Tuesday, May 26, 2009

தூர்தர்ஷன் - என் வாழ்க்கையின் திருப்புமுனை

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு குட்ட வாத்தியார்தான் க்ளாஸ் டீச்சர்.
அவரோட பேரு செல்வராஜ். ஆனாலும் சுமாரா ஒரு நாலுலேர்ந்து நாலரை அடிக்குள்ள இருந்ததுனால அவுர எல்லாரும் குட்ட வாத்தியாருன்னுதான் கூப்புடுவோம்.

என்னமோ தெரில நான் படிச்ச கான்வென்ட்ல (பரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லால்குடி) எல்லா வாத்தியார்களும் வேட்டி சட்டைதான் போடுவாங்க.அந்த உயரத்துக்கு வேட்டியுடன் அவர் நடந்து வருவதை தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடலாம்.

குட்ட வாத்தியார் ஆனா குட்றதுல பெரிய ஆளு. பெரும்பாலும் பக்கத்துல ஒக்காந்துருக்கற பயல உட்டு குட்ட சொல்லுவாரு. அவனும் எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற எலந்தப்பழம், காக்கா கடி மிட்டாய் போன்ற பழைய விஷயங்களையெல்லாம் கொசுவத்தி சுத்தி பாத்துட்டு, முட்டிய மடக்கி, ரெண்டு வாட்டி எச்சி துப்பி ஓங்கி குட்டுவான்.சமயத்துல நெருப்பெட்டி லேபிள் விஷயத்துல ஏதாவது ஒப்பந்தம் நடைமுறையில இருந்தா, கைய வேகமா ஓங்கிட்டு மெதுவா குட்டுவான்.

அதுதான் வெனையே. வாத்தியார் இத கவனிச்சிட்டாருன்னா, பக்கத்துல வர சொல்லி நங்குன்னு ஒண்ணு வெப்பாரு. இவுரு மட்டும் எப்புடி எச்சி துப்பாமயே இப்புடி வலுவா கொட்றாருங்கற சந்தேகம் ரொம்ப நாள் எனக்கு இருந்துது.

அப்பல்லாம் படிப்புல நான் சூரப்புலின்னு எங்க அக்கா அடிக்கடி சொல்வாங்க.அதே ஸ்கூல்ல நாலாம் க்ளாஸ்ல படிச்சுகிட்டிருந்த எங்க அக்கா அவங்க பரிட்சைய சீக்கிரமா முடிச்சுட்டு என் க்ளாஸ்ல வந்து பின்னாடி நின்னு பாப்பாங்களாம். நான் எழுதியிருக்கறதெல்லாம் பாத்துட்டு அய்யோ.. அய்யோன்னு அடிச்சுகிட்டு குசு குசுன்னு ஆன்சர் சொல்வாங்களாம். ஆனாலும் அதக் கூட புரிஞ்சுகிட்டு எழுத தெரியாத அளவுக்கு வெள்ளந்தியா இருந்ததா இப்பயும் சொல்வாங்க.

சிலேட்டுலதான் பரிட்சை எழுதணும். கையோட திருத்தி மார்க்க ஒரு பெரிய ரவுண்டுக்குள்ள பின்னமா எழுதி குடுப்பாரு. அதை பைக்குள்ள வெச்சா மார்க் அழிஞ்சு போயிரும்னுட்டு கையிலியே புடிச்சுகிட்டு 5 தெரு தாண்டி போவணும். மார்க்கு அதிகம், கம்மி மானம், அவமானம் இதெல்லாம் ஒண்ணுமே புரியாது அப்பல்லாம். பத்துக்கு மூணோ நாலோ வாங்கினாலும் கவலப்படாம ஊர்வலம் போவேன்.

எப்படியோ தங்கு தடையின்றி வில்லியம் சார், பாக்கிரிசாமி (ஹெட் மாஸ்டர்) எல்லாரிடமும் கொட்டு வாங்கி, முட்டி போட்டு ஐந்து வகுப்புகளை தாண்டி திருச்சி செயிண்ட் ஜோஸஃப் ஹை ஸ்கூலில் ஆறாவது சேர்ந்துவிட்டேன். அங்கியும் ஒம்போதாவது படிக்கிற வரைக்கும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி படிக்கல.

என்னை பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிக்க வைக்க வேண்டும் என்பது என் தந்தையின் வாழ்க்கை லட்சியம்.ஒன்பதாம் வகுப்பு முழுப்பரிட்சை (இப்பயும் கால் பரிட்சை, அரை பரிட்சை, முழு பரிட்சை இப்படியெல்லாம் சொல்றாங்களா?) முடிஞ்சு லீவுல எங்கப்பா என்னய மெட்ராஸுக்கு சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.



