கடிகாரத்தில் மேற்சொன்ன பிரச்னைகள் எதுவும் இருக்காதென்று துண்டெல்லாம் போடாமல் சத்தியம் செய்ததை நம்பித்தான் அறுபத்தியிரண்டாயிரம் பேர் பணத்தைக் கட்டினார்கள்.

எனக்கு இதைப்பற்றி தெரிய வந்தது ஜனவரி 2013ல் தான்.சோனியின் ஸ்மார்ட் வாட்ச் பற்றித் தேடும்போது அகஸ்மாத்தாக கண்ணில்பட்டது. எங்களுக்கு போதுமான பணம் சேர்ந்துவிட்டது, உங்களுக்கு வாட்ச் வேணும்னா, பணமெல்லாம் இப்ப கட்ட வேணாம், பதிவு மட்டும் செஞ்சுக்கங்க. வரிசைக்கிரமப்படி உங்கள் முறை வரும்போது மின்னஞ்சல் அனுப்புவோம், அப்ப பணம் கட்டினா போதும் என்ற அவங்களோட டீல் பிடித்திருந்ததால் பதிவு செய்து வைத்தேன். எனக்கு கடந்த செப்டெம்பரில் மின்னஞ்சல் வருவதற்குள் பல்லாயிரம் பேர் பல மாதங்களாக உபயோகிக்க ஆரம்பித்து இணையமெங்கும் பாசிடிவ் ரிவ்யூக்கள் விரவியிருந்தன. எனவே தைரியமாக பணத்தைக் கட்டிவிட்டேன்.அக்டோபர் முதல் வாரத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. மிகவும் சிம்பிளான பேக்கிங், வாட்சும் ஒரு யு.எஸ்.பி சார்ஜிங்;கேபிளும் மட்டுமே.மற்றபடி ஒரு துண்டு காகிதம் கூட கிடையாது.

சார்ஜிங் கேபிள் செருக வாட்சில் கனெக்டர் எதுவும் கிடையாது.வாட்சின் இடது  பக்கத்தில் இருக்கும் இரு காப்பர் புள்ளிகளுக்கு அருகே கேபிளை  கொண்டு போனால் பச்சக் என்று காந்த சக்தியில் ஒட்டிக்கொள்கிறது. மறுமுனையை போன் சார்ஜரிலோ,கம்ப்யூட்டர் யு.எஸ்.பி போர்டிலோ கனெக்ட் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் போனில் Pebble என்ற அப்ளிகேஷனை நிறுவிக்கொண்டு, ப்ளூடூத் பேரிங் செய்தவுடன் caller id யையும், SMS ஐயும் அழகு சொட்ட வாட்சிற்கு அனுப்பி வைத்து விடுகிறது.

Pebble notifier போன்ற அப்ளிகஷன்கள் மூலம் பேஸ்புக் , வாட்ஸாப், ஈமெயில்,ஜிமெயில் என்று எல்லாவிதமான நோட்டிபிகேஷன்களையும் கைக்கடிகாரத்துக்கு அனுப்பும் வகையில் நம்  தேவைக்கேற்றபடி  செட்டப்  செய்ய முடிகிறது. நான்  கேலண்டர்  மற்றும்  அலுவலக  மின்னஞ்சல்  தவிர வேறெதற்கும் Configure செய்யவில்லை. ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும்  வாட்ச் ஒருமுறை அதிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கிறது.

போன்  திரைகளைப் போலில்லாமல் சூரிய ஒளியில் பளீரென்று தெரிகிறது. இருட்டில் படிக்க பேக்லைட் உண்டு. கையை லேசாக ஆட்டினால் போதும்.உள்ளிருக்கும் ஆக்ஸலரோமீட்டர் பேக்லைட்டை ஒளிரவைத்து விடுகிறது.

நேரம் காட்டும் திரையின் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கலாம். இதற்காக  தமிழ் உட்பட ஆயிரக்கணக்கான watchface டிசைன்கள் இங்கே  கொட்டிக் கிடக்கின்றன. போனில் டவுன்லோட்  செய்து  மாற்றிக்கொண்டே  இருக்கலாம். தினம் ஒரு வாட்ச் கட்டுவது போன்ற ஒரு பிரமையை கொடுக்கிறது.எட்டு watchface வரை வாட்சிலேயே சேமித்து  வைத்துக் கொள்ளலாம்.

