Monday, March 8, 2010

"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்

ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே மகளிர் தினத்தை முன்னிட்டு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)

Tuesday, January 12, 2010

"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"


ஃபோன் அடிக்கிறது,.. "ம்... சொல்லுப்பா, என்ன விஷயம்."

"ஓண்ணும் விஷயம் இல்ல, சும்மாதான் ஃபோன் பண்ணிணேன், சாப்டாச்சா???"

"ம்.. ஆச்சு.."

"என்ன சாப்பாடு"

"என்னத்த பெரிய சாப்பாடு, வழக்கம் போல கேண்டீன்ல மலாய்க்காரி என்னத்த வடிச்சு கொட்றாளோ திங்க வேண்டியதுதான்."

"சாயங்காலம் எத்தன மணிக்கு வருவீங்க?"

"அத சாயங்காலம் கெளம்பறதுக்கு முன்னாடிதான் சொல்ல முடியும். நாலு மணி ஆனாத்தான் நெறய பேருக்க்கு என் ஞாபகமே வருது"

"சரி, நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?"

"உன்னால என்ன முடியுமோ அத செய்."

"பாவம்பா நீங்க, ஒரு வேளைதான் வீட்ல சாப்புடறீங்க. சாம்பார், ரசம் வெச்சு, பீன்ஸ் பொரியல் பண்ணிறட்டுமா?"

"ம்.. ஓகே."

"வெச்சிறட்டுமா, வேற ஒண்ணும் இல்ல."

"ம்.. சரி."
**************************

"சொல்லுப்பா?"

"ஓண்ணும் இல்ல, பீன்ஸ் ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து பாத்தேன், ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, வேற ஏதாவது பண்ணட்டுமா?"

"ம், பண்ணேன்".

"வெண்டைக்காய் மட்டுந்தான் இருக்கு, ஆனா அது உங்களுக்கு புடிக்காது".

"ம்."

"வெண்டைக்காய் கறி பண்ணி அப்பளம் பொரிச்சிரட்டுமா?"

"ம். சரி."

"வெச்சிர்றேன், வேற ஒண்ணும் இல்ல."

**************************

"ம்... சொல்லு, என்ன விஷயம்?"

"அரைச்சு விட்ட சாம்பாருக்கு, தேங்காய் இல்ல. வெறும் சாம்பார், முருங்கைக்காய் போட்டு பண்ணிரட்டுமா?"

"வத்தக் குழம்பு வேண்ணா வெச்சிறேன்".

"ஆமா, எப்ப பாத்தாலும் வத்தக் குழம்புதான் உங்களுக்கு. உடம்புக்கு கெடுதல். நான் வெறும் சாம்பாரே வைக்கறேன்."

"ம். சரி செய்."

"வெச்சிர்றேன், அப்பறமா பேசலாம்."

**************************

பாஸுக்கு பாஸ் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, அடி வயித்துல சும்மா கிர்ருங்க...
வைப்ரேஷன் மோடில் இருந்த போனை எடுத்து கிசுகிசுப்பாக...

"என்ன?"

"ஹலோ... ஹலோ... ஹலோ..."

சத்தமாக, " என்ன வேணும் சீக்கிரமா சொல்லு?"

"இல்ல, பேசாம இட்லி வெச்சு சாம்பார் பண்ணிரட்டுமா?, எனக்கும் டிஃபன் சாப்புடணும் போல இருக்கு."

"பேசிட்டோ, பேசாமயோ என்னத்தயாவது பண்ணு. என்ன ஆள விடு. எதுத்தாப்புல இருக்கற கடங்காரன் பாஷை புரியலன்னாலும் உத்து கேட்டுகிட்டு இருக்கான்."

**************************

வீட்டுக்குள் நுழைந்ததும், "போய் ஒரு குளியல போட்டுட்டு வாங்க, சூப்பரா தோசை சாப்டலாம்."

"தோசையா???? ஏன்?

"மாவு சரியா பொங்கல, இட்லி நல்லா வராது. அதான்"

"தொட்டுக்க என்ன?"

