தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"
பேருந்து கிளம்பி தில்லியை விட்டு வெளியில் வரும்போதுதான் புரிந்தது, நகரம் எவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது. புறநகர்களில் ரிஸார்ட் தொழில் கொடி கட்டி பறக்கிறது.பத்தடிக்கு ஒரு ரிசார்ட். வழிகாட்டியிடம் விசாரித்தபோது சொன்னார் இப்போதெல்லாம் திருமணங்கள், ரிசப்ஷன், அலுவலக பார்ட்டிகள் போன்ற விஷயங்களெல்லாம் இத்தகைய ரிஸார்ட்களில்தான் நடைபெறுகின்றனவாம்.
மதியம் ஒரு மணிக்கு வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். சதர்ன் ட்ராவல்ஸ் நிறுவனம் ஆந்திரர்களால் ஆந்திரர்களுக்காக நடத்தப்படுவது.இதை நான் இந்த உணவகத்தில்தான் புரிந்து கொண்டேன். உணவகம் உள்ளூர் காரர்களால் நடத்தப்படுவதாக இருந்தாலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் ஆந்திர ஸ்டைலில் செய்வதற்கு பயிற்சி கொடுத்திருப்பார்கள் போலும்.அத்தனை காரம். எங்கள் மூவருக்கும் மூக்கு, வாயிலிருந்து தண்ணீர் கொட்ட, காது உள்ளிட்ட அனைத்து துவாரங்களிலும் கிட்டத்தட்ட புகையே வந்துவிட்டது. தந்தூரி ரொட்டியும் தயிரும் இருக்கவே உயிர் பிழைத்தோம்.
நான்கு மணி சுமாருக்கு முதல் சுற்றுலா தலமாக பிஞ்ஜூர் கார்டனில் நிறுத்தினார்கள்.இந்த பூங்காவில் பஞ்ச பாண்டவர்கள் இளைப்பாறியதாக ஒரு நம்பிக்கையும் உண்டு.பிஞ்ஜூரில் மற்றொரு பிரபலமான விஷயம் ஹெச்.எம்.டி நிறுவனம். இப்போது இநத நிறுவனமும் சரி பூங்காவும் சரி சுஸ்தாக இல்லை. வெயிலின் கொடுமையோடு காய்ந்துபோய் ஒன்றுமே இல்லாத பூங்காவை பார்த்து எரிச்சலடைந்ததுதான் மிச்சம். நீருற்றுகள் எல்லாவற்றையும் நிறுத்தி வத்திருந்தார்கள். ஆனால் ஒரு பக்கத்தில் தேவையே இல்லாமல் தண்ணீர், பம்பு செட்டை போல் கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கு நுழைவு சீட்டு வேறு. பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நான் பார்த்தபொழுது நீருற்றுகளும், வண்ண விளக்குகளுமாக நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட தினமுமே தில்லி- சிம்லா செல்லும் நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் இடத்தை நன்றாக வைத்துக் கொள்ளலாம் அல்லது இழுத்தாவது மூடி விடலாம். ஒரு காவி உடை சாமியார் ஏக பந்தாவாக குடை பிடிக்கவும், தண்ணீர் பாட்டில் சுமக்கவும் அல்லக்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தாலும் யாரென்று சரியாக சொல்ல முடியவில்லை. உங்களுககு தெரிந்தால் சொல்லுங்கள். முன்னும் பின்னும் காவலர் ஜீப்களுடன் இவருடைய கார் சிம்லா வரை கூடவே வந்தது.
பிஞ்ஜூர் பூங்காவிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மலைப்பாதை ஆரம்பித்து விடுகிறது. "ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே மலைகளில்தான். அடுத்த ஆறு நாட்களுக்கு தினமும் நாம் பயணம் செய்யப்போவது இத்தகைய பாதைகளில்தான்" என்றதும் "வாவ், சூப்பர்" என்றான் பையன்.
இயற்கைக் காட்சிகளையும் வித்தியாசமான கட்டிட அமைப்புகளையும் ரசித்துக் கொண்டே மாலை ஏழு மணி வரை பொழுது போனதே தெரியவில்லை. பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சாலையிலிருந்து உள்ளே நுழைந்தால் ஐந்தாவது மாடியும் மற்ற தளங்களுக்கு
கீழே இறங்கியும் செல்லவேண்டும்.
ஏழு மணிக்கு மேல் பசியும், பயணக் களைப்புமாக அனைவரும் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டோம். இரவுத் தங்கல் சிம்லாவில் என்று சொல்லியிருந்தார்கள். சிம்லாவை கடந்து ஒரு மணி நேரமாகியும் ஓட்டுநர் நிறுத்தும் அறிகுறியே தெரியவில்லை. சிம்லா நகருக்குள் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாத்தால் ஊருக்கு வெளியே குஃப்ரி செல்லும் வழியில் இருந்த ஹோட்டலுக்கு போய் சேரும்போது இரவுமணி 10.