அதிலும் திருப்தியில்லாவிட்டால் canvas for Pebble போன்ற அப்ளிகேஷன் மூலமாக போனிலேயே நீங்களே டிசைன் செய்து கொள்ளலாம்.கூகிள், ஆப்பிள் போலவே Pebble App Storeம் இந்த வாரத்திலிருந்து திறந்து விட்டார்கள்.

ரெகுலரான firmware அப்டேட், பயனார்களின் சந்தேகங்களை நிவர்த்திக்க forum, டெவெலப்பர்களுக்கான  களமமைத்து  கொடுத்தல்  போன்ற  விஷயங்கள்  மூலம்  பிற்காலத்தில் ஒரு நல்ல  பிராண்டாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளை காட்டுகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில், வார இறுதிகளில் மட்டும் ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதுமானதாக இருக்கிறது.

குறைகள் என்று பார்த்தால், பார்வைக்கு ஒரு சீப் பிளாஸ்டிக் வாட்சாக தோற்றமளிப்பதைக் கூறலாம். சாம்சங்கின் கேலக்சி கியர் அல்லது சோனி ஸ்மார்ட் போலவோ கலர் டிஸ்ப்ளே/டச் ஸ்க்ரீனோ இல்லைதான். ஆனால் அதுவே இதற்கு சாதகமான பேட்டரி லைப்  ஐ கொடுக்கிறது.

இப்போது சில நாட்களுக்கு முன் ஸ்டீல் கேசிங்கில்  புதிய  மாடலையும்  வெளியிட்டு விட்டார்கள். ஆனால்  விலைதான் US$250.

எந்த பொருளும் நமக்காக வேலை செய்ய வேண்டும். நம்மை வேலை வாங்கக்கூடாது. அந்த விதத்தில், கூழாங்கல் எனக்கு ஒரு  உபயோகமான பொருளாகவே இருக்கிறது.

முதலில் அவர்களின் இணையதளம் மூலமாக விற்று வந்தவர்கள் தற்போது அமெர்க்காவின் பிரபலமான Best Buy போன்ற கடைகள் மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.

Tuesday, July 7, 2009

நான் நல்லாத்தான் ஆடினேன், மேடைதான் கோணல்


இனிமேல் யாரும் கேஸ் அடுப்பில் சமைக்க கூடாது. இது கொடுமைப்படுத்தும் மாமியார்களுக்கு மருமகள்களை ஒழித்துக்கட்ட எளிதான வழியாக தொலைக்காட்சி தொடர்களில் சொல்லிக்கொடுத்து விட்டார்கள். அதற்காக நீங்கள் கிருஷணாயில் அடுப்பு பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். அதிலும் பலவிதமான அபாயங்கள் இருக்கிறது.பம்பு ஸ்டவ் வெடிக்க கூட சான்ஸ் இருக்கிறது. எலெக்ட்ரிக் அடுப்பு - ஆற்காட்டார் ஞாபகம் வந்தா அதப்பத்தி யோசிக்ககூட மாட்டீங்க.காடெல்லாம் சுத்தி அலைஞ்சு சுள்ளி பொறுக்கி,வெறகு வெட்டி பத்த வெச்சு சமைக்கறதுதான் நல்லது. அதுவும் வெறகு பத்த வைக்க ரெண்டு கல்லு வெச்சு தேச்சு தேச்சுத்தான் நெருப்பு மூட்டணும். நெருப்பெட்டி, லைட்டரெல்லாம் கூடவே கூடாது.