அங்க டிவியில வர்ர வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியும், ஞாயித்துக்கிழமை சினிமாவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. வெறும் தூர்தர்ஷன் மட்டும்தான் அப்போதெல்லாம்.ரேடியோவில் பாட்டு,நாடகம்(ஞாயிறு மதியம் 3 மணி), நியூஸ் (சரோஜ் நாராயணசாமி), மணிமலர்,ஒலிச்சித்திரம் போன்றவற்றை மட்டுமே கேட்டுக்கொண்டு, வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ சினிமாக்கள் மட்டுமே பார்த்து வந்த எனக்கு தொலைக்காட்சி மேல் காதலே வந்துவிட்டது. சென்னை ஒரு சொர்க்கலோகமாகவே தெரிந்தது. இத்தனைக்கும் அப்போது என் சித்தப்பா வீட்டில் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில் போய்த்தான் பார்ப்போம்.

ஆவடியில் என் சித்தப்பா வீட்டுக்கு பக்கத்திலேயே முருகப்பா பாலிடெக்னிக் இருந்தது. அந்த வழியே போகும்போது என் அப்பா "நல்லா படிச்சு நானூறு மார்க்குக்கு மேல வாங்கினா இங்க சீட்டு கிடைக்கும், எலெக்ட்ரானிக்ஸும் இருக்கு,சித்தப்பா வீட்லயே இருந்து படிச்சுக்கலாம் என்றார்."



இந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட வார்த்தைகள். ஆஹா, சொர்க்கத்துக்கு ஷிஃப்ட் ஆவறதுக்கு இங்க ஒரு வழி இருக்கேன்னு என் மனசுல பொறி தட்டிருச்சு. ஒலியும் ஒளியும், வருடத்துக்கு 52 சினிமா இதெல்லாம் என் கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துது.

அன்னைலேருந்து அன்பே சிவம் 910 மாதிரி 400 என் வாழ்க்கையோட லட்சிய நம்பரா மாறிருச்சு. எப்படியோ திட்டம் போட்டு என் தெறமைக்கு என்னென்ன சப்ஜெக்ட்ல என்னென்ன மார்க்கு வரும்னு திட்டம் போட்டு அதுக்கேத்த மாதிரி நானூறை குறி வெச்சு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அனாவசியமா ஓவரா கஷ்டப்பட்டு ரொம்ப அதிகமாவும் வாங்கிடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப ஜாக்கிரதையாவே இருந்தேன்.

அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு திட்டம் போட்டு படிச்சு SSLC பரிட்சை எழுதியும், யாரோ புண்ணியவானுங்க தப்பா திருத்தி 12 மார்க் அதிகமா வந்துருச்சு. எங்கப்பாவுக்கு ஓரே சந்தோஷம், 412 க்கு நிச்சயம் சீட்டு கெடைச்சிரும் என்று அப்போது எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் இருந்த அறந்தாங்கி, கிருஷ்ணகிரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பினார். அப்போது இந்த மூன்றில் மட்டும்தான் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ உண்டு.

முதலில் கிருஷ்ணகிரியிலிருந்து மட்டும்தான் அட்மிஷன் கிடைத்து சேர்ந்தாலும், ஒரு வாரத்துக்குள் ஆவடி முருகப்பாவிலிருந்து முதல் வெயிட்டிங் லிஸ்ட்டில் க்ளியராகி சீட் கிடைத்துவிட்டது.

பின்னர் படிப்பை முடித்து சென்னை, தில்லி, திருச்சி என்று வேலை பார்த்தாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்து பகுதி நேரமாக டிகிரியும் முடித்து சிங்கப்பூர் வரை வந்தாகி விட்டது.

இன்று அண்ணன் மகன் (கைலாஷ்) திருச்சியில் SSLC-CBSE யில் 448/500 வாங்கியிருப்பதாக போன் வரவும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து, எழுதலாமே என்று தோன்றியது.

வாழ்க்கையில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலெடுத்து வைக்கும் கைலாஷை போன்ற மாணவர்களுக்கு நான் சொல்ல வருவது இதுதான்.படிப்பு மட்டுமில்லாமல் உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை மதிப்பெண்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். படிப்பில் தானாகவே உங்களுக்கு வெறி வந்து விடும். அது தினம் ஒரு விமான பயணமாகவோ, நியூயார்க்கில் 112 ஆவது மாடியில் சுதந்திரதேவி சிலை கண்ணில் படும்படி ஒரு ஃப்ளாட்டில் குடியிருப்பதாகவோ, சிவப்பு விளக்கு சுழலும் காரில் டவாலி சகிதமாக வந்து இறங்கும் கலெக்டருக்கு கிடைக்கும் மரியாதையாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற கனவுகள் நனவாக மற்ற எல்லா வழிகளையும் விட திட்டமிட்ட படிப்பும் மதிபெண்களும் நிச்சயம் உதவும்.

உங்களுடைய மதிப்பெண் இலக்கை முடிவு செய்து கொள்ளுங்கள்.பள்ளியில் முதல் மதிப்பெண், மாநிலத்தில் முதலாவதாக வருவது போன்ற இலக்குகள் வேண்டாம். அது உங்கள் கையில் மட்டும் இல்லை.மதிப்பெண் இலக்கை அடைய நிறை குறைகளை ஆராய்ந்து துல்லியமாக திட்டமிடுங்கள்.

