Tuesday, March 17, 2009

நீங்க 5 ஆம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

"Are you smarter than a 5th grader?"

இது மிக சுவாரசியமான ஒர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி.ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ப்ராட்காஸ்டிங்க் கம்பெனியால் தயாரிக்கப்பட்டு பல நாடுகளிலும் சக்கை போடு போடும் ஒரு நிகழ்ச்சி.

ஆசிரியர்கள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கூப்பிட்டு வைத்து ஐந்தாம் வகுப்பும் அதற்கு கீழேயும் இருக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். கூடவே துறு துறுவென்று அறிவுக்களை சொட்டும் சில பொடிசுகளையும் நிற்க வைத்திருப்பார்கள். பெரியவர்கள் பதில் தெரியாமல் ஞே..வென்று முழித்துக்கொண்டோ, அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தலையை சொறிந்து கொண்டோ இருக்கும்போது இந்த சிறிசுகள் பஸ்ஸரை அமுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு நிற்கும்.விடை தெரியாவிட்டால் அவர்கள் தெரிவு செய்திருக்கும் சுள்ளானிடம் உதவி கேட்கலாம்.

கடைசியில் தோற்று வெளியேற வேண்டியிருந்தால், " நான் ஐந்தாம் வகுப்பு மாணவனைவிட புத்திசாலி இல்லை" என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும்.

இப்பத்தான் விஷயத்துக்கே வரேன்.

என் பையனுக்கு சென்ற வருடம் (4ம் வகுப்பு) வீட்டு பாடமாக கொடுக்கப்பட்ட ஒரு கணக்கும், ஒரு ஆங்கில கேள்வியும் கீழே.

கணக்கு - ஒரு பண்ணையில் சில ஆடுகளும், கோழிகளும் ஒரிடத்தில் நின்று கொண்டிருந்தன.மொத்தம் 40 தலைகளும் 100 கால்களும் இருந்தன. எத்தனை ஆடு, எத்தனை கோழி இருந்தது?

ஆங்கிலம் - She is very lucky to have such obedient sons and daughter-in-laws
இந்த வாக்கியத்தில் உள்ள தவறு என்ன?

இந்த கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் சொன்னால் யுனிவர்சிட்டி ஆஃப் டுபாக்கூரின் அஞ்சாம்ப்பு சான்றிதழ் வி.பி.பி யில் அனுப்பி வைக்கப்படும்.

Friday, March 13, 2009

சிட்டுகுருவி லேகியமும் தமிழ் பதிவரும்

காளிமுத்து விளம்பரம் வெளியிடும் பத்திரிகையின் ஆசிரியரும் அதை படிப்பவர்களும் ஆண்மைக்குறைவானவர்கள் என்றால்...

(மு.கு-இதை நான் ஏன் எழுதுகிறேன் என்பது அனேகமாக பலருக்கும் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தமிழ்மணத்திலோ, தமிலிஷிலோ போய் ஆண்மைக்குறைவை பற்றிய பதிவை தேடி பாருங்கள்.)

1. சோப்பு விளம்பரம், நாறப்பயல்களுக்காக குளிக்காதவர்கள் வெளியிடுவது.
2.இட்ச்கார்ட் விளம்பரம் வரும் பத்திரிக்கைகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கும் சொறி இருப்பதாக அர்த்தம்.
3. துணி கடை விளம்பரம் வரும் பத்திரிகைகாரர்களும், படிப்பவர்களும் ஆதிவாசிகள். அவர்களெல்லாம் அம்மணமாக அலைகிறார்கள்.
4.சரவணபவன் விளம்பரம் வரும் டிவிகாரர்களும் அதன் நேயர்களும் சாப்பிடாமல் பர்மனென்ட்டாக உண்ணாவிரதம் இருப்பவர்கள்.
5.பள்ளி கல்லூரி விளம்பரம் போடும் பத்திரிகை ஆசிரியரும் , வாசகர்களும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
6.சானிடரி நாப்கின் விளம்பரம் வெளியிடுபவர்களுக்கும், வாசகர்களுக்கும் 30 நாளும்...
7 பற்பசை விளம்பரம் வெளியிடும் ஊத்த வாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம்.
8. மொடா குடியர்கள்தான் "குடி குடியை கெடுக்கும்" விள்ம்பரம் போடுவார்கள்.
9. இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் போட்டாலோ,அதை நீங்கள் பார்த்தாலோ நாளைக்கு உங்களுக்கு பால்.