யாருக்காவது ஏதாவது தகவல் அனுப்பனும்னா இ-மெயில்லாம் யூஸ் பண்ண கூடாது. உங்களோட தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் பில்கேட்சோ,சோனியாவோ இல்லை ஒபாமாவோ அல்லது உங்கள் எதிரிகளோ படித்துவிடக்கூடும். லெட்டர் போடலாமான்னு கேக்க கூடாது. அதுவும் அரசாங்க துறைதான். போஸ்ட்மேனே கூட உங்க லெட்டரை படிச்சுட்டு பக்கத்து வீட்டு அலமேலுவிடம் போட்டு கொடுத்து விடலாம். லெட்டர், இ-மெயிலுக்கே இந்த கதின்னாக்கா ஃபோன், செல்ஃபோன் பத்தியெல்லாம் கேக்கவே கேக்காதீங்க.டேப்பிங் பண்ணி ஒட்டு கேட்டுருவாங்க. ஆகவே ஆளுக்கு ஒரு புறா வளக்கலாம். அதோட கால்ல எழுத்தாணில எழுதின ஓலைச்சுவடிய கட்டி அனுப்பலாம்.

ஜீன்ஸ் பேண்ட், பெர்முடாஸ், டீ ஷர்ட், ஜாக்கி அண்டர்வேர், ஆனந்த் பனியன், ஷார்ட் சுடி, பாட்டியாலா பாட்டம் என்று அலைபவர்களா நீங்கள். எல்லாத்தையும் கழட்டி தூக்கி எறிஞ்சுட்டு இலை தழை எல்லாம் கட்டிக்கோங்க. அதுவும் கஷ்டமா இருந்தா ஆதாம் ஏவாள் மாதிரி நங்காவா வேண்ணாலும் அலையலாம். பூச்சி கீச்சி கடிக்காமயாவது இருக்கும்.

இப்படியெல்லாம் யாராவது சொன்னா எவ்வளவு டென்ஷன் ஆவீங்க? எந்த துறையாக இருந்தாலும் புதிய டெக்னாலஜிகள் வரும்போது சில குறைகள் இருக்கக்கூடும். அந்த குறைகளை களைந்தோ அல்லது தகுந்த முன்னேற்பாடுகளுடனோ பயன்படுத்தி அதை நாள்பட மெருகேற்றி பயன்படுத்த வேண்டும். அதை விடுதது எங்கோ ஒரு கேஸ் ஸ்டவ் வெடித்தால் இனிமேல் விறகில் சமைப்பதுதான் சிறநதது என்பதோ, எங்கோ ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டால் விமானப்பயணமே கூடாது,தோணி ஏறிதான் சிங்கப்பூர் போவேன் என்பதோ முட்டாள்தனம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு அளவுகளில் பயனபடுத்தப்பட்டு கடந்த இருமுறைகளாக பாராளமன்ற தேர்தல்களில் முழுஅளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால் மிகப்பெரிய அளவில் பொருள் மற்றும் காலவிரயம் தவிர்க்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வன்முறைகளோ முறைகேடுகளோ நடக்காமல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நடந்தேறி வருகிறது.வாககு எண்ணிக்கை மட்டுமே 3 நாட்களுக்கு நடப்பதும் ப்ராணாய் ராய், ரபி பெர்னார்ட், வீரபாண்டியன், மாலன் போன்றவர்களெல்லாம் மூன்று ஷிஃப்ட் ஒவர்டைம் பார்த்து பரிதாபமாக தோற்றுக் கொண்டிருக்கும் கட்சி தலைவர்களை தொலைக்காட்சியில் ரேக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.

இதெல்லாம் இப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையை பெறமுடியாத தலைவர்களும் கட்சிகளும் இப்போது இந்த மின்னனு வாக்கு இயந்திரத்தினால் முறைகேடுகள் நடப்பதாகவும் திரும்பவும் வாக்கு சீட்டு முறைக்கு போகவேண்டும் என்றும் கூறி வருவது கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

தன் மேல் உள்ள குற்றச்சாட்டு நீங்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சமீபத்திய தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்கட்சி தலைவர் பதவியை துறப்பதாக கூறியது போன்ற விஷயங்களால் நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த எல்.கே.அத்வானி போன்ற தலைவரிடமிடருந்து இத்தகைய கருத்து வந்திருப்பது என்னை பெரிதும் அதிர்சசிக்கு உள்ளாக்கியிருக்கிறது.



இவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், ராம் விலாஸ் பாஸ்வான், லல்லு போன்ற தலைவர்களும் கூறிவரும் இதே போன்ற கருத்துகளை தேர்தல் கமிஷன் செவிமடுக்காமல் இருத்தல் சாலச்சிறந்தது.

ஹ்ம்ம்ம்... பார்ப்போம்.

