Tuesday, July 7, 2009

நான் நல்லாத்தான் ஆடினேன், மேடைதான் கோணல்


இனிமேல் யாரும் கேஸ் அடுப்பில் சமைக்க கூடாது. இது கொடுமைப்படுத்தும் மாமியார்களுக்கு மருமகள்களை ஒழித்துக்கட்ட எளிதான வழியாக தொலைக்காட்சி தொடர்களில் சொல்லிக்கொடுத்து விட்டார்கள். அதற்காக நீங்கள் கிருஷணாயில் அடுப்பு பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். அதிலும் பலவிதமான அபாயங்கள் இருக்கிறது.பம்பு ஸ்டவ் வெடிக்க கூட சான்ஸ் இருக்கிறது. எலெக்ட்ரிக் அடுப்பு - ஆற்காட்டார் ஞாபகம் வந்தா அதப்பத்தி யோசிக்ககூட மாட்டீங்க.காடெல்லாம் சுத்தி அலைஞ்சு சுள்ளி பொறுக்கி,வெறகு வெட்டி பத்த வெச்சு சமைக்கறதுதான் நல்லது. அதுவும் வெறகு பத்த வைக்க ரெண்டு கல்லு வெச்சு தேச்சு தேச்சுத்தான் நெருப்பு மூட்டணும். நெருப்பெட்டி, லைட்டரெல்லாம் கூடவே கூடாது.



யாருக்காவது ஏதாவது தகவல் அனுப்பனும்னா இ-மெயில்லாம் யூஸ் பண்ண கூடாது. உங்களோட தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் பில்கேட்சோ,சோனியாவோ இல்லை ஒபாமாவோ அல்லது உங்கள் எதிரிகளோ படித்துவிடக்கூடும். லெட்டர் போடலாமான்னு கேக்க கூடாது. அதுவும் அரசாங்க துறைதான். போஸ்ட்மேனே கூட உங்க லெட்டரை படிச்சுட்டு பக்கத்து வீட்டு அலமேலுவிடம் போட்டு கொடுத்து விடலாம். லெட்டர், இ-மெயிலுக்கே இந்த கதின்னாக்கா ஃபோன், செல்ஃபோன் பத்தியெல்லாம் கேக்கவே கேக்காதீங்க.டேப்பிங் பண்ணி ஒட்டு கேட்டுருவாங்க. ஆகவே ஆளுக்கு ஒரு புறா வளக்கலாம். அதோட கால்ல எழுத்தாணில எழுதின ஓலைச்சுவடிய கட்டி அனுப்பலாம்.

ஜீன்ஸ் பேண்ட், பெர்முடாஸ், டீ ஷர்ட், ஜாக்கி அண்டர்வேர், ஆனந்த் பனியன், ஷார்ட் சுடி, பாட்டியாலா பாட்டம் என்று அலைபவர்களா நீங்கள். எல்லாத்தையும் கழட்டி தூக்கி எறிஞ்சுட்டு இலை தழை எல்லாம் கட்டிக்கோங்க. அதுவும் கஷ்டமா இருந்தா ஆதாம் ஏவாள் மாதிரி நங்காவா வேண்ணாலும் அலையலாம். பூச்சி கீச்சி கடிக்காமயாவது இருக்கும்.

இப்படியெல்லாம் யாராவது சொன்னா எவ்வளவு டென்ஷன் ஆவீங்க? எந்த துறையாக இருந்தாலும் புதிய டெக்னாலஜிகள் வரும்போது சில குறைகள் இருக்கக்கூடும். அந்த குறைகளை களைந்தோ அல்லது தகுந்த முன்னேற்பாடுகளுடனோ பயன்படுத்தி அதை நாள்பட மெருகேற்றி பயன்படுத்த வேண்டும். அதை விடுதது எங்கோ ஒரு கேஸ் ஸ்டவ் வெடித்தால் இனிமேல் விறகில் சமைப்பதுதான் சிறநதது என்பதோ, எங்கோ ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டால் விமானப்பயணமே கூடாது,தோணி ஏறிதான் சிங்கப்பூர் போவேன் என்பதோ முட்டாள்தனம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு அளவுகளில் பயனபடுத்தப்பட்டு கடந்த இருமுறைகளாக பாராளமன்ற தேர்தல்களில் முழுஅளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால் மிகப்பெரிய அளவில் பொருள் மற்றும் காலவிரயம் தவிர்க்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வன்முறைகளோ முறைகேடுகளோ நடக்காமல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நடந்தேறி வருகிறது.வாககு எண்ணிக்கை மட்டுமே 3 நாட்களுக்கு நடப்பதும் ப்ராணாய் ராய், ரபி பெர்னார்ட், வீரபாண்டியன், மாலன் போன்றவர்களெல்லாம் மூன்று ஷிஃப்ட் ஒவர்டைம் பார்த்து பரிதாபமாக தோற்றுக் கொண்டிருக்கும் கட்சி தலைவர்களை தொலைக்காட்சியில் ரேக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.