போதும் விடுங்க...

11 பற்றிய சில விஷயங்கள்

(மு.கு. எல்லோரும் இந்த வாரம் பதினொன்னு பதினொன்னா எழுதறாங்க. நான் 11 பத்தி எழுதறேன்.)

11-11-11(1911) தேதியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்த ஒரு பத்தி கீழே.



நம்மில் பெரும்பாலோனார் அடுத்த 11-11-11(2011)இல் பதிவு போடலாம்.
(இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கும் 11 பதிவுகளை மீள்பதிவும் இடலாம்.)

11ம் தேதிகளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
************************************************************
ஜனவரி 11,1973 - ராகுல் திராவிட் பிறந்த தேதி
ஃபிப்ரவரி 11,1847 - நமக்கெல்லாம் பல்ப் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தேதி

மார்ச் 11,1931 - ராபர்ட் முர்டோக் - ஊடக அரசன் பிறந்த நாள்
மார்ச் 11,1985 - கொர்பசேவ் - ரஷ்யாவின் தலைவரான நாள்.

ஏப்ரல் 11,1979 - இடி அமீன் உகாண்டா அதிபர் பதவியை இழந்த நாள்.
ஏப்ரல் 11,1814 - நெப்போலியன் தன் ஃப்ரென்ச் அரசர் பட்டத்தை துறந்தார்.

மே 11,1949 - தாய்லாந்து நாட்டுக்கு அந்த பெயர் வந்த தினம்.

ஜூன் 11, 1964 - நெல்ஸன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஜூலை 11 - ஐ.நா. சபை மக்கள் தொகை நாளாக கொண்டாடுகிறது.
ஜூலை 11,1924 - மங்கோலியா சீனாவிடமிருந்து பிரிந்து சுதந்திரம் அறிவித்தது.

ஆகஸ்ட் 11,1943 - பாக் முன்னாள் அதிபர் பெர்வேஷ் முஷரஃப் பிறந்தார்.
ஆகஸ்ட் 11,1968 - ஹி...ஹி.... நான் பொறந்து 8 நாள் ஆயிருந்துது.

செப்டெம்பெர் 11,2001 - அமெரிக்காவின் கறுப்பு நாள். மண்ணில் சரிந்தது இரட்டை கோபுரங்கள் மட்டுமா?

அக்டோபர் 11,1884 - முன்னாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மனைவி பிறந்த நாள்.

நவம்பர் 11, போலந்து, அங்கோலா நாடுகளின் சுதந்திர தினம்.
நவம்பர் 11,1962- நடிகை டெமி மூர் பிறந்த நாள்.
நவம்பர் 11,1974 -டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகப்ரியோ அவதரித்த நாள்.

டிசம்பர் 11,1931 - ஓஷோ, பகவான் ரஜனீஷ் பிறந்த நாள்.

Sunday, March 8, 2009

ஆம்பளைங்க தினம் - ஒரு அவசியத் தேவை

மகளிர் தின நிகழ்ச்சிகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு என் பையனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

(அ- அப்பா, பை - பையன்)

பை:- அப்பா " இன்னிக்கு என்னப்பா மகளிர் தினம், மகளிர் தினம்கறாங்களே, அப்படின்னா என்னப்பா?"

அ:- அது வந்துப்பா பொம்பளைங்க எல்லாரும் ஆம்பளைங்களுக்கு ஈக்வலா எல்லாத்துலயும் ரைட்ஸ் வேணும்னு கேக்கறதுக்காக இப்படி ஒரு நாள கொண்டாடுறாங்கப்பா.