Saturday, June 6, 2009

இந்தியா ஒளிர்கிறது - (அ)

ஜூன் மாதம் இந்தியா வர வேண்டும் என்பது நான்கைந்து மாதங்கள் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.

2 வருடங்கள் முன்பு ஒரு முறை வந்திருந்தாலும் வெளியில் அதிகம் நடமாட முடியாமல் உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டு சிறையில் அடைபட்டே கிடந்ததால் இந்த விஜயம் 4 வருடங்களுக்கு பிறகு வருவதாகத்தான் கணக்கு.

இந்த 4 வருடங்களில் ஏற்பட்டுள்ள கவனிக்க தக்க மாற்றங்களையும், மாற விரும்பும் விஷயங்களையும் பதிவு செய்ய விருப்பம்.

புறப்படுவதற்கு முன்பே பிரமித்த விஷயம், இ- காமெர்ஸில் (மின் வணிகம்) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் IRCTC வெப் சைட்டின் மூலமாக டிரெயின்களுக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. 4 வருடங்கள் முன்பே IRCTC இந்த சேவை அளித்து வந்தாலும், உள்ளூர் முகவரிக்கு டிக்கட்டை கொரியர் செய்து வந்தார்கள். பயணம் செய்யும் போது இந்த டிக்கட் நிச்சயம் கையில் இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ இ-டிக்கட் வசதி உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டிலேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

K.P.N போன்ற ஆம்னி பஸ்களும் இப்போது ஆன்லைன் ரிஸர்வேஷன் வசதி அளிக்கின்றன.

தில்லி, சிம்லா, குல்லு, மனாலி மற்றும் ஆக்ரா செல்லவும் திட்டம்.தில்லியில் ஹோட்டல் அறை,விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்ல டாக்ஸி மற்றும் அங்கிருந்து சுற்றுலா செல்ல பேக்கேஜ் டூர்கள் (பணிக்கர் அல்லது சதர்ன் டிராவல்ஸ்) போன்ற எல்லா விஷயங்களையும் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடிகிறது.திட்டமிடுதல் மிகவும் எளிதாகி விட்டது.

அடுத்து வியந்த விஷயம், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சென்னை-தில்லி பயணத்திற்கு ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்கள், கிட்டத்தட்ட ரெயில் கட்டணத்திற்கே டிக்கட் கொடுக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் அதிகம் செலவானாலும் கிட்டத்தட்ட 3 நாட்களும் உடல் அயற்சியும் மிச்சமாகிறது. ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவில் சென்னை-தில்லிக்கு போய் வர முடிகிறது.

திருப்பதி போய் பெருமாளையும் தரிசித்து வர விருப்பம்.திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் எல்லா வசதிகளும் இருந்தாலும், எல்லா கட்டங்களும் பல மாதங்கள் முன்பே சிவப்புக்கு மாறிவிடுகிறது. அறை வசதி, சேவைகள் போன்ற எல்லாமே 90 நாள் முன்பு வெளியிட்ட அன்றே தீர்ந்து போய்விடுவது அந்த வெங்கடேசனுக்குத்தான் வெளிச்சம். தரிசனம், உணவு மற்றும் பயணம் எல்லாவற்றையும் சேர்த்து பேக்கேஜ் டூராக திருச்சியிலிருந்தே அழைத்து செல்கிறார்கள்.இதற்கு மட்டும் உறவினர் மூலமாக நேரிலேயே பதிவு செய்தாகி விட்டது.

திட்டமெல்லாம் சரிதான். எல்லாம் நல்லபடி முடிந்து, சுவாரசியமான அனுபவங்களை பகிரவும் ஆசை. ம்...ம்... பார்ப்போம்.

டிஸ்கி :இடுகைகளுக்கு இடையேயான இடைவெளியால் கவலை கொண்டிருந்த ஆயிரமாயிரம் (அவ்வ்வ்....) வாசகர்களுக்கும், என் பின்னூட்டங்கள் வராததால் நிம்மதியாக இருந்த பிரபல பதிவர்களுக்கும்...சொல்லிக் கொள்வது...

அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை..இணைய தொடர்பு கிடைக்கும் போதெல்லாம் வருவேன்..வருவேன்..வருவேன்.. என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்

Tuesday, May 26, 2009

தூர்தர்ஷன் - என் வாழ்க்கையின் திருப்புமுனை

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு குட்ட வாத்தியார்தான் க்ளாஸ் டீச்சர்.
அவரோட பேரு செல்வராஜ். ஆனாலும் சுமாரா ஒரு நாலுலேர்ந்து நாலரை அடிக்குள்ள இருந்ததுனால அவுர எல்லாரும் குட்ட வாத்தியாருன்னுதான் கூப்புடுவோம்.

என்னமோ தெரில நான் படிச்ச கான்வென்ட்ல (பரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லால்குடி) எல்லா வாத்தியார்களும் வேட்டி சட்டைதான் போடுவாங்க.அந்த உயரத்துக்கு வேட்டியுடன் அவர் நடந்து வருவதை தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடலாம்.

குட்ட வாத்தியார் ஆனா குட்றதுல பெரிய ஆளு. பெரும்பாலும் பக்கத்துல ஒக்காந்துருக்கற பயல உட்டு குட்ட சொல்லுவாரு. அவனும் எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற எலந்தப்பழம், காக்கா கடி மிட்டாய் போன்ற பழைய விஷயங்களையெல்லாம் கொசுவத்தி சுத்தி பாத்துட்டு, முட்டிய மடக்கி, ரெண்டு வாட்டி எச்சி துப்பி ஓங்கி குட்டுவான்.சமயத்துல நெருப்பெட்டி லேபிள் விஷயத்துல ஏதாவது ஒப்பந்தம் நடைமுறையில இருந்தா, கைய வேகமா ஓங்கிட்டு மெதுவா குட்டுவான்.

அதுதான் வெனையே. வாத்தியார் இத கவனிச்சிட்டாருன்னா, பக்கத்துல வர சொல்லி நங்குன்னு ஒண்ணு வெப்பாரு. இவுரு மட்டும் எப்புடி எச்சி துப்பாமயே இப்புடி வலுவா கொட்றாருங்கற சந்தேகம் ரொம்ப நாள் எனக்கு இருந்துது.

அப்பல்லாம் படிப்புல நான் சூரப்புலின்னு எங்க அக்கா அடிக்கடி சொல்வாங்க.அதே ஸ்கூல்ல நாலாம் க்ளாஸ்ல படிச்சுகிட்டிருந்த எங்க அக்கா அவங்க பரிட்சைய சீக்கிரமா முடிச்சுட்டு என் க்ளாஸ்ல வந்து பின்னாடி நின்னு பாப்பாங்களாம். நான் எழுதியிருக்கறதெல்லாம் பாத்துட்டு அய்யோ.. அய்யோன்னு அடிச்சுகிட்டு குசு குசுன்னு ஆன்சர் சொல்வாங்களாம். ஆனாலும் அதக் கூட புரிஞ்சுகிட்டு எழுத தெரியாத அளவுக்கு வெள்ளந்தியா இருந்ததா இப்பயும் சொல்வாங்க.

சிலேட்டுலதான் பரிட்சை எழுதணும். கையோட திருத்தி மார்க்க ஒரு பெரிய ரவுண்டுக்குள்ள பின்னமா எழுதி குடுப்பாரு. அதை பைக்குள்ள வெச்சா மார்க் அழிஞ்சு போயிரும்னுட்டு கையிலியே புடிச்சுகிட்டு 5 தெரு தாண்டி போவணும். மார்க்கு அதிகம், கம்மி மானம், அவமானம் இதெல்லாம் ஒண்ணுமே புரியாது அப்பல்லாம். பத்துக்கு மூணோ நாலோ வாங்கினாலும் கவலப்படாம ஊர்வலம் போவேன்.

எப்படியோ தங்கு தடையின்றி வில்லியம் சார், பாக்கிரிசாமி (ஹெட் மாஸ்டர்) எல்லாரிடமும் கொட்டு வாங்கி, முட்டி போட்டு ஐந்து வகுப்புகளை தாண்டி திருச்சி செயிண்ட் ஜோஸஃப் ஹை ஸ்கூலில் ஆறாவது சேர்ந்துவிட்டேன். அங்கியும் ஒம்போதாவது படிக்கிற வரைக்கும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி படிக்கல.