மறு நாள் காலை நாங்கள் சென்றது குஃப்ரி என்ற இடத்துக்கு. சாலையில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து குதிரை சவாரியில் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். சுற்றிவிட்டு திரும்பி வர 3 மணி நேரம் கொடுததார்கள்."குதிரையெல்லாம் ஏற முடியாது, நடந்தே போயிரலாம்" என்று மனைவி கூறினார். சரியென்று பாதையைப் பார்த்தால் கால் வைக்கவே லாயக்கற்று இருந்தது.சேறும் சகதியும், குதிரைச் சாணமுமாக ஒன்றரை அடி உயரத்துக்கு.வேறு வழியில்லாமல் குதிரை ஏறினோம். கிட்டத்தடட 20 நிமிட குதிரை சவாரி, குறுகிய பாதையில் பக்கங்களிலும் எதிரிலும் ஏனைய குதிரைகளோடு, பக்கவாட்டில் சரேல் பள்ளங்களுமாக அடிக்கடி "வீல்" அலறல்களுடன் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது.
அங்கு இருந்தவை
தூரத்தில் இருக்கும் பனி படர்ந்த இமய மலையை அருகில் காட்டும் தொலை நோக்கி (அடப் பாவிகளா... அதை நேரில் பாக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தோம்)
ஒரு கோவில்
சில காட்டெருமைகள். அதன் மேல் சவாரியோ அல்லது கௌபாய் ஸ்டைலில் தொப்பியும் துப்பாக்கியுமாக புகைப்படமோ எடுத்துக்கொள்ளலாம்.
"கோ கார்ட்டிங்" உள்ளிட்ட சில விளாயாட்டுகளுடன் கூடிய ஒரு மினி தீம் பார்க்.
சுட.. சுட டீயும் மேகி நூடுல்ஸும் செய்து கொடுக்கும் சில கடைகளும்.
மறுபடியும் குதிரை, 20 நிமிடம், வீல்...
அடுத்து மதியத்துக்கு மேல் புறப்பட்டது சிம்லாவில் இருக்கும் மால் ரோட். பையனுக்கு "வகிறு சரியில்லை மன்னா" என்ற வசனத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக இரு வழி போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. சரி,என்று மால் ரோடு போய் ஒரு வைத்தியரை பார்த்தோம். இந்த மாதிரி வயிற்றுப் போக்கு வாந்திக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்பது சொந்த அனுபவம். சிம்லா முழுவதும் பல இடங்களில் தேடியும் ஆப்பிளை காணவில்லை. இரண்டு மணி நேர தேடலுக்கும், ஊடே இரண்டாயிரம் ரூபாய் ஷாப்பிங்குக்கும் பிறகு ஒரு பழக் கடையில் ஆப்பிள் கிடைத்தது. ஒரு ஆப்பிளின் விலை அறுபது ரூபாய்.
இரவு உணவு (ஸ்..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) மற்றும் தூக்கத்திற்கு பிறகு மறுநாள் காலையில் மனாலிக்கு புறப்பட்டோம்.
தொடரும்... வரும் இடுகைகளில் மனாலி, சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல பகிர்வு, நகைச்சுவையாய்.
//ஐந்திணை said...
நல்ல பகிர்வு, நகைச்சுவையாய்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐநதிணை
//"வகிறு சரியில்லை மன்னா"//
அப்பிடியானால் திப்பிலி சாப்பிட வேண்டும்!!!
இல்லையானால் ஒமத்திரம் (சரியாக படிக்கவும்) குடிக்கலாம்
//அப்பிடியானால் திப்பிலி சாப்பிட வேண்டும்!!!
இல்லையானால் ஒமத்திரம் (சரியாக படிக்கவும்) குடிக்கலாம்//
அப்பாவி, கைவசம் நெறைய தொழில் வெச்சிருப்பீங்க போல.
ஆஹா.... மிக ரசித்தேன்... நீங்கதான் ஆப்பு வெச்சிங்களே அப்பக் கூடவா போக்குவரத்து நிக்கல? :))))))))))))))))))
//Mahesh said...
ஆஹா.... மிக ரசித்தேன்... நீங்கதான் ஆப்பு வெச்சிங்களே அப்பக் கூடவா போக்குவரத்து நிக்கல? :))))))))))))))))))//
நான் வெச்ச ஆப்(பிள்)புக்கு நின்னுருச்சு. அதுக்கப்புறம்தான் நிம்மதியா மனாலிக்கு போனோம்.
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.