"சாம்பார் பண்ணலாம்னுதான் பாத்தேன். ஆனா ஃப்ரிட்ஜ்ல நேத்து வெங்காய சட்னி கொஞ்சம் இருக்கு, அதுவும் மொளகா பொடியுமா தொட்டு சாப்ட்றலாம்னு விட்டுட்டேன்.“

"ம்... சரி."

**************************

டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த பின், " எங்க சட்னிய காணோம்?"

"உங்க புள்ள, நல்லா இருக்குன்னு அத்தனையும் காலி பண்ணிட்டான், கோச்சுக்காம மொளகாப்பொடிய தொட்டுண்டு சாப்புடுங்க. கடைசில சூப்பரா மோர் கரைச்சு தரேன்,குடிங்க......உடம்புக்கு நல்லது.






**************************



டிவியில் ஏதோ ஒரு சேனலில் பாட்டு பார்த்துவிட்டு, அதே எஃபெக்டோடு கிச்சனுக்கு போய்,
"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"

"ம்ம்ம்... குப்பைதொட்டி..."

"கரெக்டுதான், நீ சமைக்கறதையெல்லாம் உள்ள போடற எடத்த அப்பிடித்தான் சொல்லனும்."



டிஸ்கி : இது ஒரு கலப்படம் மிகுந்த கற்பனையான உரையாடல் மட்டுமே.

Friday, December 25, 2009

கிருஸ்துமஸை முன்னிட்டு உலக தமிழ்ப் பதிவுகளில் முதன் முறையாக...

சிங்கப்பூரில் கிருஸ்துமஸ் ஒளி அலங்காரங்கள் மிக பிரபலம். இநத ஒளி அலங்காரங்களை பார்க்க செல்லும்போது சில எதிர்பாராத அருமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பும் கிட்டும்.ஸ்ட்ரீட் பர்ஃபார்மன்ஸஸ் மற்றும் வணிக வளாகங்கள் ஏற்பாடு செய்யும் பல்சுவை நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.அப்படி ஒரு வணிக வளாகத்தில் பார்த்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங்குகள் கீழே.





சாண்டா க்ளாஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பதற்காக மான்கள் பூட்டிய வண்டியில் செல்வாராம். சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் இந்த வருட கிருஸ்துமஸ் அலங்காரங்களில் இந்த மான்களுக்குத்தான் முக்கியத்துவம். விதவிதமான மான் முக பெண் பொம்மைகள்.



எல்லா வருடங்களையும் போல் ஒளி அலங்காரங்கள் மிகவும் அருமை.கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு குடும்பத்துடன் வீதி வலம் சென்றோம். புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதிக்கு போன ஃபீலிங். அத்தனை கூட்டம். என்ன ஒன்று, "ஏடு கொண்டல வாடா கோவிந்தா“ தான் மிஸ்ஸிங்.



இந்த வருடம் கூடுதல் சிறப்பு, மெரீனா பே பகுதிகளிலும் "Glitzy Christmas By the Bay" என்ற தீமில் ஓளி அலங்காரங்கள்.



விதம் விதமான கிருஸ்துமஸ் மரங்கள்.

border=0>

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்

Friday, December 11, 2009

நான் AND ஜெர்ரி

(மு.கு. இந்த பதிவு ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையை விவரிப்பதால் 18 வயசுக்கு குறைவானவர்கள் பெற்றோர் துணையுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)

"என்னங்க.. என்னங்க.." என்று தன் எட்டு கட்டை ஸ்தாயியில் விளித்துக் கொண்டே வந்தாள் என் பத்தினி.

நான் வழக்கம் போல், பக்கத்தில் வரவிட்டு காது செவிப்பறை கிழியும் அபாயத்திற்கு சற்று முந்தைய என்னங்கவிற்கு...

"கூப்டியா?, சொல்லு என்ன விஷயம்", என்றேன்.

"வடை வேணும்னா, கேக்க கூடாதா? நானே தந்துட்டு போறேன். அதுக்காக இப்படித்தான் பிச்சு பிச்சு தின்னுப்புட்டு, கிச்சன் பூரா இறைச்சு வெக்கிறதா..."