என்னை பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிக்க வைக்க வேண்டும் என்பது என் தந்தையின் வாழ்க்கை லட்சியம்.ஒன்பதாம் வகுப்பு முழுப்பரிட்சை (இப்பயும் கால் பரிட்சை, அரை பரிட்சை, முழு பரிட்சை இப்படியெல்லாம் சொல்றாங்களா?) முடிஞ்சு லீவுல எங்கப்பா என்னய மெட்ராஸுக்கு சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.



அங்க டிவியில வர்ர வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியும், ஞாயித்துக்கிழமை சினிமாவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. வெறும் தூர்தர்ஷன் மட்டும்தான் அப்போதெல்லாம்.ரேடியோவில் பாட்டு,நாடகம்(ஞாயிறு மதியம் 3 மணி), நியூஸ் (சரோஜ் நாராயணசாமி), மணிமலர்,ஒலிச்சித்திரம் போன்றவற்றை மட்டுமே கேட்டுக்கொண்டு, வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ சினிமாக்கள் மட்டுமே பார்த்து வந்த எனக்கு தொலைக்காட்சி மேல் காதலே வந்துவிட்டது. சென்னை ஒரு சொர்க்கலோகமாகவே தெரிந்தது. இத்தனைக்கும் அப்போது என் சித்தப்பா வீட்டில் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில் போய்த்தான் பார்ப்போம்.

ஆவடியில் என் சித்தப்பா வீட்டுக்கு பக்கத்திலேயே முருகப்பா பாலிடெக்னிக் இருந்தது. அந்த வழியே போகும்போது என் அப்பா "நல்லா படிச்சு நானூறு மார்க்குக்கு மேல வாங்கினா இங்க சீட்டு கிடைக்கும், எலெக்ட்ரானிக்ஸும் இருக்கு,சித்தப்பா வீட்லயே இருந்து படிச்சுக்கலாம் என்றார்."



இந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட வார்த்தைகள். ஆஹா, சொர்க்கத்துக்கு ஷிஃப்ட் ஆவறதுக்கு இங்க ஒரு வழி இருக்கேன்னு என் மனசுல பொறி தட்டிருச்சு. ஒலியும் ஒளியும், வருடத்துக்கு 52 சினிமா இதெல்லாம் என் கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துது.

அன்னைலேருந்து அன்பே சிவம் 910 மாதிரி 400 என் வாழ்க்கையோட லட்சிய நம்பரா மாறிருச்சு. எப்படியோ திட்டம் போட்டு என் தெறமைக்கு என்னென்ன சப்ஜெக்ட்ல என்னென்ன மார்க்கு வரும்னு திட்டம் போட்டு அதுக்கேத்த மாதிரி நானூறை குறி வெச்சு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அனாவசியமா ஓவரா கஷ்டப்பட்டு ரொம்ப அதிகமாவும் வாங்கிடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப ஜாக்கிரதையாவே இருந்தேன்.

அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு திட்டம் போட்டு படிச்சு SSLC பரிட்சை எழுதியும், யாரோ புண்ணியவானுங்க தப்பா திருத்தி 12 மார்க் அதிகமா வந்துருச்சு. எங்கப்பாவுக்கு ஓரே சந்தோஷம், 412 க்கு நிச்சயம் சீட்டு கெடைச்சிரும் என்று அப்போது எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் இருந்த அறந்தாங்கி, கிருஷ்ணகிரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பினார். அப்போது இந்த மூன்றில் மட்டும்தான் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ உண்டு.

முதலில் கிருஷ்ணகிரியிலிருந்து மட்டும்தான் அட்மிஷன் கிடைத்து சேர்ந்தாலும், ஒரு வாரத்துக்குள் ஆவடி முருகப்பாவிலிருந்து முதல் வெயிட்டிங் லிஸ்ட்டில் க்ளியராகி சீட் கிடைத்துவிட்டது.

பின்னர் படிப்பை முடித்து சென்னை, தில்லி, திருச்சி என்று வேலை பார்த்தாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்து பகுதி நேரமாக டிகிரியும் முடித்து சிங்கப்பூர் வரை வந்தாகி விட்டது.