பை:-எங்க இருக்கற பொம்பளைங்க,யாருகிட்ட, எதுல ரைட்ஸ் வேணும்னு கேக்கறாங்க?

அ:-வீட்ல, நாட்ல, படிப்புல எல்லாத்துலயும்தாம்ப்பா.

பை:-என்னப்பா சொல்ற?,நம்ப வீட்ல அம்மாதான் தினமும் என்ன சாப்பாடுன்னு முடிவு செஞ்சு செய்யறாங்க.அதத்தான் நாம சாப்புடறோம்.பேங்க் ATM கார்ட் அம்மாட்டதான் இருக்கு. உனக்கு காசு வேணும்னா அம்மாட்ட வாங்கிட்டு போற.எனக்கு ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிட அம்மாதான் காசு கொடுக்கறாங்க.

அ:-டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா. அது மட்டும் இல்லாம வெளி உலகத்தையும் பார்க்கணும்டா.

பை:-இல்லப்பா, நான் பாத்து எல்லா ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ் மேட்ஸ் எல்லாருமே இப்பிடித்தான்.ஏன் நம்ம ஊர்ல கூட பாட்டி தான் எல்லாம் வாங்கித்தருவாங்க.

அ:-நெறைய பேர் வீட்ல கேர்ள்ஸ்லாம் படிக்க வைக்கவே மாட்டாங்கப்பா.வளர்ந்தவுடன கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டு வேலயெல்லாம் செஞ்சுகிட்டே இருந்துருவாங்க.

பை:-இல்லப்பா, என் க்ளாஸ்ல 30 ஸ்டூடண்ட்ஸ்ல 18 கேர்ள்ஸ்.என் க்ளாஸ் டீச்சர் ஒரு லேடி. என் ஸ்கூல் ப்ரின்சிப்பால் ஒரு லேடிதான். அவங்க சொல்றததான் எங்க பிஸிகல் எஜுகேஷன் டீச்சர் மாதிரி ஆம்பள டீச்சர்ஸ்லாம் கூட கேப்பாங்க.

அ:-சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடுப்பா. இங்கல்லாம் எல்லாருக்கும் ஈக்வலா சான்ஸ் கெடைக்கும்.ஆனா இந்தியா மாதிரி ஒரு வளர்ற நாட்ல இதெல்லாம் தேவைப்படும்ப்பா.

பை:-நானும் இந்தியாவுல ஒண்ணாவது படிக்கும்போது என் கூட நெறைய கேர்ள்ஸ் படிச்சாங்களே?

அ:-நீ படிச்சது சிட்டில. வில்லேஜஸ்ல எல்லாம் வேற மாதிரி இருக்கும்.

பை:-அவுங்க ஊர்லயெல்லாம் கேர்ள்ஸ டிவி பார்க்க உடுவாங்களா?

அ:-ஏன் கேக்கற?

பை:-இல்லாட்டி அவுங்களுக்கெல்லாம் மகளிர் தினம்னு எப்படி தெரியும்?

அ:-இல்லடா இந்த நிகழ்ச்சியெல்லாம் பாக்கற எல்லார்க்கும் ஒரு அவேர்னஸ் வந்து மாறணும்ணுதான்.

பை:-எல்லாரும் மாறிட்டா என்ன ஆகும்?

அ:-லேடிஸ்லாம் நல்லா படிச்சு பெரிய பதவிக்கெல்லாம் வருவாங்கப்பா.

பை:-ப்ரெசிடென்ட்டுதானே இந்தியாவுல மிகப்பெரிய பதவி?

அ:-ஆமா..

பை:-இந்தியாவோட ப்ரெசிடென்டே லேடிதானே...அடுத்த ப்ரைம்மினிஸ்டர் சோனியாவா, அத்வானியான்னு தானே போட்டின்னு அன்னிக்கு சொன்னிங்களே?
ஆஆங்க்... அப்பற்ம் நெறைய பேரு ஜெயலலிதா கால்ல உழுந்து கும்புடறத டிவில காட்றாங்களே?