"எது?, காலைல உங்களுக்கு புடிக்குமேன்னு செஞ்சேன்னு சொல்லி ஆசையா குடுத்தியே அதுவா?" ("காலைல சூடா இருக்கும்போதே, நீ திட்டுவியேன்னுதான் தொண்டை அடச்சாலும் பரவால்லேன்னு நாலு தின்னேன். அதையா திரும்பவும் சாப்ட்டியான்னு கேக்கறே?")

"ஆமா.. சாப்டீங்களா இல்ல கடிச்சு துப்பினீங்களா? யார் இதெல்லாம் க்ளீன் பண்றது?"

"என்னப்பா சொல்ற, நான் கம்ப்யூட்டர வுட்டு ஏந்திரிக்கவே இல்லியே..."

"அப்ப அந்த பய வேலையா இருக்குமோ? அவன் காலையிலியே ஒண்ணு போதும்னுட்டானே...(ஹ்ம்ம்ம்... அவனுக்கு விவரம் ஜாஸ்தி) என்று புத்திர சிகாமணியை திட்டி கொண்டே வேலையை பார்க்க போய் விட்டாள்."

அடுத்த நாள்... நான் குளியலறையிலிருந்து, "ராஜீஈஈஈஈ......."

"என்னங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?" என்று ஆவலாய் பார்க்க ஒடி வந்தாள்.

"நேத்துதான் புது சோப்பு எடுத்து போட்டேன் அதுக்குள்ள காணுமே, எங்க?"

"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் ஒரு வேளை, புதுசா சேந்த லேடி மேனேஜர் முன்னாடி பளிச்சுனு தெரியணும்கறத்துக்காக முழு சோப்பையும் ஒரே நாள்ள தேச்சு காலி பண்ணீட்டீங்களோ என்னமோ.." என்றாள்.

என் முறைக்கும் பாவனையை (பின்ன நெசமாவா முறைக்க முடியும்) கண்டு, "சரி.. சரி.. புது சோப்பு தரேன் குளிச்சிட்டு வந்து உங்க மோப்ப சக்தியெல்லாம் வெச்சு துப்பறியுங்க" என்று சோப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

குளித்துவிட்டு வந்து அலமாரியில் பார்த்தால் தேங்காய் எண்ணெய் பாட்டில்(ப்ளாஸ்டிக்) கவிழ்ந்து அத்தனை எண்ணையும் கொட்டி கிடந்தது.பாட்டிலை எடுத்து பார்த்தால் மூடி டைட்டாகதான் இருந்தது, ஆனால் அடியில் சூடு பட்டது போல ஒட்டை.

"ஆஹா... நம்மளை மீறிய ஒரு அமானுஷ்ய சக்தி வீட்டுக்குள்ள இருக்குடா" என்று லேசாக புரியத் துவங்கியது.

சாயங்காலம் என் மனைவி "குழி பணியாரம் செய்யலாம்ணு இருக்கேன், மேல அட்டத்துல இருக்கற சட்டிய கொஞ்சம் எடுத்துக்கொடுங்க" என்றாள்.

முந்தின தடவை பணியாரம் என்று செய்த வஸ்து ஞாபகத்தில் வந்து பயமுறுத்தினாலும் வேறு வழியில்லாமல் ஸ்டூலை போட்டு எக்கி எடுக்கும்போது......

4x2 இன்ச் சைஸில் பந்து போன்று ஏதோ ஒன்று என் தோளுக்கு மேல் பறந்தது போல் தோன்றியது.

அடுத்த வினாடி, "வீஈஈஈஈஈல்".....சூப்பர் சிங்கர் வெஸ்டெர்ன் மியூசிக் சுற்றில் ராகினி ஸ்ரீ உச்ச குரலில் கத்தினாரே அது போன்ற ஒரு சத்தம் என் மனைவியிடமிருந்து... (சம்பவம் பழசு, உவமை மட்டும்தான் புதுசு...)

நானும் திகிலடைந்து சட்டி வேறு, நான் வேறாக விழுந்தேன்.

"எலிங்க... பெரிய எலி..." என்று வீஈஈலுக்கு விளக்கமளித்தாள்.