இன்று அண்ணன் மகன் (கைலாஷ்) திருச்சியில் SSLC-CBSE யில் 448/500 வாங்கியிருப்பதாக போன் வரவும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து, எழுதலாமே என்று தோன்றியது.

வாழ்க்கையில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலெடுத்து வைக்கும் கைலாஷை போன்ற மாணவர்களுக்கு நான் சொல்ல வருவது இதுதான்.படிப்பு மட்டுமில்லாமல் உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை மதிப்பெண்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். படிப்பில் தானாகவே உங்களுக்கு வெறி வந்து விடும். அது தினம் ஒரு விமான பயணமாகவோ, நியூயார்க்கில் 112 ஆவது மாடியில் சுதந்திரதேவி சிலை கண்ணில் படும்படி ஒரு ஃப்ளாட்டில் குடியிருப்பதாகவோ, சிவப்பு விளக்கு சுழலும் காரில் டவாலி சகிதமாக வந்து இறங்கும் கலெக்டருக்கு கிடைக்கும் மரியாதையாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற கனவுகள் நனவாக மற்ற எல்லா வழிகளையும் விட திட்டமிட்ட படிப்பும் மதிபெண்களும் நிச்சயம் உதவும்.

உங்களுடைய மதிப்பெண் இலக்கை முடிவு செய்து கொள்ளுங்கள்.பள்ளியில் முதல் மதிப்பெண், மாநிலத்தில் முதலாவதாக வருவது போன்ற இலக்குகள் வேண்டாம். அது உங்கள் கையில் மட்டும் இல்லை.மதிப்பெண் இலக்கை அடைய நிறை குறைகளை ஆராய்ந்து துல்லியமாக திட்டமிடுங்கள்.

திட்டங்களை செயலாக்கி மேன்மேலும் வெற்றிகளை குவியுங்கள். வாழ்த்துகள்.

Friday, April 24, 2009

செருப்பை தூக்கி எறியாதீங்க...

உலகம் முழுவதும் செருப்பை தூக்கி வீசுவது என்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

இப்படியே தொடர்ந்தால் எல்லா கூட்டங்களுக்கும் செருப்பை வெளியே விட்டுதான் வரவேண்டும் என்று கூறி விடக்கூடும் நாள் தொலைவிலில்லை.

எனக்கு என்னமோ எவ்வளவுதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் இப்படி செருப்புகளை வீசுவதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

பாதுகாபிஷேகம் நடத்தப்பட்ட தலைவர்களையெல்லாம் நல்லவர்கள் வல்லவர்கள் என்று கூறினால் நான் கோயில்களுக்குள்ளயே பதுங்கியிருக்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடும் (அங்கதானே எல்லார் காலும் காலியா இருக்கும்)

இதையே வேறு கோணத்தில் முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.

ராமபிரான் வனவாசம் செல்வதற்கு முன்னால் பரதனை அரியணை ஏற சொன்னார். ஆனால் பரதன் அதற்கு ஒப்பாமல் ராமனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஒரு பராமரிப்பு அரசாங்கம்தான் நடத்தினார்.இப்படியாக 14 வருடங்கள் அரசாட்சியே செய்திருக்கிறது செருப்பு.

சரி.. சரி.. இந்த புராண இதிகாச கதையெல்லாம் உடாதேங்கறீங்களா....

இந்த செருப்புகளுக்குன்னு ஒரு பெரிய சரித்திரமே இருக்கு.

மனிதர்கள் முதன் முதலில் செருப்பு உபயோகிக்க ஆரம்பிச்சது 40,000 வருடங்களுக்கு முன்புன்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சிருக்காங்க. சீனாவில் தியான்யுவான் குகையில் கிடைச்ச மனித கால் எலும்புகளை ஆரய்ச்சி செய்து இதை கண்டுபிடித்திருக்கிறர்கள். ஆனாலும் இப்ப உலகத்துல இருக்கறதுலயே ஆகப் பழைய செருப்புன்னு பாத்தா தென்மேற்கு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கீழே இருக்கும் 8300 ஆண்டுகளுக்கு முந்தைய செருப்புதான்.