திட்டங்களை செயலாக்கி மேன்மேலும் வெற்றிகளை குவியுங்கள். வாழ்த்துகள்.

14 comments:

Mahesh said...

ஐ... நீங்களும் டிப்ளமோவா?? ஜாலி !!

உங்க அண்ணன் மகனுக்கு என் சார்பிலும் வாழ்த்துகள் சொல்லிடுங்க .

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகளும், நன்றியும் நண்பா

ரமேஷ் கார்த்திகேயன் said...

"எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்."

எனக்கு வேண்டாம்

----------------------
நல்ல பதிவு

ஆர்வா said...

சுவாரஸ்யமா இருக்கு நண்பா.. தொடரட்டும்....சுவாரஸ்யமா இருக்கு நண்பா.. தொடரட்டும்....

அறிவிலி said...

//Mahesh said...
ஐ... நீங்களும் டிப்ளமோவா?? ஜாலி !!

உங்க அண்ணன் மகனுக்கு என் சார்பிலும் வாழ்த்துகள் சொல்லிடுங்க .//

சேம் பிஞ்ச். நன்றி.

//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகளும், நன்றியும் நண்பா//

நன்றி, ஞானசேகரன்.

//rameshkar said...
"எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்."

எனக்கு வேண்டாம்

----------------------
நல்ல பதிவு//

ரொம்ப பயந்துட்டீங்களோ. நன்றி

//கவிதை காதலன் said...
சுவாரஸ்யமா இருக்கு நண்பா.. தொடரட்டும்....சுவாரஸ்யமா இருக்கு நண்பா.. தொடரட்டும்....//

நன்றி.. கவிதை காதலன்.

சென்ஷி said...

//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//

:)))

நான் போட்டுட்டேன்ப்பா!

இலால்குடி பினாத்தல்கள் said...

அண்ணே வில்லியம் வாத்தியார் டீ குடிக்கறதைப் பத்தி சொல்ல வுட்டுட்டீங்களே!குட்டை வாத்தியார் நேத்து நம்ம வீட்டைத் தாண்டிப் போகும்போது உங்களைத் தான் நினச்சேன்.

அறிவிலி said...

//சென்ஷி said...
//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//

:)))

நான் போட்டுட்டேன்ப்பா!//

இடுகைய விட இதுக்குத்தான் ரெஸ்பான்ஸ் அதிகமா இருக்கு.. ஹ்ம்ம்ம்ம். நன்றி சென்ஷி

அறிவிலி said...

//இலால்குடி பினாத்தல்கள் said...
அண்ணே வில்லியம் வாத்தியார் டீ குடிக்கறதைப் பத்தி சொல்ல வுட்டுட்டீங்களே!குட்டை வாத்தியார் நேத்து நம்ம வீட்டைத் தாண்டிப் போகும்போது உங்களைத் தான் நினச்சேன்.//


எல்லா வாத்தியார பத்தியும் ஒரே தடவைல எழுதிட்டா அப்பறம் ஃப்யூச்சர்ல எதப் பத்தி எழுதறது.
நானே ரொம்ப கஷ்டப்பட்ட்டு மேட்டர் தேத்திகிட்டு இருக்கேன்.

வலசு - வேலணை said...

நன்றாயிருக்கிறது.

//
சமயத்துல நெருப்பெட்டி லேபிள் விஷயத்துல ஏதாவது ஒப்பந்தம் நடைமுறையில இருந்தா, கைய வேகமா ஓங்கிட்டு மெதுவா குட்டுவான்.
//
நெருப்பட்டி லேபிள் விஷயம்னா என்னங்க?

அறிவிலி said...

//நெருப்பட்டி லேபிள் விஷயம்னா என்னங்க?//

அப்போதெல்லாம் தீப்பெட்டிகள் மர தக்கையால் செய்யப்பட்டு காகித லேபிள் ஒட்டி வரும். ஒவ்வொரு கம்பெனி பெட்டியும் வேறு வேறு படங்கள் ஒட்டி வரும். வெட்டும் புலி, இரட்டை கிளி என்று நூற்று கணக்கான வெரைட்டி உண்டு. இந்த லேபிள்களை நாங்கள் கலெக்ட் (ஸ்டேம்ப் கலெக்ஷன் மாதிரி) செய்வோம். ஒருத்தருக்கொருத்தர் எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்வோம்.

வருகைக்கு நன்றி... வலசு வேலணை அவர்களே

வலசு - வேலணை said...

தகவலுக்கு மிக்க நன்றி அறிவிலி.
என்னமா பேர வச்சுக்கிட்டு தகவல்களையெல்லாம் புட்டுப்புட்டு வைக்கிறீங்க
:-)

Anonymous said...

அ! ஆ! நான் பின்னூட்டம் போடலையே!
எனக்கு ப.தொ வரலயே!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.