விழுந்தவாக்கில் விட்டத்தை பார்த்து யோசித்ததில் வடை, சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த அமானுஷ்யம் என்று அனைத்திற்கும் விடை கிடைத்தது.

மேலே ஏறி திரும்பவும் பார்த்ததில்.. காணாம போன சோப்பு, ஒரு பாதி வெங்காய துண்டு (அய்... நான் போன வாரம் தோச கல்லு துடைக்க வெச்சிருந்தத காணோம்னு தேடினேன்-மனைவி), தேங்காய் பத்தை, என் பழைய அண்டர்வேர் என்று ஒரு பெரிய கொள்முதல் கிடங்கே இருந்தது.கையோடு அட்டம் முழுவதையும் சுத்தம் செய்து வைத்தோம்.

சரிதான் ஒடிப்போயிடுச்சே, இனிமே வராதுன்னு நெனைச்சா நாளொரு பொருள் காணாமல் போவதும் பொழுதொரு சாமானை வீணடிப்பதுமாக எலியாரின் திருவிளையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

உச்ச கட்டமாக, ஆசையோடு நான் 5ம் பிறந்தநாளுக்கு (கல்யாணத்துக்கு பிறகு) வாங்கி கொடுத்த காட்டன் நைட்டியை அவர் குதறி வைக்கவும், என் பாரியாள் காளியாக மாறி ஒரு எலி பிரச்னையை சால்வ் பண்ணத் தெரியல நீயெல்லாம் ஒரு...ஒரு.... இஞ்சினியரா என்ற அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டாள்.

என் இஞ்சினியரிங் சிலபஸ்சில் இது இல்லாத காரணத்தாலும், முன் அனுபவம் இல்லாத குறையாலும் என் அலுவலக/வெளி நண்பர்களிடம் யாரவது எலி பி(அ)டிக்கும் நிபுணர்கள் உண்டா என்று விசாரித்தேன்.அவர்கள் யோசனைப்படி முதலாவதாக...

பொறியில் வடை வைத்து பார்த்ததில் சீந்தவேயில்லை. சரி நம்ம வீட்டு வடை டேஸ்டு அதுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுனால சாப்புடலன்னு நெனைச்சு, பக்கத்துல இருக்கற டீக்கடைலேருந்து ஒரு மசால் வடை வாங்கி பாதியை பையனுக்கு கொடுத்துவிட்டு (அப்பா.. நல்லா இருக்குப்பா...) மீதியை பொறியிலும் வைத்தேன்.அதுக்கும் அது ஏமாறவில்லை.

இரண்டவதாக, எலி பாஷாணத்தை பல விதங்களிலும் ட்ரை பண்ணியதிலும் தோல்விக்காயை(வெற்றிக்கனிக்கு எதிர்ப்பதம்)த்தான் சந்தித்தேன்.

மூன்றாவதாக சொன்ன பூனை வளர்ப்புக்கு என் மனம் ஒப்பவில்லை.

எலியாரின் அழிச்சாட்டியம் ஷூ,சாக்ஸ், பாய், போர்வை,கம்ப்யூட்டர் வயர் என்று வளர்ந்துகொண்டே போக,அவரை என் பரம வைரி லிஸ்டில் சீனியர் மோஸ்ட் பொசிஷனுக்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் பையனுக்கு பள்ளி விடுமுறை வரவும் பத்து நாள் பேச்சிலர் (அய்யா... ஜாலி...) வாழ்க்கை. ஒரு நாள் இரவு எட்டு மணி போல பரோட்டா பொட்டலமும், பீர் பாட்டிலுமாக வீட்டுக்குள் நுழைந்து விளக்கை போட்டதும், எலியார், ஹாலிலிருந்து உள் அறைக்கு ஒடியதை பார்த்தேன்.உடனடியாக மனதிற்குள் ஒரு மாஸ்டர் ப்ளான் உருவானது.

ரூமுக்குள் நுழைந்து ஜன்னல் கதவு எல்லாவற்றையும் மூடி விட்டேன்.ரூமில் இருக்கும் அத்தனை பொருளையும் ஜாக்கிரதையாக திரட்டி கதவுக்கு வெளியே வைத்தேன்.