11 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மஹாராஜாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கால்கள் நார்மலாக இல்லாமல் சிறியதாக இருந்ததாம். அந்த மஹாரஜா உடனே சின்ன பாதங்கள்தான் பெண்மைக்கு அழகு என்று கிளப்பிவிட எல்லா பெண்களும் அவர்களுடைய கால்களை இறுக்க கட்டி கொள்ளும் செருப்புகளை அணிந்து தங்கள் பாதங்களையும் சிறிதாக்கி கொண்டார்களாம்.


ஹை ஹீல்ஸ் ஷூக்கள் என்று பார்த்தால் கிறுஸ்துவின் பிறப்புக்கு 3500 ஆண்டுகள் முன்பே எகிப்து மக்கள் ஆண் பெண் பேதமின்றி ஸ்டேட்டஸ் சிம்பலாக அணிந்திருக்கிறார்கள். எவ்வளவு உயரமான செருப்போ அவ்வளவு அதிகமான ஸ்டேட்டஸாம்!!!

ஆனால் அந்த கால ரோம் நகரில் நேரெதிர். விபச்சாரம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அங்கு இருந்த காலகட்டத்தில் ஹை ஹீல்ஸ் செருப்பு விபச்சாரிகளுக்கான அடையாளமாக கருதப்பட்டது.

1400 களில் துருக்கி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிய ஹை ஹீல்ஸ் செருப்புதான் கீழே இருக்கும் "சாபைன்"

1519 முதல் 1589 வரை வாழ்ந்த கேத்தரின் டி மெடிசி என்ற ஃப்ரெஞ்ச் மஹாராணிதான் இப்பொதைய ஹை ஹீல்ஸ் ஃபேஷனுக்கு முன்னோடியாக கருதப்படுகிறார்.மிகவும் சிறிய உருவமாக இருந்த இவர் மன்னரின் வைப்பாட்டியாக இருந்தவரை விட உயரமாக காட்டி கொள்வதற்காக அணிந்த செருப்பு, நெருப்பு போல் பற்றி கொண்டு உலகம் முழுவதும் ஃபேஷனாக பரவியதாக கூறுகிறார்கள்.





(எவ்வளவு அழகான செருப்புகள்?)









1324 ஆம் ஆண்டு எட்வர்ட் மன்னர் கிட்ட செருப்பு தயாரிக்கிறவர்கள் எல்லோரும் போய் செருப்பு அளவுகளுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் உருவாக்க சொல்லி கேட்டாங்களாம். அவரும் 39 பார்லிகார்ன் விதை நீளம் ஒரு சாதாரண மனிதனின் கால் அளவுக்கு சமம் என்று அளவிட்டு அதற்கு 13 (3 பார்லிகார்ன் விதைகளின் நீளம் ஒரு இன்ச் என்பதால்) என்று நிர்ணயம் செய்தாராம். ஒவ்வொரு பார்லிகார்ன் விதைக்கும் ஒரு சைஸ் கூடவோ குறையவோ செய்யும். என் காலுக்கு 34 பார்லிகார்ன் விதைகள் (சைஸ் 8) போதும்.



பார்லிகார்ன்(Barleycorn)

செருப்புகளுக்கு எவ்வளவு பெரிய சரித்திரமும் முக்கியத்துவமும் இருக்கு பாருங்க.

ஆகவே மஹாஜனங்களே, யார் மேலயாவது வெறுப்பை காட்டணும்னா தயவு செஞ்சு செருப்பை தூக்கி எறிஞ்சு அதுக்கு அவமரியாதையை உண்டாக்காதீங்க.

Monday, August 18, 2008

இன்னைக்குதான் ஆரம்பிச்சேன்



என்னமோ எல்லாரும் ப்ளாக் ப்ளாகுங்கறாங்களே, நம்மளும்தான் ஒன்ன ஆரம்பிச்சு வெப்போமேன்னு, இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணேன். எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியலே. என்ன எழுத போறேனோ தெரியலே. பார்க்கலாம், இனிமேதான் யோசிக்கணும். அடுத்தது என்னிக்கு திரும்பி வரேன்னு பார்ப்போம். யாராவது படிப்பீங்களா என்ன? படிச்சா சொல்லுங்க.

இப்போதைக்கு byeeeeeee..........