என் மனைவி:- என்னா இங்க அப்பாவும் புள்ளையும் வெட்டி அரட்டை, சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. வேலய முடிக்கணும்.

அ:-டேய், வா சாப்பிட போலாம், இல்லாட்டி அம்மா டென்ஷன் ஆயிருவாங்க. (மனதுக்குள் - அப்பாடி.. இப்போதைக்கு தப்பிச்சேன்..)

பை:- போப்பா... ஆக்சுவலா ஆம்பளைங்க தினம்தான் கொண்டாடி நம்ம ரைட்ஸ்லாம் கேக்கணும் (முனகிக்கொண்டே போகிறான்)

பி.கு - படிப்பவர்கள் எல்லாரும் தயவு செய்து, நல்ல பாய்ண்ட்ஸ் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. திருப்பி டாபிக் ஆரம்பிச்சா யூஸ் ஆவும்.

Friday, March 6, 2009

ஜே.கே.ரித்திஷ்-தாய்க்குலங்கள் ஜாக்கிரதை



நம்ம தல ஜே.கே.ரித்தீஷ் டிவி சீரியல் தயாரிக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலை அதிகாரபூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரே அதில் நடிக்கிறாரா(வருவாரா..) என்ற திகில் செய்தி இதுவரை தெரியவில்லை.

தாய்க்குலங்களுக்கு எச்சரிக்கை -இந்த சீரியல் கண்டிப்பாக பெண்களை கவரும் என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.

கலைஞர் டிவி பக்கம் செல்பவர்கள் எதற்கும் தக்க பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கமல் தோளில் சுலக்ஷணா

சன் டிவியில் இன்று(எங்க ஊர்ல) "தூங்காதே தம்பி தூங்காதே" படம். இரவு பதினோரு மணிக்கு மேல் என்றாலும் வாரக்கடைசிதானே என்று தமிழ்மணம் ஒரு பக்கமும், படம் ஒரு பக்கமுமாக உட்கார்ந்திருந்தேன்.

"சும்மா நிக்காதீங்க" பாட்டு வந்ததும் சுதாரித்து டிவியை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்.அந்த காலத்துலயே சுலக்ஷணாவ வாயப்பொளந்துட்டு பார்த்தது கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுருச்சு.பாவாடை தாவணி அவ்வளவு பாந்தமாக இருக்கும் அவருக்கு.

கிட்டத்தட்ட பாட்டு முழவதும் சுலக்ஷணா கமலின் மேல் தான் உட்கார்ந்திருப்பார்.ஏதோ சின்னக்குழந்தையை போல் கமல் அவரை இடுப்பிலும், தோளிலும், முதுகிலும் தூக்கி விளையாடுவார்.

கமல் இன்னமும் ஹீரோதான். சுலக்ஷணா???. எனக்கு ஒரே ஒரு சின்ன்ன்ன்ன ஆசைதான்.
அடுத்த படத்துல சுலக்ஷணாவை அதே மாதிரி கமல் தூக்கிகிட்டு டான்ஸ் ஆடணும்.(ஏண்டா இந்த கொல வெறி?... தசாவதாரம் வந்து இவ்ளோ நாளாயுமா ஒன் வெறி அடங்கல?)

பத்து நிமிஷத்தில் போனஸாக ராதாவுடன் "அட ராமா எங்கிட்ட டூப்பு விடலாமா??" பாட்டு. சுலக்ஷணா பாட்டு அளவுக்கு இல்லன்னாலும், பக்கத்துல இருந்த தங்கமணி "வழியற வாய தொடைக்க கூடாதான்னு" கேக்கற அளவுக்கு இருந்துச்சு.

ஒரு சீன்ல கமல் ராதாகிட்ட "நான் மாறு வேஷத்துல இருக்கேன்னு எப்படி கண்டு புடிச்ச?"
அப்படின்னு கேப்பாரு. போக்கிரியில் வரும் வடிவேலுவை ஞாபகமூட்டினார்.