அந்த அறையில் அலமாரிக்கு மேல் அந்த கால மர்ஃபி வால்வ் ரேடியோ ஒன்று உண்டு. என் தநதை (ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணிணா பிபிசி டைரெக்டா ரிசீவ் பண்ணும் - என் அப்பா) வழி சொத்து அது.விஜய் மல்லையா போன்றவர்கள் பிற்காலத்தில் ஏலத்தில் கேட்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி பத்திரமாக வைத்திருந்தேன்.

ஒரு ஆளாக இந்த ரேடியோவை இறக்க முடியாது என்பதால் அதுவும், கொஞ்சூண்டு தெர்மோகோலும்தான் அறைக்குள் மீதி இருந்தது. நம்ம ஹீரோ நிச்சயமா ரேடியொவுக்குள்ளதான் ஒளிந்திருக்க வாய்ப்பிருந்தது.

வெளியே வந்து கதவை இருக்க மூடி தாள் போட்டு, அடியில் இருந்த கொஞ்சம் இடைவெளியையும் அட்டை, செங்கல் என்று பலவற்றையும் கொண்டு மூடிவிட்டேன்.

மூன்று நாளுக்கு கதவை திறக்கவேயில்லை. நாலாம் நாள்
மெ....................து........................வா.......................க
கதவை திறந்தால் அறை முழுவதும் தெர்மோகோல் குப்பை. சிறிது நேரம் அமைதியாக வெய்ட் பண்ணி ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து பார்த்தால் ஒரு மூலையில் நம் எதிரி ஒருக்களித்து படுத்திருந்தார்.

கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு கொடுத்த குடையை வைத்து தூஊஊஊஊஊரத்தில் நின்று கொண்டு தரையில் நாலு தடவை டொக்கினேன்.எலியாரின் வால் மட்டும் லேசாக ஆடியது. அப்படியே ஜகா வாங்கி திரும்பவும் கதவை மூடி... அட்டை, செங்கல்,இத்யாதி சடங்குகளையும் பொறுப்பாய் செய்தேன்.

அடுத்த நாளும் குடை.. டொக்.டொக்..டொக்...

ஆனால் நம்ம ஹீரோவிடம் சலனம் துளியும் இல்லை. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பைக்குள் குடைக்கம்பியால் அவரை உள்ளே தள்ளி முடிச்சு போட்டு அரை கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் எறிந்துவிட்டு ஒரு குரூர புன்னகையுடன் வீடு திரும்பினேன்.

வெற்றிக்களிப்பை சகதர்மினிக்கு ஃபோன் போட்டு பகிர்ந்து கொண்டு அவருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றேன்.

ஆனாலும் ஒவ்வொரு முறை "மூஷிக வாஹன மோதக ஹஸ்த" என்று பிள்ளையாருக்கு ஸ்லோகம் சொல்லும்போதும் லேசாக குற்ற உணர்ச்சி எட்டி பார்ப்பது என்னவோ உண்மை.

நீதி 1: எலிகளுக்கு தெர்மோகோல் உகந்த உணவு இல்லை.

நீதி 2: எலிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாள் வரை உயிரோடு இருக்கும்.

Wednesday, December 2, 2009

சாலட். - ௦02/டிச/2009


பலா: சமீபத்தில் Orphan என்ற ஆங்கில படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அநியாயத்துக்கு ஹாரர் Cum த்ரில்லர் படம்.வாரக்கடைசியில் ராத்திரியில் பார்த்துவிட்டு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.சுமார் 9 வயதிருக்கும் ஒரு பெண் குழந்தை கன்னா பின்னவென்று கொலை செய்கிறது (ஒரு கன்னியாஸ்த்ரீயை சுத்தியால் அடித்தே). ஏன் எதற்கு என்பதெல்லாம் கடைசி 10 நிமிடத்தில்தான் புரிகிறது. கேமிரா கோணங்கள், இசை, நடிப்பு எல்லாமே அபாரம்.அதுவும் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அந்த குட்டிப்பெண் கொள்ளை அழகு. விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போடலாமெனதான் நினைத்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று கேபிளாரின் பதிவை செக் பண்ணினால் மனுஷன் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். படம் பார்த்துவிட்டு விமர்சனம் படித்தால் அவருடைய quality தெரிகிறது. சான்ஸே இல்லை. விரிவான விமர்சனம் இங்கே