இதெல்லாம் இப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையை பெறமுடியாத தலைவர்களும் கட்சிகளும் இப்போது இந்த மின்னனு வாக்கு இயந்திரத்தினால் முறைகேடுகள் நடப்பதாகவும் திரும்பவும் வாக்கு சீட்டு முறைக்கு போகவேண்டும் என்றும் கூறி வருவது கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

தன் மேல் உள்ள குற்றச்சாட்டு நீங்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சமீபத்திய தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்கட்சி தலைவர் பதவியை துறப்பதாக கூறியது போன்ற விஷயங்களால் நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த எல்.கே.அத்வானி போன்ற தலைவரிடமிடருந்து இத்தகைய கருத்து வந்திருப்பது என்னை பெரிதும் அதிர்சசிக்கு உள்ளாக்கியிருக்கிறது.



இவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், ராம் விலாஸ் பாஸ்வான், லல்லு போன்ற தலைவர்களும் கூறிவரும் இதே போன்ற கருத்துகளை தேர்தல் கமிஷன் செவிமடுக்காமல் இருத்தல் சாலச்சிறந்தது.

ஹ்ம்ம்ம்... பார்ப்போம்.

11 comments:

கோவி.கண்ணன் said...

//இதெல்லாம் இப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையை பெறமுடியாத தலைவர்களும் கட்சிகளும் இப்போது இந்த மின்னனு வாக்கு இயந்திரத்தினால் முறைகேடுகள் நடப்பதாகவும் திரும்பவும் வாக்கு சீட்டு முறைக்கு போகவேண்டும் என்றும் கூறி வருவது கேலிக்கூத்தாகவே தெரிகிறது.//

எப்படி தேர்தல் நடந்தாலும் தில்லுமுல்லு நடக்கும் என்பது அரசியல்வியாதிகளுக்குத் தெரியும், இருந்தாலும் இருப்பை காட்டிக் கொள்ள அவ்வப்போது கேணத்தனமான அறிவிப்பு, அறிக்கை விடுவாங்க.

என்னைக் கேட்டால் தொடுதிரை மூலமாக ஒரே ஒருசர்வரில் இணைத்து பல்வேறு வாக்குச் சாவாடியில் க்ளைண்ட் கம்ப்யூட்டர் வைத்து செய்யலாம். அதில் மிசின் பழுதடையும் வாய்ப்புக் குறைவு, இப்போது தான் வயர்லெஸ் இணைப்பு எல்லா ஊர்களிலும் இருக்கிறது, இண்டெர் நெட் வழியாக, விபிஎன் வழியாக கணனிகளை இணைத்து, வாக்குப் பதிவுகளை பாதுகாப்புடன் நடத்த முடியும், அதைவிடுத்து பொட்டி பொட்டியாக வாக்கு இயந்திரம் செய்து, ரொம்ப லொள்ளு பண்ணுகிறார்கள்.

இது சாத்யம் இல்லாத ஒன்றா ? ஏன் செய்யத் தயங்குகிறார்கள் ?

சொல்லுங்க சிங்கை அண்ணாச்சி.

அறிவிலி said...

@ கோவியார்

பின்னோக்கி செல்வதைத்தான் நானும் வேண்டாமென்கிறேன்.இந்த பொட்டிகளெல்லாம் 25 வருடம் முன்னால் நீங்கள் சொல்லும் வசதிகள் இல்லாத காலத்தில் டிசைன் செய்யப்பட்டவை.
இதையே இன்னும் இவர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் க்ளையன்ட் சர்வரோடு பயோ மெட்ரிக் சென்சாரையும் சேர்த்துவிட்டால் அடையாள அட்டை கூட தேவை இல்லை, கட்டை விரலே போதும்.

Mahesh said...

அண்ணே...பின்றீங்க....

கார்ட்டூன்கள் கலக்கல்....

அறிவிலி said...

@மகேஷ்

நன்றி மகேஷ்.

கார்க்கிபவா said...

அட நிங்க பெரிய ஆளு போலிருக்கே..

அறிவிலி said...

@கார்க்கி

ஆமாமா... எல்லாருக்கும் பின்னூட்டம் வருகிற அளவுக்கு எனக்கு ஹிட்டே வரும். பெரிய ஆளுதான்.

சிநேகிதன் அக்பர் said...

சரியான கருத்து.

யாராலும் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.

அறிவிலி said...

@ அக்பர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெகதீசன் said...

:)

கலையரசன் said...

கார்டூன்ஸ் அருமையா இருக்கு!!
:-))

Mahesh said...

//ஆமாமா... எல்லாருக்கும் பின்னூட்டம் வருகிற அளவுக்கு எனக்கு ஹிட்டே வரும். பெரிய ஆளுதான்.//

இந்த விஷயத்துல நீங்களும் நானும் சேம் ப்ளட்... வாங்க டீ சாப்டுக்கிட்டே பேசலாம்..

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.