குருதிப்புனல், அன்பே சிவம் படமெல்லாம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. அவரா இவுரு?????..

Wednesday, February 25, 2009

அந்த(சா.மி.சா.) பார்வை

கோவணத்துணியிலிருந்து கோமேதக, வைர அட்டிகை வரை எதுவாக இருந்தாலும் திருச்சியில் வாங்குவதாக இருந்தால் இங்குதான் வரவேண்டும்.மிகப்பெரிய கடைகள் எல்லாம் இருக்கும் இதற்கு "சின்ன" கடை வீதி என்று பெயர்.

நகரத்தின் மிக முக்கிய வியாபார மையம்.சமீப வருடங்களில்தான் இந்த வீதியையும் தாண்டி திருச்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பல பெரிய வணிக வளாகங்களும் கடைகளும் வந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு தெருவின் முழு நீளத்தையும் தினம் இரண்டு முறை கடக்க வேண்டிய அவசியம் எனக்கு 5 வருடங்களுக்கு இருந்தது. திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ட்ரெயினில் வந்து இறங்கி செயின்ட் ஜோசஃப் பள்ளிக்கு நடைப்பயணம் 5 கிமீ. அந்த ஐந்து வருடங்களும் விதம் விதமான அனுபவங்கள்.

நம்ப ஊர்லதான் எல்லா பய புள்ளைகளுக்கும் பொறப்புல இருந்தே கிரிக்கெட் பயித்தியமாச்சே.
இபபல்லாம் டிவி கடை வாசல்ல கூடி நின்னு பாக்கறாங்க. 30 வருஷம் முன்னாடி ஏது டிவி?
ரேடியோ கமெண்டரிதான்.சாயங்காலம் நாலு மணிக்கு மேலே ஸ்கூல் விடற நேரத்துல தான் பெரும்பாலும் மேட்ச் விறுவிறுப்பான கட்டத்துல இருக்கும்.மேல சொன்ன தெருவுல இந்த நேரத்துல ஜனக்கூட்டம் எப்படி இருக்கும் என்பது உ.கை நெல்லிக்கனி.

எப்படி தினம் 1000 ஹிட்டுகளும், நூறு பின்னூட்டங்களும் இருக்குற பதிவுகளுக்கு நடுவுல நம்மளும் பதிவு வெச்சுருக்கோம்னு பேரு பண்ணிக்கிட்டு தனியா ஈ ஓட்டறோமோ, அதே மாதிரி இவ்வளவு பிஸியான தெருவுலயும் ரெண்டு மூணு கடையில கூட்டமே இல்லாம, யாராவது உள்ள நுழைஞ்சா,"இவன் ஏன் இங்கல்லாம் வரான்னு" சந்தேகப் பார்வையுடன் ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். இவர்களில் பலரும் (என் அதிர்ஷ்டத்துக்கு) கிரிக்கெட் பிரியர்கள். மேட்ச் நாள்ள நிச்சயமா கமெண்டரி கேட்டுகிட்டு இருப்பாங்க. பாவம் அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க(நம்மளாவது இன்னோரு ஜன்னல திறந்து வெச்சு வேற நல்ல பதிவா படிச்சுக்கிட்டு இருக்கலாம்). ஒவ்வொரு ரெண்டு பர்லாங்குக்கும் இந்த மாதிரி (ஈ) ஒரு கடைய பார்த்து வெச்சிருப்பேன். ட்ரெயின பிடிக்க போற வழியில இந்த கடைகளுக்குள்ள நொழைஞ்சு ஸ்கோரை அப்டேட் செஞ்சுகிட்டே போவேன். அவங்களும் நம்ம கடைக்கு இப்படியாவது ஆள் வருதேன்னு (அனானியா இருந்தாலும் பின்னூட்டம் வந்தா சரின்னு நாம இருக்கறதில்லையா, அந்த மாதிரி) ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