ஆப்பிள்: சூப்பர் சிங்கரில் காம்பியரிங் செய்த டிடியின் உடைகளைப் பற்றி இங்கு எழுதினாலும் எழுதினேன், விஜய் டிவிக்காரர்கள் அவரை தூக்கிவிட்டு, திவ்யாவை கொண்டு வந்து விட்டார்கள்(நான் கூட சொல்லிக்கலைன்னா எப்பிடிங்க?).நடுவர்களை விடுங்கள், திறமைக்கு முன் மொழியெல்லாம் பார்க்க வேண்டாம்.காம்பியரிங்குக்கு கூடவா ஆள் பஞ்சம்? பாதி நேரம் இவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், கொழகொழவென்று இவர் பேசும் தமிழை கேட்பது அதைவிட கொடுமை.டிடியே பரவாயில்லை. Chinmayi was much better.

“All good things were at one time bad things; every original sin has developed into an original virtue.” -Friedrich Nietzsche

ஆரஞ்சு: மற்ற சேனல்களில் வரும் தொடர்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியின் தொடர்கள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.வழக்கமான லேடிஸ் செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் ஓரளவுக்கு யதார்த்தமாகவே இருக்கின்றன. முக்கியமாக வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. "அன்பே வா" தொடரின் வசனகர்த்தாவுக்கு முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கலாம்.முக்கியமாக கீழிருக்கும் பாத்திரங்கள் வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்தரவாதம்.


டைட்டிலில் யார் வசனகர்த்தா என்று போடுவதேயில்லை, என்ன காரணமோ? இத்தொடரில் கதாநாயகனை இரு நாயகிகளில் யாருடன் சேர்த்து வைப்பது என்று எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பு நடத்தியதாக கேள்வி. Audience Participation !!!!

திராட்சை: ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு சாலட் தொடரும்.


வழமையாகவே ஃபெவிகாலின் விளம்பரங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும்.அந்த சீரிஸில் இது அருமையான ஒன்று.

அன்னாசி: சன் டிவியின் டீலா நோ டீலா நிகழ்ச்சியை பற்றி பலவிதமான கருத்துகள்.கான்செப்ட் ஒன்றும் புதிதில்லை, பல ஆங்கில தொலைக்காட்சிகளில் வந்ததுதான். சிங்கப்பூரில் கூட Courts ஸ்பான்ஸர்ஷிப்பில் "Deal or No Deal" என்று ஒரு நிகழ்ச்சி வந்ததுண்டு.ரிஷி ஸ்டைலாக நடத்துவதாக சிலரும் "குப்பை, ரொம்ப அலட்டறான்" என்று ஒரு சாராரும் கட்சி கட்டி கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஒ.கே. ரகம். போகப் போக கருத்து மாறலாம்.போட்டியில் அறிவுக்கு வேலையில்லை என்றாலும் ஒரளவுக்கு சமயோசித புத்தி தேவைதான்."நீ இந்த போட்டியில் கலந்துண்டு பெரிய அமௌண்டா ஜெயிச்சா என்ன பண்ணுவ?" என்று மனைவியிடம் கேட்டேன்.


"அந்த பொட்டிய தூக்கிகிட்டு பின்னாடி நிக்கறவளுகளுக்கெல்லாம் கொஞ்சம் நல்லதா நாலு துணிமணி வாங்கித்தருவேன்" என்றார்.

Tuesday, November 10, 2009

மெகா தொடர்

இந்த தொடர்பதிவை போட வேண்டாமென்றுதான் நினைத்தேன். நர்சிம் மாதிரி பெரியவர்களே போடுவதாலும், வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லாததாலும், முக்கியமாக மணிகண்டன் அவர்களின் அழைப்பை ஏற்பதற்காகவும்....

