Saturday, July 11, 2009

"பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" -இந்தியா ஒளிர்கிறது (ஈ)

தொடர்புடையய முந்தைய பதிவுகள்
முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

அடுத்து நாங்கள் புறப்பட்டது திருப்பதி, சென்னை வழியாக தில்லி நோக்கி. திருச்சியிலிருந்து ஆந்திரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (APSRTC) பேருந்தில் திருப்பதி கூட்டி செல்கிறார்கள். இரவு 7 மணிக்கு கிளம்பும் பேருந்து மறுநாள் காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்து விடுகிறது. பெருமாள் தரிசனத்திற்கு போவதாலோ என்னவோ பேருந்தில் தசாவதாரம் படம் போட்டார்கள்.அதற்கு முன் காண்பித்த ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் விளம்பர படம் நன்றாகவே இருந்தது.முக்கியமாக அடுத்த முறை வரும்போது விசாகப்பட்டினத்துக்கு நிச்சயம் போய் வரவேண்டும் என்ற முடிவை எடுக்குமளவுக்கு இருந்தது.

காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்ததும் ஒரு அறை கொடுத்து காலை கடன்களை முடிக்க 1 மணி நேரம் கொடுக்கிறார்கள்.காலை உணவுக்கு பிறகு "சாப்பிங்க்காம்லக்ஸ்"க்கு கூட்டி செல்கிறார் வழிகாட்டி.


தினம் வரும் லட்சகணக்கான தமிழர்களில் ஒருவரிடம் கேட்டு எழுதியிருக்கலாம்

அங்கு ஒரு கடையில் நம்மிடம் இருக்கும் செல்ஃபோன், கேமரா எல்லாவற்றையும் டெபாசிட் செய்ய சொல்லிவிடுகிறார். தேவஸ்தான பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கலாம். ஆனால் அங்கு க்யூ இருக்கும் என்பதால் இங்கேயே வைக்க சொல்கிறாராம்.ஒவ்வொரு பொருளுக்கும் 10 ரூபாயாம் ஒரு பஸ்ஸுக்கு 500 ரூபாய் வரை எளிதான சம்பாத்தியம். இதில் கைடுக்கான பங்கு எவ்வளவோ?

பிறகு கூட்டிக்கொண்டு போய் "Cellar Entry" வழியாக க்யூவில் சேர்த்துவிடுகிறார்கள்.ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை "பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி மைக்கில் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். கோவில் பிரகாரத்துக்குள் நுழைவதற்கு சற்றுமுன் தடுப்பு வேலி இல்லாத இடத்தில் கூட்டம் திடீரென்று முண்டியடிக்கிறது. இந்த இடத்தில் மட்டும் வேலியும் இல்லை, மற்ற இடங்களில் "ஜரிகண்டி" சொல்லி முரட்டுத்தனமாக தள்ளிவிடும் காவலர்(லி)களும் இல்லை. தடாரென்று ஒருவன் தேவையில்லாமல் தள்ளிவிட்டு டென்ஷனை உருவாக்க, மொட்டையடித்து நெத்தி நிறைய நாமத்துடன் ஒருவன் என் மனைவியின் கையில் இருக்கும் வளையலை உருவப் பார்த்தான். "பங்காரு நகலு" அறிவிப்புக்கான காரணாம் இப்போதுதான் புரிந்தது.

முன்பெல்லாம் ஏழுமலையானை ஓரளவுக்காவது பக்கத்தில் நின்று திவ்யமாக தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் மிகவும் தொலைவிலேயே நிறுத்திவிடுகிறார்கள். தூரதரிசனமாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது. இரண்டே மணிநேரத்தில் தரிசனம் முடிந்து வெளிவந்து விட்டோம்.வெளியில் வரும்போது தொன்னையில் சுடச்சுட கொடுத்த புளியோதரையும், பொங்கலும் தேவாம்ருதம்.நினைவு தெரிந்த நாளிலிருந்து சுவையும் மணமும் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் திருப்பதி லட்டு.

பேருந்து மற்ற பயணிகளுடன் காளஹஸ்தி புறப்பட நாங்கள் மட்டும் திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்னை வண்டியைப் பிடிக்க சென்றோம்.


இவுங்களுக்கு மட்டும் கேமரா அனுமதி உண்டாம்
நல்ல வேளையா இந்த ஃபோட்டோவுக்கெல்லாம் தடை கிடையாது
கோபுர தரிசனம்

திருப்பதி ரெயில் நிலையத்தில் இருக்கும் உயர் வகுப்பு பயணிகள் அறை ஏ.சி. வசதியுடன் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக செல்ஃபோன் மற்றும் மடிக்கணிணிகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஓய்வறைகளிலும் ரெயில் பெட்டிகளுக்குள்ளும் அளித்திருக்கும் ரெயில்வே நிர்வாகத்தை நிச்சயமாக பாராட்டவேண்டும். ஆனால் இந்த சப்தகிரி எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி, பின்னர் பயணம் செய்ய நேர்ந்த வைகை எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது இருந்த ரெயில்பெட்டிகளையே இன்னமும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். மேலே சொன்ன சார்ஜர் வசதியை தவிர மற்றவையெல்லாம் அரதப்பழசாக அழுக்கடைந்து இருக்கின்றன. முன்னால இருக்கும் சாப்பாட்டு ட்ரே 5 நிமிடத்துக்கு ஒரு முறை விழுந்து நம் முட்டியை பதம் பார்க்கிறது.


ரெயில் பெட்டியில் சார்ஜர் வசதி

சென்னையில் இரவு தங்கல் மட்டுமே. மறுநாள் காலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தில்லிக்கு பறந்துவிட்டோம். பட்ஜெட் ஏர்லைன்ஸாக இருந்தாலும் டைகர் ஏர்வேஸுடன் ஒப்பிடுமபோது ஸ்பைஸ் ஜெட் எவ்வளவோ மேல். விமானமும் சர்வீசும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக குடிக்க தண்ணீரும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்க ஒரு ட்ராயிங் கிட்டும் கொடுக்கிறார்கள்.


இதுவும் ஒரு வசதி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

ஒரு வழியாக பதிவு தில்லியை அடைந்துவிட்டது.... மேலும் தொடரும்

5 comments:

Mahesh said...

'நகலு.. பர்ஸுலு.. டப்புலு..' நக்கலு... கலக்கலு...

பயணக்கட்டுரை சூப்பர்... சாப்பிங்லு காப்லக்சுலு என்னலு வாங்கிச்சுலு?

அப்பாவி முரு said...

கடைசி போட்டோ என்ன அந்துமணி ஸ்டைலா?

இலால்குடி பினாத்தல்கள் said...

CHOPPING காம்லக்ஸா இருக்கப்பூது!

அறிவிலி said...

@இலால்குடி பினாத்தல்கள்

//CHOPPING காம்லக்ஸா இருக்கப்பூது!//

:)))))

அடடே.. பின்னூட்டம் போடற அளவுக்கு தேறியாச்சா.. தற்போதைய அனுபவங்களை விரைவில் பதிவில் எதிர்பார்க்கிறேன்.

இய‌ற்கை said...

பயணக்கட்டுரை சூப்பர்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.