ஆறாம்ப்பு படிக்கும்போது, இப்பிடித்தான் ஒரு நாளு, மேட்சுல கபில்தேவ் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பற அடுத்த வண்டில போயிக்கலாம்னு ஒரு கடையில செட்டிலாயிட்டேன். என் கெட்ட நேரம் 15 நிமிஷத்துல அவரு அவுட்டாயி கிர்மானி வந்து மட்டைய போட ஆரம்பிச்சுட்டார். எப்படியும் ரயிலுக்கு நேரம் இருக்கேன்னு அதையும் கேட்டுகிட்டு இருந்தேன். போரடிக்கும்போதெல்லாம் சுத்தி கடையில இருக்கிற பொருளையெல்லாம் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன்.

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியா, எனக்கு ரொம்ப இஷ்டமானது, ஓசி பொருள். எதுக்கு எது இலவசம்கறதெல்லாம்(பினாகாவுக்கு பொம்மை, போர்ன்விடாவுக்கு பம்பரம்) தரோவா தெரிஞ்சு வெச்சுகிட்டு அம்மாவ தொந்தரவு பண்ணிகிட்டு இருப்பேன்.

ரெண்டு பாராவுக்கு முந்தி சொன்ன மாதிரி,கடைய நோட்டம் வுட்டுகிட்டு இருக்கும்போது ஒரு வெள்ளை கலர் பாக்கெட்ல "Free Belt inside"ன்னு போட்டிருந்தது.

ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே, நமக்கும் ஒரு பெல்ட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனச்சுகிட்டே அது என்ன பாக்கெட்னு உத்து பார்த்தேன்.ரெண்டு மூணு பூவெல்லாம் வரைஞ்சு "Care Free" ன்னு ஸ்டைலா எழுதி இருந்துச்சு.கடைக்காரர்கிட்ட, "ஃப்ரீ பெல்ட் அப்படின்னு போட்ருக்கே, இடுப்புல கட்ற பெல்டான்னு என் இடுப்ப காமிச்சு கேட்டேன்".

அவரு சாணிய மிதிச்ச சாஸ்திரிகள் மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு என்னை மேலயும் கீழயும் ரெண்டு தடவ பார்த்துட்டு, "போ.. போ ட்ரெயினுக்கு நேரமாச்சுன்னு" வெரட்டி உட்டாரு.

அடுத்த சில நாட்களுக்கு,ஒவ்வொரு தடவையும் டவுசர தூக்கி விடும்போது, அவரோட அந்த பார்வை என் ஞாபகத்துக்கு வந்து டார்ச்சர் குடுத்துகிட்டுருந்துது.

ஒரு நாள் திடீர்னு எங்க வீட்லயே அந்த பாக்கெட் பீரோல துணிமணிகளுக்கு அடியில இருக்கறத அகஸ்மாத்தா பார்த்துட்டேன். உடனே துள்ளி குதிச்சு, "அம்மா அந்த பாக்கெட்டோட ஒரு ஃப்ரீ பெல்ட் வந்திருக்கணுமே, நான் கடையில பார்த்தேனே" அப்படின்னு கேட்டேன்.அப்போ எங்க அம்மாவும், பக்கத்துல இருந்த அக்காவும் என்னைய பார்த்த பார்வை!!!ஐயய்யோ!!! திரும்பவும்.. அதே சா.மி.சா பார்வை. வழக்கம் போல "ஒழுங்கா கழுவ கூட தெரியாத நாயி ஒனக்கெல்லாம் பெல்ட் ஒரு கேடா, புக்க எடுத்து வெச்சு படிடா"ன்னு தொரத்திட்டாங்க.

அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு விகடன், குமுதத்தில வர்ர விளம்பரத்தையெல்லாம் தீர அனலைஸ் பண்ணித்தான் அந்த(சா.மி.சா) பார்வைக்கான அர்த்தம் என்னன்னு புரிஞ்சுது. இப்ப வரைக்கும் நம்ம பசங்க இதே மாதிரி கேள்வி கேட்டா எப்படி புரிய வைக்கறதுங்கறது பெரிய கேள்விக்குறிதான்.