1. A – Available/Single? : Not Single but... (நெனப்புதான் பொழப்ப கெடுக்குது)

2. B – Best friend? : என் அனைத்து நண்பர்களும்

3. C – Cake or Pie?: நல்லா இருந்தா எல்லா கண்றாவியையும் சாப்புட வேண்டியதுதானே.

4. D – Drink of choice? : உசிலை மணி "பேஷ்.. பேஷ்.."னு சொல்லிண்டே குடிப்பாரே அது

5. E – Essential item you use every day? : அண்டர்வேர்

6. F – Favorite color? : நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு (சே...சே.. நீங்க நெனைக்கற மாதிரி இல்லீங்க..)

7. G – Gummy Bears Or Worms?: ? யாரு இத முதல்ல ஆரம்பிச்சாங்களோ தெரியல.. Gummi Bears என்று இருக்க வேண்டும்.
இது என்னமோ மிட்டாயாமே???? (நன்றி - கூகிளாண்டவர்)
இது வரைக்கும் சாப்டதில்ல.

8. H – Hometown? - வயலின் மேதை ஜெயராமன் ஊர்.

9. I – Indulgence? - பெரும்பாலான பதிவர்களுக்கும் இருப்பதே

10. J – January or February? February - அதே கூலிக்கு கம்மி நாளு வேல செஞ்சா போதும்.

11. K – Kids & their names? :ஹரீஷ்

12. L – Life is incomplete without? - Enjoyment

13. M – Marriage date? நான்: "ஏம்பா? நம்ம கல்யாண நாள் எது?"
என் மனைவி :"ம்க்க்கும்ம்... நான் நல்லது நடந்த நாள மட்டுந்தான் நெனப்புல வெச்சுக்கறது"


14. N – Number of siblings? 2

15. O – Oranges or Apples? லோங்கன் (Longan)

16. P – Phobias/Fears? : ஏனைய பொழுதுபோக்குகளை விழுங்கி கொண்டிருக்கும் பதிவுலகம்

17. Q – Quote for today? : 64.85 US $ (எங்க கம்பெனியோட இன்னிக்கு Stock market Quote)

18. R – Reason to smile? : எதிரில் வருபவர்களின் ஸ்மைல்

19. S – Season? இந்த ஊர்ல அப்படி ஒண்ணுமே கெடையாது. ஆனா வின்டர் புடிக்கும்.

20. T – Tag 4 People? ஒபாமா, ராஜபக்ஷே, ராகுல் காந்தி, ஜே.கே.ரித்தீஷ்.
தனித் தனியாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

21. U – Unknown fact about me? நான் கிண்டர் கார்டனில் படித்ததே இல்லை. நேரடியாக ஒண்ணாம்புதான். (என்னா ஒரு சாதனை ????)

22. V – Vegetable you don't like? வாழைத் தண்டு (அது போல கால் இருந்தா பார்த்து ரசிப்பேன்)

23. W – Worst habit? வீட்ல இருந்தா டிவி சத்தம் இருக்கணும்

24. X – X-rays you've had? : இருபத்தாறுல இதுதான் ரொம்ப மோசம்.

25. Y – Your favorite food? :) என் மனைவியின் கையால் கிடைக்கும் எல்லா உணவுகளும்
(என்னாது.. சோப்பு வாசனை அடிக்குதா???)

26. Z – Zodiac sign? சிங்கிளா வருமே, அதுதான்

ஆசைக்குரியவர்: என் சீமந்த புத்திரன்

இலவசமாய் கிடைப்பது: காத்து (ஹ்ம்ம் எத்தன நாளைக்கோ?)

ஈதலில் சிறந்தது: அறிவு

உலகத்தில் பயப்படுவது: அதென்ன இங்கிலிபீசுல ஒரு வாட்டி தமிழுல ஒரு வாட்டி

ஊமை கண்ட கனவு: குரலுடன் இருக்கும்

எப்போதும் உடனிருப்பது: SEE 5 ABOVE

ஏன் இந்த பதிவு: மணிகண்டனின் அன்பான மிரட்டல்.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நட்பு

ஒரு ரகசியம்: என் உண்மையான பெயர் அறிவிலி அல்ல. என் பெற்றோருக்கு நான்
இப்படி இருப்பேன் என்று தெரியாததால் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு

ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது: கணிணி

Wednesday, November 4, 2009

சும்மா இருக்க முடியுமா? சவால்


வடிவேலு ஒரு படத்துல "சும்மா இருக்கறதுன்னா அவ்வளவு ஈசியா?" அப்படின்னு சவால் விடுவாரு.

அது மாதிரி சும்மா கைய வெச்சுகிட்டு நின்னா 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரு குடுக்கறாங்க.

எங்க.. எங்க.. எங்க... அப்படின்னு அலை பாயறீங்களா?

சிங்கப்பூர்ல வருஷத்துக்கு ஒரு தடவ இந்த மாதிரி ஒரு போட்டி நடக்குது. சிட்டி செண்டர்ல ஒரு இடத்துல நாலு அஞ்சு கார நிறுத்தி வெச்சிருப்பாங்க. போட்டியில கலந்துக்கறவங்க எல்லாரும் தங்களோட ஒரு கைய கார் மேல வெச்சுகிட்டு நிப்பாங்க.மழை பெஞ்சாலும் சரி வெய்யில் அடிச்சாலும் சரி கைய எடுக்க கூடாது. கைய எடுத்தா போச்.. போட்டியிலேர்ந்து அவுட்.இப்படியே ஒவ்வொருத்தரா அவுட் ஆயி யாரு கடைசி வரைக்கும் கைய எடுக்காம நிக்கறாங்களோ அவருக்கு அந்த கார்ல ஒண்ணு பரிசு.


ஹையா... ரொம்ப சிம்பிளா இருக்கே அப்படிங்கறீங்களா??? இந்த வருடத்துக்கான போட்டி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தது.சீனா, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தொனேஷியா முதலான நாடுகளிலிருந்து வந்த எழுபது பேருடன் உள்ளூர் போட்டியாளர்களையும் சேர்த்து மொத்தம் 398 பேர் கலந்து கொண்டனர். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிட ஒய்வு இடைவேளை (சும்மா நிக்கறதுல என்ன ஓய்வு இடைவேளை?) மட்டும் உண்டு. மற்றபடி உள்ளங்கை முழுவதும் காரில் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

ஏகப்பட்ட ஏனைய விதிமுறைகளும் உண்டு. போட்டி முடியும் வரை சொந்தம் பந்தம் கொடுக்கும் அன்ன ஆகாரம் எதுவும் சாப்புட கூடாது, பக்கத்துல இருக்கற மத்த போட்டியாளர்களை கிண்டலோ, வெறுப்பூட்டும் விதமாக பேசவோ, சைகைகளோ செய்யக்கூடாது, போட்டி முடியற வரைக்கும் குளிக்க கூடாது, பவுடர் போடக் கூடாது (??? - நெசமாவே இப்பிடி ஒரு கண்டிஷன் இருக்குங்க) இப்படின்னு எக்கச்சக்கம். மேலும் சட்ட திட்டங்கள் அறிந்து கொள்ள. போட்டியை கை கோர்த்து நடத்துவது சிங்கப்பூர் மீடியாகார்ப் வானொலியும் சுபாரு கார் நிறுவனமும்.


இப்படியாக கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போட்டியில் ஒவ்வொருவராக "நம்மளால இனி சும்மா இருக்க முடியாதுடா சாமீ" அப்படின்னு கழண்டு கொள்ள, கடைசியில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக செவ்வாய் அன்று மாலை வெற்றி பெற்றவர் முகம்மது அன்வர் என்னும் 40 வயது சிங்கப்பூரர்.பாவம் கடைசியில் இவருடன் போராடி தோற்றவர் சந்தோஷ் குமார் பூஞ்சோலை என்னும் 23 வயது இளைஞர்.மொத்தம் போட்டி நடை பெற்ற நேரம் 77 மணி 43 நிமிடங்கள்.



பரிசு வாங்குன கார ஓட்டுவாரா, இல்ல சும்மாவே வெச்சிருப